Monday, August 17, 2009

காந்திஜி அரங்கேற்றிய சொக்கப்பனை

தென்னாப்பிரிக்க இந்தியர்களின் தன்மானத்தைக் காக்கவும், பிரிட்டிஷ் பிரஜைகள் என்ற முறையில் அவர்களுடைய அடிப்படை உரிமைகளை அவர்களுக்குப் பெற்றுத்தரவும் பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1906 முதல் 1914 வரையில் தலைமை தாங்கி நடத்திச்சென்ற சாத்விக எதிர்ப்புப் போராட்டத்தின் முதற்கட்ட எழுச்சியே 1908 ஆகஸ்ட் 16 அன்று ஜோகன்னஸ்பர்க் நகரில் அரங்கேறிய பெயர்ப் பதிவுச் சான்றுப் பத்திரங்களைத் தீக்கிரையாக்கிய "பெருவிழா'.

தென்னாப்பிரிக்க இந்தியர்களின் சத்தியாக்கிரக வரலாற்றில் சிறப்பு முத்திரை பதித்த அச்சம்பவம் நிகழ்ந்து ஒரு நூற்றாண்டு முடிவுறும் இக் காலகட்டத்தில் அதைப்பற்றி அறிந்துகொள்வது வேண்டற்பாலது:

1906 மத்தியில் தென்னாப்பிரிக்காவில் டிரான்ஸ்வால் சுயாட்சிக் காலனி ஆங்கில அரசாங்கம் பிறப்பிக்கவிருந்த ஓர் அவசரச் சட்டத்தை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றுவதற்காக தலைநகர் ஜோகன்னஸ்பர்க் நகரில் 1906 செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற இந்தியர்களின் கூட்டத்திலேதான் பாரிஸ்டர் காந்தி அச் சட்டத்திற்கு அடிபணிய மறுக்கும் வகையிலான சாத்விகப் போராட்டத்தை அறிவித்தார். அந்த சாத்விக எதிர்ப்பு முறைக்கு 1907 டிசம்பரில் "சத்தியாக்கிரகம்' என்ற புதுப்பெயரிட்டார்.

"கறுப்புச்சட்டம்' என்று இகழ்ந்துரைக்கப்பட்ட அந்த "ஆசியவாசிகள் பதிவு அவசரச் சட்ட'த்தின் ஷரத்துகள் மிகக் கடுமையானவை. இந்தியர்களைக் கேவலப்படுத்துபவை. அவற்றின்படி, "எட்டு வயதுக்கு மேற்பட்ட இந்திய, ஆசிய ஆண், பெண் ஒவ்வொருவரும் ஆசியவாசிகள் பதிவாளர் அலுவலகத்தில் தனது பெயர், முகவரி, ஜாதி, வயது முதலான விவரங்களைக் கொடுத்து, அப் பத்திரத்தில் பத்துவிரல் ரேகை பதித்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அங்க அடையாளங்களையும் பதிவாளர் குறித்துக் கொள்வார். இவ்வாறு இந்தியர் ஒவ்வொருவரும் அரசாங்க அத்தாட்சிப் பத்திரம் பெறவேண்டும். குறித்த தேதிக்குள் அவ்வாறு பதிவு செய்துகொள்ள விண்ணப்பிக்காத இந்தியர்கள் டிரான்ஸ்வால் காலனியில் தொடர்ந்து குடியிருக்கும் அருகதையை இழந்துவிடுவார்கள். விண்ணப்பம் செய்யத் தவறினால் அது சட்டப்படி குற்றமாகும். அபராதம், சிறைத்தண்டனை கிடைக்கும். நாடு கடத்தப்படலாம். பதிவுச் சான்றிதழை எச்சமயம் எங்கே கேட்டாலும் போலீஸôரிடம் காட்ட வேண்டும்.'

பின்னர் நடந்த மாபெரும் மறியல் போராட்டத்தில் பாரிஸ்டர் காந்தி, தெண்டர்படைத் தலைவர் தம்பிநாயுடு, சீனர் சங்கத் தலைவர் லியுங் குவிங் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு, தலா இரண்டு மாத சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர். அடுத்தடுத்து ஏராளமான இந்திய சத்தியாக்கிரகிகள் சிறையிலடைக்கப்பட்டனர்.

1908 ஜனவரி கடைசியில் காலனி உள்நாட்டுச் செயலர் (மந்திரி) ஜெனரல் ஸ்மட்ஸýக்கும் பாரிஸ்டர் காந்திக்கும் இடையே நடைபெற்ற சமரசப் பேச்சில் ஒரு சமாதான முடிவு ஏற்பட்டது. அதன்படி ""இந்தியர்கள் கைரேகை பதித்து சான்றிதழ்பெற சட்டப்படி கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். ஆனால், அவர்கள் தாமாகவே முன்வந்து கைரேகை பதித்து பெயர், முகவரி விவரங்கள் கொடுக்கலாம். அவ்வாறு பதிவுகள் முடிவுற்றவுடன், கறுப்புச் சட்டம் ரத்து செய்யப்படும்.''

ஆனால், இவ்வாறு ஒப்புக்கொள்ளப்பட்ட சமரச உடன்பாட்டினின்றும் ஜெனரல் ஸ்மட்ஸ் பின்வாங்கினார். கறுப்புச் சட்டம் ரத்து செய்யப்படவில்லை.

பாரிஸ்டர் காந்தி ஏமாற்றத்தில் திகைத்துப்போனார். "ஜெனரல் ஸ்மட்ûஸ நம்பி மோசம் போய்விட்டாரே!' என்று பலர் காந்திஜியைக் குறைகூறினர். மற்றவர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. கறுப்புச் சட்டத்தையும், புதிய சட்டங்களையும் ஒருமித்து எதிர்த்து, காந்திஜி தலைமையில் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடருவதே அம் முடிவு.

"இந்தியருக்குப் பாதகமான பழைய, புதிய சட்டங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும். இல்லையேல் இந்திய சமூகத்தினர் தங்களிடம் ஏற்கெனவே உள்ள பதிவுப் பத்திரங்களையும், தாமாக முன்வந்து பெற்றுக் கொண்ட பதிவுப் பத்திரங்களையும் எரித்துச் சாம்பலாக்கித் தமது எதிர்ப்பைத் தொடங்குவார்கள்' என்று அரசாங்கத்திற்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார் பாரிஸ்டர் காந்தி.

டிரான்ஸ்வால் சட்டசபையில் புது ஆசியா சட்டம் நிறைவேற்றப்படவேண்டிய தினத்தன்றே "இறுதி எச்சரிக்கை'யின் காலவரம்பு முடிவுற்றது. அரசாங்கத்திடமிருந்து பதில் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. ஆகவே, பத்திர எரிப்பு நிகழ்த்துவதன் பொருட்டு 1908 ஆகஸ்ட் 16-ம் தேதி மாலை 4 மணிக்கு ஜோகன்னஸ்பர்க் நகரில், ஹமீதியா மசூதியைச் சேர்ந்த மைதானத்தில் கூட்டம் நடைபெறும் என்று பாரிஸ்டர் காந்தி அறிவித்தார்.

எல்லா வகுப்புகளையும் சேர்ந்த இந்தியர்களும் 1908 ஆகஸ்ட் 16 அன்று மசூதி மைதானம் பூராவும் நிரம்பி வழிந்தனர். அத்தாட்சிப் பத்திரங்களை எரிப்பதற்காக மேடையோரத்தில் ஒரு பெரிய இரும்பு எண்ணெய்க் கொப்பரையில் பாரஃபின்மெழுகு எண்ணெய் காய்ந்து கொண்டிருந்தது.

""பதிவுப் பத்திரங்களைக் கொளுத்துவது மட்டும் சட்டப்படி குற்றமாகிவிடாது. எனினும், அவற்றைத் தீக்கிரையாக்குவதன் மூலம் நாம் கறுப்புச் சட்டத்திற்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்கிற உறுதியையும், அப்பத்திரத்தை எந்த அதிகாரிக்கும் காண்பிக்கும் நிலையினின்றும் நாம் விடுபடுவோம் என்பதையும் இவ்வாறு கண்கூடாகக் காட்டுகிறோம்'' என்று பாரிஸ்டர் காந்தி அறைகூவல் விடுத்து, கூட்டத்தினரை உற்சாகப்படுத்தினார்.

கூட்டத்திற்கு, பிரிட்டிஷ் - இந்தியர் சங்கத் தலைவர் யூசுஃப் மியான் தலைமை வகித்து நிலைமையை விவரித்தார். கடைசியில் பாரிஸ்டர் காந்தி, ""நாம் இன்று மேற்கொள்ளவிருப்பது ஒரு நீண்ட காலப் போராட்டமாக இருக்கப் போகிறது என்பதை நாம் மீண்டும் கவனத்தில் வைத்துக் கொள்வோம். நம்மில் சிலர், முன்வைத்த காலை, சற்று பின்வாங்கிவிட்டனர் என்பதும் தெரியும். அந்த அளவுக்கு சாத்விகப் போர்முனையில் இருப்பவரின் பொறுப்பு மேலும் அதிகமாகியுள்ளது. இவை அனைத்தையும் நீங்கள் நன்றாக யோசனை செய்து பார்த்தபிறகே இன்று நாம் முனைந்துள்ள காரியத்தில் இறங்கலாம். இதுவே எனது புத்திமதி'' என்று அறிவுறுத்தினார்.

அவர் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோதே ""எங்களுக்குப் பத்திரங்கள் வேண்டாம். அவற்றைக் கொளுத்துங்கள்'' என்று மூலைக்கு மூலை பல குரல்கள் எழுந்தன.

கொளுத்துவதற்காக ஏற்கெனவே இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சான்றுப்பத்திரங்கள் வந்து சேர்ந்திருந்தன. கூட்டத் தலைவர் யூசுஃப் மியான், அவையனைத்தையும் கொப்பரைக்குள் போட்டுத் தீவைத்தார். சொக்கப்பனையாகப் பத்திரங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. இந்த எரிமூட்டும் படலம் முடியும்வரை குழுமியிருந்த மக்கள் இடையறாத மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைத்தனர். அதுவரை கொடுக்காத பத்திரங்களை பலர் கூட்டத்தினரிடையே முண்டியடித்து முன்னேறி கொப்பரையில் போட்டனர்.

இக் கூட்டத்திற்கு வந்திருந்த பத்திரிகை நிருபர்கள் இக் காட்சிகளைக் கண்டு வியந்து தம் பத்திரிகைகளில் இந் நிகழ்ச்சியை வருணித்து எழுதினர். ""டெய்லி மெயில்'' (லண்டன்) ""இந்தியர்கள் நடத்திய இந்த மாபெரும் சொக்கப்பனை நிகழ்ச்சியை "போஸ்டன் தேயிலை விருந்து' நிகழ்ச்சியோடு ஒப்பிட்டு வெளியிட்டது. (1773 டிசம்பர் 16 அன்று, அமெரிக்க மெஸசூùஸட்ஸ் மாகாண தேசாபிமானர்கள், செவ்விந்தியர் போல் வேடம் தரித்து, போஸ்டன் துறைமுகத்தில் நங்கூரமிட்ட பிரிட்டிஷ் வணிகக் கப்பலினுள் புகுந்து அங்கு பெட்டிபெட்டியாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த தேயிலைச் சரக்குகளை கடலில் வீசி எறிந்தனர். அதுவே பிரமிப்பூட்டும் "பாஸ்டன் டீ பாட்டி' எனப்படுவது. அதன் விளைவாக பிரிட்டன், போஸ்டன் துறைமுகத்தில் வியாபார நடவடிக்கைகளை நிறுத்திவைத்தது. அதுவே அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தின் (1773-1783) பூர்வாங்க எழுச்சியாகும்.''

""டிரான்ஸ்வால் லீடர்'' பத்திரிகை எரியூட்டு நிகழ்ச்சியை இவ்வாறு வர்ணித்தது:

""சுமார் 1300 பதிவு சான்றுப் பத்திரங்களும் 500க்கும் மேற்பட்ட வணிக லைசென்ஸ்களும் கொப்பரையில் தீக்கிரையாயின, நெருக்கியடித்து நின்ற கும்பல் வாய்கிழியக் கத்தி ஆரவாரித்தனர். தொப்பிகளை ஆகாயத்தில் விட்டெறிந்து குதியாய்க்குதித்தனர். சீட்டி அடித்தனர். கடைசியில் சில சீனர்களும் மேடை மீதேறி, தமது சான்றுப் பத்திரங்களை கொப்பரையில் இட்டனர்...''

இவ்வாறு 1908 ஆகஸ்ட் 16 அன்று ஒட்டுமொத்தமாகப் பத்திரங்களை எரித்துச் சாம்பலாக்கிய சம்பவம், தென்னாப்பிரிக்க இந்தியரின் சத்தியாக்கிரக இயக்கத்திற்கு புதுப்பொலிவை அளித்தது. காந்திஜி தலைமையில் சத்தியாக்கிரகம் மீண்டும் தொடங்கப் பெறுவதற்கு கம்பீர பின்னணியாக அமைந்தது.

கட்டுரையாளர் :லா. சு. ரங்கராஜன்
நன்றி : தினமணி

சர்க்கரை விலையேற்றம்சாக்லெட்டும் 'கசக்கும்'

சர்க்கரை விலை உயர்வு காரணமாக, சாக்லேட் உட்பட தின்பண்டங்கள் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.பிரபல உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனம் ஐ.டி.சி., உயர் அதிகாரி சித்ரன்ஜன் கூறுகையில், 'தின்பண்டங்கள் தயாரிப்பதற்கு சர்க்கரை தேவை 40 முதல் 50 சதவீதம் வரை உள்ளது. மொத்த உற்பத்தி செலவில், 20 சதவீத செலவு சர்க்கரை தான். பருவ மழை பாதிப்பால், சர்க்கரை விலையும் அதிகரித்துள்ளது. இதனால், சர்க்கரையில் தயாராகும் சாக்லெட் போன்ற உணவு தின்பண்டங்களும் விலை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனினும், நிலைமையைக் கருத்தில் கொண்டு முடிவெடுப்போம்' என்றார்.காட்பரீஸ் இண்டியா, கோத்ரேஜ் ஹெர்ஷேஸ் ஆகிய சாக்லெட் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், தங்கள் லாபச் சரிவை கண்காணித்து வருகின்றன. ஆனால், விலையை இன்னம் உயர்த்தவில்லை.சர்க்கரையின் விலை 25 சதவீத அளவிற்கு அதிகமாக உள்ளது. அதாவது ஒரு கிலோ சர்க்கரை 24 ரூபாயிலிருந்து தற்போது ரூபாய் 30 ஐத் தாண்டியுள்ளது.அமுல் நிறுவனத்தின் பொது மேலாளர் சவுதி கூறுகையில், சர்க்கரை விலையேற்றத்தால் ஐஸ்கிரீம், சாக்லெட் மற்றும் பால் பொருட்களின் ஒட்டுமொத்த வியாபாரத்தையும் பாதித்துள்ளதாகவும், தற்போது உள்ள சூழ்நிலையைக் கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


ஆசிய சந்தைகள் சரிவின் எதிரொலி : 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது சென்செக்ஸ்

இந்திய பங்குச்சந்தையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. காலை வர்த்தக துவக்கத்தின் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 106 புள்ளிகள் குறைந்து 15411.63 புள்ளிகளில் துவங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 24 புள்ளிகள் குறைந்து 4580 புள்ளிகளில் துவ்ஙகியது. ஆசிய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு இந்திய பங்குச்சந்தையின் பங்குவர்த்தகத்திலும் எதிரொலித்தது. குறிப்பாக சீன பங்குச்சந்தையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பரில் ஏற்பட்ட சரிவுக்கு பிறகு இன்று கடும் சரிவு ஏற்பட்டது. ஆசிய சந்தையின் சரிவு, கட்டுமான நிறுவன பங்குகளின் வீழ்ச்சி , கமோடிட்டீஸ் பங்குகளின் சுணக்கம் ஆகியனவற்றால் வர்த்தக நேர முடிவின் போது சென்செக்ஸ் 626 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 14784 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. நிப்டியும் 192 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 4387 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


என்கவுன்ட்டர் கொலைகள்!

தேசிய மனித உரிமை ஆணையம் சமீபத்தில் அளித்திருக்கும் தீர்ப்பு ஒன்றின்படி, என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட ஒரு நபரின் குடும்பத்துக்கு நஷ்டஈடு தரும்படி உத்தரவிட்டிருக்கிறது. வியாசர்பாடியைச் சேர்ந்த சுரேஷ் என்கிற சுரா என்பவர் நவம்பர் 18, 2002 அன்று இரவு சென்னையில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஏறத்தாழ ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய மனித உரிமை ஆணையம் சுரேஷின் குடும்பத்தாருக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடாகத் தரப்பட வேண்டும் என்றும், எட்டு வாரங்களுக்குள் நிவாரணம் தரப்பட்டதற்கான சான்றுகளை மனித உரிமை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

சுரேஷின் தாயார் மனித உரிமை ஆணையத்திற்கு அளித்த மனுவின்படி, காவல்துறையினர் சுரேஷை நவம்பர் 13-ம் தேதியே அழைத்துச் சென்றுவிட்டனர். பிறகு தெரிவிக்கப்பட்ட தகவல் அவர் என்கவுன்ட்டரில் இறந்துவிட்டார் என்பது மட்டுமே.

காவல்துறையினரின் வாதப்படி, சுரேஷ் ஒரு பழக்கப்பட்ட குற்றவாளி என்றும், பல கிரிமினல் குற்றங்களில் தொடர்புள்ள நபர் என்றும் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த அன்று இரவு, சுரேஷ் அதிவிரைவாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்ததாகக் காவல்துறை குற்றம்சாட்டுகிறது. வயர்லெஸ் கருவி மூலம் செய்தி கிடைத்தது என்றும், அவரை இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள் தடுத்து நிறுத்த முயற்சித்தபோது அவர்களைக் கத்தியால் குத்திவிட்டு, கையெறிகுண்டையும் எறிந்து தப்பிக்க முயன்றார் என்றும் காரணம் கூறுகிறது. சப் இன்ஸ்பெக்டரில் ஒருவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை, என்கவுன்ட்டருக்குக் காரணமாகச் சுட்டிக்காட்டுகிறார் அன்றைய மாநகரக் காவல்துறை ஆணையராக இருந்த விஜயகுமார்.

மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரையை அடுத்து, இந்தச் சம்பவத்தை விசாரித்த மாவட்ட இணை ஆட்சியர் ஒருவரின் அறிக்கை, மாநகர ஆணையரின் கூற்றுக்கு முற்றிலும் முரணாக அமைந்திருக்கிறது. ""சம்பவ இடத்தில் கையெறிகுண்டு வீசப்பட்டதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை என்பது மட்டுமல்ல, சப் இன்ஸ்பெக்டர் காயமடைந்ததாகச் சொல்லப்படுவதும் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்று அந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

இதை ஆதாரமாக வைத்துத் தனது விசாரணையைத் தொடர்ந்த மனித உரிமை ஆணையத்திடம், சம்பந்தப்பட்ட சப் இன்ஸ்பெக்டர்கள்மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு கொடுக்க உத்தேசிப்பதாகவும் தமிழக அரசுத் தரப்பில் ஆணையத்திடம் கூறப்பட்டது. ஏழு ஆண்டுகளாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இப்போது தேசிய மனித உரிமை ஆணையம் கடுமையான வார்த்தைகளால் அரசின் மெத்தனப் போக்கைச் சுட்டிக்காட்டி விரைந்து இழப்பீடு அளிக்கும்படி உத்தரவிட்டிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

மனித உரிமை ஆணையத்தின் இந்த உத்தரவு எந்த அளவுக்கு அரசால் செயல்படுத்தப்படும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். நடந்திருக்கும் உயிர்க் கொலைக்கு நஷ்டஈடு என்பது பரிகாரமா என்கிற கேள்விக்கு நாம் முதலில் விடை கண்டாக வேண்டும். சுரேஷ் ஒரு மிக மோசமான குற்றவாளியாகவே இருக்கட்டும். அவருக்குத் தண்டனை கொடுக்கும் உரிமையை காவல்துறையே எடுத்துக்கொள்வது முறைதானா? அப்படிக் காவல்துறைக்கு ஓர் அதிகாரம் தரப்படுமேயானால், பிறகு நீதிமன்றங்கள், நீதிபதிகள் என்றெல்லாம் இருக்க வேண்டிய அவசியம் என்ன?

ஒரு சில குற்றவாளிகளைக் கட்டுப்படுத்தவோ, சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கவோ முடியவில்லை என்றும், நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டனை பெற்றுத் தரத் தகுந்த சாட்சியங்கள் கிடைக்காதபோது, என்கவுன்ட்டர் முறையைக் கையாண்டு தாங்கள் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதாகக் காவல்துறையினர் கூறுகிறார்கள். இப்படி ஓர் அதிகாரம் காவல்துறையினரின் கையில் தரப்பட்டால், குற்றவாளிகள் மட்டுமல்ல, அவர்களுக்குப் பிடிக்காத நிரபராதிகளும் துப்பாக்கித் தோட்டாவுக்கு என்கவுன்ட்டர் என்கிற பெயரில் பலியாக மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

மன்னர் ஆட்சி, ராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி போன்றவைகளில், ஆரம்பத்தில் சட்டம்-ஒழுங்கு கடுமையாக நிறைவேற்றப்படுவதும், பிறகு அதுவே ஆட்சிக்கு எதிராகவோ, ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களின் அதிருப்திக்கு ஆளானவர்களுக்கும் எதிராகவோ திரும்புவது சரித்திரம் நமக்குச் சொல்லித்தரும் உண்மை. தீர்ப்பு வழங்கும் உரிமை காக்கிச் சட்டைகளுக்கு வழங்கப்படக் கூடாது என்பதால்தான் மக்களாட்சித் தத்துவத்தில் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

"என்கவுன்ட்டர்' என்பதும் கொலைதான். சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றுகிறோம் என்கிற பெயரில் ஒருவர் மிகக் கொடூரமான குற்றவாளியாகவே இருந்தாலும், ஒரு தனிமனிதனின் உயிரைப் பறிக்கும் உரிமை காவல்துறைக்குக் கிடையாது. தரப்படவும் கூடாது. "என்கவுன்ட்டர்' கொலைக்கு இழப்பீடு பணம் அல்ல. கொலைக் குற்றத்திற்கான விசாரணையும், தண்டனையும்தான். அப்போதுதான் சட்டத்தின் பெயரால் நடத்தப்படும் இதுபோன்ற திட்டமிட்ட கொலைகள் முற்றிலுமாகத் தடுக்கப்படும்!
நன்றி : தினமணி

கலவரங்களை கட்டுப்படுத்த மிளகாய் வெடிகுண்டுகள் டி.ஆர்.டி.ஓ., புதிய கண்டுபிடிப்பு

சர்வதேச அளவில், சாதாரண விஷயத்துக்கும் வன்முறை வெறியாட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், கலவரங்களை ஒடுக்க ஆயுதங்களும் பல பரிமான வளர்ச்சிகளை பெற்று வருகிறது. இந்த வரிசையில் டிபன்ஸ் ரிசேர்ச் மற்றும் டெவலப்மென்ட் ஆர்கனைசேஷன் (டி.ஆர்.டி.ஓ.,) புது முயற்சியில் இறங்கியுள்ளது. கலவரங்களின் போது கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை கக்கும் கையெறி குண்டுகள் பயன்படுத்துவது வழக்கம் , தற்போது அவற்றிற்கு பதிலாக மிளகாய்களால் ஸ்டப் செய்யப்பட்ட கையெறி குண்டுகளை பயன்படுத்தும் ஆராய்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. உலகிலேயே மிகவும் காரமான மிளகாய் என கருதப்படுகிறது அசாமில் விளையும் ஒரு வகை மிளகாய்கள். இந்த மிளகாய்களை பயன்படுத்தி கையெறி குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை வெடிக்க செய்தால், ஏற்படும் நெடி மூச்சுத் திணறலை ஏற்படுத்துமாம். இண்டு இடுக்களில் பதுங்கியிருக்கும் கலவரக்காரர்களை கூட வெளியில் கொண்டு வந்து விடுமாம் இந்த நெடி. இருப்பினும் இந்த புகையால் மரணம் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படைகளான, சி.ஆர்.பி.எப்., துணை ராணுவ படையினர் ஆகியோருக்கு இந்த குண்டுகள் மிகவும் உபயோகரமாக இருக்கும் என திட்ட இயக்குநர் ஆர்.பி.ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். உயிர் சேதம் ஏற்படுத்தாமல் கலவரங்களை ஒடுக்குவதற்காக இவ்வகை குண்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


பொருளாதார நிதிச்சுழல் தாக்கத்தால் ஆன்லைன் விளம்பர வர்த்தகத்தில் சரிவு

பொருளாதார நிதிச்சுழல் தாக்கத்தால் ஆன்லைன் விளம்பர மார்க்கெட்டிங் துறையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த நிதியாண்டில் ஆன்லைன் விளம்பர வர்த்தகம் சொர்ப்ப வளர்ச்சியையே கண்டது. இது குறித்து நவுக்ரி டாட் காம் நிறுவனத்தின் சி.இ.ஓ., சஞ்சீவ் பிக்சாண்டனி கூறுகையில்: ஆன்லைன் விளம்பர வர்த்தகம் ஆண்டுக்கு 20 முதல் 25 சதவீதம் வளர்ச்சியை சந்தித்து வந்தது. ஆனால் கடந்த 2008-2009ம் நிதி ஆண்டில் இந்த வளர்ச்சியில் சுணக்கம் ஏற்பட்டது. நடப்பு நிதி ஆண்டிலும் இந்த மந்த நிலை தொடர்கிறது என்றார். பிரிண்ட் மீடியாவை விட அதி வேகமாக வளர்ந்து வந்த ஆன்லைன் விளம்பர வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் - ஐதராபாத்தில் நடந்த கருத்தரங்கில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்


உள்நாட்டு விமானங்களில் பிசினஸ் க்ளாசில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா உள்நாட்டு விமானங்களில் பிசினஸ் க்ளாசில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஒரு ரிப்போர்ட் தெரிவிக்கிறது. இது குறித்து பேட்டியளித்த ஜெட் ஏர்வேஸ் வர்த்தக பிரிவு தலைமை அதிகாரி சுதிர் ராகவன் : ஜூன் மாதத்தை ஒப்பிடும் போது ஜூலை மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் பிசினஸ் க்ளசில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்துள்ளது. ஆனால் இதை மட்டுமே வைத்து விமான நிறுவனங்கள் சரிவில் இருந்து மீட்பு பாதையில் செல்கிறது என கூறி விட முடியாது. ஏர் இந்தியா நிறுவன விமானங்களில் பிசினஸ் க்ளாசில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக அந்நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் டில்லி- சென்னை, டில்லி-கோவை, டில்லி-பெங்களூரு மார்க்கத்தில் பிசினஸ் க்ளாசில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார். கட்டண குறைப்பு உட்பட பயணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பல்வேறு சலுகைகைள் தான் இந்த முன்னேற்றுத்துக்கு காரணம் என கூறப்படுககிறது.
நன்றி : தினமலர்


புது மாடல்கள்; தாராள கடன் வசதியால் விற்பனை ஜோர்*மாருதி, ஹுண்டாய்க்கு மவுசு

புது மாடல் கார்களின் வரவு அதிகமாக உள்ளது. மேலும், அவற்றை வாங்க வங்கிக் கடன் கட்டுப்பாடுகளும் நீங்கி வருகின்றன. இதனால், நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை மீண்டும் சூடு பிடித்துள்ளது.கடந்த மாதம் கார்கள் விற்பனை 31 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கார்கள் விற்கப் பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில்87,901 ஆக இருந்தது என்று, மோட்டார் வாகன உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மாருதி நிறுவனத்தில் இருந்து 'ரிட்ஸ்', பியட் மூலம்'பன்ட்டோ', ஹுண்டாயின்'ஐ-20', ஹோண்டாவின் 'ஜாஸ்' ஆகிய புதிய மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எளிதில் கிடைக்கும் வங்கிக் கடன்கள், அரசின் வரிச்சலுகை ஆகியவற்றால் தான், கார் விற்பனை அதிகரித்துள்ளது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
வாகன விற்பனை, பொதுவாக அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் உச்சத்தில் இருக்கும். பண்டிகைகள், விழாக்கள் நடைபெறும் காலம் அது. இந்த ஆண்டு விழாக்கள் பெரும்பாலும் செப்டம்பரில் துவங்குவதால், விற்பனையாளர்கள் முன்னரே, கார்களை அதிக அளவில் இருப்பு வைக்கத் துவங்கி விட்டனர்.கார் ஏற்றுமதியிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதி 22 சதவீதம் உயர்ந்துள்ளது. மாருதி, ஹுண்டாய் நிறுவனங்களில் இருந்து 33,506 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. வாகன மொத்த ஏற்றுமதி 5 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒரு லட்சத்து 39 ஆயிரம் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
நன்றி : தினமலர்