Tuesday, September 9, 2008

வர்த்தகத்தில் தொடர்ந்து ரிலையன்ஸ் நம்பர் 1

வணிக நிறுவனங்களில், சந்தை முதலீட்டை அதிகமாக கொண்டுள்ள நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
இந்த நிறுவனத்தின் மொத்த சந்தை முதலீடு மூன்று லட்சம் கோடி ரூபாய். இரண்டாவது இடத்தில் உள்ள இரண்டு லட்சத்து 30 ஆயிரம் கோடி முதலீடு பெற்றுள்ள அரசுக்கு சொந்தமான எண்ணெய் எரிவாயுக்கழகம்.
மூன்றாவது இடத்தை பாரதி ஏர்டெல் நிறுவனம் பெற்றுள்ளது; இதன் சந்தை மூலதனம் ஒரு லட்சத்து 52 ஆயிரம் கோடி. இந்த வகையில் முதல் பத்து இடங்களில் அரசுக்கு சொந்தமான ஆறு நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் எண்ணெய் எரிவாயுக்கழகம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளதை தொடர்ந்து, என்.டி.பி.சி.,(1.43 லட்சம் கோடி) எம். எம்.டி.சி.,(1.19 லட்சம் கோடி) என்.எம்.டி.சி.,(1.17 லட்சம் கோடி) ஸ்டேட் பாங்க் (96 ஆயிரம் கோடி) பெல் (84 ஆயிரம் கோடி) ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ரிலையன்ஸ், பாரதி ஏர்டெல் உட்பட நான்கு தனியார் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில், இன்போசிஸ் நிறுவனம் 98 ஆயிரம் கோடி, டி.எல்.எப்., நிறுவனம் 84 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளன.
இந்த பட்டியலில், 11 முதல் 20க்குள் டி.சி.எஸ்.,ரிலையன்ஸ் கம்யூனிக்கேஷன், லார்சன் டூப்ரோ, ஐ.சி.ஐ.சி.ஐ., ஆகியவை இடம் பெற்றுள்ளன.
நன்றி : தினமலர்


சிறிது இறக்கத்துடன் முடிந்த இன்றைய பங்கு சந்தை

நேற்று 461 புள்ளிகள் வரை உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திய மும்பை பங்கு சந்தையில் இன்று லேசான சரிவு காணப்பட்டது. காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்தே சந்தை சரிவில் இருந்தாலும் மதியத்திற்கு மேல் கொஞ்சம் மேலே வந்தது. ஆனால் மீண்டும் இறங்கி விட்டது. மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 44.21 புள்ளிகள் ( 0.3 சதவீதம் ) மட்டும் குறைந்து 14,900.76 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 13.6 புள்ளிகள் ( 0.3 சதவீதம் ) மட்டும் குறைந்து 4,468.70 புள்ளிகளில் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் மெட்டல், பேங்கிங், ரியாலிடி, பார்மா நிறுவன பங்குகள் அதிகமாக விற்கப்பட்டன. டெலிகாம், ஆயில் மற்றும் ஆட்டோ நிறுவன பங்குகள் வாங்கப்பட்டன.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை 105 டாலராக குறைந்தது

கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்திருக்கிறது. எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பான ஓபக் இன் கூட்டம் இன்று நடக்க இருக்கும் நிலையில், கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கிறது. நியுயார்க் சந்தையில் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 55 சென்ட் குறைந்து 105.79 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை 14 சென்ட் குறைந்து 103.30 டாலராக இருக்கிறது. சமீப காலமாக கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் குறைந்து வருவதை அடுத்து, இன்று மாலை நடக்க இருக்கும் ஓபக் அமைப்பு கூட்டத்தில், எண்ணெய் எடுக்கும் அளவை குறைக்கலாமா என்று விவாதிப்பார்கள் என தெரிகிறது. இப்போது சப்ளை அளவு அதிகமாக இருக்கிறது என்றும் எனவே எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்றும் ஓபக் அமைப்பு நாடுகளான வெனிசுலா, ஈரான், அல்ஜீரியா மற்றும் லிபியா கூறுகின்றன. அதே நேரம் உற்பத்தியில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை என்று குவைத், யு.ஏ.இ., ஈக்வாடர் நாடுகள் கூறுகின்றன. உலகில் எடுக்கப்படும் மொத்த கச்சா எண்ணெய்யில் 40 சதவீதம் ஓபக் அமைப்பு நாடுகளில்தான் எடுக்கப்படுகிறது. இப்போது அவைகள் நாள் ஒன்றுக்கு 3,06,70,000 பேரல்கள் கச்சா எண்ணெய்யை எடுக்கின்றன.
நன்றி : தினமலர்


வணிக வாகன தயாரிக்கும் புது திட்டம் அசோக் லேலண்டுடன் அரசு ஒப்பந்தம்

வணிக வாகனங்கள் தயாரிக்கும், நான்காயிரத்து 150 கோடி ரூபாய் முதலீட்டிலான புதிய திட்டங்களைச் செயல்படுத்த முதல்வர் கருணாநிதி முன்னிலையில், அசோக் லேலண்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. வணிக வாகனங்கள் தயாரிப்பில் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நிறுவனமான அசோக் லேலண்டு, சென்னைக்கு அருகில் எண்ணூரில் மட்டுமன்றி, ஓசூரில் இரண்டு ஆலைகள், ராஜஸ்தானில் ஒன்று, மகாராஷ்டிராவில் ஒன்று என ஐந்து உற்பத்தி தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. பயணிகளுக்கான சொகுசுக் கார், விளையாட்டுப் போட்டிகளுக்கான வாகனங்கள், இலகுரக வணிக வாகனங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் ஜப்பான் நாட்டின் 'நிசான் மோட்டார்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து, ஆண்டுக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரம் வாகனங்களைத் தயாரிக்கும் திறன் கொண்ட, இலகுரக வணிக வாகனத் திட்டத்தை மூன்று கூட்டு முயற்சி நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த உள்ளது.
மேலும், ஆண்டுக்கு ஒரு லட்சம் வாகனங்களைத் தயாரிக்கும் உற்பத்தித் திறன் கொண்ட நடுத்தர ரக மற்றும் கனரக வணிக வாகனங்கள் தயாரிப்பதை தனது சொந்த திட்டமாகவும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

எண்ணூர், ஓசூர், பிள்ளைப்பாக்கம் போன்ற இடங்களில் நான்காயிரத்து 150 கோடி ரூபாய் முதலீட்டில் அமைய இருக்கும் இத்திட்டங்கள் முழுத்திறனுடன் செயல்படும்போது, நான்காயிரத்து 500 பேருக்கு நேரடியாகவும், 13 ஆயிரத்து 500 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இத்தொழிற்சாலைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. தமிழக அரசு சார்பில் தொழில் துறை முதன்மைச் செயலர் பரூக்கி, அசோக் லேலண்ட் சார்பில் அதன் மேலாண்மை இயக்குனர் சேஷசாயி, நிசான் நிறுவனம் சார்பில் அதன் துணைத் தலைவர் ஆன்ட்ரூ பால்மர் ஆகியோர் கையெழுத்திட்டனர். அசோக் லேலண்ட் சார்பாக ஜி.பி.இந்துஜா, டி.ஜி.இந்துஜா, சுமந்திரன், ஸ்ரீதரன் ஆகியோரும், நிசான் நிறுவனத்தின் சார்பாக தகாஷி டெராடா, நகாடா ஆகியோரும் உடாநிருந்தானர்.
நன்றி ; தினமலர்