Monday, August 4, 2008

ஜூலை மாதத்தில் மியூச்சுவல் ஃபன்ட் தொழிலில் 6 சதவீதம் வீழ்ச்சி



இந்தியாவில் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த மியூச்சவல் ஃபன்ட் தொழிலில் இப்போது சரிவு ஏற்பட்டு வருகிறது. ஜூன் மாதத்தில் ஏற்பட்ட சரிவை தொடர்ந்து ஜூலை மாதத்திலும் சரிவு தான். ஜூலை மாதத்தில் 6 சதவீத்திற்கு மேல் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் ரூ.5,64,752.76 கோடியாக இருந்த இந்தியாவின் 34 மியூச்சுவல் ஃபன்ட் ஹவுஸ்களின் சராசரி அசட் அண்டர் மேனேஜ்மென்ட், ஜூலை மாதத்தில் ரூ.5,29,629.46 ஆக குறைந்து விட்டது. அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபன்ட் இன் இந்தியா இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக பங்கு சந்தையில் கரடியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாலும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருப்பதாலும் மியூச்சுவல் ஃபன்டின் அசல் அண்டர் மேனேஜ்மென்ட்டில் சரிவு ஏற்பட்டுள்ளது என்று வேல்யூ ரிசர்ச் ஆன்லைன் என்ற நிறுவனத்தின் சி.இ.ஓ., தீரேந்திர குமார் சொல்கிறார். ஜூலை மாதத்தில் அதிகம் சரிவை சந்தித்தது ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபன்ட்தான். ரூ.6,200 கோடிக்கு மேல் குறைந்திருக்கிறது. ஜூன் மாதத்தில் ரூ.90,813.45 கோடியாக இருந்த அதன் அசட் மதிப்பு ஜூலை மாதத்தில் ரூ.84,563.91 கோடியாக குறைந்திருக்கிறது.


நன்றி : தினமலர்


லேசான சரிவுடன் முடிந்த இன்றைய பங்கு சந்தை


இன்றைய பங்கு சந்தை லேசான சரிவுடன் முடிந்துள்ளது. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 78.82 புள்ளிகள் ( 0.54 சதவீதம் ) குறைந்து 14,577.87 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 18.20 புள்ளிகள் ( 0.41 சதவீதம் ) குறைந்து 4,395.35 புள்ளிகளில் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ஆயில், கேப்பிடல் குட்ஸ், சில வங்கிகள் மற்றும் பவர் நிறுவன பங்குகள் விற்கப்பட்டன. மெட்டல், பார்மா, சில டெக்னாலஜி கம்பெனி பங்குகள் வாங்கப்பட்டன.


நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 126 டாலருக்கும் மேலாகியது


ஆசிய சந்தையில் இன்று காலை நடந்த வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 126 டாலருக்கும் மேலாகி விட்டது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு குறைந்து வந்துகொண்டிருந்த கச்சா எண்ணெய் விலை, இப்போது சில நாட்களாக கூடி வருகிறது. வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 125.10 டாலராக இருந்தது. இன்று காலை வர்த்தகத்தின் போது 1.12 டாலர் உயர்ந்து 126.22 டாலராகி விட்டது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 82 சென்ட் உயர்ந்து 125 டாலராக இருந்தது. இந்த தடவையும் ஈரான்தான் விலை உயர்வுக்கு காரணமாக இருந்திருக்கிறது.வர வர ஈரானின் அணுசக்தி சோதனை பிரச்னை பெரிதாகிக்கொண்டே வருவதால் அமெரிக்கா மற்றும் சில மேலை நாடுகள் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்க கூடும் என்ற பேச்சு வந்துகொண்டிருப்பதால்,கச்சா எண்ணெய் விலை உயர்கிறது என்கிறார்கள். உலகின் நான்காவது பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாக இருக்கும் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் பொருளாதார தடை விதித்தால் அங்கிருந்து வரும் எண்ணெய் சப்ளை பாதிக்கும் என்று வர்த்தகர்கள் கவலைப்படுகிறார்கள். ஏற்கனவே ஈரான் பிரச்னையால்தான் ஜூலை 11ம் தேதி கச்சா எண்ணெய் விலை 147 டாலர் வரை உயர்ந்தது. அமெரிக்க எண்ணெய் நிலையங்கள் அதிக அளவில் இருக்கும் கல்ப் ஆஃப் மெக்ஸிகோ பகுதியில் புயல் உருவாகலாம் என்ற ஆபத்து இருப்பதுவும் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என்கிரார்கள்.

நன்றி : தினமலர்


நெட்'டில் வக்கீல்கள் விளம்பரம் செய்யலாம்


வக்கீல்கள், இன்டர்நெட்டில் தங்கள் தொழில் திறமை பற்றி விளம்பரப்படுத்திக் கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட் பச்சைக்கொடி காட்டியுள்ளது.டாக்டர்கள், இன்ஜினியர்கள், சாட்டர்டு அக்கவுன்டன்ட்கள் போல, வக்கீல்கள், தங்கள் தொழில் திறமை பற்றி விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர் களை ஈர்க்க முடியாது. நேரடியாகவோ, மறை முகமாகவோ வக்கீல்கள் விளம்பரம் செய்யக்கூடாது என்று இந்திய பார் கவுன்சில் விதியில் கூறப்பட்டுள்ளது. இந்த விதியின்படி, வக்கீல்கள், பத்திரிகைகளில், 'டிவி' போன்ற மீடியாவில் தங்கள் தொழில் பற்றி விளம்பரம் செய்ய முடியாது; பேட்டி கொடுக்க முடியாது; வழக்கு விசாரணை தொடர்பான போட் டோக்களில் இடம்பெறக் கூடாது. பெயர்ப் பலகை கூட, குறிப்பிட்ட அளவில் தான் இருக்க வேண்டும்.ஆனால், பலரும் இந்த விதியை முழுமையாக கடைபிடிப்பதில்லை. காலப்போக்கில் பத்திரிகைகளிலும், 'டிவி'க்களில் பேட்டி, படம் வெளியாவ தும் சகஜமாகி விட்டது. பத்திரிகைகளில் மட்டுமின்றி, விளம்பர பலகைகளையும் வைப்பது வாடிக்கையாகி விட்டது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம், பார் கவுன்சில் கூடி இது தொடர்பாக ஆலோசித்தது. இன்டர்நெட்டில் வக்கீல்கள் தங்கள் தொழில் பற்றிய தகவல்களை வெளியிடலாம் என்று, விதிகளில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப் பட்டது.பார் கவுன்சில் கொண்டு வந்துள்ள இந்த விதி திருத்தத்தை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஏற்றுக்கொண்டார். கடந்த திங்கட்கிழமை அன்று, சுப்ரீம் கோர்ட், இந்த விஷயத்தில் இறுதி அனுமதியை அளித்துள்ளது. இதன்படி, இன்டர்நெட்டில், வக்கீல்கள் தங்கள் தொழில் திறமை பற்றிய விவரங்களை வெளியிடலாம். தனியாக வெப்சைட் வைத்து, அதில் தகவல்களை வெளியிட முடியும்.

நன்றி : தினமலர்