Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Tuesday, March 20, 2012

ஆண் - பெண் நட்புறவு

ஆண்-பெண் நட்புறவின் சாத்தியம் பற்றிய கேள்வியை என் எழுத்தாள நண்பர் ஒரு வார இதழில் அண்மையில் எழுதியுள்ள கட்டுரையின் சில பகுதிகள் எழுப்புகின்றன.

ஆண்களும் பெண்களும் கலந்து பழகவே கூடாது என்பதில் நம் முன்னோர்கள் காலம்காலமாக மிகப் பிடிவாதமாக இருந்து வந்துள்ளார்கள். இது முழுவதுமாய் ஏற்கத்தக்கதன்று என்பதே எனது கருத்தாகவும் இருந்து வந்துள்ளது. ஒன்று சொன்னால் நம்புவீர்களா? தோழிகளைக் காட்டிலும் எனக்குத் தோழர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

ஆண்-பெண் நட்புறவில் இங்கே ஆணுக்கு எதிராய் நான் சொல்லப்போகும் கருத்தை என்னைப்பற்றி ஏற்கெனவே இருக்கக்கூடிய கணிப்பின் அடிப்படையில் விமர்சித்தல் சரியாக இருக்காது என்பதை எடுத்துச்சொல்ல இந்தச் சுய தம்பட்டம் தேவைப்படுகிறது. மன்னிக்கவும்.

ஆண்களுடன் பழகுவது தீமை பயக்கும் என்பதாய்ச் சின்னஞ்சிறு வயதிலிருந்தே ஒரு பெண்ணுக்குச் சொல்லப்பட்டு வருகிறது. இது தவறானது என்று அறவே புறந்தள்ளிவிட முடியாது. பத்து வயதுச் சிறுவர்கள்கூட நம்பத்தகுந்தவர்கள் அல்லர் என்பதே உண்மை. விகாரங்களைத் தூண்டும் ஊடகங்கள் இல்லாத அந்த நாளிலேயே இப்படியெனில், இந்த நாள் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. எல்லாத்துக்கும் சின்னவன் ஆனா, கல்யாணத்துக்கு மட்டும் பெரியவன் என்பதாய் ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு.

ஆணின் இயல்பை நன்கு அறிந்த தமிழர்கள் இயற்றிய பொன்மொழி இது. இதுபற்றிய அறிவால்தான் நம் பெரியவர்கள் ஆம்பளப் பசங்களோட வெளையாண்டா, காது அறுந்து போகும் என்று பெண் குழந்தைகளை அச்சுறுத்தி வந்தார்கள் போலும். ஒரு தகப்பன் தன் மகளை ஆண் நண்பர்களுடன் பழக அனுமதிப்பதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஒரு பெண்ணோடு பழகும்போது இவள் ஒரு பெண் என்கிற நினைவையும் நினைப்பையும் அகற்றி அவளை ஒரு நண்பனைப் பார்ப்பதுபோல் ஒரு தோழியாக மட்டுமே பார்ப்பவர் ஆண்களில் அரிது என்பதே கசப்பான உண்மை.

இத்தகைய அரிய ஆண்களை மட்டுமே தன் உள்ளுணர்வால் கண்டுணர்ந்து பழகும் கெட்டிக்காரத்தனம் பெண்ணுக்கு இருந்தால்தான் அவள் உருப்படியாக மீண்டுவர முடியும். இயல்பான உள்ளுணர்வு பெண்ணுக்கு உண்டு. அது இறைவன் அவளுக்கு அளித்த கொடை. முதுகுக்குப் பின்னால் இருந்தபடி எவரேனும் முறைத்தாலும் திரும்பிப் பார்க்கும் உள்ளுணர்வு அவளது பிறப்பியல்பு.

பெண் அதைச் சரியாகவோ, முழுமையாகவோ பயன்படுத்திக் கொள்ளாதபோதுதான் அவள் கண்மூடித்தனமாக ஆணை நம்பி ஏமாந்து போகிறாள்.

தனது உள்ளுணர்வைப் புறக்கணிக்காமல், அதை ஏற்று நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் பெண் ஏமாந்து போவதில்லை. எதிர்ப் பாலைச் சேர்ந்தவனாக ஆண் நண்பன் இருப்பதால் அதிகப்படியாக நிகழக்கூடிய வன்னுகர்வு எனும் ஆபத்தைத் தவிர்த்தல் கட்டாயமாகிறது.

ஒரு பெண் இன்னொரு பெண்ணைத் தோழியாக்கிக் கொள்ளும்போது பாலுணர்வு சார்ந்த இந்தக் கசப்பான ஆபத்து அவளுக்கு இல்லை. எனவே தன் உள்ளுணர்வைச் சார்ந்துதான் ஒருத்தி தன் தோழியைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்கிற இன்றியமையாத் தேவையும் இல்லை. சண்டை வரும்போது விலகவோ, விலக்கவோ செய்யலாம். (பெண்களிடையே சண்டை அடிக்கடி வரும்)

தன்னோடு வெறும் நண்பனாக மட்டுமே பழகி வந்துள்ள நிலையிலும் - அது புனிதமான நட்பு மட்டுமே என்பது இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையிலும் - திடீரென்று அந்த நண்பன் அத்துமீறிய வக்கிரச் செயலில் ஈடுபடும்போது, அந்தப் பெண் அதிர்ந்து போகிறாள். சின்னச் சின்ன அத்துமீறல்கள் ஏற்படும்போதே, அதைப் புரிந்துகொள்ளும் - ஆனால் அதை விரும்பாத - பெண் அவனைப் புறந்தள்ளி விடுவாள்.

ஆனால், ஆண் இவ்விஷயத்தில் தந்திரமானவன். நம்ப வைத்துக் கழுத்தறுப்பவன். தன்னைப் புரிந்துகொண்டு பெண் தன்னைத் தவிர்த்துவிடுவாளோ என்னும் உணர்வால், சிறு அத்துமீறல்களைக் கூடத் தவிர்த்துக் கண்ணியவானைப்போல் நடப்பதில் (நடிப்பதில்) மிகுந்த கவனம் காட்டி அவளது நன்மதிப்பைச் சம்பாதித்த பின் என் எழுத்தாள நண்பர் குறிப்பிட்ட அந்த ஐந்து இளைஞர்களைப்போல் மிகக் கீழ்த்தரமாக நடந்து கொள்ளுபவன்.

தன் உண்மையான தன்மையை அவளுக்குக் காட்டிக் கொடுக்கக் கூடிய சிறு அத்துமீறல்களை அவன் செய்ய மாட்டான். தோதான வாய்ப்பின்போது, எடுத்த எடுப்பிலேயே வன்னுகர்வுதான். அந்த வாய்ப்பையும் அவனே ஏற்படுத்திவிடுவான்.

எனவே, ஒரு புற்றில் பாம்பு இருக்கிறதா அல்லது எறும்பு இருக்கிறதா என்றெல்லாம் ஒரு பெண் அதனுள் கையை விட்டுப் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. அது தேவையற்ற அபாய நிலை (ழ்ண்ள்ந்). ஆக, மிக, மிகச் சரியான கணிப்பு இருந்தால் மட்டுமே அவள் ஆண் நண்பர்களைச் சேர்த்துக்கொள்ளலாம். மிக மிக நல்லவர்கள் என்கிற மதிப்பீடேயானாலும், அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பதுதான் அவளுக்கு நல்லது. ஏனெனில், மிகுந்த கெட்டிக்காரத்தனமும் கவனமும் உள்ள பெண்களே கூட இந்தத் தேர்வில் ஏமாந்துவிடக்கூடும்.

காதலித்துத் திருமணம் செய்துகொண்டு, அவளோடும் அவள் பெற்றுத் தந்த குழந்தைகளோடும் வாழும் ஆண்களே சமயங்களில் தம் பெண் நண்பர்களிடம் வழிவது பற்றிய கதைகள் காதில் விழுவதுண்டு. பெரும்பாலான ஆண்கள் முழு நம்பிக்கைக்கு உரியவர் அல்லர் என்னும் காரணத்தால், அவர்களுடன் பழகும் பெண்களும் சரி, தோழிகளுடனான தன் கணவனின் நடத்தையை நம்பாத பெண்களும் சரி, வீண் மனக் கலக்கம், குழப்பம், கவலை ஆகியவற்றுக்கு ஆளாகிறார்கள் என்பதே உண்மை. (பெண்களிலும் வழிசல்கள் உண்டென்றாலும், அவர்களின் எண்ணிக்கை மிக, மிகக் குறைவே.)

பல்லாண்டுகள் எந்தவிதச் சலனமோ, வக்கிரமோ இல்லாமல் பழகும் ஆணேகூடச் சறுக்கிவிடுவதை அறிந்துள்ள பெண் தன் கணவனையும் அவனுடைய தோழியையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்க முற்பட்டுவிடுகிறாள்.

ஆணின் நெருக்கமான நட்பு ஒரு பெண்ணுக்கு இன்றியமையாத தேவை இல்லை. ஆணின் நட்பு இருந்தால்தான் அவளது பிறவி சாபல்யம் அடையுமா என்ன? பெண்ணையும் ஆணையும் பால் வேற்றுமையால் பிரித்து வைப்பதும், அவர்களை நெருங்கிப் பழகவிடாமல் தடுப்பதும்தான் ஆண்களின் கவர்ச்சிக்கும், அதன் விளைவான தவறான நடத்தைக்கும் அடிகோலுகிறது என்பது பச்சைப் பொய் அபத்தத்திலும் அபத்தமான கருத்து.

பெண்களோடு அவர்களைப் பழகவிட்டாலும், பழகவிடாவிட்டாலும், அவர்கள் காட்டுகிற இயல்பு ஒன்றுதான். அதை மாற்றுவது மிக, மிக மிகக் கடினம். எனவே, பெண்கள் கவனமாக இருத்தல் வேண்டும் என்பது அவளது பத்திரமும், நலனும் சார்ந்த கோட்பாடாகும். கிழவனோ, குமரனோ, மணமானவனோ, பள்ளி கல்லூரி மாணவனோ, சிறுவனோ, இவ்வனைவரிலும் பெரும்பாலோர் பெண்ணை உடலுறவு சார்ந்த துய்பொருளாகத்தான் பார்க்கிறார்கள்.

எனவே, விஷப்பரீட்சை செய்து கொண்டிராமல், நம்பிக்கைக்கு உரியவன் என்பதே தனது கணிப்பானாலும், ஒரு நண்பனைக் குறிப்பிட்ட தொலைவில் வைத்து ஓர் எல்லை வகுப்பதே அறிவுடைமையாகும். நட்பின் தொடக்கத்திலேயே அதை அவனுக்குப் புரிய வைப்பவள் இன்னும் அதிக அறிவாளியாவாள்.

நமது கல்வித் திட்டம் குறைபாடு உடையது. பெண்களைச் சகோதரிகளாகவும், சக உயிர்களாகவும் கருதும் பக்குவத்தையும், அவர்களைக் காக்கும் ஜடாயுத்தனத்தையும் சிறு வயது முதலே ஆண்களுக்குக் கற்பிக்கத் தவறியுள்ள கல்வித் திட்டம் நம்முடையது.

வட இந்திய ஊர் ஒன்றில் அண்மையில் நடந்தது நினைவுக்கு வருகிறது. ஒரு நண்பனுடன் நடந்து சென்றுகொண்டிருந்த இரண்டு பெண்களைச் சில கயவர்கள் வழிமறித்து வன்னுகர்வுக்கு முயல, அருகே வயல் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த ஆண்கள், கூக்குரலிட்டு உதவி கோரிய அந்தப் பெண்களை நோக்கி ஓடி வந்து, அவர்களுக்கு உதவாமல், ஆனால், கூட்டு வன்னுகர்வில் தாங்களும் கலந்துகொண்ட கொடுமையை என்ன சொல்ல? பொதுவாக இதுதான் ஆண்களின் லட்சணம்.

இதுபோன்ற நேரத்தில் பெண்ணைக் காப்பற்றத் தங்கள் உயிரையே தியாகம் செய்துவிடும் ஆண்களும் உண்டுதான். மறுக்கவில்லை. ஆனால், அவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்பதால், ஆணின் பொதுவான இயல்பின் அடிப்படையில்தான் ஒரு பெண் தன் நடவடிக்கைகளை அமைத்துத் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும்.

ஆண்களும் பெண்களும் கலந்து பழகினால் இத்தகைய குற்றங்கள் குறையும் என்று சில மனத்தத்துவ வல்லுநர்கள் கூறுவது வெறும் பிதற்றல். இதனால் எல்லாம் ஆணின் பிறவி இயல்பை மாற்றிவிட முடியாது. நற்சிந்தனையும், உயரிய எண்ணங்களும், பெண்களை நுகர்பொருளாய்ப் பார்க்காமல் சகமனிதர்களாய்ப் பார்க்கும் நியாய உணர்வும்கொண்ட சிலருக்கு இந்த உண்மை கசக்கும்தான்.

எனவேதான் நல்லிதயம் படைத்த ஆண்கள் சிலர் (மகாபாரத தருமபுத்திரர்போல்) தங்களைப் போன்றே மற்றவர்களையும் எடை போட்டு ஆண்-பெண் நட்புக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். அவ்வாறு இல்லாத பிற ஆண்களும்கூட இதை ஆதரிக்கிறார்கள் - ஆனால், வேறு உள்நோக்கத்துடன். அவர்கள் காட்டில் மழை பெய்யுமன்றோ, அதற்காக!

கட்டுரையாளர்  : ஜோதிர்லதா கிரிஜா
நன்றி  : தினமணி   


Thursday, December 2, 2010

யாகாவாராயினும் நா காக்க...

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து இரண்டாண்டு காலமாகப் பேசப்பட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அரசு மௌனம் சாதித்தும் பயனில்லாமல் சிஏஜி அறிக்கையால் அமைச்சர் பொறுப்பில் இருந்து திமுக அமைச்சர் ராசா விலகித் தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாடாளுமன்றமே நடக்காமல் திணறிக் கொண்டிருப்பதும், உச்ச நீதிமன்றம் சிபிஐ அதிகாரிகளைப் பார்த்து நீங்கள் ஏன் அமைச்சராக இருந்த ராசாவை விசாரிக்கவில்லை என்று கேள்வி கேட்பதுமான சூழல். ஆனால், நமது முதல்வரோ அதுகுறித்து எந்த வருத்தமும் இன்றி எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்குப் பதில் கூறாமல் தனது உளுத்துப்போன ஜாதிய விமர்சனங்களைத் தொடங்கிவிட்டார்.
மிகப்பெரிய பொய்யொன்றை வேலூரில் சொல்லியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. முந்திரா ஊழல் வழக்கைப் பெரியவர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியாரின் ஊழல் என்கிறார். தனக்குச் சம்பந்தமே இல்லாத அந்தக் குற்றச்சாட்டு நேரு பிரானின் மருமகன் பெரோஸ் காந்தியாலே நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட உடனேயே தனது அமைச்சர் பதவியைத் துறந்தவர் டி.டி.கே. - நேரு சொல்லியும், கேட்கவில்லை. அடுத்த விமானத்தில் சென்னைக்கு வந்துவிட்டவர்.

முதல்வர் சொல்கிறார் - அவர் பதவியைத் துறந்தவுடன் விட்டுவிட்டார்களாம். காரணம், அவர் மேல்ஜாதிக்காரர். டி.டி. கிருஷ்ணமாச்சாரியார். ஆச்சாரியார். பெயரிலேயே ஆச்சாரியார் என்று இருக்கிறது. அதாவது பிராமணர். ஆனால், ராசாவோ தலித். அதனால்தான் மேலும் மேலும் மேல்ஜாதிப் பத்திரிகைகளும், ஊடகங்களும் இதைப் பெரிதுபடுத்துகின்றன என்கிறார்.

கருணாநிதிக்குத் தெரியுமா? டி.டி. கிருஷ்ணமாச்சாரி திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார். உடன் பெருந்தலைவர் காமராஜும் வருகிறார். கோயிலுக்கு இருவரையும் அழைத்துச் செல்கின்றனர். எல்லோரும் சட்டையைக் கழற்றுகின்றனர். காமராஜ் சட்டையைக் கழற்றுகிறார். டி.டி.கே. சட்டையைக் கழற்றவில்லை. காமராஜ் சொல்லுகிறார்-"அவன் பூணூல் போட்டிருக்க மாட்டான், அதான் கழற்ற மாட்டேங்கிறான்' என்று! அந்த ஆச்சாரியாரின் ஆச்சரியமான ஆச்சாரத்தைப் பார்த்துச் சுற்றி இருந்தோர் வியந்தனர்.

காங்கிரஸ் கட்சி தனது மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாணை பதவி விலக வைத்திருக்கிறதே! அவர்மீது விசாரணை நடக்கப் போகிறதே! அவர் என்ன தலித்தா? சுரேஷ் கல்மாடியைப் பதவி விலகச் சொல்லியுள்ளதே, அவர் என்ன தலித்தா?

கருணாநிதிக்கு நினைவிருக்கும். அரியலூரில் கடும் மழையால் ஒரு ரயில் விபத்து. அன்றைக்கு தமிழர் ஓ.வி. அளகேசன் ரயில்வே துணை அமைச்சர். "அரியலூர் அளகேசா நீ ஆண்டது போதாதா?' என்று இதே கருணாநிதி கூக்குரல் எழுப்பினாரே. விபத்து நடந்த சில மணி நேரங்களில் ரயில்வே அமைச்சர் பொறுப்பில் இருந்து பெரியவர் லால் பகதூர் சாஸ்திரியும் நம்மவர் ஓ.வி.அளகேசனும் பதவி விலகினார்களே! அவர்கள் தலித்துகளா?

போஃபர்ஸ் பீரங்கி என்று தமிழகம் முழுவதும் ரூ. 64 கோடிக்கு விசாரணை வேண்டும். ராஜீவ் காந்தியைக் கைது செய்ய வேண்டும் என்றீர்களே!

இன்று ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய்க்கு கேள்வியே கேட்கக் கூடாது என்கிறீர்களே! என்ன நியாயம்?

1967-ல் ஜெயலலிதா கட்டிய வருமான வரி என்ன? இன்று அவர் கட்டுகிற வருமான வரி என்ன என்று கேட்கிற கருணாநிதி, அவர் 67-ல் கட்டிய வருமான வரி என்ன? இப்போது கட்டுகிற வரி என்ன என்று சொல்வாரா? பத்திரிகைகளைப் பார்ப்பனப் பத்திரிகைகள் என்றெல்லாம் வாய்கிழியப் பேசும் இந்த சாமானியனின் சாயம் வெளுத்துவிடும் என்பதாலா?

ஜெயலலிதாவைப் பார்ப்பனத்தி என்று இவர் பேசினால் வீரமணி கோபம் கொள்வார். அவர்தான் ஜெயலலிதாவுக்கு "சமூக நீதி காத்த வீராங்கனை' என்று பட்டம் கொடுத்தவர். கருணாநிதிக்குக்கூட அந்தப் பட்டத்தை அவர் வழங்கவில்லை.

பார்ப்பனப் பத்திரிகைகள் என்று குறிப்பிடுகிற கருணாநிதி, அவற்றை முதலில் இருந்தே இவை பார்ப்பனப் பத்திரிகைகள் என்று புறக்கணித்திருந்தால் நமக்குப் புரியும், இவர் சரியான பெரியாரின் சீடர் என்று. "சோ'வைப் பார்ப்பான் என்பார். பிறகு "சோ'வே என்னைப் பாராட்டியிருக்கிறார் தெரியுமா என்பார்.

ஓர் ஆங்கில நாளேட்டை மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு என்பார். பிறகு அந்தப் பத்திரிகையே தன்னைப் பாராட்டியிருக்கிறது என்று பெருமை பேசுவார்.

இவர் குடும்பத்தினர் நடத்துகிற பத்திரிகைகளில் கதைகள், கட்டுரைகள் எழுதுவதெல்லாம் பார்ப்பனர்கள்தான். எதற்கு அவர்களை இந்தப் பெரியாரின் சீடர் குடும்பம் வளர்க்கிறது? பார்ப்பன வாடையே படாமல் இவர்களின் ஊடகம் நடக்காதா, என்ன?

ஜெமினி கணேசன் பிறந்த நாளில் கலந்துகொள்கிறார். ஜெமினியின் மாமா ஒருவர் முதல் மனைவியை இழந்துவிட்டாராம். உடனே எங்கள் இசை வேளாளர் குடும்பத்துப் பெண்ணைத்தான் திருமணம் செய்தார். அவரின் பெண்தான் முத்துலெட்சுமி ரெட்டி என்கிறார். அப்படியென்றால், இந்தியச் சட்டப்படி முத்துலெட்சுமி பார்ப்பனப் பெண்தானே! அவரை ஏன் இவர் புகழ்கிறார்?

ஜாதிய ஒழிப்பில் ஈடுபட வேண்டிய கருணாநிதி, இன்னும் தன் ஜாதியைக்கூட மறக்க மாட்டேன் என்கிறாரே. கேட்டால், தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தில் பிறந்தவன் என்பார். தன் இனத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இணைத்தவரே இவர்தானே!

பார்ப்பனர்களை இவ்வளவு வசைபாடும் கருணாநிதி, தன் குடும்பத்து இளைஞர்களிடம் பார்ப்பனப் பெண்களைத் திருமணம் செய்யாதீர்கள் என்று சொல்லியிருக்கலாமே? சொல்லமாட்டார். பார்ப்பனீயம் அவருக்கு மட்டும் இனிக்க வேண்டும். மற்றவர்களுக்குக் கசக்க வேண்டும். இதுதான் கருணாநிதியின் பகுத்தறிவு தர்மம்.

தனக்குச் சாதகமான கேள்விகளுக்கு மட்டும் பதில் தருகிற கருணாநிதி, நீரா ராடியா, கனிமொழி, ராசா ஒலிக் குறுந்தகடுகள் குறித்து ஒன்றுமே சொல்லவில்லையே, ஏன்? ஆ. ராசாவுக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்தது நீரா ராடியாவா, இல்லை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியா என்று ஆங்கிலப் பத்திரிகைகள் கேள்வி கேட்டு திமுகவின் மானத்தைச் சந்தி சிரிக்கச் செய்கின்றனவே, அதைப்பற்றி இவர் எதுவுமே பேசுவதில்லையே, ஏன்?

ஒவ்வொரு தேர்தலின்போதும் நான் தாழ்த்தப்பட்ட பெண்ணை மருமகளாக்கியிருக்கிறேன் என்பார். தன் வீட்டு மருமகளாகிவிட்ட பெண்ணை ஒவ்வொரு தேர்தலின்போதும் தாழ்த்தப்பட்ட பெண் என்று சொல்வது தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருணாநிதி செய்கிற மரியாதையா? அவமரியாதையா? அவரது உள்மனதில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண் மருமகளாகிவிட்டாளே என்கிற ஆதங்கத்தின், உள்மனதின் ஓலம்தானே அது? அவருக்கும், அவர் குடும்பத்துக்கும் ஆபத்து வருகிறபோதெல்லாம் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று பேசுகிற கருணாநிதி, ஏதாவது பெரும்பான்மை ஜாதி குறித்துப் பேசுவாரா? இதுவரை பேசியிருக்கிறாரா?

ராஜாஜி என்கிற பார்ப்பனர்தான் காமராஜையும், காங்கிரûஸயும் வீழ்த்த இவர்களுக்கு உதவினார். உடனே அவரை மூதறிஞர் என்றார்கள். அதற்கு முன்புவரை அவர் குல்லுக பட்டர், கோணல் புத்திக்காரர், ஆச்சாரியார்!

மார்க்சிஸ்டுகளோடு தேர்தல் உறவா, தோழர் பி. இராமமூர்த்தியை சர்வதேசச் சிந்தனையாளர் என்பார்கள். உறவு முறிந்த மறுகணமே நொண்டிப் பார்ப்பான் இராமமூர்த்தி என்பார்கள்.

தோழர் ரங்கராஜனைக்கூட பார்ப்பனர் என்று சமீபத்தில் குற்றம்சாட்டியவர் கருணாநிதி.

இன்றைய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சிவகங்கைச் சின்னப் பையன், சீமான் வீட்டுச் செல்லப்பிள்ளை. அந்தப் பையன் என்னைப் பேசுகிறான் என்றவர்தானே கருணாநிதி.

வேலூரில் ""நேருவே ஆரிய திராவிட யுத்தம்'' என்று எழுதியிருக்கிறார் என்று சான்று காட்டுகிறார் கருணாநிதி.

என்ன செய்ய கருணாநிதி அவர்களே! அந்த நேருவும்கூட ஒரு பார்ப்பனர்தான். ஆமாம் காஷ்மீரத்து பண்டிட்தானே

கட்டுரையாளர் :  நெல்லைகண்ணன்

நன்றி : தினமணி

Friday, August 27, 2010

அதிகாரச் சதுரங்கத்தில் ஆட்டம்போடும் மத்திய அரசு

சதுரங்க விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்று உலக அளவில் முதல் இடத்தைப் பெற்றிருப்பவர் விஸ்வநாதன் ஆனந்த். சதுரங்கம் என்பது கடந்த 25 நூற்றாண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில் உருவான ஒரு விளையாட்டு ஆகும். 64 கட்டங்களைக்கொண்ட அட்டையில் இரண்டு பேர்கள் விளையாடுவதில் வெள்ளை - கறுப்பு ஆகிய வண்ணங்களில் யானை, குதிரை, தேர், காலாள் ஆகிய நான்கு வகைப் படைகளையும் களத்தில் நிறுத்திப் போராடுவதால், அது சதுரங்கம் என்ற பெயரைப் பெற்றது. எதிரி அரசனைச் சுற்றி வளைத்து மேலும் நகர முடியாமல் கட்டுப்படுத்துவதுதான் வெற்றியின் அறிகுறி.

இந்தியாவிலிருந்து பாரசீகம் சென்று, அரபு நாடுகளில் புகுந்து, பிறகு ஐரோப்பிய நாடுகளிலும் சதுரங்க விளையாட்டு நால்வகைப் படைப் பிரிவுகளுடன் இந்தியா வகுத்த முறையில் பரவியது, ஒவ்வொரு நாட்டிலும் சதுரங்க விளையாட்டில் பிரசித்தி பெற்றவர்கள் அரண்மனை மண்டபங்களில் மன்னர்களால் பாராட்டப்பட்டனர்.

1886-ம் ஆண்டு முதல் உலக சதுரங்க அமைப்பு என ஒன்று ஆரம்பிக்கப்பட்டு, அதன் கீழ் பல நாடுகளில் உள்ள சதுரங்க வல்லுநர்கள் போட்டியிட்டுப் படிப்படியாக முன்னேறி, கடைசியாக இருவர் ஆடும் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறுபவர் உலகச் சதுரங்க முதன்மையானவராகப் பட்டம் சூட்டப்பட்டார்.

இரண்டாவது உலகப் போருக்குப் பின், 1948-1972 காலத்தில் ரஷியர்கள் முதலிடத்தை வகித்தனர். ஆதன் பிறகு அமெரிக்காவின் பாபி பிஷர் மூன்றாண்டுகள் முதலிடம் பெற்றார். 1975 முதல் 2000 வரை ரஷியாவைச் சேர்ந்தவர்கள் மீண்டும் முதலிடத்தைப் பெற்றனர்.

2000-ம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் உலகச் சதுரங்கப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றார். இந்தியாவில் தொடங்கிய சதுரங்க விளையாட்டில் இந்தியாவைச் சேர்ந்தவர் உலக முதலிடத்தைப் பெற்றது ஆனந்த் மூலமாகத்தான்.

தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் 1969 டிசம்பர் 11-ல் விஸ்வநாதன் - சுசீலா தம்பதியரின் மகனாக ஆனந்த் பிறந்தார். சிறு வயதிலேயே அவருடைய தாய் சதுரங்க ஆட்டத்தை அவருக்குக் கற்றுக் கொடுத்தார். பள்ளிப் பருவத்திலேயே சதுரங்க விளையாட்டில் ஆழ்ந்த தேர்ச்சி பெற்றவராக, கடுமையான போட்டிகளில் எளிதாகப் பரிசுகள் பலவற்றை அவர் தட்டிச் செல்ல ஆரம்பித்தார்.

சென்னையில் டான் பாஸ்கோ பள்ளியிலும், பிறகு லயோலா கல்லூரியிலும் அவர் படித்தார். அப்பொழுதும் அவருடைய சதுரங்க விளையாட்டுத் திறமை பலரும் பாராட்டும் அளவுக்கு வளர்ந்து வந்தது. 15-ம் வயதில் உலக முதல்வர் என்ற தகுதியைப் பெற்றார், 16-வது வயதில் இந்திய தேசிய சதுரங்கப் போட்டியில் முதலிடத்தை அடைந்தார், 1987-ல் 17-வது வயதில் உலக இளைஞர் (ஜூனியர்) சதுரங்கப் போட்டியில் வெற்றிபெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது. அதற்கு அடுத்த ஆண்டில் உலக அளவில் மாமுதல்வர் என்ற பட்டத்தைப் பெற்ற முதல் இந்தியராக அவர் ஆனார்.

1993 முதல் 2000 வரை உலகச் சதுரங்கப் போட்டிகளில் பிரசித்திபெற்ற சதுரங்க மேதைகள் பலரை அலைமோதச் செய்யும் அளவுக்கு ஆனந்த்தின் திறமை வேகமாக வளர்ந்துவிட்டது.

2000-ம் ஆண்டு டெஹ்ரான் நகரில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் ரஷியக் கூட்டாட்சியைச் சேர்ந்த லாட்வியா பகுதியில் பிறந்து பிறகு ஸ்பெயின் நாட்டுக் குடிமகனாக ஆன அலெக்சி ஷிராவ் என்பவருடன் இறுதிக் கட்டத்தில் ஆனந்த் விளையாடினார். எதிர்ப்பட்ட அலெக்சி ஷிராவை 3.5 - 0.5 என்ற வலிவான முறையில் தோற்கடித்து, உலக சதுரங்க முதன்மையாளராக ஆனந்த் ஆனார். சதுரங்கப் போட்டியில் உலக முதன்மையாளர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஆனந்த் அடைந்தார்.

ஆயினும், 2002 உலகச் சதுரங்கப் போட்டியில் அரையிறுதிக் கட்டத்தில் ஆனந்த் தோல்வி அடைந்தார், இருப்பினும் மனம் தளராமல், தொடர்ந்து ஊக்கத்துடன் வளர்ச்சி அடைந்து, 2007-ல் உலகச் சதுரங்க முதன்மையாளராக ஆனந்த் ஆனார்.

2008-ல் நடைபெற்ற போட்டியில் ரஷியாவைச் சேர்ந்த விளாடிமிர் கரமிக்கைத் தோற்கடித்து தமது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். 2010-ல் நடைபெற்ற உலகப் போட்டியில் பல்கேரியாவின் வெசலின் டோபலாவைத் தோற்கடித்து, உலகச் சதுரங்க விளையாட்டு அரங்கில் தனிப்பெரும் மாமன்னராக முதலிடத்தில் ஆனந்த் இருக்கிறார்.

சதுரங்க ஆட்டத்தில் உலகப் புகழும் முதலிடமும் பெற்ற ஆனந்தைப் பாராட்டும் வகையில் சிறப்பு டாக்டர் பட்டம் தர, ஐதராபாத் பல்கலைக் கழகம் முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை கடந்த ஓராண்டு காலமாக மேற்கொண்டது. ஆனந்த்தின் ஒப்புதலையும் பெற்று, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், நிர்வாக மேற்பார்வை அமைப்பினர்களும், ஆனந்த்துக்கு 2010 ஆகஸ்ட் 23-ல் ஒரு சிறப்புப் பட்டமளிப்பு விழாவுக்கு ஏற்பாடும் செய்துவிட்டனர். ஆனால், இதற்கு இடையில் எதிர்பாராத ஓர் இடையூறு குறுக்கிட்டது.

ஐதராபாத் பல்கலைக் கழகம் ஒரு மத்தியப் பல்கலைக் கழகமாக மத்திய அரசாங்கத்தினரால் உருவாக்கப்பட்டது. அதனால், சிறப்புப் பட்டங்களைத் தருவதற்கான ஏற்பாட்டுக்கு மத்திய கல்வி அமைச்சகரத்தின் அனுமதியைப் பெற வேண்டும். உலகப் புகழ்பெற்ற ஆனந்த்துக்கு டாக்டர் பட்டம் தருவதற்கான விவரங்களை மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே மத்திய கல்வி அமைச்சரகத்துக்கு ஐதராபாத் பல்கலைக் கழகத் துணைவேந்தர் அனுப்பிவிட்டார். அனுமதி கிடைப்பதில் சிக்கல் எதையும் யாரும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் முறையான அனுமதியை விரைவுபடுத்தும்படி பல்கலைக் கழகம் கடிதங்களையும், வேண்டுகோள்களையும் அடிக்கடி அனுப்பியபடி இருந்தது.

இடையில் மத்திய கல்வி அமைச்சரக அதிகாரி ஒருவருக்கு ஓர் ஐயப்பாடு தோன்றியதாம். விஸ்வநாதன் ஆனந்த் இந்தியரா என்ற கேள்வி எழுந்தது. உடனே அங்கிருந்த கல்வி நிபுணர்கள் அது பற்றி ஆராய ஆரம்பித்தார்கள். வெளிநாட்டுக்காரருக்குப் பட்டம் தருவதென்றால், வெளிவிவகார அமைச்சரகத்தின் ஒப்புதலையும் வாங்கவேண்டும் என்று மற்றோர் அரசாங்க விதிமுறை உள்ளது.

இந்தியக் குடியுரிமை பற்றிய விவகாரம் எழுந்ததும், ஆனந்தின் மனைவி அருணா ஆனந்த், கணவரின் பாஸ்போர்ட் பக்கங்களின் நகல்களை அனுப்பி வைத்தார். அத்துடன் உலகக் கணித மாநாடும் ஐதராபாத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனந்த்துடன் ஹார்வார்டு பல்கலைக் கழகத்தின் கணிதப் பேராசிரியர் டேவிட் மம்போர்டுக்கும் சேர்த்து சிறப்பு டாக்டர் பட்டங்களை அளிக்க ஐதராபாத் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்தது. அதில் கலந்துகொள்ளும் கணிதப் பேராசிரியர்கள் 40 பேருடன் தொடர்ச்சியாக ஆனந்த் சதுரங்கம் ஆடுவதற்கும் நாள் ஒதுக்கப்பட்டது.

ஆகஸ்ட் 23 ஞாயிறு அன்றே ஆனந்த், மம்போர்டு இருவரும் ஐதராபாத் வந்துவிட்டனர். மறுநாள் பல்கலைக் கழகச் சிறப்பு டாக்டர் பட்டங்களை வழங்க ஐதராபாத் பல்கலைக் கழகம் தயாராகிவிட்டது, பட்டம் பெறுபவர்களும் வந்துவிட்டனர். ஆனால், ஞாயிறு இரவு வரை மத்திய கல்வி அமைச்சரகத்தின் அனுமதி மட்டும் வரவில்லை. தில்லியில் ஞாயிறு. பிறகு திங்கள் (ஓணம்,) செவ்வாய் (ரக்ஷô பந்தன்) விடுமுறை நாள்கள். மூன்று மாதங்கள் தூங்கிக் கிடந்த அமைச்சரகம் மூன்று நாள்களில் விழித்துக் கொள்ளுமா? அனுமதி வரவில்லை என்பதால், சிறப்புப் பட்டம் அளிப்பது நின்றது. திங்கள்கிழமை தனது விடுதியில் ஆனந்த் ஓய்வு எடுத்துக்கொண்டார்.

எதனையும் பொருள்படுத்தாமல், தாம் ஏற்றுக்கொண்டபடி 40 கணிதப் பேராசிரியர்களுடன் ஒருங்கிணைந்த தொடர் சதுரங்க ஆட்டங்களை செவ்வாய்க்கிழமை அன்று ஆனந்த் நடத்தினார்.

ஆனந்த்துக்குச் சிறப்புப் பட்டம் வழங்கும் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா நிறுத்தப்பட்டுவிட்டது என்ற செய்தி நாடெங்கும் பரவியது. பரவலாகக் கண்டனக்குரல்கள் எழுந்தன.

வெளியில் கிளம்பிய கூக்குரல்களின் ஓசை கேட்டு, உறங்கிக்கிடந்த கல்வி அமைச்சரகம் கண்விழித்தது. நடந்த தவற்றுக்கு மன்னிக்கும்படி மத்திய கல்வி அமைச்சர் கபில்சிபல், ஆனந்த்திடம் மன்னிப்புக் கேட்டார். ஏதோ நடந்தது நடந்துவிட்டது அதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று பெருந்தன்மையுடன் ஆனந்த் அமைதியாக இருந்தார்.

ஆனந்த்திடம் மட்டுமல்ல, இந்திய மக்களிடமும் மத்தியக் கல்வி அமைச்சர் மன்னிப்புக் கோர வேண்டும். நீங்கள் அவமதித்தது தனிப்பட்ட ஒருவரை மட்டுமல்ல; கோடானு கோடி இந்திய மக்களை, இந்தியாவை!

ஆனந்த் இந்தியரா என்ற கேள்வி ஏன் எழுந்தது என்பது தெரியவில்லை. சதுரங்கச் சக்ரவர்த்தி ஆனந்த் பற்றி கணிப்பொறியில் ஒரு தட்டுத் தட்டினால் அவருடைய வாழ்க்கை வரலாறு பல பக்கங்களுக்கு வருகின்றனவே! அவர் பிறந்த இடம், படித்த இடம் எல்லாம் தமிழ்நாட்டில்தானே! தமிழ்நாட்டையே வேறு நாட்டாருக்குத் தாரை வார்த்து விட்டார்களா?

1987-ல் ஆனந்துக்கு பத்மஸ்ரீ பட்டத்தை இந்திய அரசாங்கம் வழங்கியது. 1991-ல் அவருக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. 2000-ம் ஆண்டில் பத்மபூஷண் வழங்கியது.

தாம் கலந்துகொள்ளும் ஓவ்வோர் உலகப் போட்டியிலும் இந்திய தேசியக் கொடியை முன்வைத்து இந்தியாவுக்காக வெற்றிகளைக் குவித்தவர். அவருக்கு இந்திய அரசாங்கம் செய்த பெருமை, மரியாதை இவ்வளவுதான்.

சிலருக்குப் பட்டம் கிடைப்பதால் பெருமை வரலாம். ஆனால், சிலருக்குப் பட்டம் தருவதால், தரும் அமைப்புக்குப் பெருமை கிடைக்கலாம். அந்தப் பெருமையை அடைய விரும்பிய ஐதராபாத் பல்கலைக் கழகத்தை மத்திய அரசு அவமானப்படுத்திவிட்டது.

இந்தியா என்ற பாரத் என்ற உத்தரப்பிரதேசம் என்று முன்பு பலர் கூறியிருக்கிறார்கள். இப்பொழுது அதையும் தாண்டி இந்தியா என்ற பாரத் என்ற உத்தரப்பிரதேசம் என்ற டெல்லி என்று ஆகிவிட்டதா? தெற்கு வாழ்கிறது. அதைச் சகிக்க வடக்கு மறுக்கிறது. இந்தத் தவறுக்கு மன்னிப்பு கேட்டால் மட்டும்போதாது. அமைச்சர் கபில் சிபிலும் அவரது அமைச்சரகத்தின் பொறுப்பான உயர் அதிகாரிகளும் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவரவர் மனசாட்சியையே கேட்டுக் கொள்ளட்டும்!
கட்டுரையாளர் : இரா.செழியன்
நன்றி : தினமணி

Wednesday, August 25, 2010

முதல்வரின் மனு நீதி

இந்திய நிர்வாக அமைப்பு எஃகு அமைப்பு என ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது. அறிவுக் கூர்மையும், நிர்வாகத் திறனும் நிறைந்த இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐ.சி.எஸ். தேர்வுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டார்கள். ஐ.சி.எஸ். பயிற்சிக்கான கல்லூரி லண்டனில் மட்டுமே இருந்தது. தொடக்கக் காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே இதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.

இந்திய வைசிராயின் நிர்வாகக்குழு, மாநில ஆளுநர்களின் நிர்வாகக் குழு மற்றும் மத்திய, மாநில அரசுகளின் தலைமைச் செயலகங்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நீதிபதிகள் போன்ற உயர் பதவிகளுக்கு இவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். இவர்களின் கீழ் உள்ள வேலைகளுக்குத் தேவையானவர்களை இங்கிலாந்திலிருந்து கொண்டுவர முடியாது. எனவே அதற்கேற்றவர்களை இந்தியாவில் உருவாக்குவதற்காகத்தான் மெக்காலே கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது.

முதலாம் உலகப் போர் வரை இந்தியர்கள் யாரும் ஐ.சி.எஸ். படிக்க அனுமதிக்கப்பட்டதில்லை. அதற்குப் பிறகே இந்தியர்கள் இப்பயிற்சிபெற அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், மிக உயர்ந்த அதிகாரப் பொறுப்பில் ஆங்கிலேயர்கள் மட்டுமே நீடித்தார்கள்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நலனைப் பாதுகாப்பதற்கும், அரசுக்கெதிரான கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்கும் இவர்கள் சிறப்பான பயிற்சி பெற்றிருந்தனர். ஆனாலும் இந்தியா முழுவதிலும் முழுமையான நிர்வாக இயந்திரம் டெல்லி முதல் குக்கிராமம் வரை பிசிரின்றி இயங்கியது. வெள்ளையர்கள் வெளியேறும் போது இந்த நிர்வாக இயந்திரம் சீராக இயங்கியதால்தான் இளம் சுதந்திர அரசு சிக்கலின்றி செயல்பட முடிந்தது.

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையையொட்டி நாட்டின் பல பகுதிகளில் மூண்டெழுந்த மதக் கலவரங்கள், 500-க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்களை இணைக்கும் முயற்சி, ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றும் திறன் போன்ற முக்கியமான பிரச்னைகளை இந்த நிர்வாக இயந்திரத்தின் துணைக்கொண்டு சுதந்திர இந்திய அரசும், மாநில அரசுகளும் வெற்றிகரமாக சமாளித்தன.

மத்திய உள்துறை அமைச்சராக வல்லபாய் படேல் இருந்த காலத்தில் ஐ.சி.எஸ்.க்குப் பதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சிக் கல்லூரிகளைத் தொடங்கி சுதந்திர இந்தியாவில் புதிய சூழ்நிலைக்கேற்ப அதிகாரிகளை உருவாக்கும் திட்டத்தை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்தே ஆங்கிலேய அதிகாரிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தியாவில் உள்ள சகல மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்றவற்றில் தேர்ச்சி பெற்று அதிகாரிகளாகப் பொறுப்பேற்றனர்.

அதே வேளையில் மத்திய அரசிலும், மாநில அரசிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். நாடாளுமன்ற ஜனநாயக முறையில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றங்களிலும் இடம் பெற்றார்கள். இந்த புதிய சூழ்நிலையில் அதிகார வர்க்கத்கும், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்குமிடையே உள்ள உறவு குறித்து சிக்கல் ஏற்படாத வகையில் செயல்படவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. பிரதமராக இருந்த நேரு அவர்களும், தமிழக முதலமைச்சர்களாக இருந்த ராஜாஜி, காமராஜர் போன்ற பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கும் அரசு நிர்வாகத்தில் கட்சியினர் தலையீடு செய்வதை ஒரு போதும் அனுமதிக்கவில்லை. சில வேளைகளில் கட்சியினர் நிர்வாகத்தில் குறுக்கீடு செய்தபோது உடனடியாகத் தலையிட்டு அவர்களைத் தண்டிக்கத் தவறியதில்லை.

மக்கள் பிரச்சனைக்களுக்காக அதிகாரிகளை அணுகுவதைத் தவறாகக் கருதவில்லை. ஆனால் சட்டத்திற்குப் புறம்பானதும், நியாயமற்றதுமான பரிந்துரைகளுக்காக அதிகாரிகளை அணுகுவதை ஒருபோதும் அனுமதிக்கவில்லை.

எடுத்துக்காட்டாக சென்னையில் பருத்திச் சூதாட்டம் என்ற பெயரில் ஏழை அப்பாவி மக்கள் மோசடி செய்யப்பட்டதையும், கோவையில் பெரும் தொழிலதிபர் ஒருவர் கள்ளநோட்டு அச்சடித்துப் புழக்கத்தில் விட்டதையும் குறித்து உயர் போலீஸ் அதிகாரியாக இருந்த எப்.வி. அருள் மிகத் திறமையாகப் புலனாய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மிகமிகச் செல்வாக்குப் படைத்தவர்களாக இருந்தும் கொஞ்சமும் தயங்காது அவர்களைக் கைது செய்தார். முதலமைச்சராக இருந்த காமராஜருக்கு பல்வேறு வகையான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டபோதிலும் அவர் அருள் எடுத்த நடவடிக்கைகளில் கொஞ்சமும் தலையிடவில்லை. முதலமைச்சரின் நேர்மை அவரின் கீழிருந்த அதிகாரிகளையும் நேர்மையாக்கி திறமையுடன் செயல்பட வழிவகுத்தது.

இன்னும் எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். ஆனால், இன்று நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப்படுகிறார்கள். அறிவாற்றலும் திறமையும் நிறைந்த இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், தேர்வுகளில் கலந்து கொண்டு மிகக் கடுமையாக வடிகட்டப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரிகளாக வருகிறார்கள். ஆனால் அவர்களை அரசியல் மலைப் பாம்புகள் சுற்றி வளைத்து மிரட்டுகின்றன.

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் நிர்வாகம் முழுமையாகக் கட்சிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அமைச்சர்களும், மாவட்டச் செயலர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் - தங்கள் விரும்பியபடியெல்லாம் அரசு அலுவலர்களை ஆட்டிப் படைக்கின்றனர்.

முதலமைச்சரின் குடும்பத்திலிருந்தும், அமைச்சர்களின் குடும்பங்களிலிருந்தும் பல அதிகார மையங்கள் அதிகாரிகளை ஆட்டிப் படைக்கின்றன. இதன் விளைவாக அரசு நிர்வாக இயந்திரம் சீரழிந்து போய்க் கிடக்கிறது. இதன் காரணமாக பல அதிகாரிகள் அமைச்சர்களின் விசுவாசிகளாக கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்களாக மாறியதன் விளைவாக நிர்வாக இயந்திரம் பிளவுபட்டுக் கிடக்கிறது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பதவி உயர்வு, வேலை மாறுதல் போன்றவை முறைப்படி நடைபெறுவதில்லை. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப நடைபெறுவதால் பெரும்பாலான அதிகாரிகள் எதிர்த்து நிற்க முடியாமல் பணிந்து விடுகிறார்கள். ஊழலுக்குத் துணைபோகிறார்கள். நாளடைவில் அவர்களும் ஊழல்வாதிகளாக ஆகிவிடுகின்றனர். நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் அதிகாரிகள், முதுகெலும்பில்லாமல் வளைந்து கொடுக்கவேண்டிய நிலைமைக்கு ஆளாக்கப்பட்டுவிட்டனர்.

ஊழலுக்குத் துணை நிற்காத அதிகாரிகள் திட்டமிட்டுப் பழிவாங்கப்படுகிறார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக உமாசங்கர், ஐ.ஏ.எஸ். திகழ்கிறார். மதுரை மாவட்டத்தில் 1991-1996 வரை அ.தி.மு.க. ஆட்சியின்போது கிராமங்களில் சுடுகாட்டுக் கூரைகள் அமைக்கப்பட்டதில் பெருமளவில் ஊழல் நடைபெற்று இருப்பதை அப்போதைய துணைக் கலெக்டரான உமாசங்கர் கண்டுபிடித்தார். இந்த ஊழலில் அப்போது அமைச்சர்களாக இருந்த செல்வகணபதி, ஈஸ்வரமூர்த்தி, ஊரகவளர்ச்சித் துறைச் செயலர் ஆச்சாரியலு மற்றும் பல அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருப்பதாக சி.பி.ஐ. கண்டுபிடித்தது. இந்த ஊழலைக் கண்டுபிடித்த உமாசங்கரைப் பாராட்டிப் பரிசு வழங்க வேண்டிய தி.மு.க. அரசு அவர் மீதே ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி தாற்காலிக வேலை நீக்கம் செய்துள்ளது.

கடந்த இரு ஆண்டுகளில் தி.மு.க. அரசின் பல துறைகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளை இவர் கண்டுபிடித்ததால் அடிக்கடி வெவ்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்து பழிவாங்க முயன்றது. எந்தத் துறைக்கு மாற்றினாலும் அத்துறையில் ஊழல்களை அம்பலப்படுத்தும் பணியினை இவர் தொடர்ந்தார். எனவே வேறு வழியில்லாமல் இவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பழிவாங்க அரசு முற்பட்டுள்ளது.

சுடுகாட்டுக்கூரை ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் செல்வகணபதி இப்போது தி.மு.க.வில் தஞ்சம் புகுந்து தி.மு.க.வின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்னமும் நடைபெற்று வருகிறது. முக்கிய சாட்சியான உமாசங்கர் மீதே ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டால் அவரது சாட்சியம் நம்பத்தகாதது ஆகிவிடும் என்பதற்காக இந்தப் பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கக்கூடும்.

மத்திய அமைச்சர் ஆ. ராசா மீது ஒரு லட்சம் கோடி ரூபாய் பெறுமான ஊழல் குற்றம் சுமத்தப்பட்டபோது அவர் ஒரு தலித் என்பதால்தான் பழிவாங்கப்படுகிறார் என வக்காலத்து வாங்கும் முதல்வர் கருணாநிதி தனது அரசின் ஊழலை மறைக்க தலித் அதிகாரியான உமாசங்கரை பழிவாங்கத் துடிப்பது என்ன நியாயம்?

சென்னை உயர் நீதிமன்றத்துக்குள் புகுந்து நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும், மிகக் கொடுமையான முறையில் தாக்கிய காவலர்களை ஏவிய சென்னை மாநகரக் கூடுதல் ஆணையர், இணை ஆணையர் ஆகியோரைப் பதவி இடைநீக்கம் செய்யவேண்டுனெ உயர் நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் அவர்களைக் காப்பாற்றும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் முறையிட அனுமதித்துள்ள முதலமைச்சர், குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் உறுதி செய்யப்படாத நிலையில் உமாசங்கரை மட்டும் இடைநீக்கம் செய்தது ஏன்?

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்திய அரசின் நேரடி நிர்வாகத்திற்கு உள்பட்டவர்கள். இவர்களின் பதவிக்காலப் பதிவேடு மத்திய உள்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

எனவே உமாசங்கர் மீது தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும், தமிழக அரசு மீது உமாசங்கர் சாற்றியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் முன்வர வேண்டும். அதற்குரிய துணிவும், நேர்மையும் அவருக்கு இருக்குமா? கூட்டணி நிர்பந்தங்கள் மத்திய அரசின் கண்ணை மறைக்காமல் இருக்குமா?

தன்னை நல்லாட்சிக்குச் சரித்திரம் படைத்த சோழப் பேரரசர்களுடன் ஒப்பிட்டு தனக்குத்தானே புகழாரம் சூட்டி மகிழ்ந்து கொள்ளும் முதலமைச்சர் கருணாநிதி, உண்மையிலேயே மனுநீதிச் சோழனாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. தனக்கும், தனது குடும்பத்தினருக்கும், தனது கட்சியினருக்கும் ஒரு நீதியும், மற்றவர்களுக்கு வேறொரு நீதியும் வழங்கிச் சரித்திரம் படைத்திருப்பார் என்று நம்பலாம். பாருங்களேன், கட்சிக்காரரான "தலித்' அமைச்சர் ஆ. ராசாவுக்கு ஒரு நீதி, தனது குடும்பத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்குத் தொந்தரவாக இருந்த "தலித்' அதிகாரி உமாசங்கருக்கு ஒரு நீதி என்பதுதானே தமிழக முதல்வரின் மனு நீதி...?
கட்டுரையாளர் : பழ.நெடுமாறன்
நன்றி : தினமணி

Monday, August 16, 2010

காஷ்மீர்: பிரதமர் முனைப்புக் காட்டுவாரா?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக நடந்துவரும் வன்முறைப் போராட்டங்களால் அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவது, தில்லியில் ஆளும் அதிகார வட்டத்தினருக்குப் பெருங்கவலையை அளித்துள்ளது. இதுவரை இல்லாத அளவு அங்கு நிலைமை மோசமாக இருப்பதைப் பரவலாக அனைத்து அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்களும் ஒப்புக்கொள்கின்றனர். 1989-ல் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் "ஆஸôதி' கோஷம் முதன்முதலாக எழுந்தபோது இருந்த நிலைமையைவிட இப்போது நிலைமை படுமோசமாக இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.

பெண்கள் உள்பட பெரும்பாலானவர்கள் வீதிகளில் திரண்டு பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசித் தாக்குவதிலிருந்து அவர்களின் கோபத்தின் ஆழத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. அசம்பாவித சம்பவங்களில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களை முதல்வர் ஒமர் அப்துல்லா சென்று பார்த்தபோது, முதல்வரின் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்துக் கேள்வி கேட்டுள்ளார் ஒரு பெண். இதிலிருந்தே காஷ்மீர் மக்களின் மனநிலை என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

நான்காம் தலைமுறையைச் சேர்ந்த காஷ்மீரி இளைஞர்கள் பெரும் அளவில் திரண்டு, தடையை மீறி வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை யார் பின்னிருந்து இயக்குகிறார்கள் என்பது தெரியவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் காரணமா? அல்லது பிரிவினைவாதிகள் காரணமா? அல்லது நமது அண்டை நாடான பாகிஸ்தான் காரணமா? என்பது புரியவில்லை. எனினும் காஷ்மீர் பள்ளத்தாக்கில், தற்போது நடைபெற்று வரும் சம்பவங்களால், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க பாகிஸ்தான் முயல்வது மட்டும் தெளிவாகிறது.

தற்போதைய நெருக்கடிக்கு என்ன காரணம் என்று கேட்டால், அனைத்து நிலைகளிலும் தலைமை சரிவர செயல்படத் தவறிவிட்டது என்றே சொல்லலாம். மக்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன செய்தால் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்பதை உரிய நேரத்தில் தெரிவிக்கும் தலைவர்கள் இல்லாததும் இதற்குக் காரணமாகச் சொல்லலாம்.

கடந்த தேர்தலுக்குப் பிறகு பிரச்னைகளுக்கு அரசியல் ரீதியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஆனால், இதை தில்லியில் உள்ள தலைவர்களோ, ஸ்ரீநகரில் உள்ள ஆட்சியாளர்களோ புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து கூட்டணி அரசை நிறுவின. உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி அதிகாரப் பகிர்வுக்கு வழிசெய்து அதன் மூலம் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த மாநில அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்து, எங்கே எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி வலுப்பெற்றுவிடுமோ என்ற பயம்தான் இதற்குக் காரணம். மாநில அரசு சரிவர செயல்படாததால் மக்கள் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.

மாநில அரசுக்கு எதிராக இளைஞர்கள் கிளர்ந்து எழுந்துள்ள நிலையில், அந்தச் சந்தர்ப்பத்தை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முயன்று வருகிறார் ஹுரியத் பிரிவினைவாத அமைப்பின் தலைவரும், பாகிஸ்தான் ஆதரவாளருமான சையத் அலி ஷா கிலானி. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, சிறையில் இருக்கும் கிலானியுடன் மாநில அரசு நிர்வாகம் பேச்சு நடத்தும் அளவுக்கு நிலைமை அங்கு முற்றிவிட்டது. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், கிலானியுடன் பேச்சு நடத்த முயன்றும் அவர் அதை நிராகரித்துவிட்டார். கிலானியைப் போல மஸôரத் ஆலம், ஆஸிய ஆந்திரபி போன்ற தீவிரவாதத் தலைவர்களும் இப்போது காஷ்மீர் விவகாரத்தில் தலைகாட்டத் தொடங்கியுள்ளனர்.

காஷ்மீர் முதல்வராக ஓமர் அப்துல்லா பொறுப்பேற்றபோது, இளம் தலைவர், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர், எதையும் சிந்தித்துப் பார்த்துச் செயல்படக்கூடியவர் என்ற எண்ணம் மக்கள் மனதில் இருந்தது. ஆனால், ஒமர் அப்துல்லா, தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை சரிவர பயன்படுத்திக்கொள்ளவில்லை. 2009-ம் ஆண்டு காஷ்மீர் பெண்கள் இருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தபோது மக்கள் போராட்டம் வெடித்தது. ஆனால், நிலைமையை உணர்ந்து துரிதமாகச் செயல்பட முதல்வர் ஒமர் தவறிவிட்டார். இதேபோல கடந்த ஜூன் 11-ம் தேதி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 17 வயது இளைஞர் டஃபைல் மட்டூ உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போதும் பிரச்னை என்ன என்பதை அறிந்து அதற்குத் தீர்வுகாண ஒமர் அப்துல்லா தவறிவிட்டார். இதையடுத்து வன்முறையும் போராட்டமும் தொடர்கதையாகிவிட்டது.

தற்போதைய நிலைமையை முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சியும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நிற்கும் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு உதவவும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி தயாராக இல்லை. இது தொடர்பாக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. முதல்வர் ஒமர் அப்துல்லாவுடன் சேர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கும் திட்டமும் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு மாற்றாக மக்கள் ஜனநாயகக் கட்சி உருவானபோது மக்கள் பிரச்னைகளைத் தேசிய அளவில் எடுத்துச் செல்ல புதிய அரசியல் கட்சி உருவானதாகவே மக்கள் நம்பினார்கள். ஆனால், அவற்றின் செயல்பாடு எதிர்பார்த்த அளவு இல்லை.

வன்முறை ஆர்ப்பாட்டத்தின்போது பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில், 8 முதல் 15 வயது வரையிலான சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கல்வீச்சிலிருந்து பாதுகாத்துக் கொள்ளத்தான் சுட்டதாக போலீஸôர் கூறினாலும், நிலைமையைச் சமாளிக்க அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லையா? இது விஷயத்தில் போலீஸ் துறை சரிவர செயல்படத் தவறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். போராட்டத்தின் போது இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபடுவதைத் தவிர்க்க புதிய உத்திகளைப் பாதுகாப்புப் படையினர் கையாள வேண்டுமே தவிர, அதற்காக கண்மூடித்தனமான அடக்குமுறையைக் கையாளக்கூடாது.

பிரச்னைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண்பதில் அரசு உறுதியாக இருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்தாலும், குதிரையை லாயத்தில் கட்டிவிட்டு கதவையும் இழுத்துப் பூட்டியதுபோல் அவரது பேச்சு உள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், ஜம்மு காஷ்மீர் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் நபராவார்.

கடந்த காலங்களில் காஷ்மீர் பிரச்னை தலைதூக்கிய போதெல்லாம் அதைச் சமாளிக்கப் பின்னாலிருந்து செயல்பட்டவர் அவர். பிரதமர் ஆவதற்கு முன் ஒரு சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்தியவர்.

இப்போது இரண்டாவது முறையாக மன்மோகன் பிரதமராகியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதிலும், காஷ்மீர் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வுகாணவும் அவருக்கு மீண்டும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

ஆனால், இன்று நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சிலைகள் போல் வாய் பேசாமல் மௌனமாக இருக்கிறார். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆராய பணிக்குழுவை பிரதமர் நியமித்திருந்தார். மத்திய அரசும் அக்குழு அளித்துள்ள பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது. ஆனால், அவற்றைச் செயல்படுத்தத்தான் முன்வரவில்லை.

காஷ்மீரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, வன்முறை வெடித்து தடியடி, துப்பாக்கிச்சூடு நடந்து ஏராளமான இளைஞர்கள் உயிரிழந்தபோதிலும், பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து அதற்குத் தீர்வுகாண பிரதமர் அலுவலகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இப்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் கருத்துத் தெரிவித்துள்ளார். இதற்கு பா.ஜ.க. எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. நிலைமையை எப்படி பிரதமர் சமாளிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை.

1990-ம் ஆண்டு வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது ஸ்ரீநகருக்குச் சென்றார். பயங்கரவாதிகளுடன் பேசி அவர்களை ஜனநாயகப் பாதைக்கு அழைத்து வருவதை நோக்கமாகக் கொண்டே வி.பி.சிங் அங்கு சென்றார். ஸ்ரீநகரில், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வி.பி.சிங்கை சந்தித்துவிட்டுச் சென்றனர். ஷபீர் ஷா, தேநீர் விருந்துக்கு வருமாறு வி.பி.சிங்கை அழைத்தார். இதற்கு அவரும் ஒப்புக்கொண்டார்.

வி.பி.சிங், ஷபீர் ஷா வீட்டுக்குச் செல்லவிருந்த சில மணி நேரங்களுக்கு முன் அவரிடம் புலனாய்வுத் துறை போலீஸôர், "நீங்கள் அந்த இடத்துக்குச் செல்லவேண்டாம். அப்பகுதியைச் சுற்றிலும் வெடிமருந்துகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கிறோம்' என்று கூறினர். ஆனால், வி.பி.சிங், உடனடியாக அவற்றை அகற்ற உத்தரவிட்டார். இரண்டு மணிநேரத்தில் அவை அகற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து ஷபீர் ஷாவை சந்தித்தார் வி.பி.சிங். பின்னர் வி.பி.சிங் தனது சகாக்களிடம், பிரதமராகிய நான் ஷபீர் ஷாவுடன் தேநீர் அருந்துவதாகக் கொடுத்த வாக்கை காப்பாற்றாவிட்டால் காஷ்மீர் மக்கள் என்னை பிற விஷயங்களில் எப்படி நம்புவார்கள் என்று கேட்டார்.

இப்போது நிலைமை என்ன?

மத்திய அரசும், மாநில அரசும் துரிதமாகச் செயல்பட்டு காஷ்மீரில் அமைதி திரும்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். மத்திய அரசு எம்.பி.க்கள் குழுவை அங்கு அனுப்பி உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும். காஷ்மீர் விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிகளுடன் குறிப்பாக பாஜகவுடன் விவாதித்து ஒருமித்த கருத்தை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும். ஆனால். இப்போதைய தேவை காஷ்மீர் மக்களின் வலியை இதர மாநிலத்தவர்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பதுதான்!

கட்டுரையாளர் :நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி

Sunday, August 15, 2010

கைவரிசை காட்டும் கரையான்கள்!

அண்மைக்காலமாக லஞ்சம் வாங்கியதாக அரசு அலுவலர்கள் கைது செய்யப்படுவது செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் அடிக்கடி இடம்பெறும் செய்தியாகிவிட்டது. லஞ்சம் தொடர்பாக எப்போதாவது ஒருவர் பிடிபட்ட காலம்போய் இன்று தினம் ஒருவர் கைதுசெய்யப்படும் நிலை. ஆடிய காலும் பாடிய வாயும் சும்மாயிருக்காது என்பதுடன் இனி வாங்கிய கையும் சும்மாயிருக்காது என சேர்த்துக் கொள்ளலாம்.

லஞ்சம் வாங்கியவர்களைப் பட்டியலிட்டுப் பார்த்தால், இந்தத் துறைதான் என்பது இல்லாமல் லஞ்சம் அனைத்துத் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பது புரியும்.

தங்கள் தேவைகளுக்காக அரசு அலுவலகங்களை அணுகும் பொதுமக்கள் லஞ்சம் கொடுக்க இயலாமலோ, விரும்பாமலோ ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினரிடம் புகார் செய்து, அத்தகைய ஊழியர்களைச் சிக்கவைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இது பொதுமக்களிடையே லஞ்சம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது. எனினும் லஞ்சம் கொடுப்பது தவறு என்னும் விழிப்புணர்வு முழு அளவில் ஏற்படவில்லை என்பதே உண்மை.

லஞ்சம் கேட்கும் அதிகாரிகளையோ, ஊழியர்களையோ காட்டிக் கொடுத்தால் தனக்கு ஆகவேண்டிய காரியம் தடைபட்டுவிடுமோ என்ற ஐயமும், அச்சமுமே மேலோங்க, எவ்வளவோ செலவாகிறது ஒரு ஐநூறு, ஆயிரம் கொடுப்பதால் நமது வேலை பிரச்னை இல்லாமல் முடிந்தால் சரிதான் என எண்ணும் பொதுமக்களாலேயே லஞ்சம் லஜ்ஜையின்றி முளைவிடத் தொடங்குகிறது. பிறகு அதை நீருற்றி, வாடவிடாமல் வளர்ப்பது அத்தகைய அலுவலர்களின் பணியாகிவிடுகிறது.

சமூகத்தின் அடித்தட்டில் அன்றாடம் பிடிசோற்றுக்கு ஏங்குவோர் ஐந்துக்கும் பத்துக்கும் அடிமைகளைப்போல உழைத்து ஓடாய்த் தேய்வதைப் பார்க்கலாம்.

ஆனால், அரசாங்கப் பணி கிடைத்துவிட்ட ஒரே காரணத்துகாக குளிரூட்டப்பட்ட அறையில் வியர்க்காமல் வேலைபார்க்கும் இவர்களுக்கு, அரசு பல்லாயிரக்கணக்கில் ஊதியத்தை அள்ளி வழங்கினாலும், சிறிதும் வெட்கமின்றி புன்னகை முகத்துடன் தலை சொறிந்தபடியோ, இறுகிய முகத்துடன் வலுக்கட்டாயமாகவோ லஞ்சம் பெறுவது தவறென்பது உரைப்பதில்லை.

லஞ்சம் வாங்கியதாகக் கைதாகும் பலரும் வறுமையில் வாடிக்கொண்டிருப்போராகத் தெரியவில்லை. சொந்த வீடு, மனை, கார் என சகல வசதியுடன் சமூகத்தில் நல்ல அந்தஸ்து உள்ளவர்களாகவே தென்படுகின்றனர். அவர்கள் லஞ்சம் வாங்கியே இவ்வளவு வசதிபெற்றனரா அல்லது உயரும் விலைவாசியைத் தான் மட்டுமன்றி, தனது பல தலைமுறையும் சமாளிக்க வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டத்துடன் லஞ்சம் வாங்கினரா என்பது முட்டையிலிருந்து கோழியா, கோழியிலிருந்து முட்டையா என்பதுபோல விடைதெரியாத கேள்வியாகிவிடும்.

ஆனால், இதுபோன்ற பேர்வழிகள் அனைவருமே நினைக்கும் ஒன்று, லஞ்சம் வாங்கினால் தாங்களும் கவலைகளின்றி ராசாபோல வாழலாம் என்பதே!

பலநாள் அதிர்ஷ்டம், ஒருநாள் துரதிர்ஷடமாக மாறிவிடும்போது அவர்கள் கைதுசெய்யப்படுகின்றனர். ஆனால், கைதாகி அழைத்துச் செல்லப்படும்போது சிலர் வெற்றிப்புன்னகை சிந்துவதைப் பார்க்கலாம். எப்படியும் வழக்கு தனக்குச் சாதகமாகவே முடியும், இறுதியில் "தர்மத்தின் வாழ்வுதன்னைச் சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வென்றது' என்ற டயலாக் பேச தனக்கும் ஒரு வாய்ப்புக் கிட்டும் என்பதாக இருக்கலாம்.

சிலரோ முகத்தை மூடியபடி செல்வதைப் பார்க்கலாம். அதற்கு, இந்தத் துறையில் இருந்துகொண்டு இவ்வளவு குறைந்த தொகைக்காக சிக்கிக் கொண்டோமே என்ற வெட்க உணர்வும் காரணமாக இருக்கலாம்.

"ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்' என்று கும்மியடிக்கக் கூறினான் எட்டையபுரத்து எரிமலை. இருபத்தியோராம் நூற்றாண்டில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேறிவிடுவர், லஞ்சம் வாங்குவதில் அவர்கள் 33 அல்ல, 50 சதவிகித பங்கு வகிக்கும் காலம் வரும் எனத் தெரிந்துதான் பாரதி இப்படி பாடினானோ?

லஞ்சம் வாங்கியதாகக் கைதுசெய்யப்படும் பலரையும் பத்திரிகைகளும், ஊடகங்களும் போட்டிபோட்டுக் கொண்டு அன்றைய தினத்தில் மட்டும் முடிந்தளவு முக்கியச் செய்தியாக்கிவிட்டு தொடரும் சில நாள்களில் மறந்துவிடுவதும் வாடிக்கையாகிவிட்டது. விளைவு, அந்த நபர் தன் மீதான குற்றச்சாட்டையோ, வழக்குகளையோ "எதிர்கொள்ளும்விதமாய்' எதிர்கொண்டு, சில நேரங்களில் அதே துறையிலோ, வேறு துறையிலோ பதவி உயர்வுடன் மீண்டும் மக்களுக்கு வழக்கம்போலப் பணியாற்றும் வாய்ப்புபெறும் அதிர்ஷ்டத்துக்கு உள்ளாகும் சம்பவங்களும் நிகழ்ந்துவிடுகின்றன. சிக்கிய லஞ்சப் பணம் சாட்சி சொல்ல வருவதில்லை. அதில் சிரித்தபடியிருக்கும் காந்தியும் சாட்சி சொல்ல வருவதில்லை.

அவர்கள் விஷயத்தில் ஒருவேளை "இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்' என்பது கடைப்பிடிக்கப்படுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

கைதாகும் ஊழியர்கள் மீது இடைநீக்கம், துறைரீதியான விசாரணை என்பன போன்ற நடவடிக்கைகள் எல்லாம் வெறும் கண்துடைப்போ என நினைக்க வைக்கத் தக்கவிதத்திலேயே அமைந்துள்ளன.

நேர்மையான விசாரணை, தாமதமில்லா தீர்ப்பு, சிறை, வேலைபறிப்பு போன்ற கடுமையான தண்டனைகளை அமல்படுத்தாதவரை லஞ்சம் வாங்குவோர் எதுகுறித்தும் கவலைப்படப்போவதில்லை.

அரசை ஒரு மரம் எனக் கொண்டால் அனைத்துத் துறைகளும் கிளைகளுக்கு ஒப்பாகும். எல்லாக் கிளைகளிலுமே லஞ்சம் என்ற கரையான் தன் கைவரிசையைக் காட்டுவது இயற்கைதான். தாமதமின்றி நடவடிக்கை எடுத்து அவற்றை முற்றிலும் ஒழித்தால்தான் மரமும் வளம்பெறும்; மரத்தின் நிழலைப் பாதுகாப்பு என நம்பி நிற்கும் மக்களும் நிம்மதியாய் நலம்பெறுவர்!
கட்டுரையாளர் :மா. ஆறுமுககண்ணன்
நன்றி : தினமணி

Wednesday, January 27, 2010

அமைதிப் பேச்சில் அர்த்தம் இல்லை

இந்தியா, பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது தொடர்பாக இருநாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், அறிவுஜீவிகள் அடங்கிய குழுவினர் தில்லியில் அண்மையில் கூடி ஆலோசித்துள்ளனர்.

அமைதிப் பேச்சை மீண்டும் தொடங்க இதுதான் சரியான தருணம் என, இக் கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் முன்னாள் சட்ட அமைச்சர் இக்பால் ஹைதர், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்தியாவில் அமைதியைக் குலைக்க வேண்டும் என்று வெறியுடன் செயல்படும் பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்த எந்தத் தீவிர நடவடிக்கையும் எடுக்காத பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதால் பயன் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2008, நவம்பர் 26-ம் தேதி மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவதாக இந்தியா அறிவித்தது. எல்லை தாண்டி இந்தியாவுக்குள் புகுந்து நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒடுக்கும்வரை பேச்சுவார்த்தை கிடையாது என இந்தியா திட்டவட்டமாகக் கூறியது.

ஆனால், இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளின் ஊடுருவல் தொடர்ந்தவாறே உள்ளது. மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலைப் போன்றே அண்மையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலும் நடந்துள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள பஞ்சாப் ஹோட்டலுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து 100-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்த பயங்கரவாதிகள் இருவரைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்தப் பயங்கரவாதிகளை பாகிஸ்தானில் இருந்தபடி செல்போன் மூலம் தொடர்புகொண்டு பேசி வழிநடத்தியுள்ளனர்.

மும்பையில் நடந்த தாக்குதலின்போதும் பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தானில் இருந்துதான் கட்டளைகள் வந்தன. இப்போதும் அதே பாணியில் தாக்குதல் நடத்திப் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் பயங்கரவாதிகளின் திட்டம். நல்லவேளையாக காஷ்மீர் போலீஸôர் மற்றும் சி.ஆர்.பி.எப். போலீஸôரின் துணிச்சலான நடவடிக்கையால் பெரும் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடிந்தது.

மும்பைத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியபோது அதைப் பாகிஸ்தான் கண்டுகொள்ளவில்லை.

முதலில் ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டாலும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை எனக் கூறி, நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. பின்னர் அவரை மீண்டும் கைது செய்ய அனுமதிக்கக்கோரி "அப்பீல்' செய்துள்ளது பாகிஸ்தான் அரசு. அந்த மனு நிலுவையில் உள்ளது.

இதேபோல, மும்பைத் தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷாகிர் ரஹ்மான் லக்வி, அப்துல் வாஹித், மஷார் இக்பால், ஷாகித் ஜமீல் ரியாஸ், ஹமாத் இக்பால் ஆகிய 5 பயங்கரவாதிகள் மீதான வழக்கும் இழுத்தடிக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்துகொண்டு இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்தாதவரை, அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என இந்தியா எச்சரித்தபோது, இந்தியாதான் அமைதிப் பேச்சைத் துண்டிப்பதாக எகிறும் பாகிஸ்தான், பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. ஸ்ரீநகர் தாக்குதல் இதற்கு ஓர் உதாரணம். இதற்கான செல்பேசி ஆதாரங்களைக் கொடுத்தாலும் பாகிஸ்தான் வழக்கம்போல மறுக்கவே செய்யும்.

இதேபோல, எல்லையிலும் சண்டைநிறுத்த ஒப்பந்தத்தை மீறி பலமுறை தாக்குதல் நடத்துகிறது பாகிஸ்தான். துப்பாக்கியால் சுடுவதுடன் இல்லாமல் ஏவுகணைத் தாக்குதலையே நடத்துகிறது.

தங்கள் மண்ணில் பயங்கரவாதிகள் செயல்பட அனுமதிக்கக் கூடாது என பாகிஸ்தானை இந்தியா மட்டுமன்றி அமெரிக்காவும் பலமுறை எச்சரித்துள்ளது. ஆனால், பலனில்லை.

இந்தியாவுக்குள் ஊடுருவ பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து ஏராளமான பயங்கரவாதிகள் தயாராக உள்ளதாக இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனியும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வேளையில், காஷ்மீர் மாநிலத்தில் பிரீபெய்டு செல்போன் இணைப்புக்கு அனுமதி இல்லை, படைகள் குறைக்கப்படமாட்டாது என்பன உள்ளிட்ட சில உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருவது பாராட்டத்தக்கது.

""ஒன்றிரண்டு சம்பவங்களை வைத்து காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதம் தலையெடுத்துள்ளதாகக் கருதக்கூடாது'' என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறுவதை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

அதேபோல, ""ஸ்ரீநகர் சம்பவத்தைக் காரணம்காட்டி காஷ்மீரிலிருந்து பாதுகாப்புப் படையினரை விலக்கிக் கொள்வதை நிறுத்தக்கூடாது'' என மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி கூறுவதிலும் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

தினம் தினம் குண்டுவெடிப்புகள், மனிதகுண்டு தாக்குதல்கள் என பயங்கரவாதத்தின் வலியை தானே உணர்ந்து கொண்டபோதும், பலுசிஸ்தானில் நடைபெறும் குழப்பங்களுக்கு இந்தியா தான் காரணம் என அபாண்டமாகக் குற்றம்சாட்டி விஷமத்தனத்துடன் நடந்துகொள்கிறது பாகிஸ்தான்.

அமைதிப்பேச்சைத் தொடர வேண்டும் என்று பாகிஸ்தான் அறிவுஜீவிகளும் மக்களும் விரும்பினாலும் ஆட்சியாளர்களுக்கு அதில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவின் கோரிக்கைகள் தொடர்பாக பாகிஸ்தான் உண்மையான உறுதியான நடவடிக்கைகளை எடுக்காதவரை, அமைதிப்பேச்சு என்பதற்கே அர்த்தம் இல்லை.
கட்டுரையாளர் :எஸ். ராஜாராம்
நன்றி : தினமணி

Friday, January 22, 2010

மனம் வெளுக்க ஒரு வாரியம்!

அன்றாட வாழ்வில் ஒருவன் பணப்பையைத் திருடிவிட்டால், அவனுக்குத் தண்டனை கிடைக்கிறது. பட்டப்பகலில் வெட்டிக் கொன்றான் என்பதற்காக ஒருவனுக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனைகூட விதிக்கிறது. உளவு பார்த்து, நேரம் பார்த்துத் தப்புகள் பல செய்து, திருடியோ ஏமாற்றியோ உலவும் ஒரு கள்வர் கூட்டத்தை, மொத்தமாகக் கண்டுபிடித்துக் கைவிலங்கு மாட்டிச் சிறைக்கு அனுப்புகின்றனர். "சீட்டுக் கம்பெனி' என்று தொடங்கி, பல நூறாயிரம் கோடி என மக்களை வஞ்சித்து ஏமாற்றுபவர்களைச் சட்டம் விட்டுவைப்பதில்லை. கைக்கூலி, ஊழல், லஞ்சம் எனப் பெருகிவரும் தீமைகூடச் சிலபோது அகப்பட்டுக் கொள்கிறது.

சுற்றுப்புறச் சூழ்நிலை மாசுபடுத்துபவர்களையும் மாசு பரவலையும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் நாளும் எச்சரித்தபடி இருக்கிறது. ஆனால்... மனத்தை மாசுபடுத்தும் சுற்றுச்சூழலைப் பற்றி யாரும் எண்ணிப் பார்ப்பதே இல்லை. புறச்சூழலை மாசுபடுத்துவதற்குக்கூட, மாற்றுத் தேடி விடலாம். அகச்சூழலை மாசுபடுத்துவதால், ஒரு சமுதாயம் அழிவதை, சிறுகச் சிறுக நஞ்சூட்டிக் கொல்வதுபோல், பண்பாட்டை-நாகரிகத்தை-நாணத்தை அழிப்பதைத் தடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படுவதில்லை; மாசுபடுத்துபவர்களைத் தண்டிக்க வழியில்லை.

÷தொலைக்காட்சிகளாலும் திரைக்காட்சிகளாலும் நன்மைகள் விளையாமல் இல்லை. கால் பங்கு நன்மை என்றால், முக்கால் பங்கு தீமை வளர்க்கப்படுகிறது; பரப்பப்படுகிறது; பல கோடி மக்களின் நெஞ்சத்தில் நச்சுக் கிருமிகள் புகுத்தப்படுகின்றன.

÷ஒரு வடஇந்தியப் படத்தின் தமிழாக்கம். அதில் சிலர் பெரியதொரு மாளிகையின் பின்பக்கமாக ஏறி, உள்ளே குதித்து, உறங்குபவர்களை மிரட்டி, கட்டி வைத்து, வெகு லாவகமாகத் திருடிச் செல்வதை அப்படியே கற்றுக்கொடுப்பதுபோல் காட்டினர். இப்படி ஒரு திருடும் விதத்தைக் கற்றுக்கொண்ட இளைஞன், சில ஆண்டுகளுக்கு முன்பு, நீதிமன்றத்தில், அப்படக் காட்சியே தனக்கு வழிகாட்டியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான்.

கற்பழிப்புக் காட்சி என்று வைத்துக் கொள்ளுங்கள். முன்பு ஒரு முரடன், ஓர் இளம்பெண்ணை விரட்டிக்கொண்டு ஓடுவான்; அவளும் ஓடுவாள். அவள் தலையிலிருந்து ஒரு பூங்கொத்து கீழே விழும். பின்னால் ஓடிவந்த "வில்லன்' காலணியில் பட்டு அது நசுங்கிப்போகும். பின்னர் அப்பெண் அலங்கோலமாகக் கிடப்பதைக் காட்டுவார்கள். இடையில் நடந்தது குறிப்பாக உணரப்படும்.

இன்று ஒரு பெண்ணை ஏமாற்றி, மலைகள், பாறைகள் உள்ள இடத்துக்குக் கடத்திப்போய், அங்கே அவளைச் சேலையை உரிவதுமுதல், மானபங்கப்படுத்துவதுவரை "செய்முறைப் பயிற்சி'போல் காட்டுகிறார்கள். இப்படியே கதையிலும் திருமணம் செய்வதாக ஏமாற்றுதல், ஒருவரை ஒருவர் வஞ்சித்தல், கூடஇருந்தே குழிபறிப்பது எப்படி என விலாவாரியாக, விளம்பரமாகக் கற்றுக்கொடுத்தல் என ஆயிரம் காட்சிகள் நாள்தோறும் காட்டப்படுகின்றன.

அரைகுறை ஆடைபோய், ஒரு சிறு துணி மட்டும் ஒட்டிக்கொண்டிருக்கும். இதில் கதை மட்டுமன்று, பாடல்களும் அப்படித்தான். பாடல்களுக்கேற்ற காட்சிகளா, காட்சிகளுக்கேற்ற பாடல்களா என்பதே சிக்கலான கேள்விதான். ஒட்டிக் கொள்ளவா, கட்டிக்கொள்ளவா, தொட்டுக்கொள்ளவா, கூடிப் போவலாமா, ஓடிப் போவலாமா - இப்படித்தான் - இதைவிட, வெட்கத்தைவிட்டுப் பார்க்க வேண்டிய ஆட்டமும் பாட்டமும்! இவை யாவும் பார்த்துக் கொண்டிருக்கும் பல ஆயிரம் மக்களின் மனத்தில்போய் பதியும்; அதனால் ஒட்டுமொத்த சமுதாயம் பாதிக்கப்படும்; வருங்கால இளைய சமுதாயம் கெட்டு அழியும் என்று யாரும் கவலைப்படவில்லை.

எல்லாம் மக்களை ஈர்த்து, விளம்பரங்களைப் பெருக்கிப் பணத்தைப் பெருக்கும் பேராசையின் விளைவுதான். "ஆசைக்கோர் அளவில்லை, இந்த அகிலமெல்லாம் கட்டி ஆளினும்' என்பதற்கு ஒப்ப, மேன்மேலும் தீமைகளே கண்களைக் கவரவும் கருத்தைக் கெடுக்கவும் முற்படுகின்றன.

மனம் சார்ந்ததன் வண்ணமாகும் இயல்புடையது. மன ஓர்மையே தியானம் எனப்படுகிறது. இறைவனை "ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே' என்பர். அதுதான் மனத்தை "உரு'வேற்றி, நல்வழிப்படுத்துவது. மேலும் மேலும் தீயவற்றையே கண்டு கேட்டு உண்டு மோந்து அதிலேயே மனம் தோய்பவன், அதன் வண்ணமாகி விடுகிறான். இது பொழுதுபோக்குக்காக என்றும், மக்கள் மன இறுக்கத்தைத் தளர்த்துவதற்காக என்றும் சிறிது நேரமேனும் கடும் முயற்சி, உழைப்பை மறந்து மகிழ்ச்சிப்படுத்துவத ற்காக என்றும் சமாதானம் கூற முடியாது.

இவைகளையே நல்ல முறையில் காட்டி, இவற்றை விடப் பல மடங்கு மகிழ்ச்சிப்படுத்தலாம். அதற்குக் கூடுதல் திறமை வேண்டும். இன்று பச்சையாகவும் கொச்சையாகவும் காட்டுகிறார்களே, இதற்குத் திறமை தேவையில்லை. தெருவில் போகிறவன்கூட, ஒரு திரைப்பட இயக்குநராக, கதை, உரையாடல் எழுதுபவராக, பாடலாசிரியராக ஆகிவிட முடியும்.

மனத்தை எப்பொழுதும் உயர்வை நோக்கிச் செலுத்த வேண்டும். அப்படியெல்லாம் சொன்னால் படம் ஓடாது, பணம் போய்விடும் என்பது சத்தற்ற வாதம். திறமையாளன் காட்டுப் பூவிலும் மலர் மணம் இருப்பதை, அழகு பளிச்சிடுவதைக் காட்டுவான். எத்தனை நல்ல கதைகளை, நல்ல பாடல்களை நாம் கண்டு, கேட்டு மகிழ்ந்துள்ளோம்.

இன்று இந்த ஊடகங்களால் மொழியும் சிதைக்கப்படுகிறது. ஓர் உரையாடல், பண்பலை வானொலியில், ஒரு கிராமத்துப்பெண், தான் வீட்டுவேலைதான் செய்வதாகக் கூறவே, அவளிடம் "ஓ நீங்க ஹவுஸ் ஒய்பா' என்று எதிரொலிக்கிறார் கேட்டவர். அவ்வளவுதான். அதன்பிறகு எல்லாப் பெண்களும் தத்தம் வீட்டுவேலை செய்யும் இல்லத்தரசிகளாக இருந்தும், "ஹவுஸ் ஒய்ப்' என்றே கூறத் தொடங்கி விடுகின்றனர். ஏதோ பதவி உயர்வு கிடைத்துவிட்டதாம்!

÷சமையற்கலை கற்றுக்கொடுக்கும் போதும் அது படிப்பறிவில்லாத பெண்களும் பாமர மக்களும் பார்க்கும் காட்சி என்பதை மறந்து, ரைஸ், ஸôல்ட், பெப்பர், பொட்டாடோ, டொமாட்டோ, ஸ்பூன், குவான்டிட்டி, டேஸ்டு என இவ்வாறே கூறித் தங்கள் மேதைமையை வெளிப்படுத்தி மகிழ்கின்றனர்.

சிக்மண்ட் பிராய்டு மனிதருக்கு மூன்று மனம் உண்டு என்றார் மேல் மனம், நடுமனம், ஆழ்மனம் என்று. ஆழ்மனத்தில் போய்ப் பதிவன, ஒருவரின் குருதியில் மரபணுக்களில் போய்க் கலக்கின்றன. இவையே குடிவழி, பரம்பரைக்குப் போய்த் தொடர்கின்றன. தாத்தா இசைப்பேரறிஞராய்த் திகழ்ந்தால், ஓர் இடைவெளி விட்டுப் பேரனிடம்கூட அது வெளிப்படக்கூடும். இவ்வாறே நன்மையும் தொடரும்; தீமையும் தொடரும்.

"மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும்' என்பது வள்ளுவம். ஆழ்மனத்திலும் தூயவராக உள்ளவர்க்கே, நல்ல பண்புள்ள பிள்ளைகள் பிறக்கும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். "எழுமை எழுபிறப்பு' என்பார் அவர். அதாவது இத்தகையவை ஏழு பரம்பரை வரைகூடத் தொடரக்கூடுமாம்.

இன்றைய தொலைக்காட்சிகள் பெரிதும் மனத்தை மாசுபடுத்தும், பண்பாட்டைக் கெடுக்கும், மொழியைச் சிதைக்கும் கருவிகளாகவே செயல்படுகின்றன.

இக் காட்சிகளில் பல துறை வல்லுநர்கள்கூட, அளவற்ற ஆங்கிலச் சொற்களை அள்ளி வீசிக் கலந்து பேசி, தங்களின் "மேதா விலாசத்தை' விளம்பரப்படுத்திப் பெருமை தேடிக்கொள்ள நினைக்கிறார்கள்.

இங்கிலாந்து வானொலியில், ஆங்கிலத்தில் வாசிக்கப்படும் செய்திகளைக் கேட்பவர்கள், தங்கள் ஆங்கில மொழி உச்சரிப்பையும் மொழித்திறனையும் வளர்த்துக் கொள்வர் என்று கூறப்படுவதுண்டு.

ஆயினும் இன்று நம் நாட்டில், இத் தொலைக்காட்சி, திரைக்காட்சியினர், பிற நாட்டினர்-குறிப்பாக ஐரோப்பிய அமெரிக்க நாட்டினரின்-பண்பாட்டுச் சிதைவுக்கான படப்பிடிப்புகளை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டே, நம் நாட்டில் இதுவரை இல்லாத சிதைவுகளையும் புகுத்துகின்றனர். நன்மைகளைவிட்டுவிட்டுத் தீமைகளையே மேய்கின்றனர்.

புற மாசுத் தடுப்பு வாரியங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுக்கள்போல, மனமாசுத் தடுப்புக் கழகங்களும் தோன்ற வேண்டும். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் புறக்கேடுகளை, தீமைகளை ஒழிக்க முயல்வதுபோல, மனத்திற்குள் தீமைகளையே விதைக்கும் காட்சிகளைப் பரப்பும் அகச்சூழல் கேடுகளையும் தடை செய்ய வேண்டும்.

இத்தகைய தொலைக்காட்சிகள், திரைப்படங்கள் போன்றவற்றை, போட்டி கருதி, கூடுதலாகப் பரப்புபவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இம் மன மாசு பரம்பரைக்குத் தொடரும்; கொடிய தொற்றுநோய்போல ஊரெல்லாம் பரவி இவற்றை எடுத்துக்காட்டிப் பணம் குவிப்பவர்தம் குடும்பம், உறவு, பேரன், பேத்தியையும் ஒருகாலத்தில் பாதிக்கவே செய்யும். எனவே இது "தற்கொலைக்குச் சமமாகும்' என அவர்கள் உணர வேண்டும். சமுதாய ஒட்டுமொத்த மனத்துக்கு இவர்கள் போடும் "தூக்குக் கயிறு' இவர்களை மட்டும் விட்டுவிடுமா என்ன?

இவற்றை எல்லாம் யாரைய்யா கேட்பார்கள்; நீங்கள் "பழம் பஞ்சாங்கம்' என்று யாரேனும் கூக்குரலிடலாம். அது உண்மைதான். "திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது' என்று பாடுவதுபோல் நாமும் திருப்பிப் பாட வேண்டியதுதான். ஏனெனில் சமுதாயத்தைத் திரும்ப மீட்டெடுக்க முடியாத தீமைகளை விளைவிக்கும் கொடிய தீமை இது.
கட்டுரையாளர் :தமிழண்ணல்
நன்றி : தினமணி

அரசு உ ணவகங்கள் திறக்கப்படுமா?

தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை ஆகிய போக்குவரத்துக் கழகக் கோட்டங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பொங்கல் பண்டிகையின்போது, சென்னை உள்ளிட்ட அனைத்துப் போக்குவரத்துக் கழகக் கோட்டங்களில் இருந்தும் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பொங்கல் பண்டிகைக்காக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டவர்கள் அலைந்து திரிந்து பயணச்சீட்டுகளை வாங்கி, இருக்கைகள்கூட கிடைக்காமல் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்தனர்.

அரக்கப்பறக்க ஓடிவந்து பேருந்துகளைப் பிடித்த பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது அரசு பஸ்களின் கூடுதல் கட்டணமும், கூட்ட நெரிசலும் மட்டுமல்ல, நெடுஞ்சாலைகளில் உள்ள தனியார் உணவகங்களும்தான்.

அங்கு விற்பனை செய்யப்பட்ட சுகாதாரமற்ற உணவு, நட்சத்திர ஹோட்டல்க ளையும் மிஞ்சும் அளவுக்கு விலை உயர்வு மற்றும் மூச்சைத் திணறடித்த கழிவறைத் துர்நாற்றங்களே இந்த அதிர்ச்சிக்குக் காரணம்.

சிறுபொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் கடலை உள்ளிட்ட "ஸ்நாக்ஸ்'கள் கூட குறைந்தபட்சம் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டன. வெந்நீரைவிடக் கேவலமான காபி, டீ ஆகியவற்றின் விலையோ ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனையாயின. சாப்பாடு மற்றும் குளிர்பானங்களின் விலையோ வாங்க முடியாத அளவுக்கு விண்ணைத் தொட்டிருந்தன. எந்த அளவுக்கு விலை உயர்ந்திருந்ததோ, அந்த அளவுக்கு உணவின் தரமும் மோசமாக இருந்தது. உணவுக்கு அதிகவிலை கொடுத்ததற்காக கவலைப்படாதவர்கள் கூட, அதைச் சாப்பிடுவதற்காகக் கண்ணீர்விட்டனர்.

உணவுப்பொருள்கள் தான் அதிகவிலை என்றால், கழிவறைகளிலும் ரூ.5 முதல் ரூ.10 வரை அதிரடியாகக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. பெண்களும், குழந்தைகளும் வேறு வழியின்றி கழிவறைக்குச் செல்ல நேர்ந்தது. ஆனால் கழிவறையின் நிலையோ படுமோசம். சுத்தம் செய்யப்படாமலும், சில இடங்களில் தண்ணீர் இன்றியும் காணப்பட்டன.

இதனால் கழிவறைக்குச் சென்றவர்களுக்கெல்லாம் மயக்கம்தான் வந்தது. கூடுதல் கட்டணங்கள் கொடுத்தும், பேருந்துகளில் தான் இருக்கைகள் கிடைக்கவில்லை. உணவகங்களிலும், கழிவறைகளிலுமா இந்த நிலை? என்று பயணிகள் புலம்பித் தீர்த்தனர்.

கழிவறைக் கட்டணங்களால் அதிர்ச்சிக்குள்ளான பயணிகள் சாலைகளிலேயே இயற்கை உபாதையைக் கழித்தனர். இதனால் போக்குவரத்தை விரைவுபடுத்துவதற்காக போடப்பட்ட தங்கநாற்கர சாலைகள் சிறுநீர் ஆறாய் காட்சியளித்தது.

÷விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி அருகில் உள்ள ஓர் உணவகத்தில் குண்டர்கள் ஆங்காங்கே கையில் தடிகளுடன் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் மிரட்டியது பயணிகளை மட்டும் அல்ல, பேருந்துகளை ஓரமாக நிறுத்தச்சொல்லி ஓட்டுநர்களையும் தான்.

சாலையோரம் இயற்கை உபாதையைக் கழிக்க முயன்றவர்களைத் தடிகளைக் காட்டி எச்சரித்ததோடு, தகாத வார்த்தைகளாலும் திட்டினர். இதனால் அதிர்ந்துபோன பயணிகளுக்கு கொள்ளையர்களும், ரௌடிகளும் ஹோட்டல் வைத்துவிட்டார்களோ என்ற எண்ணமே தோன்றியது.

ஆனால் பேருந்து ஓட்டுநர்களோ, கூட்டமே இல்லாதே உணவகங்களையெல்லாம் விட்டுவிட்டு கூட்ட நெரிசல் மிக்க, குண்டர்கள் நிறுத்தப்பட்டிருந்த உணவகங்களிலேயே பேருந்துகளை நிறுத்தினர்.

ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு அங்கே அசைவ உணவுடன் பான்பராக், வெற்றிலை பாக்கு, பிஸ்கெட் பாக்கெட் உள்ளிட்ட பொருள்கள் இலவசமாகத் தரப்படுகின்றன; இதற்காக இப்படிக் கஷ்டப்படுத்துகிறார்களே என்று பயணிகள் சிலர் கூறினர்.

குண்டர்களின் செயல்களால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர் பேருந்தின் நடத்துநரிடம் கேட்டபோது, குறிப்பிட்ட உணவகங்களில் நிறுத்துமாறு போக்குவரத்துக் கழகங்களின் மூலம் தங்களுக்கு வாய்வழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இது உண்மையா? அல்லது மக்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக நடத்துநர் விட்ட கதையா என்பதற்குப் போக்குவரத்துக் கழகம் தான் பதில் சொல்ல வேண்டும்.

"குடி'மகன்களுக்காக மதுபானக் கடைகளை நடத்தும் தமிழக அரசு, குடிமக்களுக்காக உணவகங்களைத் திறக்கலாம். அல்லது இந்த உணவகங்களை அந்தந்த மாவட்ட நிர்வாகங்களிடமோ அல்லது மாவட்டப் போக்குவரத்துக் கழகங்களின் பொறுப்பிலோ ஒப்படைக்கலாம். இதன் மூலம் நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துத் துறைக்கு கூடுதல் வருவாய் கிடைக்குமே. கூடுதல் கட்டணத்தாலும், கூட்ட நெரிசலாலும் பாதிக்கப்படும் மக்களுக்கு உணவையாவது சரியான விலையில் தரமானதாக வழங்கினால் ஆறுதலாக இருக்குமே.

அதுமுடியாத பட்சத்தில் ஏல முறையில் தனியாருக்கு உணவகங்களை ஒதுக்கலாம். அவர்களும் உணவுப்பொருள்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்தால், அதைத்தடுக்கும் வகையில் வாரம் ஒருமுறை சுகாதார ஆய்வாளர்களைக் கொண்டு உணவுப்பொருள்களின் தரத்தை ஆய்வு செய்யலாம்.

அனைத்து உணவுப்பொருள்களுக்கும் குறிப்பிட்ட விலையை எழுதி பயணிகளின் பார்வையில் படும்படி உணவகங்களின் வாசலில் வைக்கலாம். உணவுப்பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் அதுகுறித்து புகார் அளிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்களைத் தரலாம். ஆனாலும் உணவகங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை விட அரசே நடத்தினால், பொதுமக்களிடம் இருந்து தனியார் உணவகங்கள் கொள்ளையடிப்பது தடுக்கப்படும்.

ரயில்வே துறையைப்போல் போக்குவரத்துத் துறையும் உணவுப்பொருள்களை விற்பனை செய்ய தமிழக முதல்வரும், போக்குவரத்துத் துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பு.
கட்டுரையாளர் : ஏ.வி.பெருமாள்
நன்றி : தினமணி

Monday, January 18, 2010

வங்கம் தந்த வரலாற்று நாயகன்

இந்தியத் திருநாட்டின் இருள்படர்ந்த ஆங்கிலேய அன்னிய ஆட்சிக்காலக்கட்டத்தில், அதே பிரிட்டிஷ் நாட்டுக்கு உயர்கல்வி பயில்வதற்காகச் சென்று, அங்கிருந்தே காலனியாதிக்க நுகத்தடியிலிருந்து தாய்நாட்டை விடுவிக்கிற உத்வேகத்தோடு திரும்பி வந்து, விடுதலைப் போராட்ட வேள்வியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட ஒரு தலைமுறையே உண்டு. அதில் ஒருவராக இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் நம்மிடையே கலங்கரை விளக்கமாய் நின்று இலங்கிய வரலாற்று நாயகர்களின் வரிசையில் எஞ்சி நின்ற ஒருவர்தான் ஜோதிபாசு.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆரம்பகாலத் தலைமை, விடுதலைப் போராட்டத்தில் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து செயலாற்றித்தான் தங்கள் அரசியல் பயணத்தைத் தொடங்கியது என்பது வரலாற்றுப் பதிவு. அந்தப் பாரம்பரியத்துக்கும் சொந்தக்காரர்தான் 96 வயதுவரை வாழ்ந்து வழிகாட்டிய ஜோதிபாசு.

சட்டப்படிப்புக்காக ஜோதிபாசு 1935-ம் ஆண்டு இங்கிலாந்து சென்றார். ஜோதிபாசு லண்டன் சென்ற காலத்திற்கு முன்பாகவே மகாத்மா காந்தி தனது பாரிஸ்டர் பட்டப்படிப்பை முடித்துத் திரும்பி விட்டிருந்தார். அங்கு இந்திய மாணவர்கள் ஒன்று சேர்ந்து இயங்கிய இந்தியா லீகின் தலைவராக இருந்தவர் சுதந்திர இந்தியாவின் நேரு அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இடம்பெற்ற வி.கே.கிருஷ்ண மேனன். இவரையும் உள்ளிட்டு இங்கிலாந்தில் ஜோதிபாசுவுடன் சேர்ந்து செயல்பட்டவர்களின் பட்டியல் மிக நீண்டது.

ஹிரேன் முகர்ஜி, புபேஷ் குப்தா, ரஜனி படேல், பி.என்.ஹக்சர், மோகன் குமாரமங்கலம், இந்திரஜித் குப்தா, நிகில் சக்ரவர்த்தி, என்.கே.கிருஷ்ணன், அருண் போஸ், பெரோஸ் காந்தி போன்றவர்கள் பின்னாளில் இந்திய அரசியல் சமூக அரங்கில் சிறப்பிடம் பெற்று விளங்கியவர்கள். இவர்களில் பலர் ஒன்றாகச் சேர்ந்து இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு பிரிட்டிஷ் மண்ணிலேயே ஆதரவும், நிதியும் திரட்டும் பணியில் முனைந்து லண்டன் மஜ்லிகள் அமைப்பைத் தொடங்கினர். அந்த அமைப்பின் முதல் செயலாளராகத் தனது பொது வாழ்க்கையைத் தொடங்கியவர் ஜோதிபாசு.

அந்த நாள்களில் இங்கிலாந்தில் செயல்பட்ட இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் ஓர் ஆதர்ச சக்தியாகத் திகழ்ந்தவர் ஜவாஹர்லால் நேரு. நேரு இங்கிலாந்துக்குச் சென்ற இரு சந்தர்ப்பங்களில் லண்டன் மஜ்லிகள் சார்பாக ஜோதிபாசு அவருக்கு வரவேற்பு விழா நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தாய்நாட்டின் விடுதலைக்கான வேட்கை ஆர்த்தெழுந்த அந்த இளமைப் பருவத்தில் ஜோதிபாசு உள்ளிட்ட இந்திய இளைஞர்களின் நெஞ்சங்களில் ஏகாதிபத்திய நாடுகளின் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் அனைவருக்கும் எதிரான உணர்வுகளும் பற்றிப் படர்ந்தன. இதன் தொடர்ச்சியாக அவர்களிடையே மார்க்சியம் மற்றும் இடதுசாரி அரசியல் ஆர்வமும் ஈடுபாடும் வளரலானது. பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களாக விளங்கிய ஹரி பாலிட், ரஜனி பாமி தத், பென் ப்ராட்லி போன்றோரோடு ஜோதிபாசுவுக்கு ஏற்பட்ட தொடர்பும் நெருக்கமும் அவரை ஒரு கம்யூனிஸ்டாகப் பரிணமிக்கச் செய்தது. அதன் விளைவாக லண்டனிலிருந்து நாடு திரும்பிய சில நாள்களிலேயே கட்சியின் முழுநேர ஊழியராக ஜோதிபாசுவின் வாழ்க்கை தொடங்கி விட்டது.

ஆரம்பநாள் கம்யூனிஸ்டுகள் அனைவரையும் போலவே ஜோதிபாசுவும், கட்சியின் முடிவுக்கிணங்க தொழிற்சங்கப் பணியில் ஈடுபட்டார். முதலில் துறைமுகத் தொழிலாளர்களின் மத்தியிலும், அடுத்து ரயில்வே தொழிற்சங்க இயக்கத்திலும் தன்னைப் பிணைத்துக் கொண்ட ஜோதிபாசுவுக்கு, அதன் வாயிலாகவே சட்டமன்ற நுழைவுக்கும் வழி திறந்தது. அன்றைய வங்காள மாகாண சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் ரயில்வே தொழிலாளர்களை வாக்காளர்களாகக் கொண்ட தொகுதி ஒன்றில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு ஜோதிபாசு முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினரானார். அந்த வெற்றியின் பின்னணி முக்கியமானது.

1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காங்கிரஸ் தலைமை அறிவித்தது. மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டார்கள். இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்த சூழலில், ஒரு கட்டத்தில் அது பாசிச எதிர்ப்பு யுத்தமாக உருவெடுத்தது. அப்போது கம்யூனிஸ்டுகள் எடுத்த நிலைப்பாடு, சர்வதேசியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் சரியானதே என்றாலும், கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. இது இன்றளவும் இந்திய அரசியலில் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களால் விவாதப் பொருளாக ஆக்கப்பட்டு வந்துள்ள ஒரு பிரச்னை. 1946-ல் மாகாண சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட ஜோதிபாசு உள்ளிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்கு எதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டு பிரதானமாக முன்வைக்கப்பட்டது. அதையும் எதிர்கொண்டுதான் ஜோதிபாசுவின் சட்டமன்றப் பிரவேசம் நிகழ்ந்தது.

சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் பெறும் சம்பளத்தைக் கட்சிக்குக் கொடுத்து விடுவேன், கட்சி எனக்கு ஊதியம் வழங்கும் என்று ஜோதிபாசு தனது சுயசரிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது இன்றைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பின்பற்றப்படும் நடைமுறை.

நாடு சுதந்திரமடைந்து, புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு, இந்தியா ஒரு ஜனநாயகக் குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் நடைபெற்ற 1952-ம் ஆண்டின் முதல் பொதுத் தேர்தலிலும் ஜோதிபாசு கோல்கத்தாவின் பாராநகர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரானார். 1972-ல் மேற்கு வங்கத்தில் அரங்கேறிய அரை பாசிச அடக்குமுறைக்கு இடையிலான மோசடித் தேர்தல் ஒன்றைத்தவிர, ஜோதிபாசு இத்தொகுதியிலிருந்தே வெற்றி பெற்று வந்தார். பின்னர் அவர் முதலமைச்சரான 1977-ம் ஆண்டுத் தேர்தலில் சத்கர்ச்சியா தொகுதிக்கு மாறினார். ஜனநாயக இந்தியாவின் அரசியல் வரலாற்றில் 23 ஆண்டுகள் தொடர்ந்து முதலமைச்சராக நீடித்த பெருமைக்குரிய ஒரே தலைவராக ஜோதிபாசு முத்திரை பதித்துள்ளார். இது அவரது நீண்ட நெடிய பொது வாழ்க்கையின் ஒரு சிறப்பம்சம் மட்டுமே. ஜோதிபாசுவின் வாழ்க்கைப் பயணம் இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் ஈட்டுத் தந்துள்ள பயன்களும், படிப்பினைகளும் பன்முகப்பட்டவை என்பதை நினைவு கூர வேண்டும்.

ஜோதிபாசு தன்னுடைய அரசியல் அனுபவங்களைப் பதிவு செய்ய முற்பட்டபோது அதற்கு அவரிட்ட தலைப்பு "மக்களோடு மக்களாக' என்பதே. அந்த நினைவலைகளை அறிமுகப்படுத்துகையில் அவர் குறிப்பிட்டார்: மக்களின் விடுதலையையே மையமாகக் கொண்ட எனது அரசியல் வாழ்வின்போது பல சிக்கலான பிரச்னைகளை நான் எதிர்நோக்கியிருக்கிறேன். மக்கள் வெற்றிக்கொடியை நாட்டியதையும் பார்த்திருக்கிறேன். அதேபோன்று, சில நேரங்களில் அவர்களின் தோல்விக்கு ஒரு சாட்சியமாகவும் விளங்கியிருக்கிறேன். மக்கள் மட்டுமே வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஏராளமான சோதனைகளுக்கும், துயரங்களுக்கும் மத்தியில் மக்களே இறுதியில் வெற்றியடையப் போகிறார்கள். இந்த உறுதியான நம்பிக்கைதான் ஜோதிபாசுவை நாட்டு மக்களும் குறிப்பாக மேற்கு வங்க மக்களும் ஆழமாக நேசித்ததற்கும், அவர் மக்களை நேசித்ததற்கும் அடிப்படையாக இருந்தது.

ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் என்ற முறையில் ஜோதிபாசுவின் அரசியல் போராட்டம் காங்கிரசுக்கு எதிரானதாகவே இருந்தது. ஆனால் கட்சி மாச்சரியங்களைக் கடந்து காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்கள் பலரிடத்தில் அவர் நட்பும் மரியாதையும் பாராட்டி வந்துள்ளார். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, இந்திய வரலாற்றில் வகித்த முக்கியமான பாத்திரத்தை அங்கீகரித்துப் பாராட்ட ஜோதிபாசு தவறியதேயில்லை. தேசிய விடுதலை லட்சியத்தில் தனக்கிருந்த உறுதிப்பாட்டை உலக அரசியலின் இதர முற்போக்கு சக்திகளோடு இணைக்கும் அறிவுத்திறனை நேரு பெற்றிருந்தார் என்று மனந்திறந்து புகழாரம் சூட்டியவர் ஜோதிபாசு. ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவை வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்பதில் நேரு தீவிர ஆர்வமும், நம்பிக்கையும் கொண்டவராக விளங்கினார். கூட்டுச்சேரா இயக்கத்தை உருவாக்கிய நிறுவனர் என்ற முறையில் அவர் சர்வதேச அரசியலில் எந்தச் சவாலையும் சந்திக்கும் நாடாக இந்தியாவை ஆக்கினார் என்று ஜோதிபாசு குறிப்பிட்டது, நேருவின் வரலாற்றுப் பங்களிப்பு பற்றிய துல்லியமான மதிப்பீடாகும்.

கூட்டாட்சிக் கோட்பாட்டை அங்கீகரிக்காத மத்திய காங்கிரஸ் அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்குகள் 1975-ம் ஆண்டின் அவசர நிலைமையின்போது உச்சகட்டத்தை எட்டியது.

இதுபற்றி இந்திரா காந்தியிடமே ஜோதிபாசு கேட்டபோது, அரசாங்கத்தின் அறிவுரையைக் கேட்கும் மனோநிலையில் மக்கள் இல்லை. மக்களைச் சரியான பாதைக்குக் கொண்டு வர ஓர் அதிர்ச்சி வைத்தியம் தேவைப்பட்டது என்று அவர் பதிலளித்தாராம். ஆனால், இரண்டாண்டுகளுக்குள்ளாக சர்வாதிகாரத்தை நிராகரித்து, அவசர நிலையை முடிவுக்குக் கொண்டு வந்து இந்திய ஜனநாயகப் பாரம்பரியம் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டதை ஜோதிபாசு வியந்து போற்றினார்.

மத்திய, மாநில உறவுகளை ஓர் ஆரோக்கியமான அடிப்படையில் மறுசீரமைக்க வேண்டும் என்பதற்காக ஜோதிபாசு காங்கிரசல்லாத மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டி இது தொடர்பான ஒரு பிரகடனத்தை நாட்டு மக்கள் முன்வைக்க முயற்சி மேற்கொண்டது இன்றும் கூடப் பொருத்தமானதொரு சீரிய நடவடிக்கையாகும். கூடவே மாநிலத்திற்குள்ளேயே எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் சுயாட்சி அதிகாரங்களை வழங்குவது என்பதையும், மாநில அரசின் அதிகாரங்களைப் பரவலாக்கி உள்ளாட்சி அமைப்புகளைப் பலப்படுத்துவதன் மூலம் ஜனநாயகம் முழுமை பெறும் என்பதையும் நடைமுறைப்படுத்திக் காட்டியவரும் அவரே. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை ஜோதிபாசுவின் ஆட்சிக்காலத்தில்தான் மேற்குவங்கம் பெற்றது. பின்னர் அது அகில இந்திய அளவில் விரிவாக்கம் பெற்றது.

வகுப்புவாத-அடிப்படைவாத அரசியல் என்பது இந்தியாவின் நீண்டகாலப் பாரம்பரியத்துக்கே எதிரானது என்று உறுதியான கருத்தின் அடிப்படையில், ரவீந்திரநாத் தாகூர் வலியுறுத்திய, வேற்றுமையில் ஒற்றுமை என்ற லட்சியத்தையும், மதச்சார்பின்மைக் கோட்பாட்டையும் உயர்த்திப் பிடிப்பதில் ஜோதிபாசு தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டவர்.

உலகப் போக்குகளிலிருந்து இந்தியா தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள இயலாது என்கிறபோதே, 1991-ல் நம்நாடு உள்நாட்டுப் பொருளாதாரத்தைத் தயார்படுத்திக் கொள்ளாமலேயே தாராளமயத்துக்கு இ ட்டுச் செல்லப்பட்டது என்று ஜோதிபாசு கருதினார். அறுபத்தி இரண்டு ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னும், மக்கள்தொகையில் 10 முதல் 15 சதவிகிதத்தினர் மட்டுமே பயன் அடைந்திருக்கக்கூடிய ஒரு சமூகத்தைத்தான் நாம் உருவாக்கியுள்ளோம். புறக்கணிக்கப்பட்டுள்ள 85 முதல் 90 சதவிகிதம் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் நிலை இன்றில்லையே என்பது குறித்துத் தன் வேதனையை வெளிப்படுத்தியவர் ஜோதிபாசு.

÷1998-ம் ஆண்டு நவம்பர் 14 அன்று தில்லியில் ஜவாஹர்லால் நேரு நினைவுச் சொற்பொழிவை ஆற்றியபோது ஜோதிபாசு கூறியது, இன்றைய இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு சவாலும் அறைகூவலுமாகும். அவர் சொன்னார்: நம்முடைய சமூக-அரசியல் சூழலில் உள்ள மாசுபடுத்தும் கறைகளைப் போக்குவது அவசியமாகச் செய்யப்பட வேண்டிய ஒன்று. பொது வாழ்வில் ஒழுக்கம் என்பது பலியாகி வருகிறது.

இத்தகைய நிலைமைக்கு அரசியல்வாதிகளே பிரதானப் பொறுப்பாளியாவார்கள். இந்தப் போக்கை எதிர்த்துப் போராடுவதற்கான மக்களுடைய உணர்வு அதிகரிக்கப்பட வேண்டும். அழுகிப்போன இந்த நிலைமையைத் தடுத்து நிறுத்துவதில் ஒரு தலையாய பங்கை வகிக்கப் பொறுப்புணர்வு கொண்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் முன்வர வேண்டும்.

வங்கம் தந்த வரலாற்று நாயகனின் இந்த வைரவரிகள் சமூகப் பிரக்ஞை கொண்ட அனைத்துத் தரப்பினரும் நெஞ்சில் பதித்து நிறைவேற்ற வேண்டிய கடமைச் சாசனம்!
கட்டுரையாளர் :உ .ரா. வரதராசன்
நன்றி : தினமணி

Saturday, January 16, 2010

புத்தொளி பாய்ச்சிய புனிதர்!

ஜாதியிலே,​​ மதங்களிலே,​​ சாத்திரச் சண்டைகளிலே அகப்பட்டு,​​ புகழ் மங்கிக்கிடந்த இந்தியத் திருநாட்டின் நிலையை மாற்ற -​ அதன் உயர்வை உலகுக்குப் பறைசாற்றத் தோன்றிய பெருந்தகை சுவாமி விவேகானந்தர்.​ அவர் இந்நாட்டுக்கு ஆற்றியுள்ள தொண்டு அளப்பரியதாகும்.

விவேகானந்தரைச் சான்றோனாக,​​ துறவியாக,​​ நாவலனாக,​​ தத்துவ ஞானியாக,​​ சீர்திருத்தச் செம்மலாகக் காண்பர் பலர்.​ இவை அனைத்துக்கும் மேலான ஒரு பரிமாணம் அவருக்கு உண்டு.​ ஊக்கமின்றி,​​ உள்ள உரமிழந்து அன்னியருக்கு அடிமைகளாக வாழ்ந்த இந்தியர் நெஞ்சில் புத்தொளி பாய்ச்சியவர் அவர்.​ முடைநாற்றம் வீசும் மூடப்பழக்கங்களையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு,​​ ஆயிரம் தெய்வங்களைத் தேடி அலைந்த இந்நாட்டு மக்களுக்கு அறிவு நெறி காட்டியவர்.

தன்னம்பிக்கையும்,​​ அச்சமின்மையுமே அவர் சொல்லிலும்,​​ செயலிலும் உயிர் நாதமாகத் திகழ்ந்தன.​ ""பண்டைய மதங்கள் கடவுளின் மீது நம்பிக்கையற்றவனை "நாத்திகன்' என்றன.​ ஆனால் புதிய மதமோ எவனொருவனுக்குத் தன் மீதே நம்பிக்கை இல்லையோ அவனையே நாத்திகன் என அழைக்கிறது'' ​(சுவாமி விவேகானந்தரின் எழுத்தும் பேச்சும் தொகுதி:​ 2 பக்.301) எனப் புதிய சித்தாந்தம் ஒன்றை அவர் வலியுறுத்தினார்.​ வலிமையே வாழ்வெனவும்,​​ வலியின்மை மரணமெனவும் முழங்கினார்.​ ""மக்களுக்குப் போதிக்கப்பட வேண்டிய ஒரே மதம் அச்சமின்மை'' ​(தொகுதி:​ பக்.160) என வலியுறுத்தினார்.​ உபநிஷதங்களிலிருந்து வெளிப்படும் கருத்து இதுவே என்றார்.​ மக்களிடையே இருந்த அச்சம் எனும் பிணியைக் கண்டதோடல்லாமல்,​​ அந்நோயின் மூலத்தையும் தெளிவுற அறிந்திருந்தார்.

அறியாமை!​ தன்வலி புரியாமையால் விளைந்த அறியாமை;​ எல்லாவற்றையும் செய்யக் கூடிய ஆற்றலின் ஊற்று நம்முள்ளே சுரந்துகொண்டிருக்க,​​ அறியாமையால் அதை அறியாதிருத்தல் பேதைமை எனவும்,​​ ""முடியாது,​​ என்னால் இயலாது என்று மட்டும் சொல்லாதீர்கள்.​ நீங்கள் எல்லையற்றவர்கள்.​ காலமும்,​​ இடமும் கூட உங்கள் இயல்புடன் ஒப்பிடும் போது ஒன்றுமே இல்லை.​ நீங்கள் எதையும் செய்ய முடியும்.​ எல்லாம் வல்லவர் நீங்கள்'' ​(பக்.300) எனவும் கூறினார்.

தன் குருநாதர் ராமகிருஷ்ணரின் மறைவுக்குப்பின்,​​ இந்திய நாட்டின் உண்மை நிலை அறிய,​​ இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டார் விவேகானந்தர்.​ நாட்டில் பரவிக்கிடந்த வறுமையையும்,​​ அதனால் மக்களுற்ற இன்னல்களையும் கண்டு கலங்கினார் அவர்.​ ""பசித்த மானிடனுக்கு மதத்தைப் போதிப்பது பயனற்றது'' எனத் தனது குருநாதரின் மொழியை அனுபவத்தால் உணர்ந்தார் சுவாமி விவேகானந்தர்.​ வறியவரோடு வறியவராக அப்பயணத்தின் போது அவர் வாழ்ந்தார்.

விவேகானந்தர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டபோது,​​ செல்வந்தர்கள் பலர் பணம் தர முன்வந்தனர்.​ ஆனால் விவேகானந்தர்,​​ தன் அன்பர்களை நடுத்தர மக்களிடம் சென்று பொருள் வேண்டச் சொன்னார்.​ தான் நடுத்தர ஏழை மக்களின் பிரதிநிதியாகவே அமெரிக்கா செல்ல விரும்புவதாகப் பெருமையுடன் சொன்னார்!

""இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை'' என்னும் குறள் வரியின் இலக்கணமாகவே அவர் வாழ்வு அமைந்திருந்தது.​ அவர் எளிய வாழ்க்கை முறையையும்,​​ உண்மைத் துறவு நிலையையும் அவர் வாழ்வில் நடந்த பல நிகழ்ச்சிகள் நமக்கு உணர்த்தும்.​ குறிப்பாக,​​ இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு இறுதியாகக் குமரிமுனையை அடைந்த விவேகானந்தர்,​​ கடலில் இருந்த பாறையின் உச்சியில் அமர்ந்து தியானம் செய்ய விழைந்தார்.​ ஆனால்,​​ படகேறிச்செல்ல அவரிடம் பணம் இல்லை.​ சுறா மீன்கள் நிரம்ப உள்ள குமரிக்கடலில் குதித்து,​​ நீந்திப் பாறையை அடைந்து,​​ தியானம் மேற்கொண்டார்.

அயல் நாடுகளில் விவேகானந்தரின் நாவன்மையையும்,​​ உள்ளத்திண்மையையும்,​​ மனத்தன்மையையும்,​​ மதி நுட்பத்தையும் கண்டு வியந்தோர் பலர்.​ 1893-ம் ஆண்டு சிகாகோவில் அனைத்துலக சமயப் பெருமன்றத்தில் விவேகானந்தர் ஆற்றிய,​​ கேட்போர் பிணிக்குந்தன்மை வாய்ந்த உரை இந்தியாவின் புகழை உலகறியச் செய்தது.​ அப் பெருமன்றத்தில் விவேகானந்தர் உரையாற்றிய பாங்கையும்,​​ தன் நாநலத்தால் மக்களை அவர் கவர்ந்த விதத்தையும் பிரஞ்சு நாட்டு அறிஞர் ரோமென்ரோலந்து தான் எழுதிய,​​ "விவேகானந்தரின் வாழ்க்கை' என்ற நூலில் சிறப்புடன் விளக்கியுள்ளார்.

""யாரும் அறியாத அம் முப்பது வயது இளந்துறவி,​​ கார்டின் கிப்பன்ஸôல் சிகாகோவில் 1893-ம் ஆண்டு துவக்கிவைக்கப்பட்ட அனைத்துலகச் சமயப் பெருமன்றத்தில் புகுந்தபோது,​​ அவரின் கம்பீரத் தோற்றம் உடனிருந்தோரை மெய்மறக்கச் செய்தது.​ அவர் வலிவும்,​​ பொலிவும்,​​ கருவிழிகளும்,​​ தோற்றமிடுக்கும்,​​ சொற்பொழிவைத் துவக்கியவுடன் நல்லிசையென ஒலித்த அவர்தம் குரலும்,​​ அவர் நிறம் கண்டு அவர் மீது முன்பு வேற்றுமை மனப்பான்மை கொண்டிருந்த அமெரிக்க,​​ ஐரோப்பிய மக்களையும் கவர்ந்திழுத்தன.​ அப்போர்க்குணம் கொண்ட இந்தியத் துறவி அமெரிக்காவில் தன் ஆழ்ந்த முத்திரையைப் பதித்துச் சென்றார்'' ​(பக்.5).

இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் தான் கூறவந்த கருத்துகளை எவ்வித அச்சமும்,​​ தயக்கமுமின்றி வெளிப்படுத்தினார்.​ தன் அமெரிக்கப் பயணத்தின்போது அமெரிக்கச் சிந்தனையாளர் இங்கர்சாலை சந்தித்தார் விவேகானந்தர்.​ அவர் விவேகானந்தரின் அச்சமற்ற போக்கையும்,​​ அந்நாளிலான அமெரிக்காவின் நிலைமையையும் மனதில் கொண்டு,​​ ""ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் இந்நாட்டுக்கு வந்து போதித்திருப்பீர்களாயின்,​​ உங்களை தூக்கிலோ,​​ தீயிலோ இட்டிருப்பர் இந்நாட்டவர்'' என்றார் ​(தொகுதி:2 பக்.27).

மதத்துக்கும்,​​ மானுடத்துக்கும் உள்ள தொடர்பை நன்கு உணர்ந்திருந்தார் விவேகானந்தர்.​ ஆன்மிகத்துக்கும் நடைமுறை வாழ்வுக்கும் இடைவெளி ஏதும் இல்லை என்பதை தம் சொற்பொழிவுகள் மூலம் நிறுவினார்.​ இக்கருத்தை அறுதியிடும் வண்ணம்,​​ "செயல்முறை வேதாந்தம்' என்னும் கோட்பாட்டைக் கண்டார்.​ ஆன்மிகம் என்பது வாழும் நெறி;​ அது வாழ்க்கையைக் கண்டு அஞ்சி ஓடுவோர் சென்றடையும் கூடாரமன்று என்பது அவர் கருத்து.​ இதை அவர் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்று நமக்கு உணர்த்தும்.

ஒருமுறை விவேகானந்தரைக் காண முதுநிலைப் பட்டப்படிப்புப் பயின்று வந்த மாணவன் ஒருவன் வந்தான்.​ அவன் துறவு பூண விவேகானந்தரின் கட்டளையை வேண்டி நின்றான்.​ அம் மாணவன் துறவு பூணக்காரணம்,​​ அவன் படித்துக் கொண்டிருந்த முதுநிலைப் பட்டப்படிப்பு சிரமமாக இருந்ததுதான் என்பதைக் கண்டறிந்த விவேகானந்தர்,​​ முதுநிலைப் படிப்பைக் காட்டிலும் துறவு வாழ்க்கை கடினமானது என நயம்படக் கூறி,​​ அம் மாணவனுக்கு உண்மையை உணர்த்தினார்.

மதத்தின் மீதுள்ள பற்று மதவெறியாக உருவெடுப்பதைக் கடிந்தவர் விவேகானந்தர்.​ மதவெறியே மதநெறியாகப் போற்றிக் கொள்ளப்படும் இந்நாளில்,​​ விவேகானந்தரின் பணிச்சிறப்பும்,​​ பேச்சும் முக்கியத்துவம் பெறுகின்றன;​ பெரிதும் வேண்டப்படுகின்றன.​ மேலை நாடுகளுக்குச் சென்று திரும்பியதும் மதுரையில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுப் பேசுகையில்,​​ மதவெறிக்கு ஆட்படாமல் இருக்குமாறு மக்களை வேண்டினார்.

""தற்போது இந்தியாவில் மகத்தான மத மறுமலர்ச்சி தோன்றியுள்ளது.​ இதில் பெருமை இருப்பதைப் போலவே ஆபத்தும் உள்ளது.​ ஏனெனில் சில வேளைகளில் இந்த மறுமலர்ச்சி,​​ கொள்கை வெறியை வளர்க்கிறது;​ சில நேரங்களில் அவ்வெறி,​​ எல்லை கடந்தும் போய்விடுகிறது.​ மறுமலர்ச்சிக்குக் காரணமானவர்களுக்குக் கூட அதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை வருகிறது.​ எனவே,​​ எச்சரிக்கையாக இருப்பது நல்லது'' ​(தொகுதி:3 பக்.172) எனக் குறிப்பிட்டார்.

இந்தியாவில் மட்டுமன்றி,​​ வெளிநாடுகளில் உரை நிகழ்த்தும்போதும்,​​ மதவெறியை வன்மையாக அவர் கண்டித்தார்.​ "உலகளாவிய மதம்' எனும் தலைப்பில் 1900-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் உரை நிகழ்த்துகையில்,​​ ""உலகில் உள்ள நோய்கள் யாவினும் மிகக் கொடிய நோய் மதவெறி எனும் நோயே'' என்றார்.

விவேகானந்தரின் செயலிலும் பேச்சிலும் பிற மதங்களுக்கு எதிரான காழ்ப்புணர்வு எப்போதும் இருந்ததில்லை.​ உலக மதங்கள் யாவும் தமக்குள் இருக்கும் பிணக்குகளைத் துறந்து உலகளாவிய தன்மை எய்த வேண்டும் என விழைந்தார் விவேகானந்தர்.​ ""மதங்கள் யாவும் பரந்த நோக்குடையனவே.​ பல மதங்களைப் போதித்து வரும் மதவாதிகள் அவர்தம் பணிகளைச் சற்று நிறுத்தினால்,​​ நாம் இவ்வுண்மையை நொடிப்பொழுதில் உணரலாம்'' ​(தொகுதி:​ 2 பக்.367)

ஜாதியின் பெயரால் நடந்த அநீதிகளைக் கண்டு வெகுண்டெழுந்தவர் விவேகானந்தர்.​ மேல் வகுப்பினருக்கு ஒரு நீதி;​ கீழ் வகுப்பினருக்கு ஒரு நீதி என்று சமுதாயத்தில் அமைந்துள்ள வேறுபாடு சாத்திரத்தால் விளைந்ததன்று;​ சதியால் நேர்ந்தது என முரசறைந்தார்.​ ""சாதி வெறி பிடித்தோரும் ஒரு சில மதவாதிகளும் இந்நாட்டினை இழிநிலைக்குத் தள்ளிவிட்டனர்'' ​(தொகுதி:​ 6 பக்.317) என வேதனைப்பட்டார்.

இந்தியா உயர வேண்டுமெனில் இந்தியர் ஜாதிப் பித்தைத் தவிர்த்து பேதமற்ற உயர் நெறி போற்றி ஒழுகுதல் அவசியம் என விரும்பினார்.​ இந்து சமயத்தின் மேன்மையை மக்களுக்கு உணர்த்தாமல் ஜாதி-மதவெறியை வளர்ப்போரைக் கடுமையாக எதிர்த்தார் விவேகானந்தர்.​ ""உங்கள் சமயம் மகத்தானது,​​ ஆனால் அதன் மேன்மையை மக்களுக்கு உணர்த்தாமல் அவர்களை மடமைக்கு ஆட்படுத்துகின்றீர்.​ வற்றாத சுனை பொங்கிக் கொண்டிருக்க,​​ மக்களைச் சாக்கடை நீரைப் பருகச் செய்கின்றீர்'' ​(தொகுதி:​ 5 பக்.223) என வேதனையுடன் குறிப்பிட்டார்.

விவேகானந்தர் விசாலப் பார்வையால் உலகை விழுங்கியவர்.​ அறிவின்பாற்பட்டதே சமயம் என நிறுவியவர்.​ "தன்னிற் பிறிதில்லை தெய்வம்' எனத் தன்னம்பிக்கையை வளர்த்தவர்.​ அவர் கருத்துகள் புதியதோர் உலகம் காண நம்மை ஊக்குவன.​ அவர் மண்ணுலகில் வாழ்ந்தது 39 ஆண்டுகள் தான் என்றாலும் அவர் மூட்டிய கனல்,​​ அணையா விளக்கென ஒளிர்விடும் என நம்பிக்கை அவருக்கு இருந்தது.​ ""ஒரு விவேகானந்தர் என்ன,​​ காலப்போக்கில் எத்தனையோ விவேகானந்தர்கள் தோன்றத்தான் போகிறார்கள்'' என்பது அவரது நம்பிக்கை.

அந்த நம்பிக்கை வீண்போகாமல் காப்பாற்றப்படும் பெரும் பொறுப்பு நமது இளைய தலைமுறைக்கு உண்டு.​
கட்டுரையாளர்:ப.சேரலாதன்
நன்றி : தினமணி

இந்தியாவின் அடுத்து வரும் ஆண்டுகள்

புத்தாண்டு பிறந்தவுடன், அடுத்து வர உள்ள ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் எப்படி இருக்கும்; மக்களின் வாழ்க்கைத் தரம் எப்படி அமையும் என்று சிந்திப்பது ஆரோக்கியமான ஒரு வழக்கமே.

ஆனால், கடந்த காலங்களில், ஆரோக்கியமற்ற சில ஆருடங்கள் சொல்லப்பட்டதும், நல்ல வேளையாக, அவை பொய்த்துப் போனதும் நினைவுக்கு வருகின்றன.

ஒன்று, 1967-ம் ஆண்டில் நிகழ்ந்தது: அது சமயம் நாட்டின் நான்காவது பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து மழையின்மையால் கடும் வறட்சி நிலவிய நேரம். போதாக்குறைக்கு, அந்தத் தேர்தலுக்குச் சிறிது காலம் முன்னர்தான் இந்தியா ஒரு போரையும் சந்தித்திருந்தது. நாட்டின் அரசியல் தலைமை அவ்வளவு வலுவாக இருக்கவில்லை. அப்போது, இங்கிலாந்து நாட்டின் பிரபல முன்னணி நாளேடு, ""இதுவே இந்தியாவின் கடைசிப் பொதுத் தேர்தல்'' என்று எழுதியது!

இன்னொரு நிகழ்வு, 1947-ம் ஆண்டில் நடந்தது. இது பலருக்கு நினைவிலிருக்கும். ஆருடம் கூறியவர் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் சர்ச்சில்! இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறினால், நாடு சின்னாபின்னமாகிவிடும், என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்!

கடந்த காலத்தை விட்டு, நிகழ்காலத்துக்கு வருவோம்! 2009-ம் ஆண்டு, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான நிதி ஆண்டின் முதல் அரையாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.9 சதவீதம். முந்தைய ஆண்டு இதே காலத்தில் இருந்ததைவிட இது சற்று அதிகம். இந்த ஜி.டி.பி. வளர்ச்சிக்கு முக்கிய காரணம், அரசு மேற்கொண்ட பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள்தான். இந்த ஊக்குவிப்பு நடவடிக்கையை அரசு திடீரென்று விலக்கிக் கொண்டால், இதே அளவு வளர்ச்சி தொடருமா என்பது சந்தேகம்தான்.

அதேநேரம், இந்தியாவின் வரவு செலவில் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே போகிறது. பற்றாக்குறையைக் குறைக்க வேண்டுமானால், வரிகளைக் கூட்டுவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும். ஜி.டி.பி.யின் வளர்ச்சி 8 சதவீதமாக அதிகரிக்க முடியாது.

தற்போது, பொதுமக்களை ஆட்டிப் படைக்கும் மிகப் பெரும் பிரச்னை, விலைவாசி உயர்வுதான். கடந்த ஓராண்டில் நாம் கண்கூடாகப் பார்த்த விஷயம், ஜி.டி.பி. வளர்ச்சியால் விலைவாசி குறைந்துவிடாது என்பதுதான். ஆக, வளர்ச்சி விகிதம் அதிகரிப்புக்கும் விலைவாசிக்கும் தொடர்பு இல்லை.

விலைவாசியில், ஒரு முரண்பாட்டையும் காண முடிகிறது. கணினி உள்ளிட்ட மின்னணுப் பொருள்களின் விலைகள் குறைகின்றன. இறக்குமதி செய்யப்பட்ட தொழில் கூடங்களில் உற்பத்தியான பொருள்களின் விலைகளும் குறைகின்றன. ஆனால் உணவுப் பொருள்களின் விலை மட்டும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

உணவுப் பண்டங்களின் விலை உயர்வுக்கு விளைச்சல் குறைவு என்பதைத் தவிர வேறு பல காரணங்கள் உண்டு.

அவற்றில், முன் பேர வணிகம் ஒரு முக்கிய காரணம். குறைந்த அளவே முதலீடு செய்து, அதிக அளவில் பண்டங்களை வர உள்ள ஒரு குறிப்பிட்ட தேதியில் கொள்முதல் செய்வதுதான் முன் பேர வணிகம். இதனால் விலைகள் உயர வாய்ப்பு உள்ளது. 2007-ம் ஆண்டு அரிசி, கோதுமை, உளுந்து, துவரம்பருப்பு ஆகிய நான்கு பொருள்களுக்கு முன் பேர வணிகத்தை மத்திய அரசு தடை செய்தது. இந்தத் தடை தொடர வேண்டும். இதர உணவுப் பண்டங்களுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும்.

பொதுவாகவே, உலக அளவில் உணவுப் பண்டங்களின் விலை ஏறிக் கொண்டே போகிறது. காரணம் அநேக நாடுகளில் உணவுப் பொருள்களின் விளைச்சல் சரிந்துள்ளது. இதுவும் இந்தியாவில் விலைகள் உயரக் காரணம். இந் நிலையில் அத்தியாவசியப் பொருள்களின் விலை குறைவதற்கு உடனடியாக வாய்ப்பு இல்லை.

பொது விநியோகத் திட்டத்தில் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் மலிந்துள்ளன. இதைச் சரி செய்யாமல் விலைவாசியைக் கட்டுப்படுத்த இயலாது. ரேஷன் பொருள்கள் கடத்தல், கள்ளச்சந்தை, பதுக்குதல் போன்ற சமூக விரோதச் செயல்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும். இது மாநில அரசுகளின் தலையாய கடமை. இந்த உயிர்நாடிப் பிரச்னைக்குத் தீர்வு காணாவிடில், வளர்ச்சி 8 சதவீதம் எட்டினாலும், அதனால் மக்களுக்குப் பயன் இல்லை.

கடந்த ஆண்டுகளில், அமெரிக்கப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்தது. மிதவாதப் போக்கை கடைபிடித்ததால், இந்திய வங்கிகள் தப்பித்தன. ஆனால், நம் நாட்டில் தோல் உற்பத்தி, ஜவுளித் துறை, ஆபரணக் கற்கள் பட்டை தீட்டுதல், பல்வகை கைவினைப் பொருள்கள் போன்றவற்றின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்கிய வரிச் சலுகையால் இத்துறைகள் ஓரளவு சமாளித்து வருகின்றன. எனவே, அரசு தற்போது வழங்கும் உதவிகளை அவசரப்பட்டு நிறுத்திவிடக் கூடாது. அவை தொடர வேண்டும்.

பாரத ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்திவிடக் கூடாது. அப்படி ஒரு வேளை உயர்த்தினால் அது எதிர்மறையான விளைவுகளை உருவாக்கும்.

இவ்வளவையும் மீறி, உலகின் முன்னணி தர நிர்ணய அமைப்புகள் என்ன கூறுகின்றனவெனில், உலகிலேயே, சீனாவுக்கு அடுத்தபடியாக, வேகமாக வளரும் நாடு இந்தியாதான், என்பதே. காரணம், சர்வதேச அளவில், பொருளாதார மந்த நிலை நீடித்தாலும், இந்தியா நடப்பாண்டில் 8 சதவீத வளர்ச்சி அடையும் என்பதும், சீனா 9.6 சதவீத வளர்ச்சி அடையும் என்பதே.

÷வாஷிங்டனிலிருந்து செயல்படும், "பியூ' பொருளாதார ஆய்வுக் கழகம், 25 வளரும் நாடுகளில் நடத்திய ஆய்வின் அடிப்படையில் வெளியிட்டுள்ள கணிப்பும் இதையே உறுதி செய்கிறது. அது மேலும் கூறுகையில், பல வளரும் நாடுகளைவிட இந்திய மக்களின் தன்னம்பிக்கை 2002-ம் ஆண்டுக்குப் பிறகு, இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்பதே ஆகும்.

÷வளர்ச்சிக்குத் தேவையான மூன்று முக்கிய அம்சங்கள் என்னவெனில், மூலதனம், தொழிலாளர் திறன் மற்றும் உற்பத்தித் திறன்.

÷இந்தியாவில் சேமிப்பு மற்றும் முதலீடு படிப்படியாக வளர்ந்து, இப்போது மொத்த உற்பத்தி மதிப்பில் 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. சீனாவும் இதே அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

÷அடுத்ததாக தொழிலாளர் திறன் என்னும் குறியீடு. இதில் இந்திய சீனாவைக் காட்டிலும் ஆண்டுக்கு 1.8 சதவீதம் வேகமாக வளருகிறது. இந்திய மக்கள் தொகையில் இளைஞர்கள் மற்றும் உழைக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகம்.

÷மூன்றாவது, உற்பத்தித் திறன் வளர்ச்சியில் சீனாவை விட இந்தியா ஆண்டுக்கு 2 சதவீதம் பின்தங்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக உள்ள நிலை இது. இதற்கு சர்வதேச வல்லுநர்கள் தரும் விளக்கம் சிந்தனையைத் தூண்டுவதாகும். இதே 5 ஆண்டு காலமாக, சீனா கடைப்பிடித்து வரும் நாணய மதிப்பீட்டு முறை உத்தியே இதற்குக் காரணம் என்பதே அது.

÷சீனா எதிர்கொள்ளும் இரண்டாவது பிரச்னை, சுற்றுச்சூழலைப் பாதிக்கும் அதீதமான "கார்பன் புகை வெளியேற்றம்'. இவ்விரண்டு காரணங்களால், சர்வதேச பொருளாதார அமைப்புகளும், வல்லுநர்களும் சீனா மீது அதிருப்தி கொண்டுள்ளனர். எனவே உற்பத்தித் திறனில் சீனாவுக்கு இருப்பதாகக் கருதப்படும் சாதகமான சூழல் விரைவில் மறைந்து விடும் என்பதும், அது இந்திய உற்பத்தித் திறன் வளர்ச்சிக்குச் சாதகமாக அமையும் என்பதும் வல்லுநர்களின் ஏகோபித்த கருத்தாக உள்ளது. புதிய வளர்ச்சி வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய வளர்ச்சியாக இருக்கும் என சர்வதேச நிபுணர்களும் கணிக்கின்றனர்.

÷பொருளாதார முன்னேற்றம் ஒருபுறம் இருக்க, மிகப் பெரிய ஜனநாயக நாடாக இருத்தல்; முறையான பொதுத் தேர்தல்கள்; உலகத் தலைவர்களால் மதிக்கப்படும் அரசியல் தலைமை; அதிகரித்து வரும் அன்னிய நேரடி முதலீடுகள்; சுதந்திரமாகச் செயல்படும் பெருவாரியான செய்தித்தாள்கள்; உலகெங்கிலும் உள்ள மிகப் பெரிய வணிக நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாகச் செயல்படுகின்ற இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை ஆகிய பல சாதகமான அம்சங்கள் இந்தியாவின் சிறப்பான வளர்ச்சிக்குக் கட்டியம் கூறுகின்றன.

÷அதே நேரம், சில நெருடலான அம்சங்களும் இருக்கத்தான் செய்கின்றன. பெருகி வரும் மனித உரிமை மீறல்கள்; மக்களிடையே அதிகரித்து வரும் ஏழை-பணக்காரர் இடைவெளி; அரசியல் அரங்கில் ஊடுருவல் செய்யும் சமூக விரோத சக்திகள்; உள்நாட்டில் பாதுகாப்பின்மை ஆகியவை பெரும் அச்சுறுத்தல்களாக உள்ளன. இவற்றை, விரைந்து கட்டுப்படுத்தினால்தான்,இந்தியா வளமான நாடாக மட்டும் அல்லாமல் அமைதிப் பூங்காவாகவும் திகழ முடியும்.
கட்டுரையாளர் : எஸ். கோபாலகிருஷ்ணன்
நன்றி : தினமணி

அசல் அமிழ்கிறது... நகல் நர்த்தனமாடுகிறது...!

உழைப்பே உயர்வு தரும் என்று உழைப்புக்கு சற்றும் தொடர்பே இல்லாதவர்கள் அடிக்கடி உரக்கக் குரல் கொடுப்பது வாடிக்கையாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கவில்லை என்றால் உழைப்பவர்களும் ஒதுங்கிவிடுவார்களோ என்று அவர்கள் அஞ்சுவதும் புரிகிறது.

÷தமிழினம் தழைத்து ஓங்கியிருந்த காலத்தில் உழைப்பால் உயர்ந்தவர் என்று ஒருவரைச் சொல்லுகிறபோது, அவர் உடலுழைப்பால் உயர்ந்தவர் என்றே அறியப்பட்டார். சமீபகாலங்களில் அறிவியலின் அதீத வளர்ச்சியால் அமோக பலனடைந்து வருவோர் அறிவுழைப்பு என்று அறியப்படுகின்ற மூளை உழைப்பை முன்னிலைப்படுத்துவதில் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். மனித குலத்தின் உயிர்ப்புக்கே அடித்தளமாய் விளங்குகின்ற உடலுழைப்பை உதாசீனப்படுத்துவதில் அவர்கள் ஓரணியில் நிற்கின்றனர்.

÷ஒரு சமுதாயத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிற காரணிகளில் முதலானதும் முக்கியமானதும் உழைப்பாகும். அந்த உழைப்பின் இரு கூறுகளான உடலுழைப்பையும் அறிவுழைப்பையும் இரு கண்களைப்போன்று சமநிலையில் வைத்துப் போற்றுகிற சமுதாயம்தான் வளம் பெற்றுப் பீடுநடை போடும் என்பது சமூக-பொருளியல் தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடு. ஆனால் இருவித உழைப்புகளுக்கும் மதிப்பையும் விலையையும் நிர்ணயிக்கிற அதிகாரம் அறிவுழைப்பாளர்களுக்கே இருப்பதால், அவர்கள் இந்த இரு உழைப்பின் மதிப்புகளுக்கிடையே பெரும் பிளவை ஏற்படுத்திவிட்டனர்.

÷பங்குச் சந்தை, இணைய வர்த்தகம், மென்பொருள் உற்பத்தி என்று பட்டியல் நீளுகிற அறிவுசார் துறைகள், உடலுழைப்பை ஓரங்கட்டிவிட்டு கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. உடலுழைப்புக்கு ஐந்தரை அறிவே போதும் என்கிற அறிவுழைப்பாளர்களின் அஞ்ஞான மனப்பாங்கினை, வேலிக்கு ஓணான் சாட்சி என்பதுபோல ஆட்சியாளர்களும் ஆமோதிக்கும் பேரவலத்தைக் கேட்பாரில்லை.

÷பாமர மக்களின் உடலுழைப்பால் உருப்பெற்ற விளைவிப்புகளையும் உற்பத்திகளையும் அறிவுழைப்பு என்கிற ஆயுதத்தின் துணையுடன் ஒருசாரார் மாத்திரம் அனுபவித்ததன் விளைவால் சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பெரும் பிளவு ஏற்பட்டிருக்கிறது. இதுதான் பொருளாதாரச் சரிவின் மூலகாரணம் என்பதை ஓங்கிக் கூறலாம்.

÷பொருளாதார மந்தநிலை எப்போது சீராகும் என்று எதிர்பார்த்து நிற்கும் இந்த வேளையில், இருவித உழைப்புகளுக்கிடையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாகுபாட்டினை மீள்பார்வை செய்வது, சமுதாயத்தின் மீட்சிக்குப் பேருதவியாக இருக்கும்.

÷100 நாள் வேலைத்திட்டத்தில் உடலுழைப்பை அளிப்பவர்களுக்கு தினக்கூலி 20 ரூபாய் உயர்த்தப்பட்டு 100 ரூபாயாகக் கொடுக்கப்படும் என்று, மனம் விசாலமாகிவிட்ட நிலச்சுவான்தார் போன்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் அறிவுழைப்பாளர்கள் மட்டும் எப்படி லகரங்களில் சம்பளம் வாங்குகின்றனர்.

÷அதன் சூட்சுமம் மிகவும் சுலபமானது. அசல் உழைப்பைத் தரும் உடலுழைப்பாளி அந்த உழைப்பை நகல் எடுக்க முடியாது. நகல் எடுக்கவல்ல உழைப்பைத் தரும் அறிவுழைப்பாளி அதை எத்தனை நகல் வேண்டுமானாலும் எடுத்துப் பணமாக்கிக் கொள்ளலாம்.

÷100 அறிவுழைப்பாளிகள் ஒன்று சேர்ந்து 10 கோடி ரூபாய் செலவில் ஒரு மென்பொருளை உருவாக்குகிறார்கள் என்று வைத்துக்கொண்டால், அதைக் குறுந்தகடாக்கி பல லட்சம் பிரதிகளை எடுத்துப் பலநூறு கோடிகளுக்கு அவற்றை விற்றுக்கொள்ளலாம்.

÷அவ்வாறு உருவாக்கிய மென்பொருளுக்கு அறிவுசார் சொத்துரிமை வாங்கிக்கொண்டு தொடர்ந்து பன்னெடுங்காலத்திற்கும், ஒருமுறை செய்த அறிவுழைப்பை மீண்டும் மீண்டும் விற்றுப் பணமாக்குகின்றனர். இப்படிச் சுலபமாகச் சேருகின்ற பணத்தில்தான் லகரங்களை சம்பளமாகக் கொடுத்து சமுதாயப் பிளவை உண்டாக்கி வருகின்றனர்.

÷உடலுழைப்பை நம்பி இருக்கின்றவன் பொருளீட்ட வேண்டுமென்றால் அவன் மீண்டும் மீண்டும் உழைத்தாக வேண்டும். இன்றைய இந்தியப் பொருளாதாரத்தின் மாட்சி இதுதான். தொடர்ந்து உடலால் உழைப்பவன் வறுமையிலேயே உழல வேண்டும், ஆனால் அறிவால் உழைப்பவன் அதை நகலெடுக்கும் அதிநவீன உத்தியைப் பயன்படுத்தி சட்டத்தின் துணையோடு பெரும் பொருளீட்டி வாழலாம்.

÷இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள மெகா கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2009-ம் ஆண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் பட்டியல் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் ஒரு நாளைக்கு 45 ரூபாய்க்கும் குறைந்த வருமானத்தில் புழுவினும் கீழாய் வாழ்ந்தபடி உடலுழைப்பை அர்ப்பணிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 35 கோடி. அசல் அமிழ்ந்து கிடக்கிறது, நகல் நர்த்தனமாடுகிறது.

÷விவசாயமே சுவாசமாகிப் போய்விட்ட நம்நாட்டுக்குக் கட்டுப்பாடற்ற அறிவுசார் சொத்துரிமை எத்தகைய தீங்குகளை விளைவிக்கும் என்பது தெரிந்திருந்தும், இந்திய அரசு சர்வதேச அறிவுசார் சொத்துரிமை விதிமுறைகளுக்குத் தனது ஒப்புதல் முத்திரையைப் பதித்து வருகிறது.

÷இதிலே விந்தை என்னவென்றால், மனிதனின் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் போன்ற அனைத்தும் உடலுழைப்பின் உருவாக்கமாகவே இருக்கிறது. என்றாலும் இவற்றையெல்லாம் சுலபமாகக் கிடைக்கும் பணத்தால் அறிவுழைப்பாளர்கள் கூடுதல் விலைகொடுத்து எளிதாகப் பெற்றுவிடுவதால் உழைத்து உருவாக்கிய வர்க்கத்தினருக்கேகூட அவை கிடைப்பதில்லை. வழிப்போக்கர்களுக்கும் விருந்தோம்பல் செய்து அவர்கள் இளைப்பாற திண்ணைகட்டி வாழ்ந்தவர்கள் இன்று இலவசங்களுக்காக வரிசைகட்டி நின்றே காலத்தைக் கழிக்கின்றனர்.

÷உடலுழைப்பின் மாண்பினை உலகுக்கு உணர்த்திய முதல் இனம் நம் தமிழினம் என்பதுதான் எஞ்சியிருக்கும் பெருமை. உலகப் பொதுமறையாம் திருக்குறளை நமக்களித்த ஐயன் வள்ளுவர் இதைப் பிரகடனம் செய்கிறார். "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் - தொழுதுண்டு பின்செல் பவர்' என்று. உடலை வருத்தி உழைக்கின்ற உழவனுக்கு முதல் மரியாதை செய்து, உலகிலேயே உடலுழைப்பை உயர்த்திப் பிடித்த பெருமகன் திருவள்ளுவர்தான் என்பதில் நெஞ்சம் நெகிழ்கிறது.

÷அதற்கும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த யுகக் கவிஞர் பாரதியார், "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்று பின்வரவான தொழிலையும் சேர்த்து வணங்கிப் போற்றுகிறார்.

÷காந்தியடிகள் தமது சத்திய சோதனையில் உடலுழைப்பு பற்றிய சில தீர்க்கமான கருத்துகளை முன்வைக்கிறார். உழைப்பில் உயர்வு தாழ்வு கிடையாது என்கிற சத்தியவாக்குக்கு சாட்சியம் சொல்லிவிட்டு, ஒரு வழக்கறிஞரின் உழைப்பும் ஒரு சிகை அலங்காரத் தொழிலாளியின் உழைப்பும் ஒரே பெறுமானம் உள்ளவைதான் என்கிற ஆங்கில அறிஞர் ஜான் ரஸ்கின் கருத்தை அவர் அப்படியே ஆமோதிக்கிறார். மகாத்மா காந்தியின் பெயரைச் சொல்லி இன்று அரசியல் நடத்துகிறவர்கள் காந்தி ஜயந்தியன்றும், குடியரசு தினத்தன்றும் குல்லாய் போட்டுக் கொண்டு பேட்டி கொடுப்பதே காந்தியம் என்று எண்ணிக்கொள்வது காலத்தின் கோலம்.

÷முன்பெல்லாம் வேளாண் நிலங்கள் பொன்விளையும் பூமி என்று வாஞ்சையோடு அழைக்கப்பட்டன. அதன் விளைபொருள்களை விற்றுப் பொன்வாங்கும் சக்தி விவசாயிகளிடம் அன்று இருந்தது. இன்று நிலத்தையே விற்றால்தான் பொன்வாங்க முடியும் என்கிற சூழல் நிலவுகிறது.

÷விவசாயிகள், விவசாயக் கூலித்தொழிலாளர்கள் மாத்திரமல்லாது, தொழிற்சாலைகளில் தொய்வின்றி உழைத்துவரும் தொழிலாளர்கள், கைவினைக் கலைஞர்கள், மீனவர்கள், இன்னபிற உடலுழைப்பாளர்கள் அனைவரும் தங்கள் இதயத்தின் ஒரு மூலையில் இன்னும் கசிகின்ற நம்பிக்கையால் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.

÷லாபமும், சமூக மாண்பும் இல்லாத உடலுழைப்பை விடுத்து, இளைஞர்கள் விரக்தியின் விளிம்புக்குச் சென்று கொண்டிருப்பது சமுதாயத்துக்கு உகந்ததல்ல. உடலுழைப்புக்கு உரிய மதிப்பை, முதல் மரியாதையை விரைந்து மீட்டுத் தருகின்ற கடமையும் கடப்பாடும் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.

÷பிரெஞ்சுப் புரட்சியின்போது பாஸ்டில் சிறையை உடைத்து சமச்சீர் சமுதாயத்துக்கு வித்திட்டதும், ரஷியாவில் சார் மன்னர் ஆட்சிக்கு சாவுமணி அடித்து சோஷலிச சமுதாயம் அமைய அடித்தளமாக இருந்ததும், சீனத்தின் கூன்களை நிமிர்த்தி அதை செஞ்சீனமாக்கியதும் உடலுழைப்பாளர்களின் பெரும் பங்களிப்பே என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்படுவது அவர்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.
கட்டுரையாளர் :தில்லை நாகசாமி
நன்றி : தினமணி

Friday, January 15, 2010

தொட​ரும் இன​வெ​றித் தாக்​கு​தல்

ஆஸ்​தி​ரே​லி​யா​வில் இந்​திய மாண​வர்​கள் மீது நடந்து வரும் இன​வெ​றித் தாக்​கு​தல் கவலை அளிக்​கி​றது.​ கடந்த ஓராண்​டுக்கு மேலாக ​ இத்​த​கைய தாக்​கு​தல்​கள் நடந்து வரு​வது கவ​னத்​தில் கொள்​ளத்​தக்​கது.​

க​டந்த ஒரு​வா​ரத்​துக்கு முன்​னர் ஆஸ்​தி​ரே​லி​யா​வின் மெல்​பர்ன் நக​ரில் பஞ்​சா​பைச் சேர்ந்த நிதின் கர்க் என்ற 21 வயது இளை​ஞர் அடை​யா​ளம் தெரி​யாத நபர்​க​ளால் கொடூ​ர​மா​கக் குத்​திக் கொல்​லப்​பட்​டுள்​ளார்.​ இதைத் தொடர்ந்து எரிந்த நிலை​யில் இந்​தி​ய​ரின் உடல் மீட்​கப்​பட்​டுள்​ளது.​ இச் சம்​ப​வங்​கள் பெரும் அதிர்ச்​சியை ஏற்​ப​டுத்​தி​யுள்​ளன.​ இந்த அதிர்ச்​சியி​லி​ருந்து நாம் மீள்​வ​தற்​குள் மற்​றொரு இந்​தி​யர் மீது மர்​மக் கும்​பல் ஆசிட் வீச்சு நடத்​தி​விட்டு தப்​பி​யோ​டி​யுள்​ளது.​

மெல்​பர்ன் நக​ரின் வட​மேற்​குப் பகு​தி​யில் வசித்து வரு​ப​வர் ​ ஜஸ்ப்​ரீத் சிங்.​ இந்​தி​ய​ரான இவர்,​​ தனது மனை​வி​யு​டன் ஒரு விருந்​துக்​குச் சென்​று​விட்டு வீடு திரும்​பு​கை​யில் மனை​வியை வீட்​டில் இறக்​கி​விட்டு,​​ காரை பக்​கத்​துத் தெரு​வில் நிறுத்​தி​விட்டு வெளியே வந்​த​போது மர்​மக் கும்​பல் அவரை கீழே தள்ளி அவர் மீது ஆசிட்டை வீசி,​​ தீவைத்​து​விட்​டுத் தப்​பி​யோ​டி​விட்​டது.​

இப்​படி இந்​தி​யர்​கள் மீதான தாக்​கு​தல் அடிக்​கடி நடக்​கின்ற போதி​லும் இதை ஆஸ்​தி​ரே​லிய அரசு தீவி​ரப் பிரச்​னை​யாக எடுத்​துக் கொண்​ட​தா​கத் தெரி​ய​வில்லை.​ இந்​தத் தாக்​கு​தலை இன​வெ​றித் தாக்​கு​தல் என்று சொல்​ல​மு​டி​யா​விட்​டா​லும்,​​ கடந்த ஓராண்​டுக்கு மேலாக இந்​தி​யர்​களை மட்​டும் குறி​வைத்து நடத்​தப்​ப​டும் தாக்​கு​தல்​க​ளைப் பார்த்​தால் இது இன​வெறி ஆதிக்​கச் செயலே என்​பது தெரி​ய​வ​ரும்.​

இந்​தத் தாக்​கு​தல் சம்​ப​வங்​கள் சாதா​ரண குற்​றச் சம்​ப​வங்​கள்​தான் என்​பது போல் ஆஸ்​தி​ரே​லி​யத் தூதர் தாமஸ் வர்​கீஸ் பேசி​யுள்​ளார்.​ ஆஸ்​தி​ரே​லி​யா​வில் மேற்​ப​டிப்​புக்கு விண்​ணப்​பிக்​கும் இந்​தி​யர்​க​ளின் எண்​ணிக்கை குறைந்து வரு​வ​தற்கு சர்​வ​தேச அள​வில் ஏற்​பட்​டுள்ள பொரு​ளா​தா​ரச் சரிவே கார​ணம் என்​றும் அவர் கூறி​யுள்​ளார்.​ ஆனால்,​​ ஊட​கங்​கள் மூலம் கிடைக்​கும் தக​வல்​க​ளைப் பார்த்​தால் பாது​காப்பு இல்​லாத கார​ணத்​தால்​தான் இந்த எண்​ணிக்கை குறைந்து வரு​வது புரி​யும்.​

ஆஸ்​தி​ரே​லி​யா​வில் படிக்​கும் ஆசி​யர் அல்​லா​த​வர்​க​ளின் எண்​ணிக்​கை​யு​டன் ஒப்​பிட்​டால் அங்கு படித்து வரும் இந்​தி​யர்​க​ளின் எண்​ணிக்கை குறை​வு​தான்.​ ஆனால்,​​ ஆசி​யர்​கள் எண்​ணிக்​கை​யில் இந்​தியா இரண்​டா​வது இடம் வகிக்​கி​றது.​ ஆஸ்​தி​ரே​லி​யா​வில் பட்​ட​மேற்​ப​டிப்பு படிக்​கும் மாண​வர்​கள்,​​ பகு​தி​நேர ஊழி​யர்​க​ளாக வேலை​செய்து தங்​கள் செல​வி​னங்​க​ளைச் சமா​ளித்து வரு​கின்​ற​னர்.​ குறிப்​பாக மெல்​பர்ன் நக​ரில் இந்​தி​யர்​கள் எங்கு சென்​றா​லும் குழு​வா​கவே செல்​கின்​ற​னர்.​ தனி​யா​கச் செல்​வ​தில்லை.​ மேலும் விலை​ம​திப்பு மிக்க பொருள்​கள் எதை​யும் அவர்​கள் கையி​லெ​டுத்​துச் செல்​வ​தில்லை.​ இந்​நி​லை​யில் இது​போன்று நடத்​தப்​ப​டும் தாக்​கு​தலை வழிப்​பறி என்ற சாதா​ரண குற்​ற​மாக யாரும் சொல்​லி​விட முடி​யாது.​

இந்​தி​யர்​கள் மீது குறிப்​பாக மாண​வர்​கள் மீது நடத்​தப்​பட்டு வரும் கொலை​வெ​றித் தாக்​கு​த​லுக்கு இந்​தியா ​ கடும் கண்​ட​னம் தெரி​வித்​துள்​ளதை ஆஸ்​தி​ரே​லிய அர​சால் தாங்​கிக் கொள்ள முடி​ய​வில்லை.​ இந்​தி​யர்​க​ளின் பாது​காப்பை உறுதி செய்​வ​தா​கக் கூறு​வ​தற்​குப் பதி​லாக உல​கம் எங்​கும் இது​போன்ற குற்​றங்​கள் நடக்​கத்​தான் செய்​கின்​றன.​ ஏன் தில்லி,​​ மும்பை போன்ற நக​ரங்​க​ளி​லும் இவை நடக்​கத்​தான் செய்​கின்​றன.​ எனவே இதைப் பெரி​து​ப​டுத்த வேண்​டாம் என்று அந்த நாட்​டின் வெளி​யு​றவு அமைச்​சர் பேசி​யுள்​ளது அவ​ரது பொறுப்​பற்ற தன்​மை​யையே காட்​டு​கி​றது.​

இத்​த​கைய சம்​ப​வங்​கள் தற்​செ​ய​லாக நடந்​தி​ருந்​தா​லும் சரி...இன​வெ​றித் தாக்​கு​த​லாக இருந்​தா​லும் சரி...​ வெளி​நாட்​டி​னரை,​​ குறிப்​பாக இந்​தி​யர்​க​ளைப் பாது​காக்​கும் பொறுப்பு ஆஸ்​தி​ரே​லிய அர​சுக்கு உள்​ளது.​

இந்​தி​யர்​கள் மீது இன​வெ​றித் தாக்​கு​தல் நடந்து வரும் நிலை​யில்,​​ மத்​திய வெளி​யு​றவு அமைச்​சர் எஸ்.எம்.கிருஷ்ணா,​​ "ஆஸ்​தி​ரே​லி​யா​வுக்கு படிக்​கச் செல்​லும் மாண​வர்​கள் ஒரு​மு​றைக்கு இரு​முறை யோசித்​துப் படிக்​கச் செல்​ல​வேண்​டும்.​ இன்​னும் சொல்​லப்​போ​னால் ஆஸ்​தி​ரே​லியா சென்று படிப்​ப​தைத் தவிர்க்க வேண்​டும்.​ வேறு​நா​டு​க​ளில் உள்ள பட்ட மேற்​ப​டிப்​பு​க​ளைத் தேர்ந்​தெ​டுத்​துப் படிக்​க​லாம்' என்​றும் யோசனை கூறி​யி​ருக்​கி​றார்.​

ஆஸ்​தி​ரே​லி​யா​வில் இந்​தி​யர்​கள் மீதான தாக்​கு​தலை உட​ன​டி​யாக நிறுத்த அந்த நாட்டு அர​சு​டன் பேச்சு நடத்தி சுமு​கத் தீர்​வு​காண முன்​வ​ரா​மல்,​​ மாண​வர்​களை அங்கு சென்று படிக்க வேண்​டாம் என்று கூறு​வது புத்​தி​சா​லித்​த​னம் அல்ல.​ ஆஸ்​தி​ரே​லிய பல்​க​லைக்​க​ழ​கங்​க​ளில் பட்​ட​மேற்​ப​டிப்​புக் கல்வி நன்​றாக இருப்​ப​தால்​தான் அங்கு சேர்​வ​தில் மாண​வர்​கள் ஆர்​வம் காட்​டு​கின்​ற​னர்.​ மேலும் திற​மை​யுள்ள மாண​வர்​க​ளும்,​​ அதிக மதிப்​பெண் பெறும் வாய்ப்​புள்ள,​​ வன்​மு​றைச் செயல்​க​ளில் ஈடு​ப​டாத மாண​வர்​கள்​தான் அங்கு செல்​கின்​ற​னர்.​ எங்கு சென்று படிக்க வேண்​டும்,​​ என்ன படிப்பு படிக்க வேண்​டும் என்​ப​தைத் தீர்​மா​னிக்க வேண்​டி​யது மாண​வ​ரும் அவ​ரு​டைய பெற்​றோ​ரும் தான்.​ கல்வி ஆலோ​ச​கர்​க​ளா​கச் செயல்​ப​டும் சில​ரு​டைய தவ​றான வழி​காட்​டு​தல்​க​ளாலே தவ​று​கள் ஏற்​ப​டு​கின்​றன.​ வெளி​நாடு சென்று படிக்​கும் மாண​வர்​க​ளுக்​குச் சில எச்​ச​ரிக்​கை​களை அமைச்​சர் தெரி​விக்​க​லாமே தவிர அவர்​களை இங்கு படிக்​காதே,​​ அங்கு படிக்​காதே என்று தீர்ப்​புச் சொல்​லக்​கூ​டாது.​

ஆஸ்​தி​ரே​லி​யா​வில் படிக்​கும் இந்​திய மாண​வர்​கள்,​​ தங்​க​ளின் திற​மை​யான படிப்​பின் மூல​மும்,​​ செயல்​பாட்​டின் மூல​மும் அந்த நாட்​டுக்​குப் பெருமை தேடித் தரு​கின்​ற​னர்.​

இதை ஆஸ்​தி​ரே​லிய அரசு உணர்ந்​து​கொண்டு நடந்த சம்​ப​வத்​துக்கு வருத்​தம் தெரி​விப்​ப​து​டன் நில்​லா​மல்,​​ இந்​தி​யர்​க​ளின் பாது​காப்​பில் கவ​னம் செலுத்த வேண்​டும்.​ அது​மட்​டு​மல்ல,​​ இது​போன்ற இன​வெ​றித் தாக்​கு​த​லுக்கு முற்​றுப்​புள்ளி வைப்​ப​து​டன் இதற்​குக் கார​ண​மான குற்​ற​வா​ளி​க​ளைக் கண்​டு​பி​டித்து நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்.​

அன்​னிய நாட்​டில் இந்​தி​யர்​க​ளின் விலை​ம​திக்க முடி​யாத உயிர் பறி​போ​வதை பார்த்​துக்​கொண்டு நாம் சும்மா இருக்க முடி​யாது.​ இந்​திய மாண​வர்​க​ளின் பாது​காப்பை உறுதி செய்​வ​தில் ஆஸ்​தி​ரே​லிய அர​சுக்கு முழு பொறுப்பு உள்​ளது.​ அதை வலி​யு​றுத்​தும் கடமை இந்​திய அர​சுக்கு உள்​ளது.
கட்டுரையாளர் :ஜெ.ராக​வன்
நன்றி : தினமணி

Thursday, January 14, 2010

செல்' இன்றிச் செல்!

பணியின்போது அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் செல்போன் எடுத்துச் செல்லத் தடைவிதித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவு வரவேற்கத்தக்கது.

÷சாலை விபத்துக்கான முக்கிய காரணிகளில் செல்போனும் ஒன்று. சாலைகளில் மட்டுமல்ல, தண்டவாளத்தைக் கடக்கும்போதுகூட செல்போன் பேசும் அளவு நம் மக்களை அடிமைப்படுத்தியுள்ளது செல்போன். ஆதலால் இந்தத் தடை நிச்சயம் பலனளிக்கும்.

÷அதேநேரத்தில், செல்போன் எடுத்துச் செல்ல தடைவிதிப்பது ஓட்டுநர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்; பணியின்போது செல்போன் பேச வேண்டுமானால் தடை விதிக்கலாம்; செல்போனே எடுத்துச் செல்லத் தடை விதிக்கக் கூடாது என சில போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதில் சமரசத்துக்கு இடம் அளித்தால் இந்த உத்தரவே நீர்த்துப்போகும்.

÷போக்குவரத்துக் கழக கிளை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு பேச செல்போன் அவசியம் என்று கருதினால், நடத்துநர்களின் செல்போன் மூலம் தொடர்பு கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களுடன் ஓட்டுநர்கள் தொடர்புகொள்ள செல்போன் அவசியம் என்று வாதிடுவது நியாயமல்ல. அரசு சட்டம் இயற்றினால் அதில் சலுகைகளை எதிர்பார்க்கக் கூடாது.

÷செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே விதிமுறைகள் உள்ளன. ஆனால், அதன்படி எடுக்கப்படும் நடவடிக்கை போதுமானதாக இல்லை. எல்லா சாலைகளிலும் யாராவது சிலர் செல்போன் பேசிக்கொண்டேதான் வாகனத்தை இயக்குகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள்தான் எப்போதாவது போலீஸ் பிடியில் சிக்குகின்றனர். செல்போன் பேசிக்கொண்டே கார்களை இயக்கும் ஓட்டுநர்கள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை.

÷பொது இடத்தில் புகைபிடிக்க, எச்சில் துப்பத் தடைவிதித்து அரசு ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு எந்த அளவு நடைமுறையில் உள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே. தொடர்ச்சியான கண்காணிப்பு, கடுமையான நடவடிக்கைகள் இல்லாததே அரசின் சட்டங்கள் மீறப்படுவதற்கு முதற்காரணம்.

÷அதேபோன்ற நிலைமை இந்த விஷயத்திலும் ஆகிவிடாமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஓட்டுநர்கள் செல்போன் கொண்டு செல்கின்றனரா என்பது டிக்கெட் பரிசோதகர்கள் மூலம் கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த விதிவிலக்கும் அளிக்காமல் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

÷மேலும், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் என்பதுடன் நின்றுவிடாமல், தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்களும் செல்போன் எடுத்துச் செல்லத் தடைவிதிக்க வேண்டும்.

÷தனியார் பேருந்துகள் சிறப்பான சேவையை அளித்தாலும், அதிக வேகம், தொழில்போட்டியால் விதிமீறல் என அவைகளால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகவே உள்ளன. எனவே, இந்தக் கண்காணிப்பு வளையத்துக்குள் தனியார் பேருந்து ஓட்டுநர்களும் கொண்டுவரப்பட வேண்டும்.

÷அதேபோல அரசு அலுவலகங்களிலும் பணியின்போது ஊழியர்கள் செல்போன் பேச சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம். அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பலர், காத்துக்கிடக்கும் பொதுமக்களைக் கண்டுகொள்ளாமல் செல்போனில் வெட்டியாகப் பேசி அரட்டை அடிப்பது கண்கூடு. இதனால், பணிகள் பாதிக்கப்படுவதுடன் ஏதாவது ஒரு காரணத்துக்காக அலுவலகங்களுக்கு வந்திருக்கும் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

÷அறிவியல் முன்னேற்றத்தின் அற்புதம் செல்போன். அதன் வருகைக்குப் பின்னர் தகவல் தொடர்பில் பெரும் புரட்சியே ஏற்பட்டு, இன்று "செல் இல்லாதோர்க்கு இவ்வுலக வாழ்க்கையே இல்லை' என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால், அந்த நாகரிகப் புரட்சியே தனிமனித வாழ்வில் ஒரு மிரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை. செல்போனால் எந்த அளவு பயன் உள்ளதோ அதே அளவு பாதிப்புகளும் இருக்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் செல்போனிலேயே மூழ்கிக் கிடப்பதால், அவர்களது கல்வி பாதிக்கப்படுகிறது. செல்போனால், மாணவிகளுக்குப் பல்வேறு மனஉளைச்சல்கள் ஏற்படுகின்றன. உச்சகட்டமாக, ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கிக்கொண்டே செல்போன் பேசுவதால் விபத்து நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

÷எனவே, செல்போன் பயன்பாட்டில் நிச்சயம் கட்டுப்பாடுகள் தேவை. அரசு சட்டம் போட்டுத்தான் அந்தக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும் என்பதில்லை. ஏனெனில் என்னதான் சட்டம் இயற்றினாலும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற தனிமனித ஒழுக்கமே எந்த சட்டத்தையும் வெற்றி பெறச் செய்யும்.
கட்டுரையாளர் : எஸ்.ராஜாராம்
நன்றி : தினமணி