Thursday, September 3, 2009

தோல்வியல்ல, வெற்றி!

சாதனைகளின்போது திகட்டத் திகட்டப் பாராட்டுவதைக் காட்டிலும், அந்தச் சாதனையே சோதனையாகிவிடும்போதும் பாராட்டி ஊக்குவிப்பது மிகச் சிறந்த பண்பாகும். அதை நடைமுறையில் செய்துகாட்டியிருக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தைப் (இஸ்ரோ) பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

2008-ம் ஆண்டுக்கான சிறந்த அறிவியல் சாதனைகளுக்காக ரூ.2 கோடி அளவுக்கு விருதுகளை அறிவித்துள்ள இஸ்ரோ, நான்கு குழுக்களை சிறந்த குழுத் திறன் விருதுக்குத் தேர்வு செய்துள்ளது. இதில் சந்திரயான்-1 திட்டத்தில் செயல்பட்ட இரண்டு குழுக்களுக்கும் விருதுடன் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு அளிக்கப்படவுள்ளது.

சந்திரயான்-1 செயற்கைக்கோள் புவியின் கட்டுப்பாட்டு மையத்தால் தொடர்பு கொள்ள முடியாமல், இத்திட்டம் முடிந்துபோனது என்ற செய்தி வந்தவுடன், தாழ்வு மனப்பான்மைக்குப் பழகிப் போய்விட்ட இந்தியர் மனதில் வழக்கம்போல தோன்றிய எண்ணம், "நம்ம ஆராய்ச்சியாளர்கள் சரியில்லை' என்பதுதான். ஆனால் உண்மை அதுவல்ல.

இதுபோன்ற கோளாறுகள் நேரிடும் காலங்களில் இதற்கான ஆய்வு மற்றும் உருவாக்கத்தில் ஈடுபட்டவர்கள் மீது தவறு இல்லை என்றாலும், அவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதுதான் பொதுவான வழக்கம். இந்த வழக்கத்திலிருந்து மாறுபட்டு, சந்திரயான்-1 திட்டத்தில் பணியாற்றிய குழுக்களுக்கும் விருதும் ரொக்கப் பரிசும் அறிவித்திருப்பது, இந்திய ஆராய்ச்சியாளர்கள் மத்தியில், நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தும்.

இன்னொரு பாராட்டுக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த விவகாரத்தில் எந்தவொரு கட்சித் தலைவரும் விஞ்ஞானிகளைக் குறை சொல்லவில்லை என்பதும், சக விஞ்ஞானிகள்கூட குத்தலான விமர்சனங்களை முன்வைக்கவில்லை என்பதும் ஆரோக்கியமான அறிவியல் சூழலை வெளிப்படுத்தியுள்ளன என்பதில் சந்தேகமே இல்லை.

சந்திரயான்-1 மூலம் கிடைத்துள்ள அறிவியல் தகவல்களைப் பார்க்கும்போது இத்திட்டம் குறைஆயுளில் முடிந்துபோனாலும், இது தோல்வி அல்ல, வெற்றிதான் என்பதை உணர முடியும்.

2008 அக்டோபர் 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-1 செயற்கைக் கோள், 312 நாள்களில் நிலவை 3400 முறை சுற்றிய பின்னர், கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தொடர்புகொள்ள முடியாதபடி செயலிழந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு இயங்கும் வகையில் திட்டமிடப்பட்ட இந்தச் செயற்கைக் கோள், குறைஆயுளில் முடிந்துபோனது, இந்திய விண்வெளி ஆய்வாளர்களுக்கு அதிர்ச்சியையும், கவலையையும் உண்டாக்கியது. இருப்பினும், சந்திரயான்-1 தனது பணியை 100 சதவீதம் செவ்வனே செய்திருப்பதும், அது எந்த நோக்கத்துக்காக அனுப்பப்பட்டதோ அதில் 95 சதவீதம் நிறைவேறியிருப்பதும் மனநிறைவைத் தருவதாக இருக்கிறது.

சந்திரயான்-1 செயற்கைக்கோள் இதுவரையிலும் 70,000க்கும் மேற்பட்ட படங்களை அனுப்பியுள்ளது. இவை யாவும் தரத்திலும், ஆய்வுக் கோணத்திலும் சிறப்பானவை, இதுவரை கிடைக்காத அரிய படங்கள் என்கிறது இஸ்ரோ. நிலவின் மேற்பரப்பில் உள்ள வேதிப்பொருள் மற்றும் கனிமப் பொருள்களைப் பற்றிய அரிய தகவல்களையும் சந்திரயான் -1 தந்துவிட்டுத்தான், மடிந்துள்ளது.

அடுத்து நமது விஞ்ஞானிகள் சந்திரயான்-2 அனுப்பும் வேளையில், தற்போது நேர்ந்த குறைபாடுகளை ஓர் அனுபவமாகக் கொண்டு, முழுஆயுள் காலத்துக்கும் செயல்படும்படியாக, தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்துவார்கள் என்பது நிச்சயம்.

சுடுபாலில் நாக்கைப் புண்ணாக்கிக்கொண்ட பூனை, குளிர்ந்த பாலைக் குடிக்கவும் தயங்குவதைப் போன்ற நிலைமை, இதுபோன்ற தருணங்களில் ஆராய்ச்சியாளர்களுக்குத் தோன்றுவது இயல்புதான். இந்தச் சந்தர்ப்பத்தில், "இத்திட்டங்களை ரஷியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் இணைந்து செயல்படுத்தினால் இதுபோல் பிரச்னை ஏற்படாது' என்று சில கோடாரிக் காம்புகள் யோசனைகள் சொல்லக்கூடும். அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, நமது சொந்த முயற்சியை இந்திய விஞ்ஞானிகள் விட்டுவிடக்கூடாது.

உலகுக்கு ஏவுகணை தொழில்நுட்பத்தை வழங்கியது இந்தியாதான். திப்பு சுல்தான் தனது போர்க் களத்தில், கூர்அம்புகளில் வாணவெடியை இணைத்துக் கொளுத்தி எதிரிகள் மீது செலுத்தியதுதான் முதல் ஏவுகணை.

இந்தியா ஒரு பணக்கார நாடாக இருந்திருக்குமேயானால், சந்திரனில் முதலில் கால் வைத்தவர்கள் அமெரிக்கர்களாக இருந்திருக்க மாட்டார்கள். இந்தியர்களாகத்தான் இருந்திருப்பார்கள். ஏனென்றால், நாசாவில் பணியாற்றுபவர்களில் 38 சதவீதம் பேர் இந்தியர்கள்தான்.
நன்றி : தினமணி

No comments: