Wednesday, October 14, 2009

சமையல் எண்ணெய் விலை மேலும் குறைய வாய்ப்பு

சமையல் எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ளதால், அதன் விலை கணிசமான அளவில் குறையும் என, தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன், இந்திய உணவு சந்தையில் சமையல் எண்ணெய் விலை, லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைந்தது. இன்னும் சில நாட்களில் இதன் விலை மேலும் குறையக் கூடும் என, தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பண்டிகைக் காலம் என்பதால், பொதுமக்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை அளித்துள்ளது. அமெரிக்காவில் சோயாபீன்ஸ் விளைச்சல் அதிகரித்திருப்பதும், சமையல் எண்ணெயை அதிகளவில் இந்தியா இறக்குமதி செய்திருப்பதும் தான், இதன் விலை குறைவுக்கு மிக முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்திய சமையல் எண்ணெய் மார்க்கெட்டில் முக்கிய பங்கு வகிக்கும் அடானி வில்மர் என்ற நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆங்சு மாலிக் கூறியதாவது: சமையல் எண்ணெயின் விலை ஏற்கனவே குறைந்துள்ளது. தற்போது சமையல் எண்ணெயை அதிகளவில் இந்தியா இறக்குமதி செய்கிறது. இதன்காரணமாக, இன்னும் சில நாட்களில் அதன் விலை மேலும் ஒரு ரூபாயில் இருந்து, இரண்டு ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது. இதனால், சமையல் எண்ணெய் விற்பனை செய்யும் சில்லரை வியாபாரிகள், தற்போது அதை வாங்குவதில் போதிய ஆர்வம் காட்டவில்லை. இவ்வாறு ஆங்சு மாலிக் கூறினார்.

கடந்தாண்டு அக்டோபர் மாதத்தை ஒப்பிடுகையில், சமையல் எண்ணெயின் விலை தற்போது ஓரளவு குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

நன்றி : தினமலர்


சேதமில்லாத இந்துஸ்தானம்!

பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங், தான் எழுதிய புத்தகத்தில் இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்கு முகமது அலி ஜின்னா மட்டுமே முழுமையான காரணமல்ல, ஜவாஹர்லால் நேரு, வல்லபாய் படேல் ஆகியோரின் தவறான அணுகுமுறைகளே பிரிவினைக்குக் காரணம் என எழுதியதாலும், குறிப்பாக வல்லபாய் படேல் குறித்து அவரின் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றதாலும், பாஜகவில் இருந்து ஜஸ்வந்த் சிங்கை நீக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என பாஜக தலைமை கூறியுள்ளது.

இதன் பிறகு தற்போது நாடு முழுவதும் பிரிவினைக்குக் காரணம் யார், எதனால் பிரிவினை ஏற்பட்டது என்பது குறித்தெல்லாம் பல்வேறு விதமான தகவல்களும் விவாதங்களும் பலதரப்பினராலும் அவரவர் கோணத்தில் வெளிப்படுத்தப்படுகின்றன.

ஒன்றுபட்ட பாரத நாடு இந்தியா என்றும், பாகிஸ்தான் என்றும் பிரிவதற்குக் காரணம் என்ன என்பதைக் கூர்ந்து நோக்க வேண்டும். பிரிவினைக்குக் காரணம் காந்தியா, நேருவா, படேலா, ஜின்னாவா என்று ஆராய்ச்சி செய்து யாராவது ஒருவர் மீது பழி சுமத்துவது சரியான அணுகுமுறை அல்ல.

பிரிவினைக்கு முன்பாக பாரத நாட்டின் வட பகுதிகளில் - குறிப்பாக பலுசிஸ்தான், சிந்து, பஞ்சாப், வங்காளம் ஆகிய மாநிலங்களில் இஸ்லாமிய மக்கள்தொகை அதிகமாக இருந்தது. 1857-ல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போரில் இஸ்லாமிய மதத்தினரும், இந்து மதத்தினரும் இணைந்து வெள்ளையரை எதிர்த்து நின்றனர். ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய தேசிய நீரோட்டத்தில் அவர்கள் முழுமையாகக் கலந்து இருந்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமிய மக்கள் மத்தியில் மத அடிப்படைவாத பிரசாரம் மதவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசித்த பகுதிகளில் இஸ்லாமிய மதவாதிகளின் ஆதிக்கம் தலைதூக்கத் தொடங்கியது. ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியும் வேலை செய்யத் தொடங்கியது.

துருக்கியில் இஸ்லாமிய மதத் தலைவர்களின் (கலிபா) ஆட்சி ஆங்கிலேயர்களின் துணையுடன் முறியடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் மதத் தலைவர்களின் ஆட்சி மீண்டும் துருக்கியில் அமைய வேண்டுமென ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடத் தொடங்கினர். இதனை இந்திய இஸ்லாமியர்களும் ஆதரிக்கத் தொடங்கினர். இப் போராட்டம் "கிலாபத்' இயக்கம் என அழைக்கப்பட்டது.

இந்த இயக்கத்தைக் காந்தியடிகளின் தலைமையிலான காங்கிரஸ் முழுமையாக ஆதரிக்கத் தலைப்பட்டது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு காங்கிரஸிலும் தீவிரமாகச் செயல்பட்டு வந்த தேசிய உணர்வுள்ள இஸ்லாமியத் தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், "கிலாபத்' இயக்கத்தை வழி நடத்திய இஸ்லாமிய மதவெறி சக்திகளுக்கு காங்கிரஸ் கட்சி முக்கியத்துவம் கொடுத்தது, மிகத் தவறான அணுகுமுறையாக அமைந்துவிட்டது.

அதன் பின் தொடர்ச்சியாக, காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களை தேசிய நீரோட்டத்தில் ஈடுபடச் செய்வதற்காக உருப்படியாக எந்த முயற்சியையும் செய்யவில்லை. மாறாக, இஸ்லாமிய மதவெறி சக்திகளுக்கு ஊக்கம் தரும் வகையிலேயே செயல்பட்டு வந்தது என்பதுதான் சரித்திரம் நமக்கு உணர்த்தும் உண்மை.

தேச பக்தர்களாலும், காங்கிரஸ் கட்சியினராலும் பொது நிகழ்ச்சிகளில் பாடப்படும் "வந்தே மாதரம்' எனும் தேசியகீதம் இஸ்லாமியர்களின் மத நம்பிக்கைகளுக்கு மாறாக உள்ளது என்று சில மதவெறியர்கள் கூக்குரலிட்டதால், முழு "வந்தே மாதரம்' பாடல் பாடும் வழக்கத்தை காங்கிரஸ் கட்சி கைவிட்டது. வந்தே மாதரம் முழங்கும்போது தவறாமல் "அல்லா ஹு அக்பர்' என்றும் காங்கிரஸ் கட்சி முழங்கத் தொடங்கியது.

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இஸ்லாமியர்களுக்கு அக் கட்சியின் "காந்தி குல்லா' மற்றும் கதராடை சீருடை அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் இஸ்லாமியர்களுக்கு மாநாட்டுக் கட்டணம், போக்குவரத்துச் செலவு ஆகியவற்றை காங்கிரஸ் கட்சியே ஏற்றுக் கொண்டது. காங்கிரஸ் கட்சி மேடைகளிலும், மாநாட்டுப் பந்தல்களிலும் இஸ்லாமிய மத வழிபாட்டுக்கான நேரம் வந்துவிட்டால், பொது நிகழ்ச்சிகள் நிறுத்தி வைக்கப்படும். இஸ்லாமிய மத வழிபாடு நடத்த சிறப்பு அனுமதி வழங்கப்படும். காங்கிரஸ் கட்சியின் இத்தகைய அணுகுமுறைகள் இஸ்லாமிய மதவெறி சக்திகளுக்கு ஊக்கம் தருவதாகவே அமைந்து வந்தது.

பசுவதை தடைச் சட்டம் வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்த காந்தியடிகள் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், இஸ்லாமியர்கள் கோபப்படுவார்கள் என்பதற்காக பசுவதை தடைச் சட்டம் என்கிற கோரிக்கையைக் கைவிட்டனர். முஸ்லிம்களுக்கு கட்சி மற்றும் ஆட்சி அதிகாரங்களில் இடஒதுக்கீடு, இரட்டை வாக்குரிமை, இரட்டை ஆட்சியுரிமை, முஸ்லிம் பெரும்பான்மை பகுதிகளில் முஸ்லிம் மதவாதிகள் கையிலேயே ஆட்சி அதிகாரம் என, தொடர்ந்து விட்டுக் கொடுக்கும் போக்கிலேயே காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வந்தது.

இதன் காரணமாக, என்ன விரும்பினாலும், அதைச் சாதித்துக் கொள்ள முடியும் என்று இஸ்லாமிய மதவெறி சக்திகள் நினைக்கத் தொடங்கின. புகழ்பெற்ற பிரார்த்தனைப் பாடலான "ரகுபதி ராகவ ராஜாராம்' எனும் பாடலில் "ஈஸ்வர கிருஷ்ணா தேரே நாம்' என்கிற வரியை மாற்றி "கிருஷ்ணா' என்பதற்கு பதிலாக "அல்லா' என்கிற வார்த்தையைப் போட்டு, "ஈஸ்வர அல்லா தேரே நாம்' என்று கோயில்களில் இந்துக்களும், பொது நிகழ்ச்சிகளில் காங்கிரஸ்காரர்களும் பாடிவந்தனர். ஆனால் மசூதிகளிலோ, இஸ்லாமிய இயக்கங்களின் நிகழ்ச்சிகளிலோ இந்தப் பாடல் பாடப்படவில்லை.

இந்தியாவின் தேசிய மொழியாக முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் "இந்துஸ்தானி' என்கிற மொழி காந்தியடிகளால் பரிந்துரைக்கப்பட்டது. மேற்கண்ட மொழியில் சீதாதேவியை பேகம் சீதா என்றும், ராமபிரானை சுல்தான் ராம் என்றும் குறிப்பிட்டனர் என்றால், இந்தப் பைத்தியகாரத்தனத்தை என்னவென்று சொல்வது.

சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியை நிர்ணயிக்க முக்கியத் தலைவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கொடி கமிட்டி, காவிக் கொடியை தேசியக் கொடியாகப் பரிந்துரைத்தது. இது முஸ்லிம்களுக்கு ஏற்புடையது அல்ல என காங்கிரஸ் கட்சி தீர்மானித்து, அதில் பச்சை வண்ணத்தைச் சேர்த்தனர்.

பின்னர் இதர சிறுபான்மையினருக்காக வெள்ளை நிறத்தைச் சேர்த்தனர். காந்தியடிகளைத் திருப்திப்படுத்த கை ராட்டையைச் சேர்த்தனர். நேருவின் விருப்பப்படி கை ராட்டைக்குப் பதிலாக தர்மச்சக்கரம் சேர்க்கப்பட்டது. பிறகு, ராட்டைச் சக்கரம் தான் தர்மச் சக்கரம் என காந்தியடிகளை திருப்திப்படுத்த நேரு விளக்கம் கொடுத்தார்.

எந்தவொரு நாடும் எக்காரணத்தை முன்னிட்டும் தனது தேசிய அடையாளங்களை இழக்கச் சம்மதிக்காது. ஆனால் காங்கிரஸ் கட்சி, வந்தே மாதரம், பசுவதை தடை, தேசியக் கொடி, மொழி, அரசியல் ஆகிய அனைத்திலும் விட்டுக்கொடுக்கும் போக்கையே கடைப்பிடித்து வந்தது. இப்படித் தொடர்ந்து இஸ்லாமிய மதவெறி சக்திகளைத் தாஜா செய்தும், அவர்களது மதவெறி கோரிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி பணிந்தும் வந்தது. இப்படித் தொடர்ந்து இஸ்லாமிய மதவெறி சக்திகளுக்குப் பணிந்து சென்றதன் உச்சகட்டமாக பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கையை முஸ்லிம் லீக் எழுப்பத் தொடங்கியது.

"என் உடலை பிளந்த பிறகுதான் இந்தியாவைப் பிளக்க முடியும்' என்று காந்தியடிகள் பிரிவினைக்கு எதிராக உறுதியாக இருந்தார். பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கையை பெரிய முட்டாள்தனம் என நேரு ஏளனம் செய்தார். வாளுடன் வாள் மோதுமென படேல் எச்சரித்தார். பாகிஸ்தானைப் பிரித்துத் தராவிட்டால், நேரடி நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக முகமது அலி ஜின்னா அறிவித்தார். நேரடி நடவடிக்கை என்றால் என்ன என்பதை முஸ்லிம் லீக் தொண்டர்கள் மூலம் கோல்கத்தா, நவகாளி, திப்ரா ஆகிய பகுதிகளில் நடத்தியும் காட்டினார். எங்கும் மதவெறி தாண்டவமாடியது.
காந்தியடிகள் ஒப்புதல் இல்லாமலேயே காங்கிரஸ் தலைவர்கள் பிரிவினைக்குச் சம்மதம் வழங்கினர். முஸ்லிம் லீகின் பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கை வெற்றி அடைந்தது.

இதுகுறித்து திமுகவின் தலைவர் அண்ணாதுரை, காரைவிட்டு இறங்காமல், கால் செருப்புத் தேயாமல், சட்டைக் காலரில் அழுக்குப்படியாமல், மிகச் சுலபமாக ஜின்னாவால் பாகிஸ்தானைப் பெற முடிந்தது என்று வர்ணித்தார்.

பிரிவினையோடு இந்து - முஸ்லிம் கலவரங்களுக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது, இனி பிரச்னை இருக்காது என்றுதான் அனைவரும் கருதி வந்தோம். பிரிவினைக்குப் பிறகு சுதந்திர இந்தியாவில் இன்றளவும் இந்து முஸ்லிம் கலவரங்களும், பிரிவினைக் கோரிக்கைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆகவே, நாட்டைப் பிரிப்பது என்பது இந்து -முஸ்லிம் ஒற்றுமைக்கோ, பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கோ வழிவகுக்காது.

நம் நாட்டில் போலி மதச்சார்பின்மையைப் பின்பற்றுதல் சிறுபான்மையினரை தாஜா செய்தல், சிறுபான்மை ஓட்டு வங்கிக்காக சலுகைகளை வழங்குதல், பூர்வகுடி மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுத்தல் என்கிற தற்போதைய அணுகுமுறை தொடருமானால், மீண்டும் காஷ்மீரிலும் இன்னும் பிற பகுதிகளிலும் பிரிவினை ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது. பிரிவினைக்கு யார் காரணம் என்று நமக்குள் குற்றம்சாட்டிக் கொண்டிருப்பதைவிட பூர்வகுடி மக்களின் ஜனத்தொகை குறையாமல் பார்த்துக் கொள்வதும், தேசிய நலனுக்கு உகந்த முடிவுகளை எடுப்பதில் உறுதியாக இருப்பதும், பாரத நாட்டில் இன்னொரு பிரிவினை ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

"சேதமில்லாத இந்துஸ்தானம், இதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா' என்று குழந்தைகளுக்குப் புத்தி சொன்னார் பாரதி. இந்த அறிவுரையை நமது ஆட்சியாளர்களுக்கு யார் சொல்வது?

கட்டுரையாளர் : அர்ஜுன் சம்பத்
நன்றி : தினமணி

17 மாதங்கள் இல்லாத அளவு ஏற்றத்துடன் முடிந்தது நிப்டி

17 மாதங்கள் இல்லாத அளவு இன்றைய பங்குச்சந்தையில் நிப்டி உயர்வினை கண்டது. கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதிக்கு பிறகு, இன்று தான் ‌நிப்டி 5100 புள்ளிகளை தாண்டியது. சென்செக்ஸ்சும் 17200 புள்ளிகளுக்கு மேல் சென்று முடிந்தது.
இந்திய பங்குச்சந்தை இன்று தொடங்கும் போதே ஏறுமுகத்துடன் தொடங்கியது. நேற்று மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபை தேர்தலுக்காக பங்குச்சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையில் ஏற்றம் காணப்பட்டது. இன்று வர்த்தகம் நேரம் தொடங்கிய போது, மும்பை பங்குச் சந்தை ‌குறியீட்டு எண் சென்செக்ஸ் 170.61 புள்ளிகள் அதிகரித்து 17197.28 புள்ளிகளோடு தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 17 மாதங்கள் இல்லாத அளவு 64.30 புள்ளிகள் அதிகரித்து 5118.55 புள்ளிகளோடு தொடங்கியது. காலை 10.33 மணியளவில் நிப்டி 5100 புள்ளிகளை தாண்ட தொடங்கியது.

மெட்டல், ஆட்டோ, ரியாலிட்டி மற்றும் வங்கி சரக்குகள் அதிக ஏற்றத்தை கண்டன.
வர்த்தக நேர முடிவில், இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் 204.44 புள்ளிகள் அதிகரித்து 17231.11 புள்ளிகளோடு முடிந்தது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 63.95 புள்ளிகள் அதிகரித்து 5118.20 புள்ளிகளாடு முடிந்தது.
நன்றி : தினமலர்

'நோபல்' சிந்தனைகள்!உலகின் தலைசிறந்த விருது என்று கருதப்படும் நோபல் பரிசு இந்த ஆண்டு ஓர் இந்தியருக்கும், அதிலும் குறிப்பாக, தமிழருக்குக் கிடைத்திருக்கிறது என்பது நமக்குப் பெருமை. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பது இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பற்றிய ஆச்சரியத்தை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது.

யார் இந்த ஆல்பிரட் நோபல்? சுவீடன் நாட்டுக்காரரான ஆல்பிரட் நோபல் அமெரிக்காவில் குடியேறுகிறார். 1862-ம் ஆண்டு நைட்ரோ கிளிசரினில் தனது ரசாயன ஆராய்ச்சியை மேற்கொண்டு அதன் மூலம் "டைனமைட்' வெடிமருந்தை 1867-ல் கண்டுபிடித்து 40 வயதில் உலக மகா கோடீஸ்வரராகிறார். இத்தாலியில் உள்ள தனது வீட்டில் 1896-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ம் தேதி ஆல்பிரட் நோபல் ஓர் உயில் எழுதி வைத்துவிட்டு மரணமடைகிறார். அந்த உயிலின் அடிப்படையில் நோபல் விருது உருவாக்கப்பட்டு 1901 முதல் வழங்கப்படுகிறது. உலக அழிவுக்குப் பிள்ளையார் சுழி போடும் டைனமைட் என்கிற வெடிமருந்தைக் கண்டுபிடித்த குற்ற உணர்வுதான் ஆல்பிரட் நோபலை இப்படி ஒரு விருது வழங்கத் தூண்டியது என்று கூடக் கூறுவார்கள். அதெல்லாம் இருக்கட்டும். இந்த ஆண்டு நோபல் விருதைப் பற்றிய விவாதத்துக்கு வருவோம்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் விருது வழங்கப்பட்டிருப்பது அவரையே வியப்பில் ஆழ்த்தி இருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? ஒபாமா ஒரு மிகச்சிறந்த மேடைப் பேச்சாளர். தேர்ந்த அரசியல்வாதி. அவரது தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் பாராட்டுக்குரியவை. அமெரிக்க சரித்திரத்திலும், உலக வரலாற்றிலும் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் வெள்ளையர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தது முக்கியமான திருப்புமுனை, சந்தேகமே இல்லை.

ஆனால், நோபல் விருது என்பது, குறிப்பாக உலக சமாதானத்துக்கான நோபல் விருது என்பது மேலே குறிப்பிட்ட சாதனைகளுக்காகத் தரப்படுவதல்ல. மார்டின் லூதர் கிங் ஜூனியருக்கு நிகரான இனவெறிக்கு எதிரான போராட்டம் எதையும் ஒபாமா தலைமையேற்று நடத்தினாரா என்றால் கிடையாது. சரி, முதலாவது உலகப் போருக்குப் பிறகு உலக நாடுகளின் இணையம் ஏற்படுத்தி உலக ஒற்றுமைக்காக முன்னாள் அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனுக்கு நிகரான பங்களிப்பு எதுவும் ஒபாமா செய்திருக்கிறாரா என்றால் இல்லை. அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு மனித உரிமைக்காக ஜிம்மி கார்ட்டர் உலகம் முழுவதும் சுற்றி வந்து பாடுபட்டதுபோல, ஒபாமாவுக்கு நோபல் பரிசு பெறத் தகுதி இருக்கிறதா என்றால் அப்படி எதையும் குறிப்பிட முடியவில்லை.

இப்போதும், இராக்கும், ஆப்கானிஸ்தானமும் அமெரிக்காவின் மறைமுகக் கட்டுப்பாட்டில், அமெரிக்கப் படைகளின் கண்காணிப்பில்தான் இருக்கின்றன. அமெரிக்காவால் பேச முடிகிறதே தவிர, பாலஸ்தீனப் பிரச்னையில் சுமுகமான முடிவு எதையும் கொண்டுவர முடிந்திருக்கிறதா என்றால் கிடையாது. இப்போதும் உலகிலேயே மிக அதிகமான அணு ஆயுதக் குவியல் அமெரிக்காவிடம்தான் இருக்கிறது. அணு ஆயுதப் பரவலைத் தடுப்பதும், தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களை மெல்ல மெல்ல அழிப்பதும் தனது குறிக்கோள் என்று அதிபர் ஒபாமா கூறியிருப்பதை அவரது ஆதரவாளர்களும், அமெரிக்க நிர்வாகமும் ஆதரிக்குமா என்பதும் சந்தேகம்தான்.

இப்படியொரு சூழ்நிலையில், என்ன அடிப்படையில் அதிபர் ஒபாமாவுக்கு உலக சமாதானத்துக்கான நோபல் விருது வழங்கப்பட்டிருக்கிறது? அவரை உலக சமாதானத்துக்காகப் பாடுபட ஊக்குவிப்பதற்காக இந்த விருது என்று சொன்னால் அதைவிடக் கேலிக்கூத்து எதுவும் இருக்க முடியாது. ஊக்கமளிப்பதற்காக விருது வழங்குவார்களா என்ன? ஒபாமாவின் பத்து மாத சாதனை என்ன என்று கேட்டால், எதுவுமே செய்யாததற்காக நோபல் விருது பெற்றதாகத்தான் இருக்கும்.

அடுத்தபடியாக, நம்ம ஊர் "வெங்கி' என்று செல்லமாக அழைக்கப்படும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு விஞ்ஞானத்துக்கான நோபல் விருது வழங்கப்பட்டிருப்பதற்கு வருவோம். சிதம்பரம்தான் பூர்வீகம் என்றாலும், குஜராத் மாநிலம் வதோதராவும், பிறகு அமெரிக்க யேல் பல்கலைக்கழகமும்தான் அவரது விருதுக்குப் பின்னணியில் இருந்தவை என்பதுதான் உண்மை.

பௌதீகம் படித்த ராமகிருஷ்ணனுக்கு உயிரியலில் நாட்டம் வந்தது. தனது படிப்பை மாற்றிக் கொண்டு, இப்போது மூலக்கூறு இயலுக்காக, ரசாயனத்துக்கான நோபல் விருதை தாமஸ் ஸ்டீட்ஸ் மற்றும் யெடா யோனத் இருவருடனும் ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொள்கிறார்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய முதல் விஷயம், ராமகிருஷ்ணன் கணினி அறிவியலோ, பொறியியல் படிப்போ படிக்கவில்லை. அடிப்படை விஞ்ஞானமான பௌதீகம் படித்திருக்கிறார். இதற்கு முன் நோபல் விருது பெற்ற இன்னொரு இந்தியரான அமார்த்ய சென் பொருளாதாரம் படித்தவர். கலை (பி.ஏ.) மற்றும் அறிவியல் (பி.எஸ்ஸி) என்று சொன்னாலே முகம் சுளித்து, லட்சக்கணக்கில் நன்கொடை வழங்கிப் பொறியியல் படிக்கப் பைத்தியமாய் அலையும் இளைஞர்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள். என்ன படிக்கிறோம் என்பதைவிட, எப்படிப் படிக்கிறோம் என்பதையும், எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் சாதனையாளராக உயர முடியும் என்பதையும் ராமகிருஷ்ணனுக்குக் கிடைத்திருக்கும் நோபல் விருது நமக்கு உணர்த்துகிறது.

ராமகிருஷ்ணன் அமெரிக்கா போகாமல் இந்தியாவில் இருந்திருந்தால் இந்த உலக சாதனையைப் படைத்திருக்க முடியுமா? நமது நிர்வாக அமைப்பு அதற்கு உதவி இருக்குமா? இளங்கலை பௌதீகம் படித்த ஒருவர் மேற்படிப்பில் உயிரியலுக்கு மாறுவதற்கும், ரசாயனத்தில் ஆராய்ச்சி செய்வதற்கும் நமது அமைப்பு அனுமதி அளிக்குமா? திறமை என்பது தண்ணீரைப் போலத் தனது பாதையையும், தளத்தையும் நிர்ணயித்துக் கொண்டுவிடும் என்பதும், தடைகள் அதற்கு ஒரு பொருட்டல்ல என்பதும் ராமகிருஷ்ணனால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். இப்போதும் இந்தியர்களுடனும், இந்தியப் பல்கலைக்கழகங்களுடனும் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது நோபல் விருது அவருக்குக் கிடைத்ததைவிட மகிழ்ச்சியை அளிக்கிறது!
நன்றி : தினமணி


ஒரு வருடம் இல்லாத அளவு ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு

ஒரு வருடம் இல்லாத அளவு ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை சரிக்கட்டும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் காரணமாக டாலரின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இன்றும், மும்பை வங்கிகளுக்கு இடையிலான டாலரின் மதிப்பு குறைந்து, ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 பைசா குறைந்து 46.18 ரூபாயாக உள்ளது. கடந்த 12ம் தேதி அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 8 பைசா குறைந்து 46.48/49 இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதிக்கு பிறகு ரூபாயின் மதிப்பு இதுபோல குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்றுமதியாளர்கள் டாலர் விற்பனையை அதிகரித்து இருப்பதே டாலரின் மதிப்பு குறைவிற்கு காரணம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நன்றி : தினமலர்


வினாடிக்கு கணக்கிடுவதால் மொபைல் பில் குறையுமா?

மொபைல் போன் பில்களை, பேசும் வினாடிகளுக்கு மட்டும் பணம் செலுத்தும் திட்டத்தின் மூலம் மாதம் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை பணம் சேமிக்கலாம். மொபைல் போனில் பேசும் வினாடிகளுக்கு மட்டுமே பணம் செலுத்தும் திட்டம், பல வெளிநாடுகளில் அமலில் உள்ளன. தற்போது, பெரும்பாலான மொபைல் ஆபரேட்டர்கள், நிமிடங்களுக்கே கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால், வாடிக்கையாளர்கள் சில வினாடிகளுக்கு பேசினாலும், ஒரு நிமிடத்திற்கான கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது வினாடிகளுக்கு மட்டுமே பணம் வசூலிக்கும் டாடா டொக்கோமோ திட்டத்தால் தங்களுக்கு பணம் மிச்சமாவதாக, வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மும்பையைச் சேர்ந்த ஆர்த்தி என்பவர் கூறுகையில்,'நான், பேசும் வினாடிகளுக்கு மட்டுமே பணம் செலுத்தும் டாடா டொக்கோமோ திட்டத்திற்கு மாறியதில் இருந்து, என் மொபைல் போன் கட்டணம் 5 சதவீதம் குறைந்துள்ளது. பேசும் சரியான வினாடிகளுக்கான கட்டணம் மட்டுமே இத்திட்டம் மூலம் வசூலிக்கப்படுகிறது' என்றார். கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட , டாடா டொக்கோமோ திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் இதுவரை 60 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், புதிதாக நுழைந்துள்ள எம்.டி.எஸ்., ஒரு பைசாவிற்கு இரண்டு வினாடிகள் பேசலாம் என்ற சலுகையை அறிவித்துள்ளது. பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் மற்றும் வோடபோன் போன்றவை வினாடிக்கு பணம் செலுத்தும் திட்டத்தை அறிவிக்கவில்லை என்றாலும், வாடிக்கையாளர்களின் கட்டணங்களை குறைப்பதில் ஆர்வமாக இருக் கின்றன.
ரிலையன்ஸ் தனது ஜி.எஸ்.எம்., மற்றும் சி.டி.எம்.ஏ., வாடிக்கையாளர்களுக்காக, 'சிம்ப்ளி ரிலையன்ஸ்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் அனைத்து அழைப்புகளுக்கும் நிமிடத்திற்கு 50 பைசா மட்டும் செலுத்த வேண்டும். இதே போன்று ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களும் பல திட்டங்களை அறிவித்துள்ளது.

நன்றி : தினமலர்


அங்கே குறையுது; இங்கே 'இறங்க' மறுக்குது தங்கம்!

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மாற்று மதிப்பு சற்று குறைந்தாலும், இந்தியாவில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. சமீபகாலமாகவே, சர்வதேச அளவில் அவுன்ஸ் (31 கிராம்) தங்கம் விலையில் சரிவு கண்டு வந்துகொண்டிருக்கிறது. எனினும், இந்தியாவில் இதன் தாக்கம் காணப்படவில்லை. 'சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சரிந்தாலும், இந்தியாவில் தங்கத்தின் விலை குறைய இனி வாய்ப்பில்லை' என, சந்தைப் பொருட்கள் ஆராய்ச்சி வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மும்பையில், 10 கிராம் தங்கத்தின் விலை 15 ஆயிரத்து 855 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால், தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை, இந்தியாவில் குறைந்துள்ளது.

மும்பையில், சந்தீப் ஜுவல்லரி உரிமையாளர் உத்தம் லோதா கூறியதாவது: திருவிழாக் காலங்களில், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு நகை விற்பனை 30 முதல் 40 சதவீதம் குறைந்து விட்டது. தசரா காலத்தில், மக்கள் நகை வாங்க மாட்டார்கள். தீபாவளி போனஸ் பெற்றுள்ளவர்கள், தற்போது நகை வாங்குகின்றனர். திருமணத்திற்கு நகை வாங்குவோர், அவர்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப, நகை வாங்குகின்றனர். இவ்வாறு லோதா கூறினார். 'எங்கள் பட்ஜெட்டில், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு குறைந்த அளவு நகையே வாங்க முடிகிறது. கடந்தாண்டை விட, அதிகபட்சம் 2,000 ரூபாய் வரை சவரன் விலை எகிறி விட்டது.


அதனால், அதிக விலை கொடுத்து குறைந்த சவரன் வாங்க வேண்டிய நிலை உள்ளது' என்று வாடிக்கையாளர்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. எனினும், விற்பனை சரியவிடாமல் பார்த்துக்கொள்ள நகைக் கடை உரிமையாளர்கள், தற்போது, குறைந்த எடையில், 'பார்வையாக' உள்ள பல்வேறு டிசைன் நகைகளைச் செய்ய, 'ஆர்டர்' கொடுக்கின்றனர். கடந்த ஒரு மாதமாகவே, குறைந்த எடை நகைகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. 'தங்கத்தின் விலை ஏற ஏற, குறைந்த எடை நகைகளை வாங்க, மக்கள் தயாராகி விடுவர். பழைய நகைகளைப் போட்டு, குறைந்த எடை நகைகளை வாங்க, மும்பை மக்கள் தயாராகி விட்டனர்; பல உலோகங்கள் கலந்த தங்க நகை, சுத்தமான வெள்ளி நகைகளை வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்' என, இந்திய நகை பயிற்சி நிறுவன இயக்குனர் வேதாந்த் ஜாட்டியா கூறியுள்ளார்.


இன்னும் சில நாட்களுக்கு தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்காது என்றாலும், குறைந்தது 15 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 17 ஆயிரம் ரூபாய் வரை, சவரன் தங்கம் விலை ஏற்றம் காண வாய்ப்பு உள்ளது என்பது தான் வல்லுனர்கள் கருத்து.

நன்றி : தினமலர்