Saturday, February 21, 2009

நகை கடைகளில் இப்போது கடும் கூட்டம் : வாங்க அல்ல ; விற்க.

தங்கம் விலை என்றுமில்லாத அளறவாக கிராம் ஒன்றுக்கு ரூ.1500 முதல் ரூ.1566 வரை வந்து விட்டது. ஆனாலும் மும்பையில் உள்ள நகை கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிகிறது. ஒரு வித்தியாசம். இந்த கூட்டம் நகைகளை வாங்குவதற்காக கூடியது அல்ல ; விற்பதற்காக வந்தது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.1,566 வரை ஏறி விட்டதால் மக்கள் அவர்களிடம் இருக்கும் பழைய நகைகளை விற்க முண்டியடித்துக்கொண்டு வருகிறார்கள். மும்பையில் தங்க நகை கடைகள் அதிகம் இருக்கும் ஜாவரி பஜாரில் இருக்கும் நகை கடையான ஜக்ராஜ் காந்திலால் அண்ட் கோ வின் அதிபரான நிதேந்திரா ஜெயின் இது குறித்து பேசியபோது, கடந்த 10 நாட்களாக எங்கள் கடைக்கு ஏராளமான மக்கள் பழைய நகைகளை விற்க வருகிறார்கள். தங்கத்தின் விலை இன்னும் கூடுமே அன்றி குறையாது என்றே எல்லோரும் நினைக்கிறார்கள். நாங்கள் காலை 11.30 இலிருந்து மாலை 6.30 வரை கடையை திறந்து வைத்திருக்கிறோம். பழைய நகைகளை இப்போதுள்ள விலையில் இருந்து ஒரு சதவீதம் குறைத்து நாங்கள் வாங்கிக்கொள்கிறோம் என்றார் அவர். பழைய நகைகளை விற்க வந்தவர்களில் ஒருவரான கான் இது பற்றி கருத்து தெரிவித்தபோது, இப்போதுள்ள நிலையில் எதில் முதலீடு செய்தாலும் லாபம் கிடைப்பதில்லை. எனவேதான் எங்கள் குடும்பத்து பழைய நகைகள் சிலவற்றை விற்க வந்தேன் என்றார்.

நன்றி : தினமலர்


No comments: