ஜாதியிலே, மதங்களிலே, சாத்திரச் சண்டைகளிலே அகப்பட்டு, புகழ் மங்கிக்கிடந்த இந்தியத் திருநாட்டின் நிலையை மாற்ற - அதன் உயர்வை உலகுக்குப் பறைசாற்றத் தோன்றிய பெருந்தகை சுவாமி விவேகானந்தர். அவர் இந்நாட்டுக்கு ஆற்றியுள்ள தொண்டு அளப்பரியதாகும்.
விவேகானந்தரைச் சான்றோனாக, துறவியாக, நாவலனாக, தத்துவ ஞானியாக, சீர்திருத்தச் செம்மலாகக் காண்பர் பலர். இவை அனைத்துக்கும் மேலான ஒரு பரிமாணம் அவருக்கு உண்டு. ஊக்கமின்றி, உள்ள உரமிழந்து அன்னியருக்கு அடிமைகளாக வாழ்ந்த இந்தியர் நெஞ்சில் புத்தொளி பாய்ச்சியவர் அவர். முடைநாற்றம் வீசும் மூடப்பழக்கங்களையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு, ஆயிரம் தெய்வங்களைத் தேடி அலைந்த இந்நாட்டு மக்களுக்கு அறிவு நெறி காட்டியவர்.
தன்னம்பிக்கையும், அச்சமின்மையுமே அவர் சொல்லிலும், செயலிலும் உயிர் நாதமாகத் திகழ்ந்தன. ""பண்டைய மதங்கள் கடவுளின் மீது நம்பிக்கையற்றவனை "நாத்திகன்' என்றன. ஆனால் புதிய மதமோ எவனொருவனுக்குத் தன் மீதே நம்பிக்கை இல்லையோ அவனையே நாத்திகன் என அழைக்கிறது'' (சுவாமி விவேகானந்தரின் எழுத்தும் பேச்சும் தொகுதி: 2 பக்.301) எனப் புதிய சித்தாந்தம் ஒன்றை அவர் வலியுறுத்தினார். வலிமையே வாழ்வெனவும், வலியின்மை மரணமெனவும் முழங்கினார். ""மக்களுக்குப் போதிக்கப்பட வேண்டிய ஒரே மதம் அச்சமின்மை'' (தொகுதி: பக்.160) என வலியுறுத்தினார். உபநிஷதங்களிலிருந்து வெளிப்படும் கருத்து இதுவே என்றார். மக்களிடையே இருந்த அச்சம் எனும் பிணியைக் கண்டதோடல்லாமல், அந்நோயின் மூலத்தையும் தெளிவுற அறிந்திருந்தார்.
அறியாமை! தன்வலி புரியாமையால் விளைந்த அறியாமை; எல்லாவற்றையும் செய்யக் கூடிய ஆற்றலின் ஊற்று நம்முள்ளே சுரந்துகொண்டிருக்க, அறியாமையால் அதை அறியாதிருத்தல் பேதைமை எனவும், ""முடியாது, என்னால் இயலாது என்று மட்டும் சொல்லாதீர்கள். நீங்கள் எல்லையற்றவர்கள். காலமும், இடமும் கூட உங்கள் இயல்புடன் ஒப்பிடும் போது ஒன்றுமே இல்லை. நீங்கள் எதையும் செய்ய முடியும். எல்லாம் வல்லவர் நீங்கள்'' (பக்.300) எனவும் கூறினார்.
தன் குருநாதர் ராமகிருஷ்ணரின் மறைவுக்குப்பின், இந்திய நாட்டின் உண்மை நிலை அறிய, இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டார் விவேகானந்தர். நாட்டில் பரவிக்கிடந்த வறுமையையும், அதனால் மக்களுற்ற இன்னல்களையும் கண்டு கலங்கினார் அவர். ""பசித்த மானிடனுக்கு மதத்தைப் போதிப்பது பயனற்றது'' எனத் தனது குருநாதரின் மொழியை அனுபவத்தால் உணர்ந்தார் சுவாமி விவேகானந்தர். வறியவரோடு வறியவராக அப்பயணத்தின் போது அவர் வாழ்ந்தார்.
விவேகானந்தர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டபோது, செல்வந்தர்கள் பலர் பணம் தர முன்வந்தனர். ஆனால் விவேகானந்தர், தன் அன்பர்களை நடுத்தர மக்களிடம் சென்று பொருள் வேண்டச் சொன்னார். தான் நடுத்தர ஏழை மக்களின் பிரதிநிதியாகவே அமெரிக்கா செல்ல விரும்புவதாகப் பெருமையுடன் சொன்னார்!
""இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை'' என்னும் குறள் வரியின் இலக்கணமாகவே அவர் வாழ்வு அமைந்திருந்தது. அவர் எளிய வாழ்க்கை முறையையும், உண்மைத் துறவு நிலையையும் அவர் வாழ்வில் நடந்த பல நிகழ்ச்சிகள் நமக்கு உணர்த்தும். குறிப்பாக, இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு இறுதியாகக் குமரிமுனையை அடைந்த விவேகானந்தர், கடலில் இருந்த பாறையின் உச்சியில் அமர்ந்து தியானம் செய்ய விழைந்தார். ஆனால், படகேறிச்செல்ல அவரிடம் பணம் இல்லை. சுறா மீன்கள் நிரம்ப உள்ள குமரிக்கடலில் குதித்து, நீந்திப் பாறையை அடைந்து, தியானம் மேற்கொண்டார்.
அயல் நாடுகளில் விவேகானந்தரின் நாவன்மையையும், உள்ளத்திண்மையையும், மனத்தன்மையையும், மதி நுட்பத்தையும் கண்டு வியந்தோர் பலர். 1893-ம் ஆண்டு சிகாகோவில் அனைத்துலக சமயப் பெருமன்றத்தில் விவேகானந்தர் ஆற்றிய, கேட்போர் பிணிக்குந்தன்மை வாய்ந்த உரை இந்தியாவின் புகழை உலகறியச் செய்தது. அப் பெருமன்றத்தில் விவேகானந்தர் உரையாற்றிய பாங்கையும், தன் நாநலத்தால் மக்களை அவர் கவர்ந்த விதத்தையும் பிரஞ்சு நாட்டு அறிஞர் ரோமென்ரோலந்து தான் எழுதிய, "விவேகானந்தரின் வாழ்க்கை' என்ற நூலில் சிறப்புடன் விளக்கியுள்ளார்.
""யாரும் அறியாத அம் முப்பது வயது இளந்துறவி, கார்டின் கிப்பன்ஸôல் சிகாகோவில் 1893-ம் ஆண்டு துவக்கிவைக்கப்பட்ட அனைத்துலகச் சமயப் பெருமன்றத்தில் புகுந்தபோது, அவரின் கம்பீரத் தோற்றம் உடனிருந்தோரை மெய்மறக்கச் செய்தது. அவர் வலிவும், பொலிவும், கருவிழிகளும், தோற்றமிடுக்கும், சொற்பொழிவைத் துவக்கியவுடன் நல்லிசையென ஒலித்த அவர்தம் குரலும், அவர் நிறம் கண்டு அவர் மீது முன்பு வேற்றுமை மனப்பான்மை கொண்டிருந்த அமெரிக்க, ஐரோப்பிய மக்களையும் கவர்ந்திழுத்தன. அப்போர்க்குணம் கொண்ட இந்தியத் துறவி அமெரிக்காவில் தன் ஆழ்ந்த முத்திரையைப் பதித்துச் சென்றார்'' (பக்.5).
இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் தான் கூறவந்த கருத்துகளை எவ்வித அச்சமும், தயக்கமுமின்றி வெளிப்படுத்தினார். தன் அமெரிக்கப் பயணத்தின்போது அமெரிக்கச் சிந்தனையாளர் இங்கர்சாலை சந்தித்தார் விவேகானந்தர். அவர் விவேகானந்தரின் அச்சமற்ற போக்கையும், அந்நாளிலான அமெரிக்காவின் நிலைமையையும் மனதில் கொண்டு, ""ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் இந்நாட்டுக்கு வந்து போதித்திருப்பீர்களாயின், உங்களை தூக்கிலோ, தீயிலோ இட்டிருப்பர் இந்நாட்டவர்'' என்றார் (தொகுதி:2 பக்.27).
மதத்துக்கும், மானுடத்துக்கும் உள்ள தொடர்பை நன்கு உணர்ந்திருந்தார் விவேகானந்தர். ஆன்மிகத்துக்கும் நடைமுறை வாழ்வுக்கும் இடைவெளி ஏதும் இல்லை என்பதை தம் சொற்பொழிவுகள் மூலம் நிறுவினார். இக்கருத்தை அறுதியிடும் வண்ணம், "செயல்முறை வேதாந்தம்' என்னும் கோட்பாட்டைக் கண்டார். ஆன்மிகம் என்பது வாழும் நெறி; அது வாழ்க்கையைக் கண்டு அஞ்சி ஓடுவோர் சென்றடையும் கூடாரமன்று என்பது அவர் கருத்து. இதை அவர் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்று நமக்கு உணர்த்தும்.
ஒருமுறை விவேகானந்தரைக் காண முதுநிலைப் பட்டப்படிப்புப் பயின்று வந்த மாணவன் ஒருவன் வந்தான். அவன் துறவு பூண விவேகானந்தரின் கட்டளையை வேண்டி நின்றான். அம் மாணவன் துறவு பூணக்காரணம், அவன் படித்துக் கொண்டிருந்த முதுநிலைப் பட்டப்படிப்பு சிரமமாக இருந்ததுதான் என்பதைக் கண்டறிந்த விவேகானந்தர், முதுநிலைப் படிப்பைக் காட்டிலும் துறவு வாழ்க்கை கடினமானது என நயம்படக் கூறி, அம் மாணவனுக்கு உண்மையை உணர்த்தினார்.
மதத்தின் மீதுள்ள பற்று மதவெறியாக உருவெடுப்பதைக் கடிந்தவர் விவேகானந்தர். மதவெறியே மதநெறியாகப் போற்றிக் கொள்ளப்படும் இந்நாளில், விவேகானந்தரின் பணிச்சிறப்பும், பேச்சும் முக்கியத்துவம் பெறுகின்றன; பெரிதும் வேண்டப்படுகின்றன. மேலை நாடுகளுக்குச் சென்று திரும்பியதும் மதுரையில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுப் பேசுகையில், மதவெறிக்கு ஆட்படாமல் இருக்குமாறு மக்களை வேண்டினார்.
""தற்போது இந்தியாவில் மகத்தான மத மறுமலர்ச்சி தோன்றியுள்ளது. இதில் பெருமை இருப்பதைப் போலவே ஆபத்தும் உள்ளது. ஏனெனில் சில வேளைகளில் இந்த மறுமலர்ச்சி, கொள்கை வெறியை வளர்க்கிறது; சில நேரங்களில் அவ்வெறி, எல்லை கடந்தும் போய்விடுகிறது. மறுமலர்ச்சிக்குக் காரணமானவர்களுக்குக் கூட அதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை வருகிறது. எனவே, எச்சரிக்கையாக இருப்பது நல்லது'' (தொகுதி:3 பக்.172) எனக் குறிப்பிட்டார்.
இந்தியாவில் மட்டுமன்றி, வெளிநாடுகளில் உரை நிகழ்த்தும்போதும், மதவெறியை வன்மையாக அவர் கண்டித்தார். "உலகளாவிய மதம்' எனும் தலைப்பில் 1900-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் உரை நிகழ்த்துகையில், ""உலகில் உள்ள நோய்கள் யாவினும் மிகக் கொடிய நோய் மதவெறி எனும் நோயே'' என்றார்.
விவேகானந்தரின் செயலிலும் பேச்சிலும் பிற மதங்களுக்கு எதிரான காழ்ப்புணர்வு எப்போதும் இருந்ததில்லை. உலக மதங்கள் யாவும் தமக்குள் இருக்கும் பிணக்குகளைத் துறந்து உலகளாவிய தன்மை எய்த வேண்டும் என விழைந்தார் விவேகானந்தர். ""மதங்கள் யாவும் பரந்த நோக்குடையனவே. பல மதங்களைப் போதித்து வரும் மதவாதிகள் அவர்தம் பணிகளைச் சற்று நிறுத்தினால், நாம் இவ்வுண்மையை நொடிப்பொழுதில் உணரலாம்'' (தொகுதி: 2 பக்.367)
ஜாதியின் பெயரால் நடந்த அநீதிகளைக் கண்டு வெகுண்டெழுந்தவர் விவேகானந்தர். மேல் வகுப்பினருக்கு ஒரு நீதி; கீழ் வகுப்பினருக்கு ஒரு நீதி என்று சமுதாயத்தில் அமைந்துள்ள வேறுபாடு சாத்திரத்தால் விளைந்ததன்று; சதியால் நேர்ந்தது என முரசறைந்தார். ""சாதி வெறி பிடித்தோரும் ஒரு சில மதவாதிகளும் இந்நாட்டினை இழிநிலைக்குத் தள்ளிவிட்டனர்'' (தொகுதி: 6 பக்.317) என வேதனைப்பட்டார்.
இந்தியா உயர வேண்டுமெனில் இந்தியர் ஜாதிப் பித்தைத் தவிர்த்து பேதமற்ற உயர் நெறி போற்றி ஒழுகுதல் அவசியம் என விரும்பினார். இந்து சமயத்தின் மேன்மையை மக்களுக்கு உணர்த்தாமல் ஜாதி-மதவெறியை வளர்ப்போரைக் கடுமையாக எதிர்த்தார் விவேகானந்தர். ""உங்கள் சமயம் மகத்தானது, ஆனால் அதன் மேன்மையை மக்களுக்கு உணர்த்தாமல் அவர்களை மடமைக்கு ஆட்படுத்துகின்றீர். வற்றாத சுனை பொங்கிக் கொண்டிருக்க, மக்களைச் சாக்கடை நீரைப் பருகச் செய்கின்றீர்'' (தொகுதி: 5 பக்.223) என வேதனையுடன் குறிப்பிட்டார்.
விவேகானந்தர் விசாலப் பார்வையால் உலகை விழுங்கியவர். அறிவின்பாற்பட்டதே சமயம் என நிறுவியவர். "தன்னிற் பிறிதில்லை தெய்வம்' எனத் தன்னம்பிக்கையை வளர்த்தவர். அவர் கருத்துகள் புதியதோர் உலகம் காண நம்மை ஊக்குவன. அவர் மண்ணுலகில் வாழ்ந்தது 39 ஆண்டுகள் தான் என்றாலும் அவர் மூட்டிய கனல், அணையா விளக்கென ஒளிர்விடும் என நம்பிக்கை அவருக்கு இருந்தது. ""ஒரு விவேகானந்தர் என்ன, காலப்போக்கில் எத்தனையோ விவேகானந்தர்கள் தோன்றத்தான் போகிறார்கள்'' என்பது அவரது நம்பிக்கை.
அந்த நம்பிக்கை வீண்போகாமல் காப்பாற்றப்படும் பெரும் பொறுப்பு நமது இளைய தலைமுறைக்கு உண்டு.
கட்டுரையாளர்:ப.சேரலாதன்
நன்றி : தினமணி
Saturday, January 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
உங்களுக்கு நூறு ஓட்டு போட வேண்டும் என்று ஆசையாக உள்ளது.. என்ன ஒரு வார்த்தை வீச்சு. மறுபடியும் மறுபடியும் தினரடிக்கிரீர். தொடருங்கள் நண்பரே. எங்களுக்கும் நீங்கள் தான் ஊக்கம். தொடரட்டும் உங்கள் நற்பணி.
நன்றி.
Post a Comment