Monday, April 20, 2009

மொரீசியஸ் வழியாகத்தான் இந்தியாவுக்கு 43 சதவீத அந்நிய நேரடி முதலீடு வந்திருக்கிறது

இந்தியாவுக்கு வந்திருக்கும் மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் 43 சதவீதம் மொரீசியஸ் வழியாகத்தான் வந்திருக்கிறது. சர்வதேச அளவில், வரி கட்டவேண்டாத நாடாக மொரீசியஸ் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதனால்தான் பெரும்பாலான நாட்டு நிறுவனங்கள் அந்த நாட்டு வழியாகத்தான் மற்ற நாடுகளில் முதலீடுகளை செய்கின்றன என்கிறார்கள். 2000 ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை இந்தியாவுக்குள் வந்திருக்கும் 81 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டில், 35.18 பில்லியன் டாலர் பணம் மொரீசியஸ் வழியாகத்தான் வந்திருக்கிறது. டிபார்ட்மென்ட் ஆப் இன்டஸ்டிரியஸ் பாலிஸி அண்ட் புரமோஷன் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும், வரி கட்ட தேவையில்லை என்பதற்காக வெளிநாடுகளில் முடக்கி வைக்கப்படும் பணம் மீட்கப்படவேண்டும் என்று சமீப காலமாக, தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய அம்சமாக பா.ஜ.க. சொல்லி வருகிறது.
நன்றி : தினமலர்


சத்யம் பங்குகளை வாங்குவதற்காக பத்திரங்கள் மூலம் ரூ.600 கோடி திரட்டிய டெக் மகேந்திரா

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் 31 சதவீத பங்குகளை வாங்க முன்வந்திருக்கும் டெக் மகேந்திரா நிறுவனம், அதற்கான பணம் ரூ.1,756 கோடியை வரும் 21ம் தேதிக்குள் செலுத்த வேண்டியிருக்கிறது. இதற்கு தேவையான பணத்திற்காக, ரூ.600 கோடியை, பத்திரங்களை விற்று திரட்டி இருக்கிறது. ஏப்ரல் 17ம் தேதி, ரூ.10 லட்சம் முக மதிப்புள்ள, 6,000 நான் கன்வெர்டிபிள் ( மாற்ற முடியாத ) டிபஞ்சர்களை ( என்சிடி )டெக் மகேந்திரா வெளியிட்டு இந்த பணம் திரட்டப்பட்டதாக மும்பை பங்கு சந்தைக்கு அது அளித்த அறிக்கையில் தெரிவித்திருக் கிறது. சத்யம் கம்ப்யூட்டர்ஸின் 31 சதவீத பங்குகளை விற்க அந்த நிறுவனத்தின் போர்டு முடிவு செய்து ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை எதிர்பார்த்தபோது, டெக் மகேந்திராவின் இன்னொரு நிறுவனமான வெஞ்சர்பே கன்சல்டன்ட்ஸ் அளித்த விண்ணப்பமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. சத்யத்தின் பங்குகளை பங்கு ஒன்றை ரூ.58 விலையில் வாங்கிக்கொள்வதாக வெஞ்சர்பே சொல்லியிருந்ததால் அவர்களுக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 31 சதவீத பங்குகளுக்கான தொகை ரூ.1,756 கோடியை வரும் 21ம் தேதிக்குள் செலுத்துமாறு இந்திய கம்பெனி சட்ட வாரியம் தெரிவித்திருந்ததை அடுத்து அதற்கு தேவையான பணத்தை திரட்ட டெக் மகேந்திரா தீவிரமாக முடிவு செய்தது
நன்றி : தினமலர்


ஐ.பி.எல்., முதல் நாள் போட்டியின் டி.வி.ரேட்டிங் 16 சதவீதம் குறைந்துள்ளது

பெரும் பரபரப்புடன் தென் ஆப்ரிக்காவில் துவங்கிய இரண்டாவது சுற்று ஐ.பி.எல்., டுவன்டி 20 கிரிக்கெட் போட்டிகளின் முதல் நாள் ஆட்டம், அதில் தோல்வியடைந்த சென்னை சூப்பர்கிங் அணிக்கு மட்டும் ஏமாற்றத்தை அளித்ததாக இருக்கவில்லை. விளம்பரதாரர்கள் மற்றும் டி.வி.ஒளிபரப்பாளர்களுக்குமே அது கடும் ஏமாற்றத்தை அளிப்பதாகத்தான் இருந்தது. காரணம் என்னவென்றால், அன்றைய போட்டியை டி.வி.,யில் ஒளிபரப்பு செய்த செட் மேக்ஸ் டி.வி.,யின் டி.வி. நேயர்கள் ரேட்டிங், கடந்த வருட முதல் நாள் போட்டியுடன் ஒப்பிட்டால் 16 சதவீதம் குறைந்துள்ளது. முதல் நாள் நடந்த முதல் போட்டியின் போது ( மும்பை இந்தியன்ஸூக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்ஸூக்கு மிடையே நடந்தது ) டி.வி.ரேட்டிங் 3.6 சதவீதமாகவும், இரண்டாவது போட்டியின் போது ( ராயல் சேலஞ்சர் ஸூக்கும் ராஜஸ்தான் ராயல்ஸூக்கு மிடையே நடந்தது ) 3.8 சதவீதமாகத்தான் இருந்தது. ஆனால் இதுவே, கடந்த வருடம் நடந்த ஐ.பி.எல்., போட்டிகளின் முதல் நாள் ஆட்டத்தின் போது ( கோல்கட்டா னைட் ரைடர்ஸூக்கும் ராயல் சேலஞ்சர்ஸூக்குமிடையே நடந்தது ) டி.வி.ரேட்டிங் 4.3 சதவீதமாக இருந்தது. டி.வி. நேயர்களை பற்றி கணக்கெடுப்பு நடத்தி தகவல்களை வெளியிடும் ' ஆடியன்ஸ் மெஸர்மென்ட் அண்ட் அனலைட்டிக்ஸ் லிட்.,( ஏ மேப் ) நிறுவனம் இந்த தகவலை தெரிவித்திருக்கிறது. கேபில் கனெக்ஷன் வைத்திருப்ப வர்கள் மற்றும் இந்தியாவின் முக்கிய ஆறு நகரங்களில் இருக்கும் 15 க்குமேற்பட்ட வயதினரிடம் இந்த கணக்கெடுப்பை அவர்கள் எடுதிருக்கிறார்கள். டி.வி.,யில் ஒளிபரப்பப்படும் ஸ்போர்ட்ஸ் சேனல்களின் நேயர்கள் எண்ணிக்கையை கணக்கிட அவர்கள் இந்த வழிமுறையைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இந்தியாவில் 8 கோடியே 60 லட்சம் பேரிடம் கேபிள் கனெக்ஷன் இருக்கின்றன. இருந்தாலும் கடந்த வருடம் நடந்த முதல் நாள் ஆட்டத்தை 5.6 மில்லியன் மக்களே டி.வி.யில் பார்த்திருந்த நிலையில், இந்த வருடம் நடந்த முதல் நாள் ஆட்டத்தை 7 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள். கடந்த வருடத்தை விட 1.4 மில்லியன் பேர் கூடுதலாக பார்த்திருந்த போதும் ஏன் ரேட்டிங் மட்டும் குறைந்திருப்பதாக சொல்கிறீர்கள் என்று ' ஏ மேப் ' பின் சி.இ.ஓ., அமிட் வர்மாவிடம் கேட்டபோது, இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால், ஒவ்வொரு போட்டியையும் ஒருவர் எந்தனை மணி நேரம் பார்த்தார் என்பது தான் அது. அப்படி பார்த்தால், கடந்த வருட போட்டியை விட இந்த வருட போட்டி குறைந்த நேரமே மக்கள் பார்த்திருக்கி றார்கள். எனவே டி.வி.ரேட்டிங் குறைந்து விட்டது என்றார்.
நன்றி : தினமலர்


10 பெரிய கம்பெனிகளின் சந்தை முதலீடு ரூ.28,500 கோடி உயர்ந்தது

கடந்த வாரம் இந்திய பங்கு சந்தை நல்ல ஏற்ற நிலையில் இருந்ததால், இந்தியாவின் 10 பெரிய நிறுவனங்களின் சந்தை முதலீடு ரூ.28,500 கோடிக்கும் மேல் உயர்ந்திருக்கிறது. இத்தனைக்கும் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் மற்றும் ஓ.என்.ஜி.சி.,யின் சந்தை முதலீடு கடந்த வாரம் ரூ.7,228 கோடி குறைந்திருந்தும் கூட, நான்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் ஆறு பொதுத்துறை நிறுவனங்களின் சந்தை முதலீடு ரூ.28,512 கோடி அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் பெரிய கம்பெனிகளின் மொத்த சந்தை முதலீடு ரூ.12,19,886 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த வாரத்திற்கு முந்தைய வாரத்தில் அது ரூ.11,91,375 கோடியாக இருந்தது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் சந்தை முதலீடு கடந்த வாரத்தில் ரூ.2,447 கோடியும் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.,யின் சந்தை முதலீடு ரூ.4,780 கோடியும் குறைந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


ஒபாமாவுக்கு பரிசளித்ததால் விற்பனையில் இரண்டாம் இடத்தை பிடித்த புத்தகம்

டிரினிடாட் தலைநகர் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த ' சம்மிட் ஆஃப் த அமெரிக்காஸ் 'மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு வெனிசுலா அதிபர் ஒரு புத்தகத்தை பரிசளித்தார். உருகுவே நாட்டு எழுத்தாளர் எட்வர்டோ கேலியானோ, ஸ்பானிஷ் மொழியில் எழுதிய ' த ஓப்பன் வெய்ன்ஸ் ஆஃப் லத்தீன் அமெரிக்கா ' என்ற அந்த புத்தகம், இதுவரை விற்பனையில் 54,295 வது இடத்தில்தான் இருந்தது. ஒபாமாவுக்கு அந்த புத்தகம் பரிசளிக்கப்பட்டபின் அது, இப்போது அதிகம் விற்பனை யாகும் புத்தக லிஸ்ட்டில் இரண்டாவது இடத்திற்கு வந்து விட்டது. கடந்த ஐநூறு ஆண்டுகளில் லத்தீன் அமெரிக்கா வில் மற்ற நாடுகளின் தலையீடு எந்த அளவுக்கு இருந்து வருகிறது என்றும், அதனால் ஏற்பட்டு வரும் பாதிப்பு குறித்துமே அந்த புத்தகத்தில் எட்வர்டோ எழுதியிருந்தார். மாநாடு நடந்து கொண்டிருந்த போதே திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்த வெனிசுலா அதிபர் சாவஸ், நேராக ஒபாமா இருப்பிடம் சென்று, அதை அவரிடம் கொடுத்துவிட்டு கை குழுக்கினார். அந்த புத்தகத்தில் ' மிக்க அன்புடன், ஒபாமாவுக்கு ' என்று சாவஸ் எழுதியிருந்தார்.
நன்றி : தினமலர்


மாற்றம்... ஏமாற்றம்...

இன்றுதான் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமி ஓய்வு பெறுகிறார். இந்தியா சந்தித்த 15 தேர்தல் ஆணையர்களில், தேர்தல்கள் நடைபெறும்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ஓய்வு பெறுவது இதுதான் முதல்முறையாக நடைபெறுகிறது. யாரைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று அவர் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்தாரோ அவர் நாளை முதல் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவி ஏற்க இருக்கிறார். பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன் சம்பிரதாயப்படி பத்திரிகையாளர்களைச் சந்தித்த கோபாலசுவாமி, தனது பரிந்துரை குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட உடன் அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது என்று கூறி பதவியின் கௌரவத்தைக் காப்பாற்றி இருக்கிறார். அதேநேரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அதற்கான அதிகாரம் உண்டு என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது கோபாலசுவாமி கூறியிருக்கும் இன்னொரு கருத்து, தனிநபர் தேர்தல் ஆணையத்தைவிட, பல உறுப்பினர்கள் அடங்கிய ஆணையம்தான் நன்றாகச் செயல்பட முடியும் என்பது. இன்னும் பல பிரச்னைகளில் தனது செயல்பாடுகள் பற்றியும் கருத்துக் கூறியிருக்கும் கோபாலசுவாமியின் மூன்றாண்டுத் தலைமை முடிவடைகிறது. சில விஷயங்களில் துணிவுடனும், சில விஷயங்களில் கண்டும்காணாமலும் செயல்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் என்கிற விமர்சனத்துடன் ஓய்வு பெறுகிறார் அவர்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பற்றிக் குறிப்பிடும்போது, சேஷனுக்கு முன், சேஷனுக்குப் பின் என்று அந்த ஆணையத்தின் சரித்திரம் எழுதப்படும் என்பதில் சந்தேகமில்லை. தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் எத்தகையது, என்னென்ன என்பது டி .என். சேஷன் அந்தப் பதவியில் அமர்ந்த பிறகுதான் நாடு தெரிந்துகொண்டது. சேஷனின் கெடுபிடிகளும், தேர்தல் விதிமுறை மீறல்களுக்கு எதிராக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும் ஆளும் கட்சியால் தனது அதிகார பலத்தைப் பிரயோகிக்கவோ, பணபலம், அடியாள் பலம் உள்ள வேட்பாளர்கள் தங்களுக்குச் சாதகமாகத் தேர்தல் இயந்திரத்தைப் பயன்படுத்தவோ தடையாக இருந்தன. சேஷனின் கெடுபிடிகளால் மிரண்டுபோன மத்திய அரசு, மூன்று பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தை உருவாக்கி, ஒருவருக்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் என்கிற சிறப்பு அந்தஸ்தும், அனைத்து உறுப்பினர்களுக்கும் சம அதிகாரமும் வழங்க முடிவெடுத்தது. அன்று முதல் இன்று வரை, ஆளும் கட்சிக்குச் சாதகமான அதிகாரிகள் மட்டுமே தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்படுகிறார்கள் என்றாலும், ஆணையத்தின் முடிவுகள் பெரும்பான்மை மூலம் முடிவு செய்யப்படுவதால் ஓரளவுக்கு நியாயமாகவே இருக்கின்றன என்பதை ஒத்துக் கொண்டாக வேண்டும். அதேநேரத்தில், தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவது என்பது ஆணையத்தின் செயல்பாடுகளில் நடுநிலைமை கடைப்பிடிக்கப்படுமா என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது. இது தேர்தல் ஆணையம் மட்டுமல்லாமல், மத்திய தகவல் ஆணையம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் போன்ற அரசியல் சட்ட அமைப்புகளுக்கும் பொருந்தும். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், மக்களவைத் தலைவர், மாநிலங்களவைத் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, அரசியல் சட்ட அமைப்புகளான தேர்தல் ஆணையம், தகவல் ஆணையம், ஊழல் கண்காணிப்பு ஆணையம் போன்ற அமைப்புகளின் தலைமை ஆணையர்கள் ஆகியோர் அடங்கிய அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அந்த அமைப்பின் பரிந்துரைப்படி ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று பரவலாக ஒரு கருத்து நிலவுகிறது.

1993-ல் அன்றைய தேர்தல் கமிஷனர் டி .என். சேஷனின் அதிகார வரம்புக்குக் கடிவாளம்போட, மூன்று பேர் அடங்கிய தேர்தல் கமிஷனை அன்றைய நரசிம்மராவ் அரசு ஏற்படுத்தியபோது, மேலே குறிப்பிட்ட கோரிக்கையை, பாரதிய ஜனதா மற்றும் எதிர்க்கட்சியில் இருந்த பல மாநிலக் கட்சிகள் முன்வைத்தன. அன்று கோரிக்கை வைத்த கட்சிகள் ஆட்சியில் அமர்ந்தபோது, இதே கோரிக்கை காங்கிரஸ் தரப்பிலிருந்தும் எழுப்பப்பட்டது. ஆட்சியில் அமர்ந்தால் அதிகாரப் பகிர்வுக்கு யாரும் தயாராக இல்லை என்பதற்கு இதுவேகூட ஓர் உதாரணம். தவறான பின்னணிகள் உள்ள ஒருவர் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட இருக்கிறாரே, இதனால் என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது. சரியான மனிதர்கள் இருந்தபோது தவறுகள் நடக்கவில்லையா என்ன? அதுபோல, தவறான மனிதர்களின் தலைமையில் நல்லதுகூட நடக்கலாம். அதுவல்ல பிரச்னை. அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டாக வேண்டும். தேர்தல் ஆணையர்களின் தேர்வு, பாரபட்சமில்லாமல் நடத்தப்பட வேண்டும். தவறு செய்பவர்களைத் தண்டிக்கவும், போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யவும் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் தரப்பட வேண்டும். மாநில அரசின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகாத அளவுக்கு அதிகாரம் பெற்ற அமைப்பாகத் தேர்தல் ஆணையம் செயல்பட முடிய வேண்டும். கூடவே, தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். இந்த அடிப்படை மாற்றங்கள் ஏற்படாதவரை, தலைமைத் தேர்தல் ஆணையராக யார் இருந்தால்தான் என்ன? தேர்தல் ஒரு திருவிழாவாக இருக்குமே அன்றி பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிடாது!
நன்றி : தினமணி