Showing posts with label கலாசாரம். Show all posts
Showing posts with label கலாசாரம். Show all posts

Tuesday, March 20, 2012

ஆண் - பெண் நட்புறவு

ஆண்-பெண் நட்புறவின் சாத்தியம் பற்றிய கேள்வியை என் எழுத்தாள நண்பர் ஒரு வார இதழில் அண்மையில் எழுதியுள்ள கட்டுரையின் சில பகுதிகள் எழுப்புகின்றன.

ஆண்களும் பெண்களும் கலந்து பழகவே கூடாது என்பதில் நம் முன்னோர்கள் காலம்காலமாக மிகப் பிடிவாதமாக இருந்து வந்துள்ளார்கள். இது முழுவதுமாய் ஏற்கத்தக்கதன்று என்பதே எனது கருத்தாகவும் இருந்து வந்துள்ளது. ஒன்று சொன்னால் நம்புவீர்களா? தோழிகளைக் காட்டிலும் எனக்குத் தோழர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

ஆண்-பெண் நட்புறவில் இங்கே ஆணுக்கு எதிராய் நான் சொல்லப்போகும் கருத்தை என்னைப்பற்றி ஏற்கெனவே இருக்கக்கூடிய கணிப்பின் அடிப்படையில் விமர்சித்தல் சரியாக இருக்காது என்பதை எடுத்துச்சொல்ல இந்தச் சுய தம்பட்டம் தேவைப்படுகிறது. மன்னிக்கவும்.

ஆண்களுடன் பழகுவது தீமை பயக்கும் என்பதாய்ச் சின்னஞ்சிறு வயதிலிருந்தே ஒரு பெண்ணுக்குச் சொல்லப்பட்டு வருகிறது. இது தவறானது என்று அறவே புறந்தள்ளிவிட முடியாது. பத்து வயதுச் சிறுவர்கள்கூட நம்பத்தகுந்தவர்கள் அல்லர் என்பதே உண்மை. விகாரங்களைத் தூண்டும் ஊடகங்கள் இல்லாத அந்த நாளிலேயே இப்படியெனில், இந்த நாள் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. எல்லாத்துக்கும் சின்னவன் ஆனா, கல்யாணத்துக்கு மட்டும் பெரியவன் என்பதாய் ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு.

ஆணின் இயல்பை நன்கு அறிந்த தமிழர்கள் இயற்றிய பொன்மொழி இது. இதுபற்றிய அறிவால்தான் நம் பெரியவர்கள் ஆம்பளப் பசங்களோட வெளையாண்டா, காது அறுந்து போகும் என்று பெண் குழந்தைகளை அச்சுறுத்தி வந்தார்கள் போலும். ஒரு தகப்பன் தன் மகளை ஆண் நண்பர்களுடன் பழக அனுமதிப்பதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஒரு பெண்ணோடு பழகும்போது இவள் ஒரு பெண் என்கிற நினைவையும் நினைப்பையும் அகற்றி அவளை ஒரு நண்பனைப் பார்ப்பதுபோல் ஒரு தோழியாக மட்டுமே பார்ப்பவர் ஆண்களில் அரிது என்பதே கசப்பான உண்மை.

இத்தகைய அரிய ஆண்களை மட்டுமே தன் உள்ளுணர்வால் கண்டுணர்ந்து பழகும் கெட்டிக்காரத்தனம் பெண்ணுக்கு இருந்தால்தான் அவள் உருப்படியாக மீண்டுவர முடியும். இயல்பான உள்ளுணர்வு பெண்ணுக்கு உண்டு. அது இறைவன் அவளுக்கு அளித்த கொடை. முதுகுக்குப் பின்னால் இருந்தபடி எவரேனும் முறைத்தாலும் திரும்பிப் பார்க்கும் உள்ளுணர்வு அவளது பிறப்பியல்பு.

பெண் அதைச் சரியாகவோ, முழுமையாகவோ பயன்படுத்திக் கொள்ளாதபோதுதான் அவள் கண்மூடித்தனமாக ஆணை நம்பி ஏமாந்து போகிறாள்.

தனது உள்ளுணர்வைப் புறக்கணிக்காமல், அதை ஏற்று நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் பெண் ஏமாந்து போவதில்லை. எதிர்ப் பாலைச் சேர்ந்தவனாக ஆண் நண்பன் இருப்பதால் அதிகப்படியாக நிகழக்கூடிய வன்னுகர்வு எனும் ஆபத்தைத் தவிர்த்தல் கட்டாயமாகிறது.

ஒரு பெண் இன்னொரு பெண்ணைத் தோழியாக்கிக் கொள்ளும்போது பாலுணர்வு சார்ந்த இந்தக் கசப்பான ஆபத்து அவளுக்கு இல்லை. எனவே தன் உள்ளுணர்வைச் சார்ந்துதான் ஒருத்தி தன் தோழியைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்கிற இன்றியமையாத் தேவையும் இல்லை. சண்டை வரும்போது விலகவோ, விலக்கவோ செய்யலாம். (பெண்களிடையே சண்டை அடிக்கடி வரும்)

தன்னோடு வெறும் நண்பனாக மட்டுமே பழகி வந்துள்ள நிலையிலும் - அது புனிதமான நட்பு மட்டுமே என்பது இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையிலும் - திடீரென்று அந்த நண்பன் அத்துமீறிய வக்கிரச் செயலில் ஈடுபடும்போது, அந்தப் பெண் அதிர்ந்து போகிறாள். சின்னச் சின்ன அத்துமீறல்கள் ஏற்படும்போதே, அதைப் புரிந்துகொள்ளும் - ஆனால் அதை விரும்பாத - பெண் அவனைப் புறந்தள்ளி விடுவாள்.

ஆனால், ஆண் இவ்விஷயத்தில் தந்திரமானவன். நம்ப வைத்துக் கழுத்தறுப்பவன். தன்னைப் புரிந்துகொண்டு பெண் தன்னைத் தவிர்த்துவிடுவாளோ என்னும் உணர்வால், சிறு அத்துமீறல்களைக் கூடத் தவிர்த்துக் கண்ணியவானைப்போல் நடப்பதில் (நடிப்பதில்) மிகுந்த கவனம் காட்டி அவளது நன்மதிப்பைச் சம்பாதித்த பின் என் எழுத்தாள நண்பர் குறிப்பிட்ட அந்த ஐந்து இளைஞர்களைப்போல் மிகக் கீழ்த்தரமாக நடந்து கொள்ளுபவன்.

தன் உண்மையான தன்மையை அவளுக்குக் காட்டிக் கொடுக்கக் கூடிய சிறு அத்துமீறல்களை அவன் செய்ய மாட்டான். தோதான வாய்ப்பின்போது, எடுத்த எடுப்பிலேயே வன்னுகர்வுதான். அந்த வாய்ப்பையும் அவனே ஏற்படுத்திவிடுவான்.

எனவே, ஒரு புற்றில் பாம்பு இருக்கிறதா அல்லது எறும்பு இருக்கிறதா என்றெல்லாம் ஒரு பெண் அதனுள் கையை விட்டுப் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. அது தேவையற்ற அபாய நிலை (ழ்ண்ள்ந்). ஆக, மிக, மிகச் சரியான கணிப்பு இருந்தால் மட்டுமே அவள் ஆண் நண்பர்களைச் சேர்த்துக்கொள்ளலாம். மிக மிக நல்லவர்கள் என்கிற மதிப்பீடேயானாலும், அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பதுதான் அவளுக்கு நல்லது. ஏனெனில், மிகுந்த கெட்டிக்காரத்தனமும் கவனமும் உள்ள பெண்களே கூட இந்தத் தேர்வில் ஏமாந்துவிடக்கூடும்.

காதலித்துத் திருமணம் செய்துகொண்டு, அவளோடும் அவள் பெற்றுத் தந்த குழந்தைகளோடும் வாழும் ஆண்களே சமயங்களில் தம் பெண் நண்பர்களிடம் வழிவது பற்றிய கதைகள் காதில் விழுவதுண்டு. பெரும்பாலான ஆண்கள் முழு நம்பிக்கைக்கு உரியவர் அல்லர் என்னும் காரணத்தால், அவர்களுடன் பழகும் பெண்களும் சரி, தோழிகளுடனான தன் கணவனின் நடத்தையை நம்பாத பெண்களும் சரி, வீண் மனக் கலக்கம், குழப்பம், கவலை ஆகியவற்றுக்கு ஆளாகிறார்கள் என்பதே உண்மை. (பெண்களிலும் வழிசல்கள் உண்டென்றாலும், அவர்களின் எண்ணிக்கை மிக, மிகக் குறைவே.)

பல்லாண்டுகள் எந்தவிதச் சலனமோ, வக்கிரமோ இல்லாமல் பழகும் ஆணேகூடச் சறுக்கிவிடுவதை அறிந்துள்ள பெண் தன் கணவனையும் அவனுடைய தோழியையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்க முற்பட்டுவிடுகிறாள்.

ஆணின் நெருக்கமான நட்பு ஒரு பெண்ணுக்கு இன்றியமையாத தேவை இல்லை. ஆணின் நட்பு இருந்தால்தான் அவளது பிறவி சாபல்யம் அடையுமா என்ன? பெண்ணையும் ஆணையும் பால் வேற்றுமையால் பிரித்து வைப்பதும், அவர்களை நெருங்கிப் பழகவிடாமல் தடுப்பதும்தான் ஆண்களின் கவர்ச்சிக்கும், அதன் விளைவான தவறான நடத்தைக்கும் அடிகோலுகிறது என்பது பச்சைப் பொய் அபத்தத்திலும் அபத்தமான கருத்து.

பெண்களோடு அவர்களைப் பழகவிட்டாலும், பழகவிடாவிட்டாலும், அவர்கள் காட்டுகிற இயல்பு ஒன்றுதான். அதை மாற்றுவது மிக, மிக மிகக் கடினம். எனவே, பெண்கள் கவனமாக இருத்தல் வேண்டும் என்பது அவளது பத்திரமும், நலனும் சார்ந்த கோட்பாடாகும். கிழவனோ, குமரனோ, மணமானவனோ, பள்ளி கல்லூரி மாணவனோ, சிறுவனோ, இவ்வனைவரிலும் பெரும்பாலோர் பெண்ணை உடலுறவு சார்ந்த துய்பொருளாகத்தான் பார்க்கிறார்கள்.

எனவே, விஷப்பரீட்சை செய்து கொண்டிராமல், நம்பிக்கைக்கு உரியவன் என்பதே தனது கணிப்பானாலும், ஒரு நண்பனைக் குறிப்பிட்ட தொலைவில் வைத்து ஓர் எல்லை வகுப்பதே அறிவுடைமையாகும். நட்பின் தொடக்கத்திலேயே அதை அவனுக்குப் புரிய வைப்பவள் இன்னும் அதிக அறிவாளியாவாள்.

நமது கல்வித் திட்டம் குறைபாடு உடையது. பெண்களைச் சகோதரிகளாகவும், சக உயிர்களாகவும் கருதும் பக்குவத்தையும், அவர்களைக் காக்கும் ஜடாயுத்தனத்தையும் சிறு வயது முதலே ஆண்களுக்குக் கற்பிக்கத் தவறியுள்ள கல்வித் திட்டம் நம்முடையது.

வட இந்திய ஊர் ஒன்றில் அண்மையில் நடந்தது நினைவுக்கு வருகிறது. ஒரு நண்பனுடன் நடந்து சென்றுகொண்டிருந்த இரண்டு பெண்களைச் சில கயவர்கள் வழிமறித்து வன்னுகர்வுக்கு முயல, அருகே வயல் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த ஆண்கள், கூக்குரலிட்டு உதவி கோரிய அந்தப் பெண்களை நோக்கி ஓடி வந்து, அவர்களுக்கு உதவாமல், ஆனால், கூட்டு வன்னுகர்வில் தாங்களும் கலந்துகொண்ட கொடுமையை என்ன சொல்ல? பொதுவாக இதுதான் ஆண்களின் லட்சணம்.

இதுபோன்ற நேரத்தில் பெண்ணைக் காப்பற்றத் தங்கள் உயிரையே தியாகம் செய்துவிடும் ஆண்களும் உண்டுதான். மறுக்கவில்லை. ஆனால், அவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்பதால், ஆணின் பொதுவான இயல்பின் அடிப்படையில்தான் ஒரு பெண் தன் நடவடிக்கைகளை அமைத்துத் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும்.

ஆண்களும் பெண்களும் கலந்து பழகினால் இத்தகைய குற்றங்கள் குறையும் என்று சில மனத்தத்துவ வல்லுநர்கள் கூறுவது வெறும் பிதற்றல். இதனால் எல்லாம் ஆணின் பிறவி இயல்பை மாற்றிவிட முடியாது. நற்சிந்தனையும், உயரிய எண்ணங்களும், பெண்களை நுகர்பொருளாய்ப் பார்க்காமல் சகமனிதர்களாய்ப் பார்க்கும் நியாய உணர்வும்கொண்ட சிலருக்கு இந்த உண்மை கசக்கும்தான்.

எனவேதான் நல்லிதயம் படைத்த ஆண்கள் சிலர் (மகாபாரத தருமபுத்திரர்போல்) தங்களைப் போன்றே மற்றவர்களையும் எடை போட்டு ஆண்-பெண் நட்புக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். அவ்வாறு இல்லாத பிற ஆண்களும்கூட இதை ஆதரிக்கிறார்கள் - ஆனால், வேறு உள்நோக்கத்துடன். அவர்கள் காட்டில் மழை பெய்யுமன்றோ, அதற்காக!

கட்டுரையாளர்  : ஜோதிர்லதா கிரிஜா
நன்றி  : தினமணி   


Saturday, February 11, 2012

இறைவா, எங்கே போகிறோம்?

வியாழக்கிழமை தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது, சென்னையில் 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பு அறையில் ஆசிரியையை வெறித்தனமாகக் குத்திக் கொலை செய்த சம்பவம். 39 வயதான உமா மகேஸ்வரி, ஆசிரியர் பணியை மக்கள் சேவையாகக் கருதி, தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பதை அறியும்போது, கொலையுண்டிருப்பது ஓர் ஆசிரியையா அல்லது தமிழகத்தின் வருங்காலமா என்று நெஞ்சம் துணுக்குறுகிறது.

அதே சென்னையில் இன்னொரு சம்பவம். அனகாபுத்தூரில் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை, அவரிடம் நண்பர்களாகப் பழகிய நான்கு இளைஞர்கள் வஞ்சகமாக அழைத்துச் சென்று, அவருக்குக் குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்து வெறித்தனமாகக் கற்பழித்திருக்கிறார்கள். அந்த நான்கு பேரும் மாணவர்கள். அதிலும் பொறியியல் படிக்கும் மாணவர்கள்.

இளம் தலைமுறையினர் மத்தியில் காணப்படும் பொறுமையின்மைக்கும், வெறித்தனமான பிடிவாதங்களுக்கும், கட்டுப்பாடில்லாத ஒழுக்கக் கேடுகளுக்கும் அடிப்படைக் காரணங்கள் இறையுணர்வு இல்லாமையும், நுகர்வுக் கலாசாரத்தின் தாக்கமும்தான் என்பது நமது தேர்ந்த கருத்து. அதிலும் குறிப்பாக, நுகர்வுக் கலாசாரம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் ஒழுக்கக் கேடுகளில் முக்கியப் பங்கு வகிப்பது வக்கிரத்தனங்களின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் காட்சி ஊடகங்களும், வெறித்தனத்துக்கு வழிகோலும் மதுப் பழக்கமும்தான் இந்தப் போக்குக்குக் காரணங்கள்.

இறையுணர்வாளர்கள் தவறிழைக்கவில்லையா? இறைவனின் பெயரால் இழைக்கப்பட்ட கொடுமைகள் கொஞ்சமா நஞ்சமா? ஆஷாடபூதிகளாகவும், ருத்திராட்சப் பூனைகளாகவும், கபட வேட தாரிகளாகவும் எத்தனையோ பேர் காவி உடை தரித்த, வெள்ளை அங்கியை அணிந்த காமுகர்களாக உலவினார்கள் தெரியுமா? என்றெல்லாம் இறை மறுப்பாளர்கள் எதிர்க்கேள்வி எழுப்பக்கூடும். அவர்கள் கூறுவது எல்லாம் பொய் என்று நாம் மறுக்கவோ, ஒதுக்கித் தள்ளவோ தயாராக இல்லை.

அதேசமயம், இறையுணர்வு என்பது பரவலாக, சமுதாயத்தில் ஒழுக்கத்தையும் நேர்மையையும் தவறு செய்தால் இறைவன் தண்டிப்பார் என்கிற தார்மிக பய உணர்வையும் ஏற்படுத்தி வந்திருக்கிறது. கபடவேட தாரிகள் சாமியார்களாகவும், பாதிரியார்களாகவும், மௌல்விகளாகவும் உலவி இருக்கலாம். ஆனால், அப்படி நடந்துகொண்ட ஒரு சிலரைக் காரணம் காட்டி சமுதாயத்தில் ஒழுக்கத்தைப் போதித்த தெய்வத் தொண்டர்கள் அனைவரையும் நாம் இழிவு செய்துவிட முடியாது. கூடாது!

இளைஞர்களுக்கு ஆன்மிக போதனை நடத்தி வந்த காலகட்டத்தில், பேராசைக்கு இடம் கொடுக்காதே, ஒழுக்கம்தான் உயர்வு தரும், இறை நம்பிக்கை உன்னைக் காப்பாற்றும் என்று பிஞ்சு உள்ளங்களில் நல்ல போதனைகளைப் பள்ளிகளிலும் வீட்டிலும் ஊட்டி வளர்த்துவந்த காலங்களில் எங்கோ ஒன்றிரண்டு சம்பவங்கள் நடந்ததுபோக, இப்போது இளைஞர்கள் பாதை தவறி நடப்பது என்பதே ஒரு நெறியாக மாறி விட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

கடவுள் என்று ஒருவர் இல்லையென்றால், அப்படி ஒருவரை நாம் கண்டுபிடித்து நிலைநிறுத்தியாக வேண்டும் என்பார் பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட சிந்தனையாளர் வால்டேர். பள்ளிகளில் இறையுணர்வு போதிக்கப்பட்டது. ஆத்திச்சூடியும், கொன்றை வேந்தனும், உலக நீதியும், மூதுரையும் பிஞ்சு உள்ளங்களை நெறிப்படுத்த சொல்லிக் கொடுக்கப்பட்டன. இப்போதைய நர்சரி ரைம்ஸ் கல்வி முறை, பணத்தைத் தேடுவதும் வாழ்க்கை வசதிகளைத் தேடுவதும், சிற்றின்ப சந்தோஷங்களுக்கு வழிகோலுவதும் மட்டுமே தனது குறிக்கோள் என்று மாறிவிட்டிருப்பதன் வெளிப்பாடுதான் சென்னையில் நடந்தேறியிருக்கும் அந்த இருவேறு சம்பவங்கள்.

கற்பழிக்கப்பட்ட பெண், தனது நண்பர்கள் என்று அந்த நான்கு மாணவர்களையும் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து தாய்க்கு அறிமுகப்படுத்தியபோது, சகோதரிபோலத் தனது மகளுடன் பழகுகிறார்கள் என்று அந்தத் தாய் கருதி அதை அங்கீகரித்ததன் விளைவுதான் இன்று கற்பழிப்பில் முடிந்திருக்கிறது என்று நாம் சொன்னால் நம்மைப் பழமைவாதிகள் என்று ஒதுக்கக்கூடும். ஆனால், அதுதானே நிஜம்?

ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பதுபோலத் திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும், கதைகளும் பரவலாக வெளிவருகின்றன. அவை நடைமுறையில் சாத்தியம்தானா என்பதை நினைத்துப் பார்க்கக்கூட திராணியற்றவர்களாக நாம் மாறிவிட்டிருக்கிறோம். காரணம் இதைத் தவிர்க்க முடியாது என்கிற சூழ்நிலையை இன்றைய நுகர்வுக் கலாசாரச் சூழல் உருவாக்கி விட்டிருக்கிறது.

திரைப்படங்கள் சமுதாய சீர்திருத்தங்களுக்கு வித்திட்டதுபோய் சமுதாயச் சீரழிவுக்கு வழிகோலிக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கையில் காதலைத் தவிர, வேறு உணர்வுகளே இல்லை என்பதுபோன்ற பிரமையை ஏற்படுத்தாத திரைப்படங்கள் ஒன்றிரண்டு மட்டுமே என்றாகிவிட்டது.

பள்ளி மாணவர்கள் தொடங்கி பிறந்த நாளானாலும், தேர்வில் வெற்றி பெற்றாலும், மகிழ்ச்சியான தருணம் என்றாலும் மது அருந்திக் கொண்டாடுவது என்பது கலாசாரமாகிவிட்டிருக்கிறது. போதாக்குறைக்கு, நமது அரசும் ஊருக்கு ஒன்றிரண்டு என்பதுபோய் தெருவுக்குத் தெரு மதுபான விற்பனைக் கடைகளைத் திறந்து வைத்து இளைஞர்களைத் தவறான வழிக்குத் திசைதிருப்புவதில் முனைப்பாக இருக்கிறது.

பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் பணம் சம்பாதிப்பதை மட்டுமே லட்சியமாகக் கருதுகிறார்களே தவிர, குறைந்த வருமானமானாலும் ஒழுக்கமான நிறைந்த வாழ்வுக்கு அவர்களைப் பழக்கத் தயாராக இல்லை. ஆசிரியையை வெறித்தனமாகக் குத்திக் கொலைசெய்த அந்தப் பள்ளிச் சிறுவனுக்கு தினமும் கைச்செலவுக்கு நூறு ரூபாய் தருவார்களாம் பெற்றோர்.

திரைப்படம் பார்த்துதான் தனது பழிவாங்கும் குணம் அதிகரித்ததாகக் கூறுகிறான் அந்தப் பள்ளி மாணவன். சகோதரியாகப் பழகிய பெண்ணை போதையில் கற்பழிக்கிறார்கள் நான்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள். இறைவா, நாங்கள் எங்கே போகிறோம்?
நன்றி : தினமணி   


Wednesday, September 8, 2010

ஞாயிறு தூற்றுதும்!

செப்டம்பர் 5-ம் தேதிதான் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படும் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் என்றாலும், துரதிருஷ்டவசமாக, அந்த நாள் இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமையாக அமைந்துவிட்டதால், இந்தியாவில் பெரும்பாலான பள்ளிகளில் ஒருநாள் முன்னதாகவே கொண்டாடி முடித்துவிட்டனர். தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சிகூட பிரதமரால் சனிக்கிழமையே நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.

டாக்டர் இராதாகிருஷ்ணன் படித்த வேலூர் ஊரிசு கல்லூரியில்கூட (ஒரு சிலர் மட்டும்) அவரது படத்துக்கு சனிக்கிழமையே மலர்தூவி வணங்கிவிட்டார்கள். முறைப்படியான விழா, கல்லூரி வேலைநாளில் நடைபெற உள்ளதாம்.

ஆசிரியர் தினம் மட்டுமன்றி, தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஆகியனவும்கூட, சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் அமைந்துவிடுமேயானால், வெள்ளிக்கிழமையே உறுதிமொழி ஏற்று, கடமையை சீக்கிரமே முடித்துக் கொள்கிற வழக்கம் அரசு அலுவலகங்களில் ஏற்பட்டுவிட்டது.

இந்த ஆண்டு சுதந்திர தினத்தைத் திட்டாத அரசு ஊழியர்களோ ஆசிரியர்களோ இல்லை என்றே சொல்லிவிடலாம். சுதந்திர தினம் என்ன ஆயுதபூஜையா, முதல்நாளே அலுவல்நேரத்தின் கடைசி ஒரு மணி நேரத்தில், பொரிகடலை வைத்து சாமி கும்பிடுவதைப் போல, முதல்நாளே கொடியேற்றிவிட! கொடியேற்ற ஆசிரியர் வரவில்லை என்பதற்காக பள்ளிக்குப் பூட்டுப் போட்ட கிராமங்களையும் இந்த ஆண்டு பார்க்க நேர்ந்தது.

இப்படிச் சிணுங்கிக் கொண்டே கொண்டாடுவதைக் காட்டிலும் அந்த விழாவையே ரத்து செய்துவிடலாமே! எதற்காக இப்படி முன்னதாகவே கொண்டாடுவதும், அரைகுறையாக நடத்துவதும்! தனியார் நிறுவனங்களிலும் சாலையோரத்திலும் ஓய்வுநாள் என்பதே இல்லாமல் பணியாற்றிக்கொண்டிருப்போர் ஒருபுறம் இருந்தாலும், ஒரு ஞாயிற்றுக்கிழமையைத் தியாகம் செய்யக்கூட இவர்களுக்கு மனம் வருவதில்லையே, இவர்களைப் பொதுநல ஊழியர்கள் என்று அழைப்பதேகூடத் தவறல்லவா?

இதுபற்றிக் கேட்டால், "நாங்கள் மனிதர்கள் இல்லையா? ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் குடும்பத்தோடு இருக்க வேண்டாமா?' என்பார்கள். இவர்கள் எத்தனை மணி நேரத்தைக் குடும்பத்துக்காகச் செலவிடுகிறார்கள் என்று கணக்கிட்டால், மற்ற வாரக் கிழமைகளைவிட குறைவாகத்தான் இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை ஜாலியாக இருக்க வேண்டும், மாலையில் ஓட்டலுக்குப் போக வேண்டும், விழாக்களில் பங்குகொள்ள வேண்டும், காலை முதல் மாலை வரை டிவி அல்லது டிவிடி பார்க்க வேண்டும், சிக்கன், மட்டன், மீன் என்று ஏதாவது ஒரு அசைவ உணவு உண்டே ஆக வேண்டும், மது அருந்த வேண்டும், இதுதான் ஜாலி என்பதாகக் கருதப்படும் நிலைமை உருவாகிவிட்டது. இது எந்த அளவுக்குப் போகிறதென்றால், நூலகத்துக்கும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வேண்டும் என்று கேட்கிற அளவுக்குப் போயுள்ளது. ஆண்டு முழுவதும் தீபாவளி, பொங்கலிலும்கூட செயல்பட்டால்தானே அது அறிவாலயம் (நூலகம்)!

ஞாயிற்றுக்கிழமை ஜாலியாக இருக்க வேண்டும் என்கிற மனநிலை இளைஞர்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு வர வேண்டும்; வேறொரு நாளில் வாரவிடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னாலும்கூட, "ஃபிரண்ட்ûஸ மிஸ் பண்ணிடுவேனே' என்று அந்த வேலையைத் தவிர்க்கிற மனநிலை இளைஞர்களிடம் உருவாகியிருக்கிறது என்றால், ஞாயிற்றுக்கிழமையிலும் உழைக்கின்ற மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதே நினைவுக்கு வராமல் மனது மரத்துப்போகும் என்றால், இதை ஞாயிறு நோய் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்ல!

இதெல்லாம் போகட்டும். இந்த ஞாயிறு மனநோய் சேவைப் பிரிவு ஊழியர்களையும் பீடித்துக் கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மின்வாரியம், தொலைத்தொடர்பு ஊழியர்களைப் பிடிப்பது முயல்கொம்புதான். மேலிடத்தில் செல்வாக்கு இருந்தால் மட்டுமே சராசரி இந்தியக் குடிமகனுக்கு ஞாயிறு சேவை வாய்க்கும்.

இதெல்லாம்கூடத் தொலையட்டும். மருத்துவமனை மருத்துவர்களையும் இந்த நோய் பீடித்திருக்கிறது என்பதுதான் வேதனையிலும் வேதனை. ஞாயிற்றுக்கிழமையன்று திடீர் உடல்நலக் குறைவு அல்லது விபத்தில் காயம் என்பதற்காக எந்த மருத்துவமனைக்குப் போனாலும், டாக்டர்கள் இருப்பதில்லை. சாதாரண கிளீனிக்குகள் மூடப்பட்டிருக்கும். 24 மணி நேர சேவை மருத்துவமனை என்று அறிவிப்பு இருந்தாலும் செவிலியர் மட்டுமே இருப்பார்.

கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும்கூட பயிற்சிமருத்துவர்கள் ஓரிருவர் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் தாற்காலிகமான சிகிச்சையைத்தான் தருவார்கள். அரசு மருத்துவமனை என்றால் டீன் தயவு இருந்தால்தான் முடியும். அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் மோதல், டாக்டர் மீது தாக்குதல் என்கிற செய்திகள் எந்தக் கிழமையில் நடைபெறுகிறது என்பதைக் கணக்கிட்டால் 99 விழுக்காடு ஞாயிற்றுக்கிழமையாகவே இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் தமிழகம் முழுக்க, ஐந்து நட்சத்திர ஓட்டல் உள்பட, ஒரு நாள் மதுவிலக்கு அமல்படுத்தினாலும்கூட போதும், இந்த ஞாயிறுநோய் பாதி குணமடைந்துவிடும்! இந்தக் கருத்தை நாம் முன்வைத்தால், அண்டை மாநிலங்களும் இதைப் பின்பற்றுமா என்கிற அசட்டுத்தனமான கேள்வி கேட்கப்படும்.

நமக்குத் தெரிந்து இரவு பகல், நாள் கிழமை என்று பாராமல் இயங்கும் முதல்வர் கருணாநிதியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படைப்பாடமான உழைப்பை மட்டும் நம்மில் யாரும் பின்பற்றத் தயாராக இல்லையே என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். ஓய்வு தேவையில்லை என்பதல்ல நமது வாதம். ஓய்வு என்கிற பெயரில் பொழுது வீணடிக்கப்படுவதும், ஞாயிறு என்கிற காரணத்தால் கடமை மறப்பதும் தவறு என்பதுதான் நாம் வலியுறுத்த விரும்பும் கருத்து!
நன்றி : தினமணி

Friday, January 22, 2010

மனம் வெளுக்க ஒரு வாரியம்!

அன்றாட வாழ்வில் ஒருவன் பணப்பையைத் திருடிவிட்டால், அவனுக்குத் தண்டனை கிடைக்கிறது. பட்டப்பகலில் வெட்டிக் கொன்றான் என்பதற்காக ஒருவனுக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனைகூட விதிக்கிறது. உளவு பார்த்து, நேரம் பார்த்துத் தப்புகள் பல செய்து, திருடியோ ஏமாற்றியோ உலவும் ஒரு கள்வர் கூட்டத்தை, மொத்தமாகக் கண்டுபிடித்துக் கைவிலங்கு மாட்டிச் சிறைக்கு அனுப்புகின்றனர். "சீட்டுக் கம்பெனி' என்று தொடங்கி, பல நூறாயிரம் கோடி என மக்களை வஞ்சித்து ஏமாற்றுபவர்களைச் சட்டம் விட்டுவைப்பதில்லை. கைக்கூலி, ஊழல், லஞ்சம் எனப் பெருகிவரும் தீமைகூடச் சிலபோது அகப்பட்டுக் கொள்கிறது.

சுற்றுப்புறச் சூழ்நிலை மாசுபடுத்துபவர்களையும் மாசு பரவலையும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் நாளும் எச்சரித்தபடி இருக்கிறது. ஆனால்... மனத்தை மாசுபடுத்தும் சுற்றுச்சூழலைப் பற்றி யாரும் எண்ணிப் பார்ப்பதே இல்லை. புறச்சூழலை மாசுபடுத்துவதற்குக்கூட, மாற்றுத் தேடி விடலாம். அகச்சூழலை மாசுபடுத்துவதால், ஒரு சமுதாயம் அழிவதை, சிறுகச் சிறுக நஞ்சூட்டிக் கொல்வதுபோல், பண்பாட்டை-நாகரிகத்தை-நாணத்தை அழிப்பதைத் தடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படுவதில்லை; மாசுபடுத்துபவர்களைத் தண்டிக்க வழியில்லை.

÷தொலைக்காட்சிகளாலும் திரைக்காட்சிகளாலும் நன்மைகள் விளையாமல் இல்லை. கால் பங்கு நன்மை என்றால், முக்கால் பங்கு தீமை வளர்க்கப்படுகிறது; பரப்பப்படுகிறது; பல கோடி மக்களின் நெஞ்சத்தில் நச்சுக் கிருமிகள் புகுத்தப்படுகின்றன.

÷ஒரு வடஇந்தியப் படத்தின் தமிழாக்கம். அதில் சிலர் பெரியதொரு மாளிகையின் பின்பக்கமாக ஏறி, உள்ளே குதித்து, உறங்குபவர்களை மிரட்டி, கட்டி வைத்து, வெகு லாவகமாகத் திருடிச் செல்வதை அப்படியே கற்றுக்கொடுப்பதுபோல் காட்டினர். இப்படி ஒரு திருடும் விதத்தைக் கற்றுக்கொண்ட இளைஞன், சில ஆண்டுகளுக்கு முன்பு, நீதிமன்றத்தில், அப்படக் காட்சியே தனக்கு வழிகாட்டியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான்.

கற்பழிப்புக் காட்சி என்று வைத்துக் கொள்ளுங்கள். முன்பு ஒரு முரடன், ஓர் இளம்பெண்ணை விரட்டிக்கொண்டு ஓடுவான்; அவளும் ஓடுவாள். அவள் தலையிலிருந்து ஒரு பூங்கொத்து கீழே விழும். பின்னால் ஓடிவந்த "வில்லன்' காலணியில் பட்டு அது நசுங்கிப்போகும். பின்னர் அப்பெண் அலங்கோலமாகக் கிடப்பதைக் காட்டுவார்கள். இடையில் நடந்தது குறிப்பாக உணரப்படும்.

இன்று ஒரு பெண்ணை ஏமாற்றி, மலைகள், பாறைகள் உள்ள இடத்துக்குக் கடத்திப்போய், அங்கே அவளைச் சேலையை உரிவதுமுதல், மானபங்கப்படுத்துவதுவரை "செய்முறைப் பயிற்சி'போல் காட்டுகிறார்கள். இப்படியே கதையிலும் திருமணம் செய்வதாக ஏமாற்றுதல், ஒருவரை ஒருவர் வஞ்சித்தல், கூடஇருந்தே குழிபறிப்பது எப்படி என விலாவாரியாக, விளம்பரமாகக் கற்றுக்கொடுத்தல் என ஆயிரம் காட்சிகள் நாள்தோறும் காட்டப்படுகின்றன.

அரைகுறை ஆடைபோய், ஒரு சிறு துணி மட்டும் ஒட்டிக்கொண்டிருக்கும். இதில் கதை மட்டுமன்று, பாடல்களும் அப்படித்தான். பாடல்களுக்கேற்ற காட்சிகளா, காட்சிகளுக்கேற்ற பாடல்களா என்பதே சிக்கலான கேள்விதான். ஒட்டிக் கொள்ளவா, கட்டிக்கொள்ளவா, தொட்டுக்கொள்ளவா, கூடிப் போவலாமா, ஓடிப் போவலாமா - இப்படித்தான் - இதைவிட, வெட்கத்தைவிட்டுப் பார்க்க வேண்டிய ஆட்டமும் பாட்டமும்! இவை யாவும் பார்த்துக் கொண்டிருக்கும் பல ஆயிரம் மக்களின் மனத்தில்போய் பதியும்; அதனால் ஒட்டுமொத்த சமுதாயம் பாதிக்கப்படும்; வருங்கால இளைய சமுதாயம் கெட்டு அழியும் என்று யாரும் கவலைப்படவில்லை.

எல்லாம் மக்களை ஈர்த்து, விளம்பரங்களைப் பெருக்கிப் பணத்தைப் பெருக்கும் பேராசையின் விளைவுதான். "ஆசைக்கோர் அளவில்லை, இந்த அகிலமெல்லாம் கட்டி ஆளினும்' என்பதற்கு ஒப்ப, மேன்மேலும் தீமைகளே கண்களைக் கவரவும் கருத்தைக் கெடுக்கவும் முற்படுகின்றன.

மனம் சார்ந்ததன் வண்ணமாகும் இயல்புடையது. மன ஓர்மையே தியானம் எனப்படுகிறது. இறைவனை "ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே' என்பர். அதுதான் மனத்தை "உரு'வேற்றி, நல்வழிப்படுத்துவது. மேலும் மேலும் தீயவற்றையே கண்டு கேட்டு உண்டு மோந்து அதிலேயே மனம் தோய்பவன், அதன் வண்ணமாகி விடுகிறான். இது பொழுதுபோக்குக்காக என்றும், மக்கள் மன இறுக்கத்தைத் தளர்த்துவதற்காக என்றும் சிறிது நேரமேனும் கடும் முயற்சி, உழைப்பை மறந்து மகிழ்ச்சிப்படுத்துவத ற்காக என்றும் சமாதானம் கூற முடியாது.

இவைகளையே நல்ல முறையில் காட்டி, இவற்றை விடப் பல மடங்கு மகிழ்ச்சிப்படுத்தலாம். அதற்குக் கூடுதல் திறமை வேண்டும். இன்று பச்சையாகவும் கொச்சையாகவும் காட்டுகிறார்களே, இதற்குத் திறமை தேவையில்லை. தெருவில் போகிறவன்கூட, ஒரு திரைப்பட இயக்குநராக, கதை, உரையாடல் எழுதுபவராக, பாடலாசிரியராக ஆகிவிட முடியும்.

மனத்தை எப்பொழுதும் உயர்வை நோக்கிச் செலுத்த வேண்டும். அப்படியெல்லாம் சொன்னால் படம் ஓடாது, பணம் போய்விடும் என்பது சத்தற்ற வாதம். திறமையாளன் காட்டுப் பூவிலும் மலர் மணம் இருப்பதை, அழகு பளிச்சிடுவதைக் காட்டுவான். எத்தனை நல்ல கதைகளை, நல்ல பாடல்களை நாம் கண்டு, கேட்டு மகிழ்ந்துள்ளோம்.

இன்று இந்த ஊடகங்களால் மொழியும் சிதைக்கப்படுகிறது. ஓர் உரையாடல், பண்பலை வானொலியில், ஒரு கிராமத்துப்பெண், தான் வீட்டுவேலைதான் செய்வதாகக் கூறவே, அவளிடம் "ஓ நீங்க ஹவுஸ் ஒய்பா' என்று எதிரொலிக்கிறார் கேட்டவர். அவ்வளவுதான். அதன்பிறகு எல்லாப் பெண்களும் தத்தம் வீட்டுவேலை செய்யும் இல்லத்தரசிகளாக இருந்தும், "ஹவுஸ் ஒய்ப்' என்றே கூறத் தொடங்கி விடுகின்றனர். ஏதோ பதவி உயர்வு கிடைத்துவிட்டதாம்!

÷சமையற்கலை கற்றுக்கொடுக்கும் போதும் அது படிப்பறிவில்லாத பெண்களும் பாமர மக்களும் பார்க்கும் காட்சி என்பதை மறந்து, ரைஸ், ஸôல்ட், பெப்பர், பொட்டாடோ, டொமாட்டோ, ஸ்பூன், குவான்டிட்டி, டேஸ்டு என இவ்வாறே கூறித் தங்கள் மேதைமையை வெளிப்படுத்தி மகிழ்கின்றனர்.

சிக்மண்ட் பிராய்டு மனிதருக்கு மூன்று மனம் உண்டு என்றார் மேல் மனம், நடுமனம், ஆழ்மனம் என்று. ஆழ்மனத்தில் போய்ப் பதிவன, ஒருவரின் குருதியில் மரபணுக்களில் போய்க் கலக்கின்றன. இவையே குடிவழி, பரம்பரைக்குப் போய்த் தொடர்கின்றன. தாத்தா இசைப்பேரறிஞராய்த் திகழ்ந்தால், ஓர் இடைவெளி விட்டுப் பேரனிடம்கூட அது வெளிப்படக்கூடும். இவ்வாறே நன்மையும் தொடரும்; தீமையும் தொடரும்.

"மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும்' என்பது வள்ளுவம். ஆழ்மனத்திலும் தூயவராக உள்ளவர்க்கே, நல்ல பண்புள்ள பிள்ளைகள் பிறக்கும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். "எழுமை எழுபிறப்பு' என்பார் அவர். அதாவது இத்தகையவை ஏழு பரம்பரை வரைகூடத் தொடரக்கூடுமாம்.

இன்றைய தொலைக்காட்சிகள் பெரிதும் மனத்தை மாசுபடுத்தும், பண்பாட்டைக் கெடுக்கும், மொழியைச் சிதைக்கும் கருவிகளாகவே செயல்படுகின்றன.

இக் காட்சிகளில் பல துறை வல்லுநர்கள்கூட, அளவற்ற ஆங்கிலச் சொற்களை அள்ளி வீசிக் கலந்து பேசி, தங்களின் "மேதா விலாசத்தை' விளம்பரப்படுத்திப் பெருமை தேடிக்கொள்ள நினைக்கிறார்கள்.

இங்கிலாந்து வானொலியில், ஆங்கிலத்தில் வாசிக்கப்படும் செய்திகளைக் கேட்பவர்கள், தங்கள் ஆங்கில மொழி உச்சரிப்பையும் மொழித்திறனையும் வளர்த்துக் கொள்வர் என்று கூறப்படுவதுண்டு.

ஆயினும் இன்று நம் நாட்டில், இத் தொலைக்காட்சி, திரைக்காட்சியினர், பிற நாட்டினர்-குறிப்பாக ஐரோப்பிய அமெரிக்க நாட்டினரின்-பண்பாட்டுச் சிதைவுக்கான படப்பிடிப்புகளை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டே, நம் நாட்டில் இதுவரை இல்லாத சிதைவுகளையும் புகுத்துகின்றனர். நன்மைகளைவிட்டுவிட்டுத் தீமைகளையே மேய்கின்றனர்.

புற மாசுத் தடுப்பு வாரியங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுக்கள்போல, மனமாசுத் தடுப்புக் கழகங்களும் தோன்ற வேண்டும். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் புறக்கேடுகளை, தீமைகளை ஒழிக்க முயல்வதுபோல, மனத்திற்குள் தீமைகளையே விதைக்கும் காட்சிகளைப் பரப்பும் அகச்சூழல் கேடுகளையும் தடை செய்ய வேண்டும்.

இத்தகைய தொலைக்காட்சிகள், திரைப்படங்கள் போன்றவற்றை, போட்டி கருதி, கூடுதலாகப் பரப்புபவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இம் மன மாசு பரம்பரைக்குத் தொடரும்; கொடிய தொற்றுநோய்போல ஊரெல்லாம் பரவி இவற்றை எடுத்துக்காட்டிப் பணம் குவிப்பவர்தம் குடும்பம், உறவு, பேரன், பேத்தியையும் ஒருகாலத்தில் பாதிக்கவே செய்யும். எனவே இது "தற்கொலைக்குச் சமமாகும்' என அவர்கள் உணர வேண்டும். சமுதாய ஒட்டுமொத்த மனத்துக்கு இவர்கள் போடும் "தூக்குக் கயிறு' இவர்களை மட்டும் விட்டுவிடுமா என்ன?

இவற்றை எல்லாம் யாரைய்யா கேட்பார்கள்; நீங்கள் "பழம் பஞ்சாங்கம்' என்று யாரேனும் கூக்குரலிடலாம். அது உண்மைதான். "திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது' என்று பாடுவதுபோல் நாமும் திருப்பிப் பாட வேண்டியதுதான். ஏனெனில் சமுதாயத்தைத் திரும்ப மீட்டெடுக்க முடியாத தீமைகளை விளைவிக்கும் கொடிய தீமை இது.
கட்டுரையாளர் :தமிழண்ணல்
நன்றி : தினமணி

Friday, January 15, 2010

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சென்சார் வருமா?

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரின் எண்ணத்தையும் மழுங்கடிக்கச் செய்து வரும் தொலைக்காட்சி ஊடகங்களின் நிகழ்ச்சிகளைத் தணிக்கை செய்ய சென்சார் அமைப்பு வந்தால்தான் இந்தியாவின் பண்பாடு காப்பாற்றப்படும் என்ற நிலை ஏற்பட்டு வருகிறது.

சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் வினீத் (13). 7-ம் வகுப்பு மாணவர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒளிபரப்பான ஒரு காட்சியைப் பார்த்துள்ளார். அந்தக் காட்சியில் ஒருவர் வாயில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீப்பிடிக்கச் செய்வது போன்று செய்து காட்டியுள்ளார். இதைப் பார்த்த அவர், தானும் அதுபோலச் செய்து பார்த்துள்ளார். விளைவு தீக் காயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்தார்.
இந்தச் செய்தியை நாளிதழ்களில் படித்த யாருக்கும் நெஞ்சம் பதறாமல் இருக்காது.

இளம்பிஞ்சுகளின் மனதில் நஞ்சினைத் தொடந்து விதைக்கும் பணியினை சில ஊடகங்கள் தங்களின் வாழ்நாள் லட்சியமாகவே கொண்டு செயலாற்றி வருகின்றன. அதிலும் அண்மைக்காலமாக நெஞ்சைப் பதற வைக்கும் நிகழ்ச்சிகளை சேனல்கள் பல தங்களின் வருமானத்துக்காகவும், நிகழ்ச்சி ரேட்டிங்கில் முன்னிலைக்கு வருவதற்காகவும் சாகசம் என்ற பெயரில் போட்டி போட்டு நடத்தி வருகின்றன.

நிகழ்ச்சிக்கு நடுநடுவே, இதை யாரும் வீட்டில் வைத்து செய்து பார்க்காதீர்கள்.
இது மிகவும் அபாயமானது என்ற அன்புக் கட்டளை வேறு. சிகரெட் பாக்கெட்டின் வெளிப்புறத்தில் புகை பிடிப்பது உடல் நலத்துக்குக் கேடு என்று கடமைக்காக போடுவதைப்போல தொலைக்காட்சி சேனல்களும் இந்த வாசகத்தை ஒளிபரப்புகின்றன.

தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கும் வயது முதிர்ந்த, வாழ்க்கையின் தத்துவத்தை அனுபவித்து உணர்ந்த பெண்களே அந்த சீரியலின் கதாபாத்திரமாக தானும் மாறி அந்தப் பாத்திரம் கண்ணீர்விட்டால் தானும் கண்ணீர் விட்டு, அது சிரித்தால் தானும் சிரித்து, அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்து ஒன்றிப் போகும் நிலையில், பாவம் சிறுவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன..? தொலைக்காட்சிகளின் கீழ்ப்பகுதியில் எப்பொழுதாவது தோன்றி மறையும் எச்சரிக்கைச் செய்திகளைப் பார்த்து இவர்கள் எப்படிக் கடைப்பிடிப்பார்கள்..?

சிறு குழந்தைகள் புத்தகங்களில் கூறப்பட்டுள்ள விஷயங்களை அறிந்து கொள்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட மிகக்குறைந்த நேரத்திலேயே தொலைக்காட்சிகளில் காட்டப்படும் படங்களை, விஷயங்களை அறிந்து கொள்கிறார்கள் அல்லது அறியத் துடிக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில், இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறோமே, அதனால் ஏதேனும் விபரீத விளைவுகள் நடந்து விடாதா என்று எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும் தோன்றவில்லை என்பதுதான் வேதனை.
தொலைக்காட்சித் தொடர்களில் சிலவற்றைப் பார்த்தால், அதில் நடிக்கும் சிறுவர்களைத் தங்கள் வயதுக்கு மீறிய பேச்சைப் பேசச் செய்து இயக்குநர் ம கிழ்ந்திருப்பார். ஆனால், அதேபோன்று அந்தத் தொடரினைப் பார்க்கும் மற்ற குழந்தைகளும் பேசுமே; அது பண்பாட்டுக்கு உகந்ததாக இருக்காதே என்று அந்தத் தொடரின் இயக்குநர் கவலைப்படுவதே இல்லை.

இன்னும் சில தொலைக்காட்சிகள் கையடக்க கேமராவை மறைத்து வைத்து வழியில் செல்வோரை எல்லாம் வழிமறித்து, அவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தங்களின் கடமை(?) ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு, அவர்கள் (மாட்டுபவர்கள்) படும் அவஸ்தைகளைத் தாங்களும் ரசித்து, பின்னர் உலகிற்கெல்லாம் அதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டு கடைசியாக ஒரே வரியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி இது. யாரையும் புண்படுத்த அல்ல. என்று நமட்டுச் சிரிப்புடன் எளிதாகக் கூறிவிட்டு மறைகிறார்கள்.

ஆனால், அவ்வளவுநேரம் அந்தச் சம்பவம் அவர்களை எந்த அளவுக்குப் பாதித்திருக்கும் என்பதையும், தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் சம்பந்தப்பட்ட நபரை பற்றி என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி எல்லாம் அந்த சேனல்களுக்குக் கவலை இல்லை. அவர்களின் ஒரே கவலை எப்படி ரேட்டிங்கை ஏற்றுவது என்பதுதான்.

எனவே, மக்களின் மனங்களைத் தன்வசப்படுத்தி தான் கூறும் கருத்துகளைத் திணித்து வரும் வேலையைத் திறம்படச் செய்து வரும் சேனல்களின் நிகழ்ச்சிகள் மக்களைக் குறிப்பாக குழந்தைகளைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். அதற்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கண்டிப்பாகத் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்பதுதான் பிள்ளைகள் மேல் பற்றுக்கொண்டுள்ள அனைத்துப் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.
கட்டுரையாளர் : வி.குமாரமுருகன்
நன்றி : தினமணி

Monday, January 11, 2010

தமிழ் வெறும் துக்​க​டாவா...?

கடந்த ஒரு மாத​மாக நடந்​து​வ​ரும் சென்னை இசை விழா முடி​வ​டை​யும் நிலையை எட்​டி​விட்​டது.​ முக்​கி​ய​மான பழம்​பெ​ரும் சபாக்​க​ளின் நிகழ்​வு​கள் முடிந்​து​விட்​டன.​ சென்னை சங்​க​மத்​து​டன் இந்த ஆண்​டுக்​கான இசை​விழா நிறை​வு​பெ​றும்.​

உ​ல​கின் பல்​வேறு நாடு​க​ளி​லும் இது​போன்ற இசை,​​ நாட்​டி​யம் தொடர்​பான கலை விழாக்​கள் நடை​பெ​று​கின்​றன.​ ஆகஸ்ட் மாதம் எடின்​பரோ சர்​வ​தே​சக் கலை​விழா மிக​வும் விம​ரி​சை​யா​கக் கொண்​டா​டப்​ப​டும் விழா.​ 1947-ம் ஆண்டு தொடங்​கப்​பட்ட இந்த இசை,​​ நாட்​டிய விழா​வில் பங்​கு​பெ​ற​வும்,​​ கலந்​து​கொள்​ள​வும் உல​கெங்​கி​லும் இருந்து கலை​ஞர்​க​ளும் ரசி​கர்​க​ளும் குவி​கி​றார்​கள்.​ ஆனால்,​​ இந்த இசை விழா நடப்​பது ஆறே ஆறு அரங்​கங்​க​ளில் மட்​டுமே.​

லண்​டன் நாட்​டிய விழா,​​ நியூ​யார்க் நாட்​டிய விழா,​​ ஐரோப்​பிய நாட்​டிய விழா என்று எத்​தனை எத்​த​னையோ இசை,​​ நாட்​டிய விழாக்​கள்.​ ஆனால்,​​ அவை அனைத்​துமே வியா​பா​ரக் கண்​ணோட்​டத்​து​டன்,​​ பல தொழில் நிறு​வ​னங்​க​ளும்,​​ அந்​தந்த நகர அமைப்​பு​க​ளும் சுற்​று​லாப் பய​ணி​க​ளைக் கவர்ந்து தங்​க​ளது பொரு​ளா​தா​ரத்தை மேம்​ப​டுத்த இது​போன்ற கலை நிகழ்ச்​சி​களை விளம்​ப​ரப்​ப​டுத்​திக் குளிர்​காய முற்​ப​டு​கின்​ற​னவே தவிர,​​ கலைக்​காக நடத்​தப்​ப​டும் விழாக்​களா என்​றால் கிடை​யாது.​

ஆ​னால் நமது சென்​னை​யில் ஆண்​டு​தோ​றும் நடை​பெ​றும் இசை​விழா அப்​ப​டிப்​பட்​ட​தல்ல.​ இது வியா​பா​ரத்​துக்​காக நடத்​தப்​ப​டு​வது அல்ல.​ சுற்​று​லாப் பய​ணி​க​ளைக் கவர வேண்​டும் என்​ப​தற்​காக ஏற்​பாடு செய்​யப்​ப​டு​வ​தும் அல்ல.​ கலைக்​கா​கக் கலா​ர​சி​கர்​க​ளால் நடத்​தப்​ப​டும் நமது சென்னை இசை விழா​வின் பிர​மாண்​டம் உல​கில் வேறு எந்​தப் பகு​தி​யில் நடை​பெ​றும் விழாக்​க​ளுக்​கும் இல்லை என்​ப​தால்​தான்,​​ சென்னை மாந​க​ரம் இந்​தி​யா​வின் கலா​சார தலை​ந​க​ரம் என்று போற்​றப்​ப​டு​கி​றது.​

73 சபாக்​கள் ஏறத்​தாழ 2,850 இசை,​​ நாட்​டிய நிகழ்ச்​சி​களை நடத்தி நாலா​யி​ரத்​துக்​கும் மேற்​பட்ட கலை​ஞர்​க​ளின் திற​மையை ரசி​கர்​க​ளுக்கு விருந்து படைக்​கும் இந்த அதி​ச​யத்​தைப் பார்த்து வட​நாட்​ட​வ​ரும்,​​ வெளி​நாட்​ட​வ​ரும் வாய் பிளந்து ஆச்​ச​ரி​யப்​ப​டு​கி​றார்​கள்.​ ஆண்​டு​தோ​றும் சில நூறு புதிய இளைய தலை​மு​றைக் கலை​ஞர்​கள் அறி​மு​க​மா​கி​றார்​கள்.​ சொல்​லப்​போ​னால் இந்த இளைய தலை​மு​றைக் கலை​ஞர்​க​ளில் பலர் பணத்​துக்​காக இசை​யைத் தேர்ந்​தெ​டுக்​கா​மல்,​​ இசையை இசைக்​காக நேசிப்​ப​வர்​க​ளா​க​வும் இருக்​கி​றார்​கள்.​

கர்​நா​டக இசை என்​பதை நாம் தென்​னிந்​திய இசை அல்​லது திரா​விட இசை என்று சொல்​வ​து​தான் சரி.​ எப்​ப​டித் தமி​ழர்,​​ கேர​ளத்​த​வர்,​​ கன்​ன​டர்,​​ ஆந்​தி​ரர் ஆகிய அனை​வ​ரை​யும் வட​வர்​கள் "மத​ரா​சி​கள்' என்று குறிப்​பி​டு​கி​றார்​களோ அதைப்​போல,​​ நமது தஞ்​சைத் தர​ணி​யில் தோன்றி தென்​ன​க​மெங்​கும் பர​விய தென்​னக இசை​யைக் கர்​நா​டக இசை என்று குறிப்​பி​டு​கி​றார்​கள்,​​ ஆற்​காடு நவா​பு​கள் அப்​போது கர்​நா​டிக் நவாப் என்​றும் அழைக்​கப்​பட்​ட​னர்.​ இவர்​கள் கிருஷ்ணா நதிக்​கும் கொள்​ளி​டத்​துக்​கும் இடை​யி​லான பகு​தியை 1690 முதல் 1801 வரை ஆண்டு வந்​த​னர்.​ மைசூர் உள்​பட உள்ள பகு​தியை ஆண்ட கர்​நா​டிக் நவா​பு​க​ளின் நாட்டு இசை​யைக் கர்​நா​டக இசை என்று இந்​துஸ்​தா​னிய இசை மர​பி​னர் அழைக்க முற்​பட்​ட​னர்.​ இது​தான் வர​லாற்று உண்மை.​

சப்த ஸ்வ​ரங்​க​ளின் அடிப்​ப​டை​யில் அமைந்த இசை எப்​ப​டித் தமி​ழி​சை​யா​கும் என்று கேட்​ப​வர்​கள் மறந்​து​வி​டும் ஒன்று,​​ இந்த சப்த ஸ்வ​ரங்​கள் நமது பண்​க​ளின் பரி​ணா​மம்​தான் என்​பதை.​ இசை​யும்,​​ முழ​வும்,​​ தாள​மும்,​​ கூத்​தும்,​​ அபி​ந​ய​மும் ஆய இவை ஐந்​தும் பஞ்ச மரபு என்​பார்​கள்.​ "பஞ்ச மரபு' என்​கிற சங்க கால நூலில் இசை மர​பின் வங்​கிய மரபு என்​கிற உட்​பி​ரி​வில் பாடல் 28-ல் "சரி கம பத நீ' எனும் ​ சுத்த எழுத்​தால், ""வரி​ப​ரந்த கண்​ம​ட​வாய் வைக்​கத் தெரி​வ​ரிய ஏழி​சை​யும் தோன்​றும்.​ இத​னுள்ளே பண் பிறக்​கும்.​ சூழ் முத​லாம் சுத்​தத் துளை'' என்று வங்​கி​யம் ​(புல்​லாங்​கு​ழல்)​ வர்​ணிக்​கப்​பட்​டி​ருக்​கி​றது.​

ந​மக்கே உரித்​தான இந்த இசையை நாம் தக்​க​வைத்​துக் கொள்ள வேண்​டு​மா​னால் ​ முத​லில் அந்த இசை பாம​ர​னுக்​கும் புரி​யும் இசை​யாக இருக்க வேண்​டும்.​ அதற்கு அதி​க​மா​கத் தமிழ் சாகித்​யங்​கள் ​(பாடல்​கள்)​ கையா​ளப்​பட வேண்​டும்.​ பெய​ருக்​குத் துக்​க​டா​வாக ஒரு திருப்​பு​கழோ,​​ திருப்​பா​வையோ பாடு​வது என்​பது இசையை மட்​டு​மல்ல,​​ தமி​ழை​யும் கேவ​லப்​ப​டுத்​து​வ​தாக இருக்​கி​றது.​

இ​ளைய தலை​மு​றைக் கலை​ஞர்​கள் பலர் தமிழ் சாகித்​யங்​களை மட்​டு​மல்ல,​​ தெலுங்கு சாகித்​யங்​க​ளை​யும் ஆங்​கி​லத்​தில் எழுதி வைத்​துப் பாடும் அவ​ல​நிலை ஏற்​பட்​டி​ருப்​பது எத்​தனை பேருக்​குத் தெரி​யும்?​ தமி​ழில் பாடி​னால் மட்​டும் போதாது.​ தமிழ் படித்​துத் தமி​ழைச் சரி​யாக உச்​ச​ரித்​தும் பாட வேண்​டும்.​

க​லை​ஞர்​களை ஒப்​பந்​தம் செய்​யும்​போது,​​ நீங்​கள் தமி​ழில் பாடு​வ​தாக இருந்​தால்​தான் வாய்ப்பு என்று ஏன் இந்த சபாக்​கள் நிபந்​தனை விதிப்​ப​தில்லை என்​கிற நியா​ய​மான கேள்​வியை எழுப்பி இருக்​கி​றது "விடு​தலை' நாளி​தழ்.​ நாமும் அந்​தக் கருத்​தையே பிர​திப​லிக்​கி​றோம்.​

இசை பாம​ரர்​க​ளைப் போய்ச் சேர வேண்​டும்.​ இந்த நோக்​கம் சென்னை சங்​க​மத்​தால் ஓர​ள​வுக்கு செயல்​வ​டி​வம் கொள்​கி​றது என்​ப​தை​யும் இங்கே பதிவு செய்​தாக வேண்​டும்.​ பூங்​காக்​க​ளில் பாடும் பல கலை​ஞர்​கள் பாம​ரர்​கள் ரசிக்க வேண்​டும் என்​ப​தற்​கா​கத் தமி​ழில் பாடு​கி​றார்​கள்.​ இவர்​கள் சபாக்​க​ளில் பாடும்​போது தமி​ழில் பாடு​வ​தில்​லையே ஏன்?​ அங்கே கூடும் ரசி​கர்​கள் தமிழ் பாடக்​கூ​டாது என்று சொல்​வார்​களா என்ன?​ இல்லை அவர்​கள்,​வெளி​நாட்​ட​வர்​க​ளும் வெளி​மா​நி​லத்​தா​ருமா,​​ ​ தமி​ழர்​கள்​தானே?​

ப​ணக்​கார நிலச்​சு​வான்​தார்​கள் மற்​றும் ஜமீன்​தார்​க​ளின் ஏக​போக உரி​மை​யாக இருந்த இசை இன்று அனை​வ​ருக்​கும் பொது​வாகி இருக்​கி​றது.​ இனி அதைப் பாம​ர​னும் ரசிக்​கும் நிலை ஏற்​பட வேண்​டும்.​ அதற்​குப் பள்​ளி​க​ளில் ஐந்​தாம் வகுப்பு வரை இசை கட்​டா​ய​மா​கக் கற்​றுத்​த​ரப்​பட வேண்​டும்.​ நமது சபாக்​க​ளும்,​​ இசை​வா​ணர்​க​ளும் தமி​ழி​சைக்கு முன்​னு​ரிமை தர​வேண்​டும்.​ தமி​ழ​கத்​தில் தமி​ழில் பாடுங்​கள் என்று வேண்​டு​கோள் விடுக்​கும் கேவ​லம் இனி​யும் தொட​ரக்​கூ​டாது!
நன்றி : தினமணி

Monday, December 21, 2009

இரண்டாம் விடுதலை யாரிடம் இருந்து?

சுப்பிரமணிய பாரதி பிறந்த நாள் டிசம்பர் 11 மறந்தோம். சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் கொண்டாடி ஜன்ம சாபல்யம் அடைந்தோம். நவம்பர் 7 அன்று நோபல் விஞ்ஞானி சர். சி.வி. ராமன் பிறந்த தினம் வந்து போனது, பலருக்குத் தெரியாது. பண்டித ஜவாஹர்லால் நேரு பிறந்த நாளும் வந்தது, போனது. வெகு ஜன ஊடகங்கள் அவற்றைக் கண்டு கொண்டால்தானே.

நம் அடிமைத்தனம் மட்டும் மாறவே இல்லை. பெருகிவரும் கு, கூ, கொ, கோ - ஆகிய நான்கு தனங்களுக்கு நாம் அடிமை. இது என்ன ஹைக்கூவோ என்று பயந்து விடாதீர்கள். குடிகாரத்தனம், கூத்தாடித்தனம், கொலைகாரத்தனம், கோமாளித்தனம். இதுதான் இன்றைய நம் கலாசாரம் ஆகப் பதிவாகி வருகிறது.

குடிப்பழக்கம், புகையிலை இவற்றால் ஆண்டுதோறும் ஒன்றே கால் கோடி இதயநோய் மரணங்களாம். உலக சுகாதார நிறுவன அறிக்கை பற்றி நமக்குக் கவலை இல்லை, நமக்கு முக்கியம் வருமானம்.

போதை மருந்துப் புழக்கம் இந்தியாவில் எந்த அளவு கிறக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது? கஞ்சா அடிமைகள் 87.5 லட்சம், ஓப்பியம் பேர்வழிகள் 20.4 லட்சம், மருந்து அடிமைகள் 2.9 லட்சம். உள்ளபடியே ஆப்கானிஸ்தானத்தில் இருந்தும், மியான்மரில் இருந்தும் உலக நாடுகளுக்கு ஹெராயின் கடத்தும் உலக விரோதிகளின் ஊடு நாடாக இந்தியா இயங்கி வருகிறதாமே. 2004-ம் ஆண்டு போதை மருந்துகள் மற்றும் குற்றங்களுக்கான ஐ.நா. அலுவலகமும், சமூகநீதி அமைச்சகமும் இணைந்து நடத்திய கணிப்பின் முடிவு இது.

ஏதோ ஒரு வழியில் நம் இளைஞர்களுக்கு அறிவியல் சிந்தனை வராமல் பார்த்துக் கொள்கிறோம். உள்ளபடியே மது போதையில் நம் இளைய தலைமுறை உணர்வு மரத்து உருக்குலைந்து வருகிறது. சுயமாகச் சிந்திக்க இயலாத மந்தபுத்தி மந்தைகளை இனப்பெருக்கம் செய்வதே நோக்கம். இன்னும் பத்து இருபது ஆண்டுகளில் இவர்கள் தேர்தலில் வாக்குப் போடக் கூட வரமாட்டார்கள். வீட்டில் இருந்தபடி வாக்கை - விற்றுவிடத் தயாரானாலும் ஆச்சரியம் இல்லை.

இங்கு மதுப் பயனாளிகளில் பெரும்பாலோர் கல்லூரி மாணவர்கள், கணிப்பொறி நிபுணர்கள், இளநங்கைகள் என்பது இன்னொரு அதிர்ச்சித் தகவல். அதி நவீனக் கல்வி தர வேண்டியவர்கள் இன்று மதுக்கடை உரிமையாளர்கள். அன்றைய மது வியாபாரிகள் பலரும் கல்வி நற்பணி தொடங்கிவிட்டனர். காலத்தின் போக்கு, தலைகீழ். அவர்களின் கல்விக் கட்டணத்தைக் குறைக்கச் சொன்னால் ""உங்கள் கமிஷனைக் குறைத்தால் தானே'' என்று யாரோ திருப்பிக் கேட்டார்களாமே. அரசியல்வாதியின் வாய்மொழி உத்தரவில் ஊழல் கோப்பில் கையெழுத்துப் போடுவார் அதிகாரி. அவர் தலையெழுத்து, தனியே மாட்டிக் கொள்வார்.

ஏதாயினும் இன்று சுதந்திர இந்தியாவில் ஆட்டோ பெர்மிட் முதல் பாட்டி பென்ஷன் வரை நீக்கமறப் புழக்கத்தில் உள்ள புது வழக்குச்சொல் ஆழ்ண்க்ஷங் தமிழில் கையூட்டு, லஞ்சம், கைக்கூலி, சன்மானம், கமிஷன், மாமூல், கட்டிங், சம்திங், அன்பளிப்பு, இனாம், இலவசம், பெர்சன்ட், தள்ளு, வெட்டு, பெட்டி, கவர், சின்ன கிஃப்ட் - அடேங்கப்பா எத்தனைக் கலைச்சொற்கள். ஆங்கிலத்தை மிஞ்சியது நம் செம்மொழி.

தேர்வு எழுதாமலே வெற்றிச் சான்றிதழ் பெறவும் முடிவது அரசியலில் மட்டும் தானாம். தேர்தலுக்கு முன்னமேயே வாக்கு வித்தியாசத்தைக் குறிசொல்லும் கட்சி சோதிடர்கள் நிறைந்த பாரத ஙர்ய்ங்ஹ் திருநாடு வாழ்கவே வாழ்க.

எப்படியோ, கறுப்புதான் நம்மில் பலருக்குப் பிடித்த கலரு-பணத்தில் மட்டும். திட்டம் அறிவித்ததும் "சதவீதம்' பெற்றுக்கொள்ளும் சாமர்த்தியசாலிகள் வாழும் புண்ணிய பூமி இது. பத்து பென்சில் வாங்கினால் ஒரு ரப்பர் இலவசம். கஜானா பணத்தில் வாங்கிய பென்சிலுக்குக் கிடைத்த ரப்பர் மட்டும் எப்படி ஆணை போட்டவருக்குச் சொந்தம் ஆகுமோ? டாக்டர் கலாம் சொன்ன அறிவியல் கனவு நம் அரசியல் பெரியவர்கள் காதில் நடு எழுத்து மாறி "ள'கரம் ஆக ஒலித்ததோ என்னவோ?

வெளிநாட்டு வங்கியில் 70 லட்சம் கோடி இந்தியர் பணம் இருப்பதாக வைத்துக்கொள்வோம். கணக்குப் போடுங்கள், கைக்குழந்தையோ, படுகிழவியோ சராசரி ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிய 70 ஆயிரம் ரூபாய் சொந்தப் பணம் என்று அர்த்தம் ஆகிறதே. எப்போது கிடைக்கும்?

அடுத்தபடி, கூத்தாடித்தனம் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஒரு கணத்தில் ஊடகங்களுக்குப் பன்றிக்காய்ச்சலே வராதா என்று ஏங்கத் தோன்றும். அந்த அளவுக்கு தலைவிரித்தாட்டம்.

அண்டை நாட்டில் வீர சகோதரர்களின் "புறநானூறு' நடந்து கொண்டு இருந்தது. தமிழ்நாட்டிலோ ஆயுள்முச்சூடும் தனித்தனிச் சானல்களில் திகட்டத் திகட்ட "அக நானூறு' தான். ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம். வீர வசனம் களத்திலாவது, காகிதத் தளத்தில் அல்லது கவியரங்கத்தில் மட்டுமே. போட்டி போட்டுக்கொண்டு எல்லாச் சானல்களிலும் அசைவப் பாட்டுகள், ஆட்டங்கள். பள்ளிக் குழந்தைகளையும் அழைத்து வந்து இந்தப் பள்ளியறை வெட்டல் நடனம் அவசியம் தானா?

முன்னொரு காலத்தில் திருநெல்வேலி பொருட்காட்சியில் தம்பிதுரை-மஸ்தான் ஆபாச ரெக்கார்டு டான்ஸ் தடைவிதிக்கப்பட்டது. அது மறுவடிவில் மாடல் ஸ்டூடியோ அரங்கின் கீற்றுக் கொட்டகையில் பூவாளிக் குளியல் காட்சிகள் ஆயின. அந்த ரகசிய ஆட்டங்கள் இன்று தேசிய விழாக்களாக சானல்கள் தோறும் சக்கைப்போடு போடுகின்றனவே. குளியல் நடனங்களின் நீதிபதியும் பாதி குளித்த அரைத்துண்டுடன்தான் வந்து அமர்கிறார். தீர்ப்பின்போது கெமிஸ்ட்ரி நன்றாய் இருந்துச்சு, ஜியாகிராஃபி படுத்துச்சு என்று எல்லாம் பல்கலைக்கழகத் தீர்ப்பு வேறு.

திரைப்பட விழாக்களில் வயிறாட்டம் என்று ஒரு புது தினுசு இறக்குமதி ஆகி இருக்கிறது. அதையும் வேலை மெனக்கட்டு வந்து ரசிக்கும் முற்றிய கலையுள்ளங்களை வாழ்த்துவோம். அண்மையில் நம் குடியரசுத் தலைவர் விருது நிகழ்ச்சிக்கு உலக அழகி "பாத்-ரூம் மேக்கப்'புடன் வந்து இருந்தாராமே. இந்திப் படப்பிடிப்பு என்று நினைத்தாரோ என்னவோ? தேசிய விருதுக்கு வழங்கும் கெüரவம் அது. இன்றைக்கு விருதுகளும் ஜனநாயகம் மாதிரி வரையறுக்கப்பட்டு விட்டது. தானே நிறுவிய விருதுக்குத் தன்னைத் தானே தேர்ந்து எடுத்துத் தன்னால் வழங்கும் கிரீடத்தைத் தனக்குத் தானே தரிப்பதில் நம்மவர்க்குத்தான் தாகம் அதிகம்.

அண்டைக் கேரளத்தில் முன்பு ஒருமுறை அமைச்சர் உண்மையான பொறுப்புடன் வாரந்தோறும் ஒரு நாளில் தொலைக்காட்சியில் தோன்றினார். பொதுஜனம் கேட்கும் கேள்விகள், முறையீடுகள், கோரிக்கைகளை விசாரிப்பார். நேரடியாக மக்கள் குறை தீர்ப்பார். துணைக்கு அவரது துறைச் செயலரும் உடன் இருப்பார். நமக்கு அதற்கு எல்லாம் நேரம் கிடையாது. "டிவி வால்யூம் கம்மி பண்ணி' சினிமாப் பாட்டு கேட்க மட்டுமே நமக்குப் பிடிக்கும். திரை விண்மீன்களின் மினுமினுப்புகள் போதும்.

மூன்றாவதாக, மனிதாபிமானம் இழந்த கொலைகாரத்தனம் எப்படி நம் சமூகத்தில் ஊடுருவுறுகிறது பாருங்கள். சாலை விபத்தில் சக்கரத்தில் மாட்டி உயிர் இழந்தவர்க்கு ஓட்டுநர் சில ஆயிரங்கள் நஷ்டஈடு கொடுத்தால் போதுமாம். ஆனால் காயங்களுடன் அடிபட்டு மருத்துவமனையில் சேர்த்தால் முழுச்செலவையும் ஓட்டுநரே ஏற்க வேண்டுமாமே. அதனால் அடிபட்டுக் குற்றுயிராகக் கிடந்தவர் மீது ரிவர்ஸில் வந்து வண்டியை ஏற்றிக் கொன்றே விட்டாராமே. ஆயிரங்கள் அபராதத்தோடு போகும். நாம் எங்கே போகிறோம்?

அதிலும் பலவகைக் கொலைகாரர்களும் தொலைக்காட்சிகளில் கூச்சமே இல்லாமல் சிரித்தபடி லேன்சர், டோயாட்டோ கார்களில் மிதப்பதும் பார்த்தால் நமக்கே சந்தேகம் வரும்.

அரசியல்வாதிகள் மட்டும் அல்ல, குற்றவாளிகளும் தான் போலீஸ் பாதுகாப்புடன் உலா வருகிறார்கள். குற்ற வழக்குகளுக்கு என்றே தனியொரு சானல் தொடங்கலாம் போல. சி.சி.டிவி. பெரிய அங்காடிகளில் மூலையில் யாருக்கும் தெரியாமல் இயங்கும் ரகசியத் தொலைக்காட்சிக் கேமரா, குளோஸ்ட் சர்க்யூட் டிவி என்றுதானே நினைத்தீர்கள். நினைப்பீர்கள். அதுதான் இல்லை, நாம் சொல்ல வந்தது கோர்ட் கேஸ் டிவி சானல்.

நான்காவதாக, கோமாளித்தனம் வேறு மனிதனை மழுங்கடித்து வருகிறது. "சிப்' போடச் சொல்லும் சிரிப்புகள், ஒன்றுக்குப் போகும் உவகைக் காட்சிகள், இரட்டை அர்த்த ஏளனிப்புகள் என்று நாடே சிரிப்பாய்ச் சிரிக்கிறது. இனி எவரும் நூற்றாண்டு கண்ட கலைவாணர் பெயரைக் கண்டபடி இழுக்க வேண்டாம். விரசமே இல்லாத மேதை செத்த பிறகாவது பிழைத்துப் போகட்டும்.
கட்டுரையாளர் : நெல்லை சு. முத்து
நன்றி : தினமணி