Saturday, February 21, 2009

மகாராஷ்டிராவில் பள்ளிகளில் மொபைல் போனை உபயோகிக்க தடை

மகாராஷ்டிராவில் இருக்கும் பள்ளிகளில் மொபைல் போன் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 10 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இனிமேல் மொபைல் போனை பயன்படுத்த முடியாது.மகாராஷ்டிரா முழுவதும் இந்த உத்தரவு செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பள்ளி மாணவன் ஒருவன் பள்ளி வளாகத்தில் மொபைலை பயன்படுத்தியது தெரிய வந்தால் ரூ.50 அபராதம் செலுத்த வேண்டும். இதையே ஒரு ஆசிரியரோ அல்லது பள்ளி அலுவலரோ செய்தால் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் பள்ளி கல்வி இயக்குனரகம் தெரிவித்திருக்கிறது. இந்த தடை உத்தரவை பள்ளியின் பிரின்சிபால் தான் நடைமுறை படுத்த வேண்டும். ஆனால் அதே நேரம் அவரும் மொபைல் போனை பயன்படுத்த கூடாது என்றும், மீறி பயன்படுத்தினால் அவரும் அபராதம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


பதவி ஏற்ற ஒரே மாதத்தில் பாரக் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்தது

கடும் எதிர்பார்ப்புடன் அமெரிக்காவின் 44 வது அதிபராக பதவி ஏற்ற பாரக் ஒபாமாவின் செல்வாக்கு, பதவி ஏற்ற ஒரே மாதத்தில் சரிந்து விட்டது. பொருளாதாரத்தில் உலகின் மிகப்பெரிய நாடாக இருக்கும் அமெரிக்கா, அதன் பெருமையை இழந்து வந்த நேரத்தில் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பாரக் ஒபாமாவை அந்நாட்டு மக்கள் பெரிதும் நம்பினர். ஒபாமா அதிபராக வந்தால் பொருளாதார சீர்குழைவை சரி செய்வார் என்றும், அமெரிக்காவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவார் என்றும் அந்நாட்டு மக்கள் நம்பினர். ஆனால் ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவி ஏற்ற அவர், ஒரு மாதம் ஆகியும் குறிப்பிடத்தக்க மாற்றம் எதையும் செய்யவில்லை என்கிறார்கள் அமெரிக்க மக்கள். மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு, அவர் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்த திட்டங்கள் வேலை செய்யவில்லை என்கிறார்கள். பிப்ரவரி 18 - 19 தேதிகளில் சி.என்.என்.மற்றும் ஒப்பினியன் ரிசர்ச் கார்பரேஷன் இணைந்து எடுத்த கருத்து கணிப்பில் 67 சதவீத அமெரிக்க மக்கள் மட்டுமே ஒபாமாவின் நடவடிக்கையில் திருப்தி கொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. 11 நாட்களுக்கு முன் 76 சதவீதமாக இருந்ததுதான் இப்போது 67 சதவீதமாக குறைந்திருக்கிறது. அவருக்கு ஓட்டளித்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு அவர் மீது நம்பிக்கை போய் விட்டது. இன்னொரு குரூப்பான ஃபாக்ஸ் நியூஸ் மற்றும் ஒப்பினியன் டைனமிக்ஸ் பிப்ரவரி 17 - 18 ல் எடுத்த கருத்து கணிப்பில் 60 சதவீதத்தினர் மட்டுமே ஒபாவுக்கு ஆதரவாக இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதுவும் 65 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைந்திருக்கிறது. ஒபாமாவின் தனி செல்வாக்கும் ஒரு மாதத்திற்கு முன் 76 சதவீதமாக இருந்தது இப்போது 68 சதவீதமாக குறைந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


நகை கடைகளில் இப்போது கடும் கூட்டம் : வாங்க அல்ல ; விற்க.

தங்கம் விலை என்றுமில்லாத அளறவாக கிராம் ஒன்றுக்கு ரூ.1500 முதல் ரூ.1566 வரை வந்து விட்டது. ஆனாலும் மும்பையில் உள்ள நகை கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிகிறது. ஒரு வித்தியாசம். இந்த கூட்டம் நகைகளை வாங்குவதற்காக கூடியது அல்ல ; விற்பதற்காக வந்தது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.1,566 வரை ஏறி விட்டதால் மக்கள் அவர்களிடம் இருக்கும் பழைய நகைகளை விற்க முண்டியடித்துக்கொண்டு வருகிறார்கள். மும்பையில் தங்க நகை கடைகள் அதிகம் இருக்கும் ஜாவரி பஜாரில் இருக்கும் நகை கடையான ஜக்ராஜ் காந்திலால் அண்ட் கோ வின் அதிபரான நிதேந்திரா ஜெயின் இது குறித்து பேசியபோது, கடந்த 10 நாட்களாக எங்கள் கடைக்கு ஏராளமான மக்கள் பழைய நகைகளை விற்க வருகிறார்கள். தங்கத்தின் விலை இன்னும் கூடுமே அன்றி குறையாது என்றே எல்லோரும் நினைக்கிறார்கள். நாங்கள் காலை 11.30 இலிருந்து மாலை 6.30 வரை கடையை திறந்து வைத்திருக்கிறோம். பழைய நகைகளை இப்போதுள்ள விலையில் இருந்து ஒரு சதவீதம் குறைத்து நாங்கள் வாங்கிக்கொள்கிறோம் என்றார் அவர். பழைய நகைகளை விற்க வந்தவர்களில் ஒருவரான கான் இது பற்றி கருத்து தெரிவித்தபோது, இப்போதுள்ள நிலையில் எதில் முதலீடு செய்தாலும் லாபம் கிடைப்பதில்லை. எனவேதான் எங்கள் குடும்பத்து பழைய நகைகள் சிலவற்றை விற்க வந்தேன் என்றார்.

நன்றி : தினமலர்


ஸ்டேட் பேங்க் கின் அதிரடி திட்டம் : கார் கடனுக்கு ஒரு வருடத்திற்கு 10 சதவீதம்தான் வட்டி

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கார் கடனுக்கான வட்டியில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. அதன்படி வரும் பிப்ரவரி 23ம் தேதியில் இருந்து மே 31ம் தேதிக்குள் புதிதாக கார் கடன் வாங்குபவர்களுக்கு, ஒரு வருட காலத்திற்கு 10 சதவீதம்தான் வட்டி என்று அறிவித்திருக்கிறது. இப்போது, கார் கடனுக்கு ஸ்டேட் பேங்க் 11.5 சதவீத வட்டியும், மற்ற பொதுத்துறை வங்கிகள் 10.25 முதல் 12.25 சதவீத வட்டியும் வசூலிக்கின்றன. மேலும் கார் கடனை அதிகபட்சமாக 84 இ.எம்.ஐ.,களாக செலுத்தலாம் என்றும் ஸ்டேட் பேங்க் சொல்லியிருக்கிறது. டிசம்பர் 2008 உடன் முடிந்த காலத்தில் கணக்கிட்டு பார்த்தபோது, ஸ்டேட் பேங்க்கில் கார் கடன் வாங்கியவர்களின் எண்ணிக்கை 32 சதவீதம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே கார் கடனை அதிகரிக்கும் விதமாக இந்த வட்டி குறைப்பு செய்யப்பட்டிருப்பதாக எஸ்.பி.ஐ., உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாதா மாதம் 20,000 பேருக்கு கார் கடன் கொடுக்க வேண்டும் என்று அது இலக்கு வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த சில மாதங்களாக, அதிக வட்டி காரணமாக இந்தியாவில் வீட்டு கடன் மற்றும் கார் கடன் பெறுவோர் எண்ணிக்கை குறைந்து வந்திருப்பதை அறிந்த ரிசர்வ் பேங்க், வங்கிகள் வட்டியை குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தது. கார் விற்பனையும் கடந்த வருடத்துடன் ஒப்பிட்டால் டிசம்பர் மாதத்தில் 7 சதவீதமும் ஜனவரி மாதத்தில் 3 சதவீதமும் குறைந்திருந்தது. கார் கடனுக்கு இப்போது வட்டியை குறைத்திருக்கும் ஸ்டேட் பேங்க், கடந்த ஜனவரி 31ம் தேதி, வீட்டு கடனுக்கு ஒரு வருடத்திற்கு 8 சதவீதம்தான் வட்டி என்று அறிவித்திருந்தது.
நன்றி : தினமலர்