Wednesday, October 14, 2009

அங்கே குறையுது; இங்கே 'இறங்க' மறுக்குது தங்கம்!

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மாற்று மதிப்பு சற்று குறைந்தாலும், இந்தியாவில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. சமீபகாலமாகவே, சர்வதேச அளவில் அவுன்ஸ் (31 கிராம்) தங்கம் விலையில் சரிவு கண்டு வந்துகொண்டிருக்கிறது. எனினும், இந்தியாவில் இதன் தாக்கம் காணப்படவில்லை. 'சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சரிந்தாலும், இந்தியாவில் தங்கத்தின் விலை குறைய இனி வாய்ப்பில்லை' என, சந்தைப் பொருட்கள் ஆராய்ச்சி வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மும்பையில், 10 கிராம் தங்கத்தின் விலை 15 ஆயிரத்து 855 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால், தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை, இந்தியாவில் குறைந்துள்ளது.

மும்பையில், சந்தீப் ஜுவல்லரி உரிமையாளர் உத்தம் லோதா கூறியதாவது: திருவிழாக் காலங்களில், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு நகை விற்பனை 30 முதல் 40 சதவீதம் குறைந்து விட்டது. தசரா காலத்தில், மக்கள் நகை வாங்க மாட்டார்கள். தீபாவளி போனஸ் பெற்றுள்ளவர்கள், தற்போது நகை வாங்குகின்றனர். திருமணத்திற்கு நகை வாங்குவோர், அவர்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப, நகை வாங்குகின்றனர். இவ்வாறு லோதா கூறினார். 'எங்கள் பட்ஜெட்டில், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு குறைந்த அளவு நகையே வாங்க முடிகிறது. கடந்தாண்டை விட, அதிகபட்சம் 2,000 ரூபாய் வரை சவரன் விலை எகிறி விட்டது.


அதனால், அதிக விலை கொடுத்து குறைந்த சவரன் வாங்க வேண்டிய நிலை உள்ளது' என்று வாடிக்கையாளர்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. எனினும், விற்பனை சரியவிடாமல் பார்த்துக்கொள்ள நகைக் கடை உரிமையாளர்கள், தற்போது, குறைந்த எடையில், 'பார்வையாக' உள்ள பல்வேறு டிசைன் நகைகளைச் செய்ய, 'ஆர்டர்' கொடுக்கின்றனர். கடந்த ஒரு மாதமாகவே, குறைந்த எடை நகைகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. 'தங்கத்தின் விலை ஏற ஏற, குறைந்த எடை நகைகளை வாங்க, மக்கள் தயாராகி விடுவர். பழைய நகைகளைப் போட்டு, குறைந்த எடை நகைகளை வாங்க, மும்பை மக்கள் தயாராகி விட்டனர்; பல உலோகங்கள் கலந்த தங்க நகை, சுத்தமான வெள்ளி நகைகளை வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்' என, இந்திய நகை பயிற்சி நிறுவன இயக்குனர் வேதாந்த் ஜாட்டியா கூறியுள்ளார்.


இன்னும் சில நாட்களுக்கு தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்காது என்றாலும், குறைந்தது 15 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 17 ஆயிரம் ரூபாய் வரை, சவரன் தங்கம் விலை ஏற்றம் காண வாய்ப்பு உள்ளது என்பது தான் வல்லுனர்கள் கருத்து.

நன்றி : தினமலர்


No comments: