Sunday, November 16, 2008

'ஏசி', பிரிட்ஜ், 'டிவி' விரைவில் உயர்கிறது விலை

'ஏசி', பிரிட்ஜ், 'டிவி' மற்றும் வாஷிங் மிஷின் போன்றவற்றின் விலைகள் விரைவில் 500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை உயரவுள்ளன. ரூபாய் மதிப்பு குறைந்து, இறக்குமதி செலவு அதிகரித்துள்ளதால், அடுத்த சில வாரங்களில் இந்த விலை உயர்வை அமல்படுத்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.எல்.ஜி., சாம்சங் நிறுவனங்கள் விலைகளை உயர்த்துவது குறித்து பரிசீலித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், ஒனிடா நிறுவனம் கடந்த வாரம் 2 முதல் 3 சதவீத விலை உயர்வை அறிவித்துள்ளது. வீடியோகானும் விலை நிலவரங்களை பரிசீலித்து வருகிறது. இருந்தாலும், இன்னும் முடிவு எடுக்கவில்லை.எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் மார்க்கெட்டிங் பிரிவு இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில்,'எங்கள் நிறுவனம் மே மாதத்தில் நான்கு முதல் 6 சதவீத விலை உயர்வை அமல்படுத்தியது. அடுத்ததாக, 3 முதல் 8 சதவீத விலை உயர்வை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம்' என்றார்.சாம்சங் இந்தியா நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில், பிளாட் ஸ்கிரீன் 'டிவி'க்கள் மற்றும் ரெப்ரிஜிரேட்டர்களின் விலையை 200 முதல் 500 ரூபாய் வரை உயர்த்தியது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளில் பெரும்பாலானவை நொய்டா மற்றும் சென்னையில் உள்ள தொழிற்சாலைகளில் தயாராகின்றன.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவு குறைவே. எல்.சி.டி., 'டிவி'க்களின் உதிரி பாகங்கள் மட்டுமே, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், அவற்றின் விலைகள் அதிகரிக்கப்படலாம்.விலைகளை உயர்த்துவது குறித்து பெரும்பாலான நிறுவனங்கள் பரிசீலித்துக் கொண்டிருந்தாலும், விற்பனை ஒன்றும் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் எல்.ஜி., நிறுவன பொருட்களின் விற்பனை 50 சதவீதமும், சாம்சங் நிறுவன விற்பனை 35 சதவீதமும், ஒனிடா விற்பனை 35 சதவீதமும் அதிகரித் துள்ளன.
நன்றி : தினமலர்


No comments: