Wednesday, October 14, 2009

'நோபல்' சிந்தனைகள்!



உலகின் தலைசிறந்த விருது என்று கருதப்படும் நோபல் பரிசு இந்த ஆண்டு ஓர் இந்தியருக்கும், அதிலும் குறிப்பாக, தமிழருக்குக் கிடைத்திருக்கிறது என்பது நமக்குப் பெருமை. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பது இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பற்றிய ஆச்சரியத்தை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது.

யார் இந்த ஆல்பிரட் நோபல்? சுவீடன் நாட்டுக்காரரான ஆல்பிரட் நோபல் அமெரிக்காவில் குடியேறுகிறார். 1862-ம் ஆண்டு நைட்ரோ கிளிசரினில் தனது ரசாயன ஆராய்ச்சியை மேற்கொண்டு அதன் மூலம் "டைனமைட்' வெடிமருந்தை 1867-ல் கண்டுபிடித்து 40 வயதில் உலக மகா கோடீஸ்வரராகிறார். இத்தாலியில் உள்ள தனது வீட்டில் 1896-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ம் தேதி ஆல்பிரட் நோபல் ஓர் உயில் எழுதி வைத்துவிட்டு மரணமடைகிறார். அந்த உயிலின் அடிப்படையில் நோபல் விருது உருவாக்கப்பட்டு 1901 முதல் வழங்கப்படுகிறது. உலக அழிவுக்குப் பிள்ளையார் சுழி போடும் டைனமைட் என்கிற வெடிமருந்தைக் கண்டுபிடித்த குற்ற உணர்வுதான் ஆல்பிரட் நோபலை இப்படி ஒரு விருது வழங்கத் தூண்டியது என்று கூடக் கூறுவார்கள். அதெல்லாம் இருக்கட்டும். இந்த ஆண்டு நோபல் விருதைப் பற்றிய விவாதத்துக்கு வருவோம்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் விருது வழங்கப்பட்டிருப்பது அவரையே வியப்பில் ஆழ்த்தி இருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? ஒபாமா ஒரு மிகச்சிறந்த மேடைப் பேச்சாளர். தேர்ந்த அரசியல்வாதி. அவரது தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் பாராட்டுக்குரியவை. அமெரிக்க சரித்திரத்திலும், உலக வரலாற்றிலும் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் வெள்ளையர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தது முக்கியமான திருப்புமுனை, சந்தேகமே இல்லை.

ஆனால், நோபல் விருது என்பது, குறிப்பாக உலக சமாதானத்துக்கான நோபல் விருது என்பது மேலே குறிப்பிட்ட சாதனைகளுக்காகத் தரப்படுவதல்ல. மார்டின் லூதர் கிங் ஜூனியருக்கு நிகரான இனவெறிக்கு எதிரான போராட்டம் எதையும் ஒபாமா தலைமையேற்று நடத்தினாரா என்றால் கிடையாது. சரி, முதலாவது உலகப் போருக்குப் பிறகு உலக நாடுகளின் இணையம் ஏற்படுத்தி உலக ஒற்றுமைக்காக முன்னாள் அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனுக்கு நிகரான பங்களிப்பு எதுவும் ஒபாமா செய்திருக்கிறாரா என்றால் இல்லை. அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு மனித உரிமைக்காக ஜிம்மி கார்ட்டர் உலகம் முழுவதும் சுற்றி வந்து பாடுபட்டதுபோல, ஒபாமாவுக்கு நோபல் பரிசு பெறத் தகுதி இருக்கிறதா என்றால் அப்படி எதையும் குறிப்பிட முடியவில்லை.

இப்போதும், இராக்கும், ஆப்கானிஸ்தானமும் அமெரிக்காவின் மறைமுகக் கட்டுப்பாட்டில், அமெரிக்கப் படைகளின் கண்காணிப்பில்தான் இருக்கின்றன. அமெரிக்காவால் பேச முடிகிறதே தவிர, பாலஸ்தீனப் பிரச்னையில் சுமுகமான முடிவு எதையும் கொண்டுவர முடிந்திருக்கிறதா என்றால் கிடையாது. இப்போதும் உலகிலேயே மிக அதிகமான அணு ஆயுதக் குவியல் அமெரிக்காவிடம்தான் இருக்கிறது. அணு ஆயுதப் பரவலைத் தடுப்பதும், தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களை மெல்ல மெல்ல அழிப்பதும் தனது குறிக்கோள் என்று அதிபர் ஒபாமா கூறியிருப்பதை அவரது ஆதரவாளர்களும், அமெரிக்க நிர்வாகமும் ஆதரிக்குமா என்பதும் சந்தேகம்தான்.

இப்படியொரு சூழ்நிலையில், என்ன அடிப்படையில் அதிபர் ஒபாமாவுக்கு உலக சமாதானத்துக்கான நோபல் விருது வழங்கப்பட்டிருக்கிறது? அவரை உலக சமாதானத்துக்காகப் பாடுபட ஊக்குவிப்பதற்காக இந்த விருது என்று சொன்னால் அதைவிடக் கேலிக்கூத்து எதுவும் இருக்க முடியாது. ஊக்கமளிப்பதற்காக விருது வழங்குவார்களா என்ன? ஒபாமாவின் பத்து மாத சாதனை என்ன என்று கேட்டால், எதுவுமே செய்யாததற்காக நோபல் விருது பெற்றதாகத்தான் இருக்கும்.

அடுத்தபடியாக, நம்ம ஊர் "வெங்கி' என்று செல்லமாக அழைக்கப்படும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு விஞ்ஞானத்துக்கான நோபல் விருது வழங்கப்பட்டிருப்பதற்கு வருவோம். சிதம்பரம்தான் பூர்வீகம் என்றாலும், குஜராத் மாநிலம் வதோதராவும், பிறகு அமெரிக்க யேல் பல்கலைக்கழகமும்தான் அவரது விருதுக்குப் பின்னணியில் இருந்தவை என்பதுதான் உண்மை.

பௌதீகம் படித்த ராமகிருஷ்ணனுக்கு உயிரியலில் நாட்டம் வந்தது. தனது படிப்பை மாற்றிக் கொண்டு, இப்போது மூலக்கூறு இயலுக்காக, ரசாயனத்துக்கான நோபல் விருதை தாமஸ் ஸ்டீட்ஸ் மற்றும் யெடா யோனத் இருவருடனும் ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொள்கிறார்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய முதல் விஷயம், ராமகிருஷ்ணன் கணினி அறிவியலோ, பொறியியல் படிப்போ படிக்கவில்லை. அடிப்படை விஞ்ஞானமான பௌதீகம் படித்திருக்கிறார். இதற்கு முன் நோபல் விருது பெற்ற இன்னொரு இந்தியரான அமார்த்ய சென் பொருளாதாரம் படித்தவர். கலை (பி.ஏ.) மற்றும் அறிவியல் (பி.எஸ்ஸி) என்று சொன்னாலே முகம் சுளித்து, லட்சக்கணக்கில் நன்கொடை வழங்கிப் பொறியியல் படிக்கப் பைத்தியமாய் அலையும் இளைஞர்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள். என்ன படிக்கிறோம் என்பதைவிட, எப்படிப் படிக்கிறோம் என்பதையும், எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் சாதனையாளராக உயர முடியும் என்பதையும் ராமகிருஷ்ணனுக்குக் கிடைத்திருக்கும் நோபல் விருது நமக்கு உணர்த்துகிறது.

ராமகிருஷ்ணன் அமெரிக்கா போகாமல் இந்தியாவில் இருந்திருந்தால் இந்த உலக சாதனையைப் படைத்திருக்க முடியுமா? நமது நிர்வாக அமைப்பு அதற்கு உதவி இருக்குமா? இளங்கலை பௌதீகம் படித்த ஒருவர் மேற்படிப்பில் உயிரியலுக்கு மாறுவதற்கும், ரசாயனத்தில் ஆராய்ச்சி செய்வதற்கும் நமது அமைப்பு அனுமதி அளிக்குமா? திறமை என்பது தண்ணீரைப் போலத் தனது பாதையையும், தளத்தையும் நிர்ணயித்துக் கொண்டுவிடும் என்பதும், தடைகள் அதற்கு ஒரு பொருட்டல்ல என்பதும் ராமகிருஷ்ணனால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். இப்போதும் இந்தியர்களுடனும், இந்தியப் பல்கலைக்கழகங்களுடனும் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது நோபல் விருது அவருக்குக் கிடைத்ததைவிட மகிழ்ச்சியை அளிக்கிறது!
நன்றி : தினமணி


No comments: