Thursday, September 3, 2009

தண்ணீர்... தண்ணீர்!

பருவமழை பொய்ப்பதால் முதலில் பாதிக்கப்படுவது விவசாயம். அடுத்து உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை குடிநீர். கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை நோக்கி தமிழகம் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள 92,000 கிராமங்களில் 3,300 கிராமங்களில்கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இதே நிலைமை 160 பேரூராட்சிகளிலும் 52 நகராட்சிகளிலும் உள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் கிராமப்புற மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபடுவதும், அதிகாரிகளை முற்றுகையிடுவதும் அதிக எண்ணிக்கையில் நடக்கத் தொடங்கிவிட்டன.

நாளுக்கு நாள் இதன்பிடி கிராமப்புற மக்கள் வாழ்க்கையை முடக்கிப்போடுவதாக மாறிக்கொண்டிருக்கிறது.

நகராட்சி, மாநகராட்சிகளில் இத்தகைய குடிநீர்ப் போராட்டம் நடந்தால், இந்தப் போராட்டத்துக்கு அரசியல் மற்றும் அதிகார ஆதரவு கிடைக்கும். ஏனென்றால், இதைக் காரணம் காட்டி இரண்டு லாரிகளில் தண்ணீர் விநியோகம் என்று சொல்லி, ஒரு லாரியை ஓட்டல்களுக்குத் திருப்பிவிட்டு நாள்தோறும் கணிசமான தொகையைப் பார்க்க முடியும். ஆனால் கிராம மக்களுக்காக குடிநீர் விநியோகம் என்பதை பேரூராட்சிகளால் செய்ய முடியாதே!

மேலும், கிராம மக்களுக்கு முறையான குடிநீர் விநியோகம் என்பதே பெரும்பாலும் இருப்பதில்லை.

அந்தந்த ஊராட்சி, பேரூராட்சிகளில் உள்ள குடிநீர்க் கிணற்றிலிருந்து தண்ணீரை மேனிலைத்தொட்டிக்கு ஏற்றி, விநியோகம் செய்யப்படுகிறதே தவிர, இவை பல இடங்களில் சுத்திகரிக்கப்படுவதுகூட இல்லை. ஆனால் தற்போது நிலத்தடி நீர் குறைந்துகொண்டே போகிறது. கிணறுகள் வற்றிவிட்டன.

தமிழக அரசின் கொள்கைப்படி, ஒரு தனிமனிதனுக்கு நாளொன்றுக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவு கிராமத்தில் 40 லிட்டர், பேரூராட்சியில் 70 லிட்டர், நகராட்சியில் 90 லிட்டர், மாநகராட்சியில் 135 லிட்டர். இத்தகைய மாறுபட்ட அளவீட்டு முறையே அநியாயமானது. ஒவ்வொரு மனிதனுக்கும் குடிநீர்த் தேவை என்னவோ ஒரே அளவுதான். நகர மக்கள் குளிக்க, துணி துவைக்க, தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச, கழிவறைக்குப் பயன்படுத்த என்று எல்லா பயன் பாட்டுக்கும் சேர்த்துத்தான் மாநகராட்சி மக்களுக்கு அதிகமான அளவும், கிராமத்து மனிதனுக்குக் குறைந்த அளவும் நிர்ணயிக்கிறார்கள். ஆனால் கிராமத்து மனிதனுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்த
பட்சத் தேவைகூடப் பூர்த்தியாகவில்லை.

நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ளாட்சி வழங்கும் குடிநீரை 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் குடிப்பதற்குப் பயன்படுத்துவதே இல்லை. இவர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்க் கேன்களை விலைக்கு வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். உள்ளாட்சி விநியோகம் செய்யும் பெருமளவு குடிநீர், குளியல் மற்றும் நவீன கழிவறைக்கே செலவிடப்படுகிறது என்பது மற்றொரு கசப்பான உண்மை.

அண்மையில் கோவையில் ஒரு தனியார் கல்லூரி நடத்திய ஆய்வு, நீர்க் கசிவுகளும் குடிநீர் விநியோகத்தில் நடைபெறும் நீர்த் திருட்டும் மிக அதிகமாக இருப்பதால்தான் மக்களுக்குத் திட்டமிட்ட அளவில் குடிநீர் கிடைக்கவில்லை என்கிறது. நீர்த் திருட்டு இழப்பும்கூட, இத்திட்டத்தில் பயன்பெறும் வழியோர கிராமங்களின் தலையில் விழுகிறது.

கல்வியைத் தத்தெடுத்து வளர்க்கும் அரசியல்வாதிகள், குடிநீர் கேன் விநியோகத்தையும், அதற்கான ஆலைகளையும் தத்தெடுத்து சேவை செய்கிறார்கள். இவர்கள் உள்ளாட்சி விநியோகிக்கும் நீரை அப்படியே கேன்களில் பிடித்து, "பியூர் வாட்டர்' என்ற பெயரில் அடைத்து விற்கிறார்கள். "பியூரிபைடு ட்ரிங்கிங் வாட்டர்' என்று லேபிள் ஒட்டினால் சட்டப்படி குற்றம். ஆனால் "பியூர் வாட்டர்' என்பது திருட்டுக் குடிநீராக இருந்தாலும் தண்டனை இல்லை.

இதில் வேடிக்கையானதும் வேதனையானதும் என்னவென்றால், ஏரிகளையும் குளங்களையும் அழித்த நகர, மாநகரங்கள், தங்களுக்குத் தேவையான குடிநீரை, உலகத்தில் மழையே பெய்யாவிட்டாலும்கூட தங்களுக்கு மட்டும் கிடைக்கும்படி செய்துகொள்ள முடிகிறது.

ஏனென்றால், ஆட்சியாளர்களின் இருப்பிடமாக நகரம் இருக்கிறது. ஆனால் கிராம மக்கள் அப்படியல்ல. அவர்களது ஏரி மற்றும் நிலத்தடி நீரை அண்டை நகரங்கள் உறிஞ்சுவதால்தான் அவர்கள் கிணறு வற்றிப்போகிறது. அதனால்தான் அவர்கள் தாகத்துக்குத் தண்ணீர் இன்றித் தவிக்கிறார்கள்.

தமிழக அரசு குடிநீர்ப் பிரச்னைக்காக மொத்தம் ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்து, இதுவரை ரூ. 21 கோடி வழங்கியுள்ளது. குறைந்த பட்சம், குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கும் நடவடிக்கைகளில் மட்டுமாவது நேர்மையாகவும் முறைகேடுகளால் நிதி ஒதுக்கீடு காணாமல் போகாதபடியும் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.

நகர மக்கள் மீது மட்டுமே அக்கறை கொள்வதைச் சற்றே குறைத்துக்கொண்டு, கிராமங்களுக்கு அரசு முன்னுரிமை தர வேண்டும்.
ஒரு லிட்டர் குடிநீரை ஒரு ரூபாய்க்கு வாங்கும் சக்தி நகர மக்களிடம் இருக்கலாம். கிராம மக்களிடம் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வாங்குகிற அளவுக்குத்தானே கிராமப்புறப் பொருளாதாரம் இருக்கிறது!

நன்றி : தினமணி

அனைவருக்கும் கிடைக்குமா அடிப்படைக் கல்வி?

அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக் கல்வி கற்கும் உரிமை வழங்கும் மசோதாவை ஜூலை மாதக்கடைசியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரு மனதாக நிறைவேற்றின.

ஒருவகையில் இந்தியாவிலுள்ள அனைத்துத் தரப்பினரையும் இந்த மசோதா திருப்திப்படுத்தியிருக்கிறது. எல்லாக் குழந்தைகளும் கல்வி பெற இந்த மசோதா வழி ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

எனினும் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் போதிய விழிப்புடன் இருக்காவிடில் நோக்கம் நிறைவேறாமல் போகக்கூடும்.

கல்வி கற்க உரிமை வழங்கும் மசோதாவின் நோக்கத்தில் தவறு இருப்பதாக யாரும் சுட்டிக்காட்ட முடியாது. சட்டத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும், சிலர் அதை விமர்சித்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்தச் சமூகத்துக்கு இப்போது என்ன செய்யவேண்டுமோ அதைத்தான் இந்தச் சட்டம்செய்ய முனைந்திருக்கிறது.

காலம் கடந்து வந்திருக்கிறது என்பதைத் தவிர வேறு எந்த விமர்சனத்தையும் இந்தச் சட்டத்தின் மீது வீசிவிட முடியாது.

1940-களில் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து நியூயார்க்கில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

உலக அளவில் கல்வியை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என அந்தக் கூட்டத்தில் இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஐ.நா. சட்டத்தில் இதை இடம்பெறச் செய்யவும் இந்தியா போராடியது.

இந்தியாவின் இந்தக் கருத்தை பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொண்டு அமல்படுத்தின.

ஆனால், அனைவருக்கும் கல்வி வழங்குவதை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்று வலியுறுத்திய இந்தியா, தனது மக்களுக்கு அந்த உரிமையை வழங்குவதற்கு இவ்வளவு காலம் தாமதித்திருக்கிறது.

தற்போதைய சூழலில் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் சில பிரச்னைகள் எழக்கூடும். மாநிலங்களில் கல்வியின் நிலை குறித்தும் புதிய திட்டத்தை அமல்படுத்துவதற்குத் தேவையான எதிர்கால வழிமுறைகள் குறித்தும் முதலில் ஆய்வு செய்ய வேண்டும். திட்டத்துக்குத் தேவையான நிதியை ஒதுக்குவது குறித்துத் தெளிவாக முடிவு செய்ய வேண்டும்.

இதுதவிர, தரமான ஆசிரியர்கள் கிராமப்புறங்களுக்குச் சென்று பணியாற்ற முன்வருவார்களா? சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 25% இடஒதுக்கீடு வழங்குவது சாத்தியம்தானா? என்பன போன்ற நியாயமான சந்தேகங்களுக்கும் விடைகாண வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தாண்டி இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையிலான உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதால் ஏற்படும் கூடுதல் செலவை 50:50 என்கிற விகிதத்தில் மத்திய அரசும் மாநில அரசும் பகிர்ந்துகொள்ளும் என மக்களவையில் கல்வி அமைச்சர் அறிவித்தார்.

இந்த விகிதம் 67:33 என்கிற விகிதத்தில் இருக்கும் நிலையில், புதிய விகிதத்தை அமல்படுத்துவது குறித்து திட்டக் குழு அல்லது நிதி அமைச்சகத்துடன் உரிய ஆலோசனை பெறப்பட்டதா என்பது தெரியவில்லை. கூடுதல் நிதிச்சுமை குறித்து மாநிலங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுவிட்டதா என்பதையும் அமைச்சர் விளக்கவில்லை.

அப்படியே கூடுதல் நிதிச்சுமையை ஏற்றுக்கொள்கிறோம் என மாநிலங்கள் கூறினாலும், அவைகளால் முடியுமா என்பதும் ஆய்வு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இவை அனைத்துமே தெளிவாக்கப்பட வேண்டிய சந்தேகங்கள்.

இதுவரை கல்வி தொடர்பான பெரிய முடிவுகள் அனைத்தையும் மாநிலங்கள்தான் செய்து வந்தன.

இப்போது முதன்முதலாக மத்திய அரசு அந்த வேலையைச் செய்திருக்கிறது. இது மாநிலங்களின் உரிமை தொடர்பான விஷயம் என்பதால் மாநிலங்களிடையே கருத்தொற்றுமை காண வேண்டியது அவசியம்.

பள்ளி ஆசிரியர்கள் என்பவர்கள் அரசியல் ரீதியாகப் பெரும் சக்தி வாய்ந்தவர்கள். வாக்குச் சாவடிகளை இவர்கள்தான் கையாள்கிறார்கள் என்பதால், இவர்களைப் பகைத்துக் கொள்வதை எந்த அரசியல் கட்சியும் விரும்புவதில்லை.

அப்படியிருந்தும், மாணவர்களைத் திறம்படப் பயிற்றுவிக்கும் பணியைச் சரிவரச் செய்யாமலிருக்கும் ஆசிரியர்கள்தான் அதிகமாக இருக்கின்றனர்.

பெரும்பாலானோர் நகர்ப்புறங்களிலேயே வசிக்க விரும்புவதால், கிராமப்புறப் பள்ளிகளில் அவ்வப்போது காலிப் பணியிடங்கள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்னைகளையெல்லாம் போக்குவதற்குப் புதிய சட்டம் என்ன செய்திருக்கிறது என்பது இதுவரை விளக்கப்படவில்லை.

இந்தியக் கிராமங்களில் தொடக்கக் கல்வி கிடைப்பதில் இப்போது பிரச்னையில்லை. தரமான கல்வியைப் பெறுவதில்தான் தடைகள் இருக்கின்றன.

ஒரு கிலோமீட்டர் இடைவெளியில் ஒரு தொடக்கப்பள்ளி இருக்க வேண்டும்; இரு தொடக்கப் பள்ளிகளுக்கு ஓர் உயர்நிலைப் பள்ளி இருக்க வேண்டும் என்பன போன்ற விதிமுறைகள் கல்வித்துறையில் இருக்கின்றன.

நாடு முழுவதுமே இந்த விதிமுறைகள் பெரும்பாலும் நடைமுறையில் இருக்கின்றன. மிக அருகிலேயே கல்வி கிடைப்பதை இது உறுதி செய்கிறது. ஆனால், கல்வியின் தரத்தைப் பற்றி எந்த விதிமுறையும் இல்லை.

புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் மசோதாவை நிறைவேற்றும்போது நாடாளுமன்றத்திலும் இதுபற்றி விவாதிக்கப்படவில்லை. உண்மையில், தரம்தான் தொடக்கக்கல்வியின் அடிப்படைப் பிரச்னை.

பொருளாதாரத்தில் பின்தங்கியோரின் குழந்தைகளுக்குத் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு வழங்குவதற்குப் புதிய சட்டம் வழிவகுக்கிறது. இப்படியொரு ஏற்பாடு அவசியம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இதை முழுமையாக அமல்படுத்த முடியுமா என்பதுதான் பிரச்னையே. கல்வி வியாபாரமாகிவிட்ட இந்தக் காலத்தில் பணம் பண்ணுவதையே குறிக்கோளாகக் கொண்ட "கல்வித் தந்தைகள்' இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு நிச்சயம் முட்டுக்கட்டையாக இருப்பார்கள்.

அப்படியே சிலர் அரைமனதுடன் அமல்படுத்தினாலும், 25% பேரிடம் இழக்கும் நன்கொடையை மீதியுள்ள 75% பேரிடம் வசூலிக்கத்தான் போகிறார்கள். இது வேறுவிதமான பிரச்னைகளை உருவாக்கும்.

இன்னொரு பக்கம், "பொருளாதாரத்தில் பின்தங்கியோர்' யார் என்பதை அரசியல் சட்டம் வரையறுக்கவில்லை. அதனால் புதிய சட்டத்தை எதிர்த்துப் பள்ளிகளின் உரிமையாளர்கள் வழக்குத் தொடர்வதற்கும் வழி இருக்கிறது. இதுதவிர, பள்ளிகளில் புதிய முதலீடுகள் வருவதையும் இந்தச் சட்டம் பாதிக்கிறது.

இந்தச் சட்டத்தை இயற்றிவிட்டதால், தொடக்கக் கல்வி தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் "தீர்ந்து' விட்டது என அரசு நினைப்பதுதான் எல்லாவற்றையும்விட மிகவும் அபாயகரமானது.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் "வறுமையை ஒழித்துவிட்டதாக' நினைத்துக் கொண்டிருப்பதைப்போல்தான் இதுவும்.

சட்டங்களை இயற்றுவது, பிரச்னையைத் தீர்ப்பதில் முதல்படி மட்டுமே. அதை முழுமையாக அமல்படுத்துவதே பிரச்னையை முழுமையாகத் தீர்ப்பதற்கு வழிவகுக்கும்.

கல்வி என்பது சமூகத்தின் மிக அடிப்படையான பிரச்னை என்பதால், மத்திய அரசுடன் மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒத்துழைப்பது அவசியம்.

அப்படியில்லாமல், ஒருவரையொருவர் பழிசுமத்திக் கொள்வதாலும், சட்டங்களை இயற்றிக் கிடப்பில் போடுவதாலும் நிலைமை இன்னும் மோசமாகுமே தவிர, தீர்வு கிடைக்காது.

கட்டுரையாளர் : டி . எஸ். ஆர். சுப்பிரமணியன்
நன்றி : தினமணி

விவசாயி கடன் வட்டி விகிதத்தை குறைந்தது ஸ்டேட் வங்கி

விவசாயிகளுக்கான கடன் வட்டி விகிதத்தை ஸ்டேட் வங்கி(எஸ்.பி.ஐ.,) குறைத்துள்ளது. இதுகுறித்து ஸ்டேட் வங்கி விவசாய தொழில் பிரிவு பொது மேலாளர் நிரஞ்சன் பார்ஷா தெரிவிக்கும் ‌போது, பருவநிலை மாற்றம் காரணமாக விவசாயிகள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகி உள்ளனர். கடுமையான மழை உள்ளிட்ட இயற்கை பேரழிவு காரணமாக, விவசாயிகள் அடைய வேண்டிய லாபம் கிடைக்க பெறாமல் அல்லல்பட்டு வருகின்றனர். இதனை ஸ்டேட் வங்கி கவனத்தில் கொண்டு, விவசாயிகளின் இன்னல்களை போக்கும் விதமாக, கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, சிறு விவசாயிகளின் 25 லட்சம் வரையிலான கடன்களுக்கு முதல் வருடத்தில் 8 சதவீதமும், இரண்டாவது மற்றும் மூன்றாவது வருடத்தில் 9 சதவீத வட்டி விகிதம் குறைக்கப் பட உள்ளது என தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


ஊழல்: கிளைகளை வெட்டினால் போதுமா?

தேர்தல்கள் மூலம் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் அரசில் ஆள்வோருக்கும், அதிகாரிகளுக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து வருபவை ஊழலும், அதிகார துஷ்பிரயோகமும் என்றால் அது மிகையல்ல.

ஊழல்வாதிகள் மீது துணிச்சலான நடவடிக்கை எடுக்க இயலாத, பலகீனமான தலைமையை நாடு பெற்றிருப்பது துரதிருஷ்டவசமானது.

இந்திய ஜனநாயகத்தை செல்லரிக்க வைத்துக் கொண்டிருப்பதே ஊழல் அரசியல்வாதிகள்தான்.

வலுவற்ற சட்டங்களால் 94 சதவீதம் பேர், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பி விடுவதாகக் கூறப்படுகிறது.

சட்டம் என்பது சாமானியர்களைத் தண்டிக்க மட்டும் அல்ல என்பதை நிரூபிக்கும் பொறுப்பு நீதித்துறைக்கு உண்டு.

"பொறியில் மாட்டிக் கொண்ட எலி, தப்பிக்கும் வாய்ப்பை கடைசிவரை நழுவ விடாது...'

அதேபோல, லட்சக்கணக்கில் ஊழல்செய்து மாட்டிக் கொள்ளும் அதிகாரிகள், நெஞ்சுவலியை (?) காரணம் காட்டி ஜாமீனில் வெளிவருகின்றனர்.

அதன்பிறகு, அவர்களது முதல் பணி, ஊழல் வழக்கிலிருந்து விடுபட என்னென்ன வழிகள் உண்டோ அத்தனை சாத்தியக் கூறுகளையும் கையாள்வது.

பதவிக்காலத்தில் அரசியல்வாதிகளுக்குச் செல்லப் பிள்ளைகளாக நடந்துகொண்டு, முறைகேடுகளுக்குத் துணைபோகும் அதிகாரிகள், ஊழல் வழக்குகளில் சிக்கினாலும், சிறிது காலத்தில், அதிலிருந்து லாவகமாக வெளிவந்து, மீண்டும் பதவிகளைப் பெற்றுவிடுவதை நடுநிலையாளர்கள் கவலையோடு பார்க்கின்றனர்.

உதாரணமாக மணல் குவாரிகளில் நடக்கும் முறைகேடுகளைச் சொல்லலாம்.

ஆறுகளில் 3 அடிக்கு கீழே, மணல் அள்ளக்கூடாது என்பது விதி. அதனை வலியுறுத்தி, குவாரிகளில் ஒப்புக்குப் பதாகை வைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், குவாரிகளில் 20 அடிக்கும் குறையாமல் மணல் அள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டால், இயந்திரம் மூலம் மணல் அள்ளப்படுவதால் எத்தனை அடிகள் அள்ளுகின்றனர் என்பதைக் கணக்கிட இயலவில்லை எனச் சாதாரணமாக பதில் அளிக்கின்றனராம்.

3 அடி ஆழத்துக்கும், 20 அடி ஆழத்துக்கும் வித்தியாசம் தெரியாதா?

தற்போது ஊழல் நோய் முற்றி, அனைத்துத் துறைகளிலும் புரையோடி விட்டதால், 50 ஆண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருந்த அரசுகள், திடீரென விழித்துக் கொண்டு ஊழலை ஒழித்து, வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்கப் போவதாக அறிவித்து, தகவல்பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தன.

ஆனால், அச் சட்டத்தின் பல ஷரத்துகள் சாமானிய மனிதர்களைச் சென்றடையும் வகையில், முழுமையாக இல்லை என்பதே நிதர்சன உண்மை.

ஊழலுக்கு எதிரான சட்டங்கள் பலமாக இல்லாததே, அதில் ஊறித் திளைப்போருக்கு சாதகமாக உள்ளது என்கிற அடிப்படை உண்மை கூடவா அரசுக்குத் தெரியாமல் போனது!

முறைகேடுகளுக்குத் துணைபோகாத, சிபாரிசுகளை ஏற்காத நேர்மையான அதிகாரிகளின் துறைகளை மாற்றிப் பந்தாடுவதும், லாயக்கற்றவர்களை, தமக்கு வேண்டியவர்களை உயர் பதவிகளில் அமரவைத்து, காரியம் சாதித்துக் கொள்வதும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கைவந்த கலையாகி விட்டது.

திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, வேறெங்கும் பதுக்கப்படாமல், முழுமையாகச் செலவிட்டாலே போதும் நாடு வல்லரசாகும்... சுவிஸ் வங்கிகள் திவாலாகும்!

ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா வெகுவேகமாக பின்னேறிச் செல்வதற்கு முக்கியக் காரணம், கூட்டுவைத்துக் கொள்ளை அடிக்கும் மனோபாவம்தான்.

தேர்தலின்போது அணிமாறும் அரசியல் கூட்டணியை விட, இக்கூட்டணி ஆபத்தானது.

சில நேர்மையான அலுவலர்களையும் டிரான்ஸ்பர், டம்மி போஸ்ட் என இக்கூட்டணி நோகடிக்கச் செய்கிறது.

ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில், இந்தியா தற்போது 74-வது இடத்தில் உள்ளதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

ஊழலின் வேர்களை அழிக்காமல், கிளைகளை மட்டும் வெட்டிக் கொண்டே இருந்தால், இப் பட்டியலில் இந்தியா கடைசி இடத்தைப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

கட்டுரையாளர் : ப.செ. சங்கரநாராயணன்
நன்றி : தினமணி

தோல்வியல்ல, வெற்றி!

சாதனைகளின்போது திகட்டத் திகட்டப் பாராட்டுவதைக் காட்டிலும், அந்தச் சாதனையே சோதனையாகிவிடும்போதும் பாராட்டி ஊக்குவிப்பது மிகச் சிறந்த பண்பாகும். அதை நடைமுறையில் செய்துகாட்டியிருக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தைப் (இஸ்ரோ) பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

2008-ம் ஆண்டுக்கான சிறந்த அறிவியல் சாதனைகளுக்காக ரூ.2 கோடி அளவுக்கு விருதுகளை அறிவித்துள்ள இஸ்ரோ, நான்கு குழுக்களை சிறந்த குழுத் திறன் விருதுக்குத் தேர்வு செய்துள்ளது. இதில் சந்திரயான்-1 திட்டத்தில் செயல்பட்ட இரண்டு குழுக்களுக்கும் விருதுடன் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு அளிக்கப்படவுள்ளது.

சந்திரயான்-1 செயற்கைக்கோள் புவியின் கட்டுப்பாட்டு மையத்தால் தொடர்பு கொள்ள முடியாமல், இத்திட்டம் முடிந்துபோனது என்ற செய்தி வந்தவுடன், தாழ்வு மனப்பான்மைக்குப் பழகிப் போய்விட்ட இந்தியர் மனதில் வழக்கம்போல தோன்றிய எண்ணம், "நம்ம ஆராய்ச்சியாளர்கள் சரியில்லை' என்பதுதான். ஆனால் உண்மை அதுவல்ல.

இதுபோன்ற கோளாறுகள் நேரிடும் காலங்களில் இதற்கான ஆய்வு மற்றும் உருவாக்கத்தில் ஈடுபட்டவர்கள் மீது தவறு இல்லை என்றாலும், அவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதுதான் பொதுவான வழக்கம். இந்த வழக்கத்திலிருந்து மாறுபட்டு, சந்திரயான்-1 திட்டத்தில் பணியாற்றிய குழுக்களுக்கும் விருதும் ரொக்கப் பரிசும் அறிவித்திருப்பது, இந்திய ஆராய்ச்சியாளர்கள் மத்தியில், நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தும்.

இன்னொரு பாராட்டுக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த விவகாரத்தில் எந்தவொரு கட்சித் தலைவரும் விஞ்ஞானிகளைக் குறை சொல்லவில்லை என்பதும், சக விஞ்ஞானிகள்கூட குத்தலான விமர்சனங்களை முன்வைக்கவில்லை என்பதும் ஆரோக்கியமான அறிவியல் சூழலை வெளிப்படுத்தியுள்ளன என்பதில் சந்தேகமே இல்லை.

சந்திரயான்-1 மூலம் கிடைத்துள்ள அறிவியல் தகவல்களைப் பார்க்கும்போது இத்திட்டம் குறைஆயுளில் முடிந்துபோனாலும், இது தோல்வி அல்ல, வெற்றிதான் என்பதை உணர முடியும்.

2008 அக்டோபர் 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-1 செயற்கைக் கோள், 312 நாள்களில் நிலவை 3400 முறை சுற்றிய பின்னர், கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தொடர்புகொள்ள முடியாதபடி செயலிழந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு இயங்கும் வகையில் திட்டமிடப்பட்ட இந்தச் செயற்கைக் கோள், குறைஆயுளில் முடிந்துபோனது, இந்திய விண்வெளி ஆய்வாளர்களுக்கு அதிர்ச்சியையும், கவலையையும் உண்டாக்கியது. இருப்பினும், சந்திரயான்-1 தனது பணியை 100 சதவீதம் செவ்வனே செய்திருப்பதும், அது எந்த நோக்கத்துக்காக அனுப்பப்பட்டதோ அதில் 95 சதவீதம் நிறைவேறியிருப்பதும் மனநிறைவைத் தருவதாக இருக்கிறது.

சந்திரயான்-1 செயற்கைக்கோள் இதுவரையிலும் 70,000க்கும் மேற்பட்ட படங்களை அனுப்பியுள்ளது. இவை யாவும் தரத்திலும், ஆய்வுக் கோணத்திலும் சிறப்பானவை, இதுவரை கிடைக்காத அரிய படங்கள் என்கிறது இஸ்ரோ. நிலவின் மேற்பரப்பில் உள்ள வேதிப்பொருள் மற்றும் கனிமப் பொருள்களைப் பற்றிய அரிய தகவல்களையும் சந்திரயான் -1 தந்துவிட்டுத்தான், மடிந்துள்ளது.

அடுத்து நமது விஞ்ஞானிகள் சந்திரயான்-2 அனுப்பும் வேளையில், தற்போது நேர்ந்த குறைபாடுகளை ஓர் அனுபவமாகக் கொண்டு, முழுஆயுள் காலத்துக்கும் செயல்படும்படியாக, தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்துவார்கள் என்பது நிச்சயம்.

சுடுபாலில் நாக்கைப் புண்ணாக்கிக்கொண்ட பூனை, குளிர்ந்த பாலைக் குடிக்கவும் தயங்குவதைப் போன்ற நிலைமை, இதுபோன்ற தருணங்களில் ஆராய்ச்சியாளர்களுக்குத் தோன்றுவது இயல்புதான். இந்தச் சந்தர்ப்பத்தில், "இத்திட்டங்களை ரஷியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் இணைந்து செயல்படுத்தினால் இதுபோல் பிரச்னை ஏற்படாது' என்று சில கோடாரிக் காம்புகள் யோசனைகள் சொல்லக்கூடும். அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, நமது சொந்த முயற்சியை இந்திய விஞ்ஞானிகள் விட்டுவிடக்கூடாது.

உலகுக்கு ஏவுகணை தொழில்நுட்பத்தை வழங்கியது இந்தியாதான். திப்பு சுல்தான் தனது போர்க் களத்தில், கூர்அம்புகளில் வாணவெடியை இணைத்துக் கொளுத்தி எதிரிகள் மீது செலுத்தியதுதான் முதல் ஏவுகணை.

இந்தியா ஒரு பணக்கார நாடாக இருந்திருக்குமேயானால், சந்திரனில் முதலில் கால் வைத்தவர்கள் அமெரிக்கர்களாக இருந்திருக்க மாட்டார்கள். இந்தியர்களாகத்தான் இருந்திருப்பார்கள். ஏனென்றால், நாசாவில் பணியாற்றுபவர்களில் 38 சதவீதம் பேர் இந்தியர்கள்தான்.
நன்றி : தினமணி

உலக சக்தி வாய்ந்தவர்கள் பட்டியல்: அம்பானி சகோதரர்கள் சறுக்கல்

உலகத்தில் சக்தி வாய்ந்தவர்களுக்கான பட்டியலில் இடம் பெற்று வந்த அம்பானி சகோதரர்கள், தங்கள் இடத்தில் இருந்து பின்னுக்கு தள்ளப் பட்டுள்ளனர். அம்பானி சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலே இந்த சறுக்கலுக்கு காரணம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. உலகில் முதல் 100 சக்திவாய்ந்தவர்கள் பட்டியலில், அனில் அம்பானி தனது இடத்தில் இருந்து 30 இடங்களுக்கும் கீழ் தள்ளப்பட்டுள்ளார். முகேஷ் அம்பானி குறிப்பிட்ட பட்டியலில் இருந்து வெளியேறி விட்டார். பிரிட்டிஷ் பேஷன் பத்திரிக்கை ஒன்றில் வெளியிடப் பட்டுள்ள செய்தியில், கடந்த ஆண்டு 67வது இடத்தை, தனது சகோதரர் முகேஷ்யுடன் இணைந்து அனில் பிடித்திருந்தார். அந்த பட்டியலில் இடம் பெற்று இருந்த ஒரே இந்தியர் அனில் மட்டுமே ஆனால், இந்தாண்டு அவர்கள் இடத்தில் இருந்து கீழே தள்ளப் பட்டு, 97வது இடத்தை பிடித்துள்ளார். சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடோ இந்த சறுக்கலுக்கு காரணம். மேலும், இந்த பட்டியலில் மிக பெரிய சறுக்கலை சந்தித்து இருப்பவர்களும் அம்பானி சகோதரர்களே என தெரிவிக்கப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர்