அன்றாட வாழ்வில் ஒருவன் பணப்பையைத் திருடிவிட்டால், அவனுக்குத் தண்டனை கிடைக்கிறது. பட்டப்பகலில் வெட்டிக் கொன்றான் என்பதற்காக ஒருவனுக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனைகூட விதிக்கிறது. உளவு பார்த்து, நேரம் பார்த்துத் தப்புகள் பல செய்து, திருடியோ ஏமாற்றியோ உலவும் ஒரு கள்வர் கூட்டத்தை, மொத்தமாகக் கண்டுபிடித்துக் கைவிலங்கு மாட்டிச் சிறைக்கு அனுப்புகின்றனர். "சீட்டுக் கம்பெனி' என்று தொடங்கி, பல நூறாயிரம் கோடி என மக்களை வஞ்சித்து ஏமாற்றுபவர்களைச் சட்டம் விட்டுவைப்பதில்லை. கைக்கூலி, ஊழல், லஞ்சம் எனப் பெருகிவரும் தீமைகூடச் சிலபோது அகப்பட்டுக் கொள்கிறது.
சுற்றுப்புறச் சூழ்நிலை மாசுபடுத்துபவர்களையும் மாசு பரவலையும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் நாளும் எச்சரித்தபடி இருக்கிறது. ஆனால்... மனத்தை மாசுபடுத்தும் சுற்றுச்சூழலைப் பற்றி யாரும் எண்ணிப் பார்ப்பதே இல்லை. புறச்சூழலை மாசுபடுத்துவதற்குக்கூட, மாற்றுத் தேடி விடலாம். அகச்சூழலை மாசுபடுத்துவதால், ஒரு சமுதாயம் அழிவதை, சிறுகச் சிறுக நஞ்சூட்டிக் கொல்வதுபோல், பண்பாட்டை-நாகரிகத்தை-நாணத்தை அழிப்பதைத் தடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படுவதில்லை; மாசுபடுத்துபவர்களைத் தண்டிக்க வழியில்லை.
÷தொலைக்காட்சிகளாலும் திரைக்காட்சிகளாலும் நன்மைகள் விளையாமல் இல்லை. கால் பங்கு நன்மை என்றால், முக்கால் பங்கு தீமை வளர்க்கப்படுகிறது; பரப்பப்படுகிறது; பல கோடி மக்களின் நெஞ்சத்தில் நச்சுக் கிருமிகள் புகுத்தப்படுகின்றன.
÷ஒரு வடஇந்தியப் படத்தின் தமிழாக்கம். அதில் சிலர் பெரியதொரு மாளிகையின் பின்பக்கமாக ஏறி, உள்ளே குதித்து, உறங்குபவர்களை மிரட்டி, கட்டி வைத்து, வெகு லாவகமாகத் திருடிச் செல்வதை அப்படியே கற்றுக்கொடுப்பதுபோல் காட்டினர். இப்படி ஒரு திருடும் விதத்தைக் கற்றுக்கொண்ட இளைஞன், சில ஆண்டுகளுக்கு முன்பு, நீதிமன்றத்தில், அப்படக் காட்சியே தனக்கு வழிகாட்டியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான்.
கற்பழிப்புக் காட்சி என்று வைத்துக் கொள்ளுங்கள். முன்பு ஒரு முரடன், ஓர் இளம்பெண்ணை விரட்டிக்கொண்டு ஓடுவான்; அவளும் ஓடுவாள். அவள் தலையிலிருந்து ஒரு பூங்கொத்து கீழே விழும். பின்னால் ஓடிவந்த "வில்லன்' காலணியில் பட்டு அது நசுங்கிப்போகும். பின்னர் அப்பெண் அலங்கோலமாகக் கிடப்பதைக் காட்டுவார்கள். இடையில் நடந்தது குறிப்பாக உணரப்படும்.
இன்று ஒரு பெண்ணை ஏமாற்றி, மலைகள், பாறைகள் உள்ள இடத்துக்குக் கடத்திப்போய், அங்கே அவளைச் சேலையை உரிவதுமுதல், மானபங்கப்படுத்துவதுவரை "செய்முறைப் பயிற்சி'போல் காட்டுகிறார்கள். இப்படியே கதையிலும் திருமணம் செய்வதாக ஏமாற்றுதல், ஒருவரை ஒருவர் வஞ்சித்தல், கூடஇருந்தே குழிபறிப்பது எப்படி என விலாவாரியாக, விளம்பரமாகக் கற்றுக்கொடுத்தல் என ஆயிரம் காட்சிகள் நாள்தோறும் காட்டப்படுகின்றன.
அரைகுறை ஆடைபோய், ஒரு சிறு துணி மட்டும் ஒட்டிக்கொண்டிருக்கும். இதில் கதை மட்டுமன்று, பாடல்களும் அப்படித்தான். பாடல்களுக்கேற்ற காட்சிகளா, காட்சிகளுக்கேற்ற பாடல்களா என்பதே சிக்கலான கேள்விதான். ஒட்டிக் கொள்ளவா, கட்டிக்கொள்ளவா, தொட்டுக்கொள்ளவா, கூடிப் போவலாமா, ஓடிப் போவலாமா - இப்படித்தான் - இதைவிட, வெட்கத்தைவிட்டுப் பார்க்க வேண்டிய ஆட்டமும் பாட்டமும்! இவை யாவும் பார்த்துக் கொண்டிருக்கும் பல ஆயிரம் மக்களின் மனத்தில்போய் பதியும்; அதனால் ஒட்டுமொத்த சமுதாயம் பாதிக்கப்படும்; வருங்கால இளைய சமுதாயம் கெட்டு அழியும் என்று யாரும் கவலைப்படவில்லை.
எல்லாம் மக்களை ஈர்த்து, விளம்பரங்களைப் பெருக்கிப் பணத்தைப் பெருக்கும் பேராசையின் விளைவுதான். "ஆசைக்கோர் அளவில்லை, இந்த அகிலமெல்லாம் கட்டி ஆளினும்' என்பதற்கு ஒப்ப, மேன்மேலும் தீமைகளே கண்களைக் கவரவும் கருத்தைக் கெடுக்கவும் முற்படுகின்றன.
மனம் சார்ந்ததன் வண்ணமாகும் இயல்புடையது. மன ஓர்மையே தியானம் எனப்படுகிறது. இறைவனை "ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே' என்பர். அதுதான் மனத்தை "உரு'வேற்றி, நல்வழிப்படுத்துவது. மேலும் மேலும் தீயவற்றையே கண்டு கேட்டு உண்டு மோந்து அதிலேயே மனம் தோய்பவன், அதன் வண்ணமாகி விடுகிறான். இது பொழுதுபோக்குக்காக என்றும், மக்கள் மன இறுக்கத்தைத் தளர்த்துவதற்காக என்றும் சிறிது நேரமேனும் கடும் முயற்சி, உழைப்பை மறந்து மகிழ்ச்சிப்படுத்துவத ற்காக என்றும் சமாதானம் கூற முடியாது.
இவைகளையே நல்ல முறையில் காட்டி, இவற்றை விடப் பல மடங்கு மகிழ்ச்சிப்படுத்தலாம். அதற்குக் கூடுதல் திறமை வேண்டும். இன்று பச்சையாகவும் கொச்சையாகவும் காட்டுகிறார்களே, இதற்குத் திறமை தேவையில்லை. தெருவில் போகிறவன்கூட, ஒரு திரைப்பட இயக்குநராக, கதை, உரையாடல் எழுதுபவராக, பாடலாசிரியராக ஆகிவிட முடியும்.
மனத்தை எப்பொழுதும் உயர்வை நோக்கிச் செலுத்த வேண்டும். அப்படியெல்லாம் சொன்னால் படம் ஓடாது, பணம் போய்விடும் என்பது சத்தற்ற வாதம். திறமையாளன் காட்டுப் பூவிலும் மலர் மணம் இருப்பதை, அழகு பளிச்சிடுவதைக் காட்டுவான். எத்தனை நல்ல கதைகளை, நல்ல பாடல்களை நாம் கண்டு, கேட்டு மகிழ்ந்துள்ளோம்.
இன்று இந்த ஊடகங்களால் மொழியும் சிதைக்கப்படுகிறது. ஓர் உரையாடல், பண்பலை வானொலியில், ஒரு கிராமத்துப்பெண், தான் வீட்டுவேலைதான் செய்வதாகக் கூறவே, அவளிடம் "ஓ நீங்க ஹவுஸ் ஒய்பா' என்று எதிரொலிக்கிறார் கேட்டவர். அவ்வளவுதான். அதன்பிறகு எல்லாப் பெண்களும் தத்தம் வீட்டுவேலை செய்யும் இல்லத்தரசிகளாக இருந்தும், "ஹவுஸ் ஒய்ப்' என்றே கூறத் தொடங்கி விடுகின்றனர். ஏதோ பதவி உயர்வு கிடைத்துவிட்டதாம்!
÷சமையற்கலை கற்றுக்கொடுக்கும் போதும் அது படிப்பறிவில்லாத பெண்களும் பாமர மக்களும் பார்க்கும் காட்சி என்பதை மறந்து, ரைஸ், ஸôல்ட், பெப்பர், பொட்டாடோ, டொமாட்டோ, ஸ்பூன், குவான்டிட்டி, டேஸ்டு என இவ்வாறே கூறித் தங்கள் மேதைமையை வெளிப்படுத்தி மகிழ்கின்றனர்.
சிக்மண்ட் பிராய்டு மனிதருக்கு மூன்று மனம் உண்டு என்றார் மேல் மனம், நடுமனம், ஆழ்மனம் என்று. ஆழ்மனத்தில் போய்ப் பதிவன, ஒருவரின் குருதியில் மரபணுக்களில் போய்க் கலக்கின்றன. இவையே குடிவழி, பரம்பரைக்குப் போய்த் தொடர்கின்றன. தாத்தா இசைப்பேரறிஞராய்த் திகழ்ந்தால், ஓர் இடைவெளி விட்டுப் பேரனிடம்கூட அது வெளிப்படக்கூடும். இவ்வாறே நன்மையும் தொடரும்; தீமையும் தொடரும்.
"மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும்' என்பது வள்ளுவம். ஆழ்மனத்திலும் தூயவராக உள்ளவர்க்கே, நல்ல பண்புள்ள பிள்ளைகள் பிறக்கும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். "எழுமை எழுபிறப்பு' என்பார் அவர். அதாவது இத்தகையவை ஏழு பரம்பரை வரைகூடத் தொடரக்கூடுமாம்.
இன்றைய தொலைக்காட்சிகள் பெரிதும் மனத்தை மாசுபடுத்தும், பண்பாட்டைக் கெடுக்கும், மொழியைச் சிதைக்கும் கருவிகளாகவே செயல்படுகின்றன.
இக் காட்சிகளில் பல துறை வல்லுநர்கள்கூட, அளவற்ற ஆங்கிலச் சொற்களை அள்ளி வீசிக் கலந்து பேசி, தங்களின் "மேதா விலாசத்தை' விளம்பரப்படுத்திப் பெருமை தேடிக்கொள்ள நினைக்கிறார்கள்.
இங்கிலாந்து வானொலியில், ஆங்கிலத்தில் வாசிக்கப்படும் செய்திகளைக் கேட்பவர்கள், தங்கள் ஆங்கில மொழி உச்சரிப்பையும் மொழித்திறனையும் வளர்த்துக் கொள்வர் என்று கூறப்படுவதுண்டு.
ஆயினும் இன்று நம் நாட்டில், இத் தொலைக்காட்சி, திரைக்காட்சியினர், பிற நாட்டினர்-குறிப்பாக ஐரோப்பிய அமெரிக்க நாட்டினரின்-பண்பாட்டுச் சிதைவுக்கான படப்பிடிப்புகளை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டே, நம் நாட்டில் இதுவரை இல்லாத சிதைவுகளையும் புகுத்துகின்றனர். நன்மைகளைவிட்டுவிட்டுத் தீமைகளையே மேய்கின்றனர்.
புற மாசுத் தடுப்பு வாரியங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுக்கள்போல, மனமாசுத் தடுப்புக் கழகங்களும் தோன்ற வேண்டும். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் புறக்கேடுகளை, தீமைகளை ஒழிக்க முயல்வதுபோல, மனத்திற்குள் தீமைகளையே விதைக்கும் காட்சிகளைப் பரப்பும் அகச்சூழல் கேடுகளையும் தடை செய்ய வேண்டும்.
இத்தகைய தொலைக்காட்சிகள், திரைப்படங்கள் போன்றவற்றை, போட்டி கருதி, கூடுதலாகப் பரப்புபவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இம் மன மாசு பரம்பரைக்குத் தொடரும்; கொடிய தொற்றுநோய்போல ஊரெல்லாம் பரவி இவற்றை எடுத்துக்காட்டிப் பணம் குவிப்பவர்தம் குடும்பம், உறவு, பேரன், பேத்தியையும் ஒருகாலத்தில் பாதிக்கவே செய்யும். எனவே இது "தற்கொலைக்குச் சமமாகும்' என அவர்கள் உணர வேண்டும். சமுதாய ஒட்டுமொத்த மனத்துக்கு இவர்கள் போடும் "தூக்குக் கயிறு' இவர்களை மட்டும் விட்டுவிடுமா என்ன?
இவற்றை எல்லாம் யாரைய்யா கேட்பார்கள்; நீங்கள் "பழம் பஞ்சாங்கம்' என்று யாரேனும் கூக்குரலிடலாம். அது உண்மைதான். "திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது' என்று பாடுவதுபோல் நாமும் திருப்பிப் பாட வேண்டியதுதான். ஏனெனில் சமுதாயத்தைத் திரும்ப மீட்டெடுக்க முடியாத தீமைகளை விளைவிக்கும் கொடிய தீமை இது.
கட்டுரையாளர் :தமிழண்ணல்
நன்றி : தினமணி
Friday, January 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment