புத்தாண்டு பிறந்தவுடன், அடுத்து வர உள்ள ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் எப்படி இருக்கும்; மக்களின் வாழ்க்கைத் தரம் எப்படி அமையும் என்று சிந்திப்பது ஆரோக்கியமான ஒரு வழக்கமே.
ஆனால், கடந்த காலங்களில், ஆரோக்கியமற்ற சில ஆருடங்கள் சொல்லப்பட்டதும், நல்ல வேளையாக, அவை பொய்த்துப் போனதும் நினைவுக்கு வருகின்றன.
ஒன்று, 1967-ம் ஆண்டில் நிகழ்ந்தது: அது சமயம் நாட்டின் நான்காவது பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து மழையின்மையால் கடும் வறட்சி நிலவிய நேரம். போதாக்குறைக்கு, அந்தத் தேர்தலுக்குச் சிறிது காலம் முன்னர்தான் இந்தியா ஒரு போரையும் சந்தித்திருந்தது. நாட்டின் அரசியல் தலைமை அவ்வளவு வலுவாக இருக்கவில்லை. அப்போது, இங்கிலாந்து நாட்டின் பிரபல முன்னணி நாளேடு, ""இதுவே இந்தியாவின் கடைசிப் பொதுத் தேர்தல்'' என்று எழுதியது!
இன்னொரு நிகழ்வு, 1947-ம் ஆண்டில் நடந்தது. இது பலருக்கு நினைவிலிருக்கும். ஆருடம் கூறியவர் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் சர்ச்சில்! இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறினால், நாடு சின்னாபின்னமாகிவிடும், என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்!
கடந்த காலத்தை விட்டு, நிகழ்காலத்துக்கு வருவோம்! 2009-ம் ஆண்டு, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான நிதி ஆண்டின் முதல் அரையாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.9 சதவீதம். முந்தைய ஆண்டு இதே காலத்தில் இருந்ததைவிட இது சற்று அதிகம். இந்த ஜி.டி.பி. வளர்ச்சிக்கு முக்கிய காரணம், அரசு மேற்கொண்ட பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள்தான். இந்த ஊக்குவிப்பு நடவடிக்கையை அரசு திடீரென்று விலக்கிக் கொண்டால், இதே அளவு வளர்ச்சி தொடருமா என்பது சந்தேகம்தான்.
அதேநேரம், இந்தியாவின் வரவு செலவில் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே போகிறது. பற்றாக்குறையைக் குறைக்க வேண்டுமானால், வரிகளைக் கூட்டுவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும். ஜி.டி.பி.யின் வளர்ச்சி 8 சதவீதமாக அதிகரிக்க முடியாது.
தற்போது, பொதுமக்களை ஆட்டிப் படைக்கும் மிகப் பெரும் பிரச்னை, விலைவாசி உயர்வுதான். கடந்த ஓராண்டில் நாம் கண்கூடாகப் பார்த்த விஷயம், ஜி.டி.பி. வளர்ச்சியால் விலைவாசி குறைந்துவிடாது என்பதுதான். ஆக, வளர்ச்சி விகிதம் அதிகரிப்புக்கும் விலைவாசிக்கும் தொடர்பு இல்லை.
விலைவாசியில், ஒரு முரண்பாட்டையும் காண முடிகிறது. கணினி உள்ளிட்ட மின்னணுப் பொருள்களின் விலைகள் குறைகின்றன. இறக்குமதி செய்யப்பட்ட தொழில் கூடங்களில் உற்பத்தியான பொருள்களின் விலைகளும் குறைகின்றன. ஆனால் உணவுப் பொருள்களின் விலை மட்டும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
உணவுப் பண்டங்களின் விலை உயர்வுக்கு விளைச்சல் குறைவு என்பதைத் தவிர வேறு பல காரணங்கள் உண்டு.
அவற்றில், முன் பேர வணிகம் ஒரு முக்கிய காரணம். குறைந்த அளவே முதலீடு செய்து, அதிக அளவில் பண்டங்களை வர உள்ள ஒரு குறிப்பிட்ட தேதியில் கொள்முதல் செய்வதுதான் முன் பேர வணிகம். இதனால் விலைகள் உயர வாய்ப்பு உள்ளது. 2007-ம் ஆண்டு அரிசி, கோதுமை, உளுந்து, துவரம்பருப்பு ஆகிய நான்கு பொருள்களுக்கு முன் பேர வணிகத்தை மத்திய அரசு தடை செய்தது. இந்தத் தடை தொடர வேண்டும். இதர உணவுப் பண்டங்களுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும்.
பொதுவாகவே, உலக அளவில் உணவுப் பண்டங்களின் விலை ஏறிக் கொண்டே போகிறது. காரணம் அநேக நாடுகளில் உணவுப் பொருள்களின் விளைச்சல் சரிந்துள்ளது. இதுவும் இந்தியாவில் விலைகள் உயரக் காரணம். இந் நிலையில் அத்தியாவசியப் பொருள்களின் விலை குறைவதற்கு உடனடியாக வாய்ப்பு இல்லை.
பொது விநியோகத் திட்டத்தில் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் மலிந்துள்ளன. இதைச் சரி செய்யாமல் விலைவாசியைக் கட்டுப்படுத்த இயலாது. ரேஷன் பொருள்கள் கடத்தல், கள்ளச்சந்தை, பதுக்குதல் போன்ற சமூக விரோதச் செயல்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும். இது மாநில அரசுகளின் தலையாய கடமை. இந்த உயிர்நாடிப் பிரச்னைக்குத் தீர்வு காணாவிடில், வளர்ச்சி 8 சதவீதம் எட்டினாலும், அதனால் மக்களுக்குப் பயன் இல்லை.
கடந்த ஆண்டுகளில், அமெரிக்கப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்தது. மிதவாதப் போக்கை கடைபிடித்ததால், இந்திய வங்கிகள் தப்பித்தன. ஆனால், நம் நாட்டில் தோல் உற்பத்தி, ஜவுளித் துறை, ஆபரணக் கற்கள் பட்டை தீட்டுதல், பல்வகை கைவினைப் பொருள்கள் போன்றவற்றின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்கிய வரிச் சலுகையால் இத்துறைகள் ஓரளவு சமாளித்து வருகின்றன. எனவே, அரசு தற்போது வழங்கும் உதவிகளை அவசரப்பட்டு நிறுத்திவிடக் கூடாது. அவை தொடர வேண்டும்.
பாரத ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்திவிடக் கூடாது. அப்படி ஒரு வேளை உயர்த்தினால் அது எதிர்மறையான விளைவுகளை உருவாக்கும்.
இவ்வளவையும் மீறி, உலகின் முன்னணி தர நிர்ணய அமைப்புகள் என்ன கூறுகின்றனவெனில், உலகிலேயே, சீனாவுக்கு அடுத்தபடியாக, வேகமாக வளரும் நாடு இந்தியாதான், என்பதே. காரணம், சர்வதேச அளவில், பொருளாதார மந்த நிலை நீடித்தாலும், இந்தியா நடப்பாண்டில் 8 சதவீத வளர்ச்சி அடையும் என்பதும், சீனா 9.6 சதவீத வளர்ச்சி அடையும் என்பதே.
÷வாஷிங்டனிலிருந்து செயல்படும், "பியூ' பொருளாதார ஆய்வுக் கழகம், 25 வளரும் நாடுகளில் நடத்திய ஆய்வின் அடிப்படையில் வெளியிட்டுள்ள கணிப்பும் இதையே உறுதி செய்கிறது. அது மேலும் கூறுகையில், பல வளரும் நாடுகளைவிட இந்திய மக்களின் தன்னம்பிக்கை 2002-ம் ஆண்டுக்குப் பிறகு, இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்பதே ஆகும்.
÷வளர்ச்சிக்குத் தேவையான மூன்று முக்கிய அம்சங்கள் என்னவெனில், மூலதனம், தொழிலாளர் திறன் மற்றும் உற்பத்தித் திறன்.
÷இந்தியாவில் சேமிப்பு மற்றும் முதலீடு படிப்படியாக வளர்ந்து, இப்போது மொத்த உற்பத்தி மதிப்பில் 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. சீனாவும் இதே அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
÷அடுத்ததாக தொழிலாளர் திறன் என்னும் குறியீடு. இதில் இந்திய சீனாவைக் காட்டிலும் ஆண்டுக்கு 1.8 சதவீதம் வேகமாக வளருகிறது. இந்திய மக்கள் தொகையில் இளைஞர்கள் மற்றும் உழைக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகம்.
÷மூன்றாவது, உற்பத்தித் திறன் வளர்ச்சியில் சீனாவை விட இந்தியா ஆண்டுக்கு 2 சதவீதம் பின்தங்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக உள்ள நிலை இது. இதற்கு சர்வதேச வல்லுநர்கள் தரும் விளக்கம் சிந்தனையைத் தூண்டுவதாகும். இதே 5 ஆண்டு காலமாக, சீனா கடைப்பிடித்து வரும் நாணய மதிப்பீட்டு முறை உத்தியே இதற்குக் காரணம் என்பதே அது.
÷சீனா எதிர்கொள்ளும் இரண்டாவது பிரச்னை, சுற்றுச்சூழலைப் பாதிக்கும் அதீதமான "கார்பன் புகை வெளியேற்றம்'. இவ்விரண்டு காரணங்களால், சர்வதேச பொருளாதார அமைப்புகளும், வல்லுநர்களும் சீனா மீது அதிருப்தி கொண்டுள்ளனர். எனவே உற்பத்தித் திறனில் சீனாவுக்கு இருப்பதாகக் கருதப்படும் சாதகமான சூழல் விரைவில் மறைந்து விடும் என்பதும், அது இந்திய உற்பத்தித் திறன் வளர்ச்சிக்குச் சாதகமாக அமையும் என்பதும் வல்லுநர்களின் ஏகோபித்த கருத்தாக உள்ளது. புதிய வளர்ச்சி வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய வளர்ச்சியாக இருக்கும் என சர்வதேச நிபுணர்களும் கணிக்கின்றனர்.
÷பொருளாதார முன்னேற்றம் ஒருபுறம் இருக்க, மிகப் பெரிய ஜனநாயக நாடாக இருத்தல்; முறையான பொதுத் தேர்தல்கள்; உலகத் தலைவர்களால் மதிக்கப்படும் அரசியல் தலைமை; அதிகரித்து வரும் அன்னிய நேரடி முதலீடுகள்; சுதந்திரமாகச் செயல்படும் பெருவாரியான செய்தித்தாள்கள்; உலகெங்கிலும் உள்ள மிகப் பெரிய வணிக நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாகச் செயல்படுகின்ற இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை ஆகிய பல சாதகமான அம்சங்கள் இந்தியாவின் சிறப்பான வளர்ச்சிக்குக் கட்டியம் கூறுகின்றன.
÷அதே நேரம், சில நெருடலான அம்சங்களும் இருக்கத்தான் செய்கின்றன. பெருகி வரும் மனித உரிமை மீறல்கள்; மக்களிடையே அதிகரித்து வரும் ஏழை-பணக்காரர் இடைவெளி; அரசியல் அரங்கில் ஊடுருவல் செய்யும் சமூக விரோத சக்திகள்; உள்நாட்டில் பாதுகாப்பின்மை ஆகியவை பெரும் அச்சுறுத்தல்களாக உள்ளன. இவற்றை, விரைந்து கட்டுப்படுத்தினால்தான்,இந்தியா வளமான நாடாக மட்டும் அல்லாமல் அமைதிப் பூங்காவாகவும் திகழ முடியும்.
கட்டுரையாளர் : எஸ். கோபாலகிருஷ்ணன்
நன்றி : தினமணி
Saturday, January 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment