Sunday, November 16, 2008

ஏற்றத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிச்சம் : -சேதுராமன் சாத்தப்பன்

'உப்பு விற்கப் போனா மழை பெய்யுது; உமி விற்கப் போனா காற்று அடிக்குது' என்ற பழமொழி, இப்போதுள்ள பங்குச் சந்தைக்கு பொருந்தும். பலத்த எதிர்பார்ப் புடன் பங்குச் சந்தைக்கு வரும் முதலீட்டாளர்களுக்கு, இப்போது நடப்பதெல்லாம் புரியாத புதிராக உள்ளது.நாட்டின் தொழில் உற்பத்தி செப்டம்பர் மாதம் சிறப்பாக இருந்தது என்ற தகவல் வெளிவந்தும், புதன்கிழமை சந்தை அடி வாங்கியது. வியாழனன்று சந்தைக்கு விடுமுறையாக இருந்தது. அன்றைய தினம் வெளியிடப்பட்ட பணவீக்க புள்ளி விவரம் ஒற்றை இலக்கத்திற்கு வந்து பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. கிட்டத்தட்ட 2 சதவீதம் குறைந்துள்ளது என்றால் சும்மாவா? ஆனால், வெள்ளியன்று சந்தை தொடக்கத்தில் சிறிது மேலே இருந்தாலும், பின்னர் கீழே இறங்கத் தொடங்கியது. பல சிறிய முதலீட்டாளர்கள் ஒன்றும் புரியாமல் முழித்தனர். ஒரு பக்கம் பணவீக்கம் குறைகிறது; கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், சந்தை கூடவில்லை. சர்வதேச நாடுகளில் சந்தை ஏற்றத்தில் உள்ளது. ஆனால், அடிப்படை வலுவாக உள்ள இந்தியாவில் மட்டும் பங்குச் சந்தை அடி வாங்குகிறது.ஆகஸ்ட் மாதத்தில் தொழில் உற்பத்தி குறைவு என்ற செய்தி வந்த போது, கடந்த மாதம் பலத்த சரிவு ஏற்பட்டது. அதேபோல், பணவீக்கம் சற்றே உயரும் போதெல்லாம், அதை சாக்காக வைத்து சந்தையை இறக்கினர். ஆனால், இப்போது நேருக்கு மாறாக இருக்கும் போது, தொடர்ந்து அடிக்கின்றனர்.இப்போது, அடுத்த பல்லவியை ஆரம்பித்து விட்டனர். அதென்ன ஐந்து மாநில தேர்தல். இதன் முடிவுகள் எப்படி இருக்கும் என்று தற்போதே யூகங்களை கிளம்பி விட்டு சந்தையை கீழே இழுத்துச் செல்கின்றனர். இதனால் தான் வெள்ளிக்கிழமை சந்தை மேலும், கீழுமாகவே இருந்தது. மேலும், ஜி-20 நாடுகளின் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு எப்படி இருக்கப் போகிறது என்ற யூகங்களும், சாப்ட்வேர் பங்குகளின் இறக்கமும் சந்தையை இறக்கித் தள்ளியது. கடந்த மூன்று டிரேடிங் நாட்களிலும் உலகளவில் பல இடங்களிலும் சந்தை மேலேயே இருந்தது. ஆனால், இந்தியாவில் குறைந்து கொண்டே வந்துள்ளது. ஏற்றத்தை எதிர்பார்த்து போனால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.'டாடா டெலி' 26 சதவீத பங்குகளை ஜப்பானின் டோகோமொ 2.7 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளது தான் தற்போதைய ஹைலைட். சந்தை மலிந்துள்ளதால் வெளிநாட்டு நிறுவனங்கள் இதுதான் சமயம் என இந்தியக் கம்பெனிகளில் பங்குகள் வாங்க முற்படலாம். அது சந்தையை மேலே கொண்டு செல்லும். டாடா டெலியின் பங்குகள் 12 சதவீதம் மேலே சென்றன. இந்த பங்கு 11 ரூபாய் வரை குறைந்து வந்த போது, பலரது பார்வை இதன் மீது திரும்பவில்லை. இப்போது கூட வாங்கலாம். ஜப்பான் நிறுவனம் ஒரு பங்கை 24.70 ரூபாய் என்று தான் வாங்கியுள்ளது. எனவே, இந்த பங்கை கண்காணித்து வாங்க முயற்சிக்கலாம்.
வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 151 புள்ளிகள் குறைந்து 9,385 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 38 புள்ளிகள் குறைந்து 2,810 புள்ளிகளுடனும் முடிவடைந்தன.
அன்னிய செலாவணி கையிருப்பு: ஒரு காலத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாமல் நாடு கஷ்டப்பட்டது; ஏற்றுமதி பெருகியது, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளை அதிகமாக்கி, அன்னிய செலாவணியை கொண்டு வந்து கொட்டியது, வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவிற்கு அதிகளவில் பணங்களை கொண்டு வந்தனர். எல்லாம் சேர்ந்து நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு கூடி வந்தது. ஆனால், கடந்த ஆறு மாத காலமாக டாலருக்கு எதிராக ரூபாய் தள்ளாடுவதால், அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது. அதாவது, 312 பில்லியன் டாலராக ஜூன் மாதம் இருந்தது, தற்போது, 250 பில்லியன் டாலர் அளவில் வந்து நிற்கிறது. இதற்கு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் விற்று வெளியேறியதும் ஒரு காரணமாகும்.
புதிய முதலீடுகள்: கம்பெனிகள் தங்கள் விரிவாக்க பணிகளுக்கு புதிய வெளியீடுகள் தான் சிறந்த வழி. அதாவது, கடன்கள் வாங்காமல் விரிவாக்கம் செய்யலாம். ஆனால், தற்போது புதிய முதலீடுகள் கொண்டு வருவதற்கு வழிகள் இல்லாததால், கம்பெனிகள் விரிவாக்கத்திற்கு செல்ல வேண்டுமானால், வங்கிகளிடம் கடன்கள் வாங்க வேண்டும். அதற்கு வட்டி வேறு கட்ட வேண்டும்.
வட்டி சுமை கூடும் போது லாபங்கள் குறையும். அதே சமயம், புதிய வெளியீடுகள் கொண்டு வந்தால், போடுவதற்கு முதலீட்டாளர்கள் தயாராக இல்லை. கடன்கள் வாங்கி செய்வதற்கு கம்பெனிகள் தயங்குகின்றன. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்?: சந்தை முன் எதிர்பார்த்தபடியே 9,000 அளவில் வந்து நிற்கிறது. நீண்ட கால எண்ணத்தில் வாங்க நல்ல சந்தர்ப்பம் தான். திடமான மனதும், நீண்ட கால எண்ணமும் வேண்டும். அது தான் சந்தைக் கும் தேவை; முதலீட்டாளர்களுக்கும் தேவை. பணவீக்கம் குறைந்திருப்பதால், ரிசர்வ் வங்கி இன்னும் வட்டி விகிதங்களை குறைக்கலாம்.
வரும் நாட்கள் மேலும், கீழுமாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். எனவே, பங்குகளை மொத்தமாக வாங்காமல், இறங்க இறங்க வாங்கலாம். டிசம்பர் மாதம் துவங்கிவிட்டால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
நன்றி : தினமலர்

'ஏசி', பிரிட்ஜ், 'டிவி' விரைவில் உயர்கிறது விலை

'ஏசி', பிரிட்ஜ், 'டிவி' மற்றும் வாஷிங் மிஷின் போன்றவற்றின் விலைகள் விரைவில் 500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை உயரவுள்ளன. ரூபாய் மதிப்பு குறைந்து, இறக்குமதி செலவு அதிகரித்துள்ளதால், அடுத்த சில வாரங்களில் இந்த விலை உயர்வை அமல்படுத்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.எல்.ஜி., சாம்சங் நிறுவனங்கள் விலைகளை உயர்த்துவது குறித்து பரிசீலித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், ஒனிடா நிறுவனம் கடந்த வாரம் 2 முதல் 3 சதவீத விலை உயர்வை அறிவித்துள்ளது. வீடியோகானும் விலை நிலவரங்களை பரிசீலித்து வருகிறது. இருந்தாலும், இன்னும் முடிவு எடுக்கவில்லை.எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் மார்க்கெட்டிங் பிரிவு இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில்,'எங்கள் நிறுவனம் மே மாதத்தில் நான்கு முதல் 6 சதவீத விலை உயர்வை அமல்படுத்தியது. அடுத்ததாக, 3 முதல் 8 சதவீத விலை உயர்வை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம்' என்றார்.சாம்சங் இந்தியா நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில், பிளாட் ஸ்கிரீன் 'டிவி'க்கள் மற்றும் ரெப்ரிஜிரேட்டர்களின் விலையை 200 முதல் 500 ரூபாய் வரை உயர்த்தியது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளில் பெரும்பாலானவை நொய்டா மற்றும் சென்னையில் உள்ள தொழிற்சாலைகளில் தயாராகின்றன.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவு குறைவே. எல்.சி.டி., 'டிவி'க்களின் உதிரி பாகங்கள் மட்டுமே, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், அவற்றின் விலைகள் அதிகரிக்கப்படலாம்.விலைகளை உயர்த்துவது குறித்து பெரும்பாலான நிறுவனங்கள் பரிசீலித்துக் கொண்டிருந்தாலும், விற்பனை ஒன்றும் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் எல்.ஜி., நிறுவன பொருட்களின் விற்பனை 50 சதவீதமும், சாம்சங் நிறுவன விற்பனை 35 சதவீதமும், ஒனிடா விற்பனை 35 சதவீதமும் அதிகரித் துள்ளன.
நன்றி : தினமலர்


அமெரிக்க நிறுவன திவால் நிலையால்இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாக பாதிப்பு

அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் பல திவாலாகி விட்டதால், அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது.அமெரிக்காவில் ஏற்பட் டுள்ள பொருளாதார மந்த நிலையால், நிகழ்ந்த பாதிப்புகள் குறித்து, டன் அன்ட் பிராட்ஸ்டீட் நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வில் தெரியவந்துள்ள விவரங்கள் வருமாறு:அமெரிக்காவில் உள்ள பல வர்த்தக நிறுவனங்கள் திவால் நிலைக்கு சென்று விட்டன. இருந்தாலும், தங்களின் வர்த்தகத்தை மறுசீரமைத்து லாபம் பார்க்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. தங்களின் அன்றாட வர்த்தக நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டிருக் கின்றன. ஆனால், முக்கியமான வர்த்தக முடிவுகளை எடுக்க வேண்டும் எனில், திவால் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டின் அனுமதி பெற்ற பின்னரே எடுக்க முடியும்.அதனால், இந்திய ஏற்றுமதியாளர்கள் மிகவும் எச்சரிக்கையோடு செயல் பட வேண்டும். தங்களிடம் பொருட்களை வாங்கும் நிறுவனங்களின், நிதிநிலைமை நன்றாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.ஏற்றுமதி செய்யும் பொருட்களை இன்சூ ரன்ஸ் செய்ய வேண்டும்.இந்தியாவில் இருந்து அதிக அளவில் பொருட் களை பெறும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. 2007-08ம் ஆண்டில், அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி 13 சதவீதம். இருந்தாலும், அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் பல மோசமான நிதி நெருக்கடியில் இருப்பதால், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 39 சதவீதம் அதாவது ஐந்து லட்சம் கோடி அளவுக்கு அதிகரிக்கும்.மற்ற நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 10.4 சதவீதம் குறைந்துள்ளது. அதேநேரத்தில், இறக்குமதி 43.3 சதவீதம் கூடியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி ஒன்பது லட்சம் கோடியை எட்டும் என, முன்னர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்த இலக்கை அடைய முடியாத சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.
அமெரிக்க நிறுவனங் கள் பல திவாலானது மட்டுமின்றி, சரக்கு கட்டண உயர்வு, சில நாட்டு அரசுகள் விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள் போன்றவற்றாலும், ஏற்றுமதி பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஜவுளி, ஆயத்த ஆடைகள், நகைகள், நவரத்தின கற்கள், வைரங்கள், கைவினைப் பொருட்கள், தோல் பொருட்கள், பித்தளை பொருட்கள் போன்றவற்றின் ஏற்றுமதி ஏற்கனவே மந்தமான நிலையில் உள்ளது.
இவ்வாறு டன் அன்ட் பிராட்ஸ்டீட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்