
'விமான எரி பொருளுக்கான விலை அதிகரித்துள்ளதன் காரணமாக, ஏர் இந்தியாவுக்கு இந்த நிதி ஆண்டில், ரூ.2,000 கோடி வரை இழப்பு ஏற்படும்'என தெரிவிக்கப்பட்டுள்ளது.விமான போக்குவரத்து வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த சில மாதங்களாக விமானங்களுக்கு பயன்படுத்தும் எரி பொருளின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது. இதன் காரணமாக, விமான பயண கட்டணமும் உயர்த்தப்பட்டது. அதிக வருவாய் இல்லாத வழித்தடங்களுக்கான விமான போக்குவரத்து குறைக்கப்பட்டது. விமான வழித் தடங்களும் மாற்றி அமைக்கப்பட்டன. இதனால், பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.இது போன்ற பிரச்னைகளால் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இந்த நிதி ஆண்டில், ரூ.2,000 கோடி வரை இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு விமான போக்குவரத்து வட்டாரங்கள் கூறின.ஏர் இந்தியா தலைவர் ரகு மேனன் கூறுகையில், 'எரி பொருள் விலை அதிகரித்துள்ளதால், பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால், வருவாய் இழப்பு ஏற்படலாம். இருந்தாலும், செப்டம்பருக்கு பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடையும் என கூறப்படுவதால், இந்த நிலையில் மாற்றம் ஏற்படும். வருவாயை அதிகரிக்க, செலவினங்களை குறைக்கும் முயற்சியில் ஏர் இந்தியா முழு வீச்சில் ஈடுபடும்' என்றார்.'செலவினங்களை குறைப்பதன் மூலம் ரூ. 1,500 கோடி சேமிக்க முடியும்' என ஏர் இந்தியா வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி : தினமலர்