Tuesday, September 9, 2008

வணிக வாகன தயாரிக்கும் புது திட்டம் அசோக் லேலண்டுடன் அரசு ஒப்பந்தம்

வணிக வாகனங்கள் தயாரிக்கும், நான்காயிரத்து 150 கோடி ரூபாய் முதலீட்டிலான புதிய திட்டங்களைச் செயல்படுத்த முதல்வர் கருணாநிதி முன்னிலையில், அசோக் லேலண்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. வணிக வாகனங்கள் தயாரிப்பில் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நிறுவனமான அசோக் லேலண்டு, சென்னைக்கு அருகில் எண்ணூரில் மட்டுமன்றி, ஓசூரில் இரண்டு ஆலைகள், ராஜஸ்தானில் ஒன்று, மகாராஷ்டிராவில் ஒன்று என ஐந்து உற்பத்தி தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. பயணிகளுக்கான சொகுசுக் கார், விளையாட்டுப் போட்டிகளுக்கான வாகனங்கள், இலகுரக வணிக வாகனங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் ஜப்பான் நாட்டின் 'நிசான் மோட்டார்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து, ஆண்டுக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரம் வாகனங்களைத் தயாரிக்கும் திறன் கொண்ட, இலகுரக வணிக வாகனத் திட்டத்தை மூன்று கூட்டு முயற்சி நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த உள்ளது.
மேலும், ஆண்டுக்கு ஒரு லட்சம் வாகனங்களைத் தயாரிக்கும் உற்பத்தித் திறன் கொண்ட நடுத்தர ரக மற்றும் கனரக வணிக வாகனங்கள் தயாரிப்பதை தனது சொந்த திட்டமாகவும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

எண்ணூர், ஓசூர், பிள்ளைப்பாக்கம் போன்ற இடங்களில் நான்காயிரத்து 150 கோடி ரூபாய் முதலீட்டில் அமைய இருக்கும் இத்திட்டங்கள் முழுத்திறனுடன் செயல்படும்போது, நான்காயிரத்து 500 பேருக்கு நேரடியாகவும், 13 ஆயிரத்து 500 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இத்தொழிற்சாலைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. தமிழக அரசு சார்பில் தொழில் துறை முதன்மைச் செயலர் பரூக்கி, அசோக் லேலண்ட் சார்பில் அதன் மேலாண்மை இயக்குனர் சேஷசாயி, நிசான் நிறுவனம் சார்பில் அதன் துணைத் தலைவர் ஆன்ட்ரூ பால்மர் ஆகியோர் கையெழுத்திட்டனர். அசோக் லேலண்ட் சார்பாக ஜி.பி.இந்துஜா, டி.ஜி.இந்துஜா, சுமந்திரன், ஸ்ரீதரன் ஆகியோரும், நிசான் நிறுவனத்தின் சார்பாக தகாஷி டெராடா, நகாடா ஆகியோரும் உடாநிருந்தானர்.
நன்றி ; தினமலர்

No comments: