Monday, August 17, 2009

என்கவுன்ட்டர் கொலைகள்!

தேசிய மனித உரிமை ஆணையம் சமீபத்தில் அளித்திருக்கும் தீர்ப்பு ஒன்றின்படி, என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட ஒரு நபரின் குடும்பத்துக்கு நஷ்டஈடு தரும்படி உத்தரவிட்டிருக்கிறது. வியாசர்பாடியைச் சேர்ந்த சுரேஷ் என்கிற சுரா என்பவர் நவம்பர் 18, 2002 அன்று இரவு சென்னையில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஏறத்தாழ ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய மனித உரிமை ஆணையம் சுரேஷின் குடும்பத்தாருக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடாகத் தரப்பட வேண்டும் என்றும், எட்டு வாரங்களுக்குள் நிவாரணம் தரப்பட்டதற்கான சான்றுகளை மனித உரிமை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

சுரேஷின் தாயார் மனித உரிமை ஆணையத்திற்கு அளித்த மனுவின்படி, காவல்துறையினர் சுரேஷை நவம்பர் 13-ம் தேதியே அழைத்துச் சென்றுவிட்டனர். பிறகு தெரிவிக்கப்பட்ட தகவல் அவர் என்கவுன்ட்டரில் இறந்துவிட்டார் என்பது மட்டுமே.

காவல்துறையினரின் வாதப்படி, சுரேஷ் ஒரு பழக்கப்பட்ட குற்றவாளி என்றும், பல கிரிமினல் குற்றங்களில் தொடர்புள்ள நபர் என்றும் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த அன்று இரவு, சுரேஷ் அதிவிரைவாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்ததாகக் காவல்துறை குற்றம்சாட்டுகிறது. வயர்லெஸ் கருவி மூலம் செய்தி கிடைத்தது என்றும், அவரை இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள் தடுத்து நிறுத்த முயற்சித்தபோது அவர்களைக் கத்தியால் குத்திவிட்டு, கையெறிகுண்டையும் எறிந்து தப்பிக்க முயன்றார் என்றும் காரணம் கூறுகிறது. சப் இன்ஸ்பெக்டரில் ஒருவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை, என்கவுன்ட்டருக்குக் காரணமாகச் சுட்டிக்காட்டுகிறார் அன்றைய மாநகரக் காவல்துறை ஆணையராக இருந்த விஜயகுமார்.

மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரையை அடுத்து, இந்தச் சம்பவத்தை விசாரித்த மாவட்ட இணை ஆட்சியர் ஒருவரின் அறிக்கை, மாநகர ஆணையரின் கூற்றுக்கு முற்றிலும் முரணாக அமைந்திருக்கிறது. ""சம்பவ இடத்தில் கையெறிகுண்டு வீசப்பட்டதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை என்பது மட்டுமல்ல, சப் இன்ஸ்பெக்டர் காயமடைந்ததாகச் சொல்லப்படுவதும் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்று அந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

இதை ஆதாரமாக வைத்துத் தனது விசாரணையைத் தொடர்ந்த மனித உரிமை ஆணையத்திடம், சம்பந்தப்பட்ட சப் இன்ஸ்பெக்டர்கள்மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு கொடுக்க உத்தேசிப்பதாகவும் தமிழக அரசுத் தரப்பில் ஆணையத்திடம் கூறப்பட்டது. ஏழு ஆண்டுகளாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இப்போது தேசிய மனித உரிமை ஆணையம் கடுமையான வார்த்தைகளால் அரசின் மெத்தனப் போக்கைச் சுட்டிக்காட்டி விரைந்து இழப்பீடு அளிக்கும்படி உத்தரவிட்டிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

மனித உரிமை ஆணையத்தின் இந்த உத்தரவு எந்த அளவுக்கு அரசால் செயல்படுத்தப்படும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். நடந்திருக்கும் உயிர்க் கொலைக்கு நஷ்டஈடு என்பது பரிகாரமா என்கிற கேள்விக்கு நாம் முதலில் விடை கண்டாக வேண்டும். சுரேஷ் ஒரு மிக மோசமான குற்றவாளியாகவே இருக்கட்டும். அவருக்குத் தண்டனை கொடுக்கும் உரிமையை காவல்துறையே எடுத்துக்கொள்வது முறைதானா? அப்படிக் காவல்துறைக்கு ஓர் அதிகாரம் தரப்படுமேயானால், பிறகு நீதிமன்றங்கள், நீதிபதிகள் என்றெல்லாம் இருக்க வேண்டிய அவசியம் என்ன?

ஒரு சில குற்றவாளிகளைக் கட்டுப்படுத்தவோ, சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கவோ முடியவில்லை என்றும், நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டனை பெற்றுத் தரத் தகுந்த சாட்சியங்கள் கிடைக்காதபோது, என்கவுன்ட்டர் முறையைக் கையாண்டு தாங்கள் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதாகக் காவல்துறையினர் கூறுகிறார்கள். இப்படி ஓர் அதிகாரம் காவல்துறையினரின் கையில் தரப்பட்டால், குற்றவாளிகள் மட்டுமல்ல, அவர்களுக்குப் பிடிக்காத நிரபராதிகளும் துப்பாக்கித் தோட்டாவுக்கு என்கவுன்ட்டர் என்கிற பெயரில் பலியாக மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

மன்னர் ஆட்சி, ராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி போன்றவைகளில், ஆரம்பத்தில் சட்டம்-ஒழுங்கு கடுமையாக நிறைவேற்றப்படுவதும், பிறகு அதுவே ஆட்சிக்கு எதிராகவோ, ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களின் அதிருப்திக்கு ஆளானவர்களுக்கும் எதிராகவோ திரும்புவது சரித்திரம் நமக்குச் சொல்லித்தரும் உண்மை. தீர்ப்பு வழங்கும் உரிமை காக்கிச் சட்டைகளுக்கு வழங்கப்படக் கூடாது என்பதால்தான் மக்களாட்சித் தத்துவத்தில் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

"என்கவுன்ட்டர்' என்பதும் கொலைதான். சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றுகிறோம் என்கிற பெயரில் ஒருவர் மிகக் கொடூரமான குற்றவாளியாகவே இருந்தாலும், ஒரு தனிமனிதனின் உயிரைப் பறிக்கும் உரிமை காவல்துறைக்குக் கிடையாது. தரப்படவும் கூடாது. "என்கவுன்ட்டர்' கொலைக்கு இழப்பீடு பணம் அல்ல. கொலைக் குற்றத்திற்கான விசாரணையும், தண்டனையும்தான். அப்போதுதான் சட்டத்தின் பெயரால் நடத்தப்படும் இதுபோன்ற திட்டமிட்ட கொலைகள் முற்றிலுமாகத் தடுக்கப்படும்!
நன்றி : தினமணி

No comments: