Saturday, November 21, 2009

மரணப் பாதைகளா இந்தியச் சாலைகள்?

உலகில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா, மக்கள்தொகையில் மட்டுமல்ல; சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கையிலும் 2-ம் இடம். தேசிய நெடுஞ்சாலை, விரைவுச்சாலை, மாவட்டச் சாலைகள், பிற மாவட்டச் சாலைகள், கிராமச் சாலைகள் என மொத்தம் 33.10 லட்சம் கிலோமீட்டர் சாலைகளைக் கொண்டிருக்கிறோம்.

ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்துகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். 10 லட்சத்துக்கும் அதிகமானோர் காயமடைகின்றனர். விபத்துகளால் மட்டும் ஆண்டுக்கு ரூ. 5,500 கோடிக்கு இழப்பு ஏற்படுகிறது.

வாகனப் பெருக்கத்துக்கு ஏற்ப சாலைகளை மேம்படுத்த பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தாலும், விபத்துகள் குறையவில்லை. காரணம், சாலையை எப்படிப் பயன்படுத்துவது என்ற அடிப்படை விஷயம்கூட பொதுமக்களை முறையாகச் சென்றடையவில்லை என்பதுதான்.

இந்திய தண்டனைச் சட்டம்-1860, மோட்டார் வாகனச் சட்டம்-1988, சாலைக் கட்டுப்பாட்டு விதிகள்-1989 ஆகியவற்றின் மூலம், சாலை விதிகளை மீறுவோர், விபத்து ஏற்படுத்துவோர், முறையற்ற வாகனங்களைப் பயன்படுத்துவோர்மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், இவை அனைத்துமே, இந்தியச் சாலைகளில் நிகழும் விபத்துகளைக் கட்டுப்படுத்தப் போதுமானதாக இல்லை.

விபத்து ஏற்படுத்தி ஒருவரது உயிரிழப்புக்குக் காரணமானவருக்கு அளிக்கப்படும் அதிகபட்சத் தண்டனையே, இரு ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம். ஆனாலும், இந்தத் தண்டனையும் பெரும்பாலான வழக்குகளில் கிடைப்பதில்லை; அபராதத்தோடு நின்றுவிடுகிறது. இதனால், சாலை விதி மீறல்கள் குறித்து எவரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

விபத்துகளைக் கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளும் மத்திய அரசு, இதற்கென சட்டத்திருத்தம் மேற்கொள்ள பல இடங்களில் இருந்தும் சட்ட முன்வரைவு பெற்று பரிசீலிக்கிறது.

இதில் ஒன்று, நீதிபதி ஏஆர். லட்சுமணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தனது சட்ட முன்வரைவுப் பரிந்துரைகளை ஆகஸ்ட் 2009-ல் அளித்தது.

அதில், சாலைகளில் வேகமாக, மக்களை அச்சுறுத்தும் வகையில் தாறுமாறாகச் சென்று விபத்து ஏற்படுத்தி, உயிர்ச்சேதம் விளைவிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு ஐபிசி - 304ஏ பிரிவில் அதிகபட்சம் 2 ஆண்டு என உள்ள சிறைத் தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும். இதை, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவாகவும் மாற்ற வேண்டும்.

ஐபிசி - 304பி எனும் புதிய பிரிவை ஏற்படுத்தி, விபத்தில் உயிர்ச்சேதம் அல்லது காயம் ஏற்படுத்தி, நிற்காமல் சென்றுவிடும் வாகன ஓட்டுநர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும், ஐபிசி - 279ஏ என்ற புதிய பிரிவை ஏற்படுத்தி, அதிக பாரம் ஏற்றி, மக்கள் உள்ள பகுதிகளில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு 6 மாதங்கள் சிறை, அபராதம் விதிக்க வேண்டும் எனச் சட்டவிதிகளைக் கடுமையாக மாற்ற பரிந்துரை செய்துள்ளது.

இதற்கிடையே, "செல்போன் பேசியபடி வாகனத்தில் சென்றால் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்க வேண்டும்' என வெங்கய்யநாயுடு தலைமையில் மக்களவைக்குழு அளித்த முன்மொழிவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளக்கூடும் எனும் எதிர்பார்ப்பும் தற்போது நிலவுகிறது.

ஏற்கெனவே பல சட்டங்கள் இருந்தும் அதை அமல்படுத்துவதில் குறைபாடு இருக்கும்போது, மேலும் கடுமையான சட்டங்களை விதித்து என்ன பயன்? அதை அமல்படுத்துவது யார்?

அதிவேகம், அதிக பாரம், சாலைகளில் இயங்கத் தகுதியற்ற வாகனங்கள், குடித்துவிட்டு, போதை மருந்து உட்கொண்டு வாகனம் ஓட்டும் ஓட்டுநர், விதிகளைப் பின்பற்றாதது, உரிமம் பெறத் தகுதியற்ற ஓட்டுநர் எனப் பல காரணிகள் விபத்துகளுக்கு வழிவகுக்கின்றன.

இவற்றைக் கட்டுப்படுத்த, கண்காணிக்க போதிய அடிப்படை வசதிகளை மேற்கொள்ளாமல் வெறுமனே சட்டத்தைக் கடுமையாக்குவதால் மட்டும் பயன்கிடையாது.

வாகன ஓட்டுநர்களுக்கு மட்டுமன்றி, பொதுமக்களுக்கும் சாலைகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதல் அவசியம்.

வாகன உற்பத்தி இடத்திலேயே வேகத்தைக் கண்காணிக்கும் கருவி பொருத்துவது, சாலையில் இயங்கும் அனைத்து வாகனங்களிலும் இக்கருவியைக் கட்டாயம் பொருத்தச் செய்வது, கட்டாயக் காப்பீடு, தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டண வசூல் மையங்களில் வாகனம் நிற்கும்போது, அதன் அதிக எடையைக் கண்டறிய எடை மேடை அமைப்பது போன்றவை தேவை.

குடித்துவிட்டு, செல்போன் பேசியபடி, சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோர், விதிமீறுவோரைக் கண்காணிக்க ஆங்காங்கே வாகனத் தணிக்கையில் ஈடுபட வேண்டும்.

அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்து, அவற்றை ஒருங்கிணைத்து, மாவட்டத் தலைநகரில் கண்காணிப்பு, கட்டுப்பாட்டறை அமைக்க வேண்டும்.

விதிமீறலில் ஈடுபடுவோர் மீது வழக்குத் தொடர்வது, அந்த வழக்குகளை விரைந்து விசாரித்து, அபராதம், தண்டனை விதிப்பது ஆகியவற்றுக்கென பிரத்யேக நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். விபத்துகளால் ஏற்படும் பொருள், மனித இழப்புகளைவிட, இவற்றுக்கு அதிகம் செலவாகிவிடாது.

இதில் முக்கியமாக, இவை அனைத்தையும் அமல்படுத்தும் பணியை போலீஸôரிடம் அளித்துவிடக் கூடாது. தமிழகத்தில் உள்ள ஒரு லட்சம் காவலர்களுக்கு நிகராக, போக்குவரத்துக்கு எனத் தனியாக காவலர்கள் நியமிக்க வேண்டும். இருக்கும் பற்றாக்குறையில், மீண்டும் வழக்கமான போலீஸôரிடம் இப் பணிகளை ஒப்படைப்பதால், விதிமீறல்கள் தொடரச் செய்யுமே தவிர, குறையாது.

இந்தியச் சாலைகளில் பயணிப்போரின் உயிர் என்றாவது ஒருநாள் சாலையில் பறிபோகும் எனும் அச்சத்தைப் போக்குவதும், சாலை விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி பயணிப்போரின் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதும் அரசின் கடமை. இதற்கான அடிப்படை வசதிகளை அதிகப்படுத்தி, சட்டத் திருத்தங்களைச் செய்வது அவசியமாகும்.
கட்டுரையாளர் : எஸ். ஜெய்சங்கர்
நன்றி : தினமணி

தங்கம் விலை ஏற்றம் எதிரொலி பழைய தங்கம் விற்பனையும் குறைவு

தங்கத்தின் பயங்கர விலையேற்றத்தால், பழைய தங்க நகைகள் விற்பனை குறைந்துள்ளதாக மும்பையை சேர்ந்த தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.மகாராஷ்டிரா, மும்பையில், சவேரி பஜாரில், தங்கம் வாங்குவது மற்றும் விற்பது ஆகிய இரண்டும் நடைபெறும். ஆனால், கடந்த புதனன்று ஏற்பட்ட, தங்கத்தின் பயங்கர விலையேற்றத்தால், இந்த பஜார் பகுதி தற்போது வெறிச்சோடி காணப்பட்டது.இதுகுறித்து, ஜுக்ராஜ் காந்திலால் அண்ட் கோ என்ற நிறுவனத்தை சேர்ந்த பிரகாஷ் ஜே.ஜெயின் என்பவர் கூறியதாவது:தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி 200 டன் அளவிலான தங்கத்தை ஐ.எம்.எப்.,யிடம் இருந்து வாங்கி உள்ளது.பத்து கிராம் தங்கத்தின் விலை 15 ஆயிரம் ரூபாயாக இருந்த போது, தினமும், 8 கிலோ முதல் 10 கிலோ வரை தங்கம் விற்பனைக்கு வந்தது. அதுவே 10 கிராம் தங்கம் 16 ஆயிரம் ரூபாயாக அதிகரித்த போது, எங்களிடம் தினசரி விற்பனைக்காக வரும் தங்கத்தின் அளவு 4 கிலோ முதல் 5 கிலோவாகக் குறைந்தது. 10 கிராம் தங்கம் 17,150 ரூபாயை தொட்டபோது, எங்களிடம் விற்பனைக்கு வரும் தங்கத்தின் அளவு தினமும் 4 கிலோவாகக் குறைந்தது.விலை அதிகரிக்கும் போது, மக்கள் பழைய நகைகள் விற்பனை செய்வது குறைந்து கொண்டே வந்துள்ளது. தற்போதைய நிலையிலேயே தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே போனால், அடுத்த ஆறு மாதங்களில், 10 கிராம் தங்கத்தின் விலை 18 ஆயிரத்தை தொடும் என கருதுகிறேன். நான் எதிர்பார்த்த காலத்தை விட குறைந்த காலத்திலேயே, தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.இவ்வாறு ஜே.ஜெயின் கூறினார்.மும்பையில் மிகப்பெரிய நகைகடையான திரிபுவன் தாஸ் பீம்ஜி சவேரி மேலாளர் கிரண் தீக்ஷித் கூறுகையில், 'மக்கள், திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குகி
நன்றி : தினமலர்


மூன்றாம் பால்

அரவானிகள் விரும்பினால், வாக்காளர் பட்டியலில் தங்களை "மற்றவர்' என்று தனியாக அடையாளப்படுத்திக் கொள்ளலாம் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய நடைமுறையை முதன்முறையாக அறிவித்துள்ளது. அரவானிகளின் பத்தாண்டுகளுக்கும் மேலான கோரிக்கைக்குத் தேர்தல் ஆணையம் முதன்முதலாக செவி சாய்த்திருக்கிறது. இதற்காகத் தேர்தல் ஆணையம் பாராட்டப்பட வேண்டும்.

இதுநாள்வரையிலும் அரவானிகளில் பெரும்பாலோர் வாக்களித்து வந்தாலும்கூட, அவர்கள் ஆண் அல்லது பெண் என்றே பால் பாகுபாடு செய்யப்பட்டு வந்தனர். வேலைவாய்ப்புகள், கடவுச்சிட்டை (பாஸ்போர்ட்) உள்ளிட்ட ஆவணங்களிலும்கூட இந்த பாகுபாடு ஆண் அல்லது பெண் என்றாக மட்டுமே இருந்து வருகிறது. தற்போது தேர்தல் ஆணையம் தொடங்கி வைத்துள்ள இந்த நல்ல நடைமுறை, அனைத்து துறைகளுக்கும் பரவும் என்பதில் சந்தேகமில்லை.

அரவானிகளில் சிலர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் போட்டியிடவும் செய்தார்கள். ஆனால், வடஇந்தியாவில் சில நகராட்சித் தேர்தல்களில் அரவானிகள் சிலருக்கு கிடைத்த வெற்றியைப் போல தமிழ்நாட்டில் பெற இயலவில்லை.

தேர்தலில் போட்டியிடும்போது அவர்கள் தங்களை ஆண் அல்லது பெண் என்ற ஏதோ ஒரு பாலினத்தைத் தேர்வு செய்துதான் போட்டியிட முடிந்தது. ஆனால் இப்போது மற்றவர்கள் என்பதைத் தேர்வு செய்து போட்டியிட முடியும். பெண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் தொகுதிகளில் மற்றவர்கள் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்பது இப்போதைக்கு தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் காலப்போக்கில் இதற்கான தனி வரையறைகளை தேர்தல் ஆணையம் உருவாக்கும் என்பது நிச்சயம்.

விழுப்புரம் மாவட்டத்தில் கூவாகம் கிராமத்தில் அரவானிகள் நடத்தும் திருவிழாவுக்கும் அழகிப் போட்டிக்கும் சமூகமும் அரசும் கொடுத்த முக்கியத்துவம் அவர்களது கோரிக்கைகளுக்குக் கொடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. காரணம், இவர்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை என்ற கருத்து உள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சம் 2 லட்சம் பேர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது மற்றவர்கள் எண்ணிக்கை வரும்போது இவர்களது சரியான எண்ணிக்கை தெரியவரும். இவர்களுக்கென ஒரு வாக்குவங்கி இருப்பது தெரிந்தால் ஒருவேளை அரசியல் கட்சியினரும் இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வாக்குறுதிகளை அளிப்பார்கள்.

பிறப்பிலேயே அரவானிகளாக இருப்போர் எண்ணிக்கையைவிட, வளரும் காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உளவியல் மாற்றங்களால் தங்களை அரவானிகளாக மாற்றிக்கொள்வோர் எண்ணிக்கை அதிகம். இவர்கள்தான் தங்களை அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களில் 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு பாலின மாற்றுச் சிகிச்சை அளிப்பதில் பெரும் சிக்கல்களும், புகார்களும் இருந்து வருகின்றன. இவர்கள் பிறப்புச் சான்றிதழில் பாலினத்தை மாற்றிப் பதிவு செய்வதிலும் சிக்கல்கள் இருந்து வருகின்றன.

அரவானிகளுக்கு தமிழக அரசு எப்போதும் கனிவாகவே நடந்து வந்திருக்கிறது. அரவானிகளின் பாலினமாற்று அறுவைச் சிகிச்சைக்கு மும்பை செல்லும் நிலைமையை மாற்றி, தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகச் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் அரவானிகளுக்கு தனி அடையாள அட்டைகள் வழங்கிடப் புகைப்படங்கள் எடுக்கும்பணி சென்னையில் நடைபெற்றுள்ளது. அரவானிகள் சிலர் தங்களுக்குக் குடும்ப அட்டைகள் கேட்டு விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்கள். இவை யாவும் அவர்களுக்கு ஆதரவாக அமையும்போது அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தரம் தாழ்த்திக் கொள்ளாமல் தனித்து வாழ உதவியாக இருக்கும்.

கடைவீதியிலும், ஓடும் ரயில்களிலும் அரவானிகள் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்து வெறுப்பு ஏற்படுவது இயற்கையே. அவர்களது நிலையைப் புரிந்துகொண்டால் இந்த வெறுப்பு மறையும். மேலும் அரவானிகளும் பெருகி வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு சமூகம் வெறுக்கும் இந்தப் பழக்கவழக்கங்களை விட்டுவிடும்போது அவர்களைப் பற்றிய மதிப்பு கூடும். ஒரு தொலைக்காட்சியில் "இப்படிக்கு ரோஸ்' தொடர் மூலம் அரவானிகள் பற்றிய எண்ணத்தை ஒரு அரவானி மாற்ற முடிகிறதென்றால், இதை நிச்சயமாக எல்லா அரவானிகளாலும் செய்ய முடியும்.

கவிஞர் நா. காமராஜன் கவிதையில், அரவானி தன்னைப் பற்றி சொல்லும் கவிதை வரி இது: "சந்திப் பிழை போல நாங்கள் சந்ததிப் பிழைகள்'. அவர்கள் சந்திப்பிழை அல்ல. தனிச்சொல். எல்லாச் சொல்லும் பொருளுடைத்து!
நன்றி : தினமணி

இறக்கை கட்டி பறக்குது தங்கம் விலை ஒரே மாதத்தில் சவரன் ரூ. 1,040 அதிகரிப்பு

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரன் 12 ஆயிரத்து 944 ரூபாய்க்கு விற்றது. ஒரே மாதத்தில் மட்டும் சவரனுக்கு 1,040 ரூபாய் அதிகரித்துள்ளது.ஆபரணத் தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளாக ஏறுமுகமாகவே உள்ளது. சிறிது விலை குறைந்த மாதிரி தெரிந்தாலும் நேற்று முன்தினம் காலை சவரன் 13 ஆயிரத்தை தொட்டது. மாலையில் சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து, 12 ஆயிரத்து 976 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,622 ரூபாய்க்கும் விற்பனையானது.நேற்று காலைசவரனுக்கு 64 ரூபாய் வரை குறைந்து, 12 ஆயிரத்து 912 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,614 ரூபாய்க்கும் விற்றது. மாலையில் சவரனுக்கு மேலும் 32 ரூபாய் அதிகரித்து, 12 ஆயிரத்து 944 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,618 ரூபாய்க்கும் விற்பனையானது.கடந்த அக்டோபர் 20ம் தேதி சவரன் 11 ஆயிரத்து 904 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,488 ரூபாய்க்கும் விற்றது. கடந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி சவரன் ஒன்பதாயிரத்து 24 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,128 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரு மாதத்தில் சவரனுக்கு 1,040 ரூபாய் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.இது குறித்து சென்னை மொத்த நகைகள் சங்க துணைத் தலைவர் உதயகுமார் கூறுகையில், 'எப்போதெல்லாம் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைகிறதோ? அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கிறது. முதலீடுக்கு தங்கம் மிகவும் பாதுகாப்பானதாக அனைவரும் கருதுகின்றனர்.சமீபத்தில், ரஷ்யா 30 டன் தங்க பிஸ்கட்டுகளை விற்றது. அதை வெளியே போகாமல் இருக்க மத்திய வங்கி வாங்கிவிட்டது. பங்குச் சந்தை, அமெரிக்க டாலர் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. சிறிது குறைந்ததுபோல் தெரிந்தாலும், தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது' என்றார்.
நன்றி : தினமலர்