Saturday, January 16, 2010

அசல் அமிழ்கிறது... நகல் நர்த்தனமாடுகிறது...!

உழைப்பே உயர்வு தரும் என்று உழைப்புக்கு சற்றும் தொடர்பே இல்லாதவர்கள் அடிக்கடி உரக்கக் குரல் கொடுப்பது வாடிக்கையாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கவில்லை என்றால் உழைப்பவர்களும் ஒதுங்கிவிடுவார்களோ என்று அவர்கள் அஞ்சுவதும் புரிகிறது.

÷தமிழினம் தழைத்து ஓங்கியிருந்த காலத்தில் உழைப்பால் உயர்ந்தவர் என்று ஒருவரைச் சொல்லுகிறபோது, அவர் உடலுழைப்பால் உயர்ந்தவர் என்றே அறியப்பட்டார். சமீபகாலங்களில் அறிவியலின் அதீத வளர்ச்சியால் அமோக பலனடைந்து வருவோர் அறிவுழைப்பு என்று அறியப்படுகின்ற மூளை உழைப்பை முன்னிலைப்படுத்துவதில் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். மனித குலத்தின் உயிர்ப்புக்கே அடித்தளமாய் விளங்குகின்ற உடலுழைப்பை உதாசீனப்படுத்துவதில் அவர்கள் ஓரணியில் நிற்கின்றனர்.

÷ஒரு சமுதாயத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிற காரணிகளில் முதலானதும் முக்கியமானதும் உழைப்பாகும். அந்த உழைப்பின் இரு கூறுகளான உடலுழைப்பையும் அறிவுழைப்பையும் இரு கண்களைப்போன்று சமநிலையில் வைத்துப் போற்றுகிற சமுதாயம்தான் வளம் பெற்றுப் பீடுநடை போடும் என்பது சமூக-பொருளியல் தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடு. ஆனால் இருவித உழைப்புகளுக்கும் மதிப்பையும் விலையையும் நிர்ணயிக்கிற அதிகாரம் அறிவுழைப்பாளர்களுக்கே இருப்பதால், அவர்கள் இந்த இரு உழைப்பின் மதிப்புகளுக்கிடையே பெரும் பிளவை ஏற்படுத்திவிட்டனர்.

÷பங்குச் சந்தை, இணைய வர்த்தகம், மென்பொருள் உற்பத்தி என்று பட்டியல் நீளுகிற அறிவுசார் துறைகள், உடலுழைப்பை ஓரங்கட்டிவிட்டு கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. உடலுழைப்புக்கு ஐந்தரை அறிவே போதும் என்கிற அறிவுழைப்பாளர்களின் அஞ்ஞான மனப்பாங்கினை, வேலிக்கு ஓணான் சாட்சி என்பதுபோல ஆட்சியாளர்களும் ஆமோதிக்கும் பேரவலத்தைக் கேட்பாரில்லை.

÷பாமர மக்களின் உடலுழைப்பால் உருப்பெற்ற விளைவிப்புகளையும் உற்பத்திகளையும் அறிவுழைப்பு என்கிற ஆயுதத்தின் துணையுடன் ஒருசாரார் மாத்திரம் அனுபவித்ததன் விளைவால் சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பெரும் பிளவு ஏற்பட்டிருக்கிறது. இதுதான் பொருளாதாரச் சரிவின் மூலகாரணம் என்பதை ஓங்கிக் கூறலாம்.

÷பொருளாதார மந்தநிலை எப்போது சீராகும் என்று எதிர்பார்த்து நிற்கும் இந்த வேளையில், இருவித உழைப்புகளுக்கிடையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாகுபாட்டினை மீள்பார்வை செய்வது, சமுதாயத்தின் மீட்சிக்குப் பேருதவியாக இருக்கும்.

÷100 நாள் வேலைத்திட்டத்தில் உடலுழைப்பை அளிப்பவர்களுக்கு தினக்கூலி 20 ரூபாய் உயர்த்தப்பட்டு 100 ரூபாயாகக் கொடுக்கப்படும் என்று, மனம் விசாலமாகிவிட்ட நிலச்சுவான்தார் போன்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் அறிவுழைப்பாளர்கள் மட்டும் எப்படி லகரங்களில் சம்பளம் வாங்குகின்றனர்.

÷அதன் சூட்சுமம் மிகவும் சுலபமானது. அசல் உழைப்பைத் தரும் உடலுழைப்பாளி அந்த உழைப்பை நகல் எடுக்க முடியாது. நகல் எடுக்கவல்ல உழைப்பைத் தரும் அறிவுழைப்பாளி அதை எத்தனை நகல் வேண்டுமானாலும் எடுத்துப் பணமாக்கிக் கொள்ளலாம்.

÷100 அறிவுழைப்பாளிகள் ஒன்று சேர்ந்து 10 கோடி ரூபாய் செலவில் ஒரு மென்பொருளை உருவாக்குகிறார்கள் என்று வைத்துக்கொண்டால், அதைக் குறுந்தகடாக்கி பல லட்சம் பிரதிகளை எடுத்துப் பலநூறு கோடிகளுக்கு அவற்றை விற்றுக்கொள்ளலாம்.

÷அவ்வாறு உருவாக்கிய மென்பொருளுக்கு அறிவுசார் சொத்துரிமை வாங்கிக்கொண்டு தொடர்ந்து பன்னெடுங்காலத்திற்கும், ஒருமுறை செய்த அறிவுழைப்பை மீண்டும் மீண்டும் விற்றுப் பணமாக்குகின்றனர். இப்படிச் சுலபமாகச் சேருகின்ற பணத்தில்தான் லகரங்களை சம்பளமாகக் கொடுத்து சமுதாயப் பிளவை உண்டாக்கி வருகின்றனர்.

÷உடலுழைப்பை நம்பி இருக்கின்றவன் பொருளீட்ட வேண்டுமென்றால் அவன் மீண்டும் மீண்டும் உழைத்தாக வேண்டும். இன்றைய இந்தியப் பொருளாதாரத்தின் மாட்சி இதுதான். தொடர்ந்து உடலால் உழைப்பவன் வறுமையிலேயே உழல வேண்டும், ஆனால் அறிவால் உழைப்பவன் அதை நகலெடுக்கும் அதிநவீன உத்தியைப் பயன்படுத்தி சட்டத்தின் துணையோடு பெரும் பொருளீட்டி வாழலாம்.

÷இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள மெகா கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2009-ம் ஆண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் பட்டியல் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் ஒரு நாளைக்கு 45 ரூபாய்க்கும் குறைந்த வருமானத்தில் புழுவினும் கீழாய் வாழ்ந்தபடி உடலுழைப்பை அர்ப்பணிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 35 கோடி. அசல் அமிழ்ந்து கிடக்கிறது, நகல் நர்த்தனமாடுகிறது.

÷விவசாயமே சுவாசமாகிப் போய்விட்ட நம்நாட்டுக்குக் கட்டுப்பாடற்ற அறிவுசார் சொத்துரிமை எத்தகைய தீங்குகளை விளைவிக்கும் என்பது தெரிந்திருந்தும், இந்திய அரசு சர்வதேச அறிவுசார் சொத்துரிமை விதிமுறைகளுக்குத் தனது ஒப்புதல் முத்திரையைப் பதித்து வருகிறது.

÷இதிலே விந்தை என்னவென்றால், மனிதனின் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் போன்ற அனைத்தும் உடலுழைப்பின் உருவாக்கமாகவே இருக்கிறது. என்றாலும் இவற்றையெல்லாம் சுலபமாகக் கிடைக்கும் பணத்தால் அறிவுழைப்பாளர்கள் கூடுதல் விலைகொடுத்து எளிதாகப் பெற்றுவிடுவதால் உழைத்து உருவாக்கிய வர்க்கத்தினருக்கேகூட அவை கிடைப்பதில்லை. வழிப்போக்கர்களுக்கும் விருந்தோம்பல் செய்து அவர்கள் இளைப்பாற திண்ணைகட்டி வாழ்ந்தவர்கள் இன்று இலவசங்களுக்காக வரிசைகட்டி நின்றே காலத்தைக் கழிக்கின்றனர்.

÷உடலுழைப்பின் மாண்பினை உலகுக்கு உணர்த்திய முதல் இனம் நம் தமிழினம் என்பதுதான் எஞ்சியிருக்கும் பெருமை. உலகப் பொதுமறையாம் திருக்குறளை நமக்களித்த ஐயன் வள்ளுவர் இதைப் பிரகடனம் செய்கிறார். "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் - தொழுதுண்டு பின்செல் பவர்' என்று. உடலை வருத்தி உழைக்கின்ற உழவனுக்கு முதல் மரியாதை செய்து, உலகிலேயே உடலுழைப்பை உயர்த்திப் பிடித்த பெருமகன் திருவள்ளுவர்தான் என்பதில் நெஞ்சம் நெகிழ்கிறது.

÷அதற்கும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த யுகக் கவிஞர் பாரதியார், "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்று பின்வரவான தொழிலையும் சேர்த்து வணங்கிப் போற்றுகிறார்.

÷காந்தியடிகள் தமது சத்திய சோதனையில் உடலுழைப்பு பற்றிய சில தீர்க்கமான கருத்துகளை முன்வைக்கிறார். உழைப்பில் உயர்வு தாழ்வு கிடையாது என்கிற சத்தியவாக்குக்கு சாட்சியம் சொல்லிவிட்டு, ஒரு வழக்கறிஞரின் உழைப்பும் ஒரு சிகை அலங்காரத் தொழிலாளியின் உழைப்பும் ஒரே பெறுமானம் உள்ளவைதான் என்கிற ஆங்கில அறிஞர் ஜான் ரஸ்கின் கருத்தை அவர் அப்படியே ஆமோதிக்கிறார். மகாத்மா காந்தியின் பெயரைச் சொல்லி இன்று அரசியல் நடத்துகிறவர்கள் காந்தி ஜயந்தியன்றும், குடியரசு தினத்தன்றும் குல்லாய் போட்டுக் கொண்டு பேட்டி கொடுப்பதே காந்தியம் என்று எண்ணிக்கொள்வது காலத்தின் கோலம்.

÷முன்பெல்லாம் வேளாண் நிலங்கள் பொன்விளையும் பூமி என்று வாஞ்சையோடு அழைக்கப்பட்டன. அதன் விளைபொருள்களை விற்றுப் பொன்வாங்கும் சக்தி விவசாயிகளிடம் அன்று இருந்தது. இன்று நிலத்தையே விற்றால்தான் பொன்வாங்க முடியும் என்கிற சூழல் நிலவுகிறது.

÷விவசாயிகள், விவசாயக் கூலித்தொழிலாளர்கள் மாத்திரமல்லாது, தொழிற்சாலைகளில் தொய்வின்றி உழைத்துவரும் தொழிலாளர்கள், கைவினைக் கலைஞர்கள், மீனவர்கள், இன்னபிற உடலுழைப்பாளர்கள் அனைவரும் தங்கள் இதயத்தின் ஒரு மூலையில் இன்னும் கசிகின்ற நம்பிக்கையால் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.

÷லாபமும், சமூக மாண்பும் இல்லாத உடலுழைப்பை விடுத்து, இளைஞர்கள் விரக்தியின் விளிம்புக்குச் சென்று கொண்டிருப்பது சமுதாயத்துக்கு உகந்ததல்ல. உடலுழைப்புக்கு உரிய மதிப்பை, முதல் மரியாதையை விரைந்து மீட்டுத் தருகின்ற கடமையும் கடப்பாடும் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.

÷பிரெஞ்சுப் புரட்சியின்போது பாஸ்டில் சிறையை உடைத்து சமச்சீர் சமுதாயத்துக்கு வித்திட்டதும், ரஷியாவில் சார் மன்னர் ஆட்சிக்கு சாவுமணி அடித்து சோஷலிச சமுதாயம் அமைய அடித்தளமாக இருந்ததும், சீனத்தின் கூன்களை நிமிர்த்தி அதை செஞ்சீனமாக்கியதும் உடலுழைப்பாளர்களின் பெரும் பங்களிப்பே என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்படுவது அவர்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.
கட்டுரையாளர் :தில்லை நாகசாமி
நன்றி : தினமணி

2 comments:

சாமக்கோடங்கி said...

அட்டகாசமான வார்த்தை விளையாட்டு. தமிழில எவ்வளவு சரளமா வார்த்தைப் பிரயோகம் பண்ணியிருக்கீங்க.. சும்மா பின்னி பெடல் எடுத்தீடிங்க போங்க. இன்றைய நிலைமைக்கு மிகத்தேவையான அலசல். சும்மா திரை விமர்சனம், நிறை குறைகள்னு எழுதித்தள்ளாமை, நாட்டுக்குத்தேவையான விஷயத்தை நச்சுன்னு எழுதியிடுக்கீங்க. தொடர்ந்த இதப் பத்தி விரிவா எழுதுங்க. நாங்க உங்கள பின் தொடருவோம். உங்கள் விளக்கங்கள் புதியவை, வித்தியாசமானவை. நன்றிகள்.. வாழ்க..

பாரதி said...

பிரகாஷ் அவர்களே,
இந்த பாராட்டு அனைத்தும் தினமணி கட்டுரையாளர் தில்லை நாகசாமி யை சாரும்.வருகைக்கு நன்றி