Wednesday, March 25, 2009

ரூ.12 லட்சம் தானே விலை : அதிநவீன பைக்குகள் 51 விற்பனை

உலகின் மிக மலிவு விலை காரான நானோ அறிமுகப்படுத்தப்பட்ட அதே இந்தியாவில்தான், நானோவின் விலையை விட சுமார் 12 மடங்கு அதிக விலையுள்ள பைக்குகளும் அதிகம் விற்றிருக்கின்றன. ' மக்களின் கார் ' என்று அழைக்கப்படும் நானோவின் அதிரடியான விற்பனைக்கு ஊடே, எங்கே இவ்வளவு விலையுள்ள நம்முடைய பைக் விற்கப்போகிறது என்று நினைத்த ஜப்பானின் சுசுகி நிறுவனம், குறுகிய காலத்திற்குள்ளாகவே ரூ.12 லட்சம் விலையுள்ள பைக்குகள் 50 விற்பனை ஆகியிருப்பது ஆச்சரியத்தை தான் ஏற்படுத்தியிருக்கிறது. நானோ காரின் இஞ்சின் திறனை விட மூன்று மடங்கு அதிக திறன்கொண்ட பைக்குகளை சுசுகி நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஹயாபுஸா என்ற பைக் 1,340 சிசி திறனும், இன்ட்ரூடர் என்ற பைக் 1,763 சிசி திறன் கொண்ட இஞ்சினையும் கொண்டது. நானோ காரின் இஞ்சின் திறன் வெறும் 623 சிசி தான். மற்ற பைக் பிரியர்களைப்போல், பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாமும் ஹயாபுஸா பைக் ஒன்றை சமீபத்தில் வாங்கியிருப்பதாக சுசுகி தெரிவிக்கிறது. அதிக பணம் வைத்திருப்பவர்கள் மற்றும் பைக் பிரியர்களால் மட்டுமே வாங்கக்கூடிய இந்த பைக்குகள் இதுவரை இங்கு 51 விற்பனை ஆகியிருப்பதாக சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா பி.லிமிடெட்டின் வைஸ் பிரசிடென்ட் ( சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் ) அதுல் குப்தா தெரிவிக்கிறார்.
நன்றி : தினமலர்


போர்டு ' ஐகான் ' விலை ஏப்ரலில் இருந்து உயருகிறது

போர்டு ஐகானின் விலை வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து உயருகிறது. ஏப்ரலில் இருந்து அதன் விலை 1.5 சதவீதம் வரை உயருகிறது என்று போர்டு இந்தியாவின் எக்ஸிகூடிவ் டைரக்டர் ( மார்க்கெட்டிங், சேல்ஸ், அண்ட் சர்வீஸ் ) நிகல் வார்க் தெரிவித்தார். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதால் நாங்கள் இந்த விலை உயர்வை செய்ய வேண்டியிருக்கிறது. ஏனென்றால் கடந்த மூன்று மாதங்களாகவே ரூபாயின் மதிப்பு குறைந்து, நேற்று அதன் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.50.70 ஆக குறைந்திருந்தது என்றார். இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதால், காருக்கான பாகங்களை இறக்குமதி செய்யும்போது அதிகம் ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது. எனவேதான் நாங்கள் காரின் விலையை உயர்த்தவேண்டியிருக்கிறது என்றார் அவர். கடந்த நவம்பரில் தான் போர்டு நிறுவனம், ஐகான் மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடல் காரை வெளியிட்டது. அதன் பெட்ரோல் காரின் விலை ரூ.4.59 லட்சமாகவும் ( எக்ஸ் - ஷோரூம் டில்லி ) டீசல் காரின் விலை ரூ.5.19 லட்சமாகவும் இருக்கிறது. இருந்தாலும் இப்போது விலை உயர்த்தியிருப்பது அதன் ஆரம்ப கட்ட மாடல் ஐகானுக்கு தான். மற்ற மாடல்களின் விலை ஏற்கனவே உயர்த்தப்பட்டுதான் இருக்கிறது. இப்போது பெட்ரோல் மாடல் கார்களுக்கு கிராக்கி அதிகரித்து வருவதால், நாங்களும் பெட்ரோல் மாடல் ' ஐகான் ' மற்றும் ' பியஸ்டா ' கார்களை அதிக அளவில் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறோம் என்றார் வார்க்.
நன்றி : தினமலர்


பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் : சென்செக்ஸ் 196 புள்ளிகள் உயர்ந்தது

பங்கு சந்தையில் இன்று நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. காலை வர்த்தகம் ஆரம்பித்த போது அதிகம் மாற்றமின்றி இருந்த பங்கு சந்தையில், மதியத்திற்கு மேல் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. கேப்பிட்டல் குட்ஸ், மெட்டல், ரியல் எஸ்டேட், பேங்கிங், எஃப்.எம்.சி.ஜி., பிரைவேட் பவர் கம்பெனிகள்,மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், இன்போசிஸ் போன்ற நிறுவன பங்குகள் அதிகம் வாங்கப்பட்டதால் சந்தை உயர்ந்தே இருந்தது. இருந்தாலும் ஓ.என்.ஜி.சி., என்.டி.பி.சி.,பார்தி, ஹெச்.யு.எல், விப்ரோ, டாடா மோட்டார்ஸ், ரான்பாக்ஸி பங்குகள் அதிகம் விற்கப்பட்டது. மாலை வர்த்தகம் முடியும் போது மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 196.86 புள்ளிகள் ( 2.08 சதவீதம் ) உயர்ந்து 9,667.90 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 45.65 புள்ளிகள் ( 1.55 சதவீதம் ) உயர்ந்து 2,984.35 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்று அதிகம் பயனடைந்தது ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், டாடா பவர், ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், டிஎல்எஃப், ரிலையன்ஸ் இன்ஃப்ரா, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகியவைகள் தான். இவைகளின் பங்கு மதிப்பு 5.6 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதம் வரை உயர்ந்திருந்தது. மற்ற எல்லோரையும் காட்டிலும் அதிகம் உயர்ந்திருந்தது யூனிடெக் நிறுவன பங்குகள் தான். அதன் மதிப்பு 16.87 சதவீதம் உயர்ந்திருந்தது.
நன்றி : தினமலர்


இப்போது ஹெச்.டி.எஃப்.சி.,பேங்க் தான் இந்தியாவின் மதிப்பு மிக்க தனியார் வங்கி

ஐசிஐசிஐ பேங்கை பின்னுக்கு தள்ளிவிட்டு, ஹெச்.டி.எஃப்.சி. பேங்க் இந்தியாவின் மதிப்பு மிக்க தனியார் வங்கி என்று பெயரெடுத்திருக்கிறது. மும்பை பங்கு சந்தையில் ஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் பங்கு மதிப்பு 6 சதவீதம் உயர்ந்திருப்பதை அடுத்து இந்த பெயர் கிடைத்திருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக இருக்கும் ஐசிஐசிஐ யின் சந்தை முதலீடு இன்று ரூ.39,516.58 கோடியாக குறைந்திருக்கிறது. ஆனால் அதன் போட்டி வங்கியும் இந்தியாவின் இரண்டாவது தனியார் வங்கியுமான ஹெச்.டி.எஃப்.சி.,யின் சந்தை முதலீடு ரூ.41,001 கோடியாக உயர்ந்திருக்கிறது. மும்பை பங்கு சந்தையில் இன்று பகல் நேர வர்த்தகத்தின் போது ஹெச்.டி.எஃப்.சி.,வங்கியின் பங்கு மதிப்பு 10.09 சதவீதம் உயர்ந்து, ரூ.973.90 ஆக இருந்தது. பொதுவாகவே இன்று அதன் பங்கு மதிப்பு 6.31 சதவீதம் உயர்ந்து ரூ.940.50 ஆக இருக்கிறது. அதே நேரம் பகல் நேர வர்த்தகத்தின் போது ஐசிஐசிஐ பேங்க்கின் பங்கு மதிப்பு 7.69 சதவீதம் மட்டும் உயர்ந்து ரூ.373.30 ஆகவும், பொதுவாக இன்று அதன் மதிப்பு 2.44 சதவீதம் மட்டும் உயர்ந்து ரூ.355.10 ஆக இருக்கிறது. சந்தை மூலதனத்தை பொருத்தவரை, கடந்த வருடம் வரை 10 நிறுவனங்களுக்குள் ஒன்றாக இருந்த ஐசிஐசிஐ பேங்க், இப்போது 18 வது இடத்திற்கு போயிருக்கிறது.
நன்றி : தினமலர்


நோவார்டிஸ் ( இந்தியா ) நிறுவனத்தின் 39 சதவீத பங்குகளை வாங்குகிறது நோவார்டிஸ்

சுவிட்சர்லாந்தை சேர்ந்த மருந்து நிறுவனமான நோவார்டிஸ், அதன் இந்திய துணை நிறுவனமான நோவார்டிஸ் ( இந்தியா ) வின் 39 சதவீத பங்குகளை கூடுதலாக வாங்கிக்கொள்ள முன் வந்திருக்கிறது. பங்கு ஒன்றுக்கு ரூ.351 விலை வைத்து மொத்தம் ரூ.440 கோடிக்கு ( 87 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ) இதனை வாங்கிக் கொள்ள இருப்பதாக, மும்பை பங்கு சந்தையில் நோவார்டிஸ் ( இந்தியா ) தெரிவித்திருக்கிறது. இப்போது அதன் இந்திய நிறுவனத்தின் 50.9 சதவீத பங்குகளை வைத்திருக்கும் நோவார்டிஸ், இன்னும் 39 சதவீத பங்குகளை வாங்குவதன் மூலம் 90 சதவீத பங்குகளை கொண்ட நிறுவனமாகி விடும். மார்ச் 24 ம் தேதியில் ரூ.275.60 விலையில் இருந்த நோவார்டிஸ் ( இந்தியா ) வின் பங்குகளை 27 சதவீதம் பிரீமியம் வைத்து ரூ.351 க்கு வாங்கிக்கொள்ள நோவார்டிஸ் முன் வந்திருக்கிறது. சமீபத்தில் நோவார்டிஸ் ( இந்தியா ) வின் பங்கு மதிப்பு 19.99 சதவீதம் வரை உயர்ந்திருப்பதை அடுத்து அதன் 39 சதவீத பங்குகளை, அதன் தாய் நிறுவனமான நோவார்டிஸ் வாங்கிக்கொள்ள முன்வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
நன்றி :தினமலர்


சத்யம் கம்ப்யூட்டர்ஸை வாங்க விருப்பம் தெரிவித்த சிலர் வேண்டாம் என்று விலகல்

சத்யம் கம்ப்யூட்டர்ஸின் 51 சதவீத பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்து பல நிறுவனங்கள் விண்ணப்பம் செய்திருந்தன. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. வந்திருக்கும் விண்ணப்பங்களை பிரித்து, அவர்கள் தகுதியானவர்கள்தானா என்று சரிபார்க்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், வாங்க விரும்பம் தெரிவித்திருந்த சில நிறுவனங்கள் இப்போது, விருப்பமில்லை என்று விலகிக்கொண்டதாக தெரிகிறது. தனியார் முதலீட்டு நிறுவனங்களான கோல்பெர்க் கிராவிஸ் ராபர்ட்ஸ், டெக்ஸாஸ் பசிபிக் குரூப், பேரிங் ஆகிய நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனமான ஹெவ்லட் பேக்கார்டும் விலகிக்கொண்டதாக தெரிகிறது. இருந்தாலும் மீதி விண்ணப்பங்களை சரி பார்க்கும் வேலைகள் நடந்து வருகின்றன. யாருக்கு சத்யத்தை கொடுக்கலாம் என்று ஏப்ரல் 15ம் தேதி அறிவித்து விடுவார்கள் என்று தெரிகிறது.ஏர்கனவே ஐகேட் என்ற அமெரிக்க நிறுவனம், சத்யத்தை வாங்க ஆர்வம் காண்பித்து, பின்னர் விண்ணப்பிக்காமல் இருந்து விட்டது. சத்யத்தின் வருமானம் குறைந்து வருவது, லாபம் மற்றும் கடன் எவ்வளவு என்பது சரியாக தெரியாத நிலை போன்ற காரணங்களால் அது வாங்க முன்வரவில்லை என்று சொல்லப்பட்டது.
நன்றி : தினமலர்