Showing posts with label எல்.ஐ.சி. Show all posts
Showing posts with label எல்.ஐ.சி. Show all posts

Thursday, October 29, 2009

எல்.ஐ.சி., சட்ட திருத்தம் : ஏஜன்டுகள் கடும் அதிருப்தி

எல்.ஐ.சி., சட்டம் 1938 பிரிவு 44ல், திருத்தம் செய்வதற்காக சமீபத்தில், பார்லிமென்டில் மசோதா சமர்பிக்கப்பட்டது குறித்து, நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி., ஏஜன்ட்கள் குறை கூறி உள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில், இந்திய எல்.ஐ.சி., ஏஜன்ட்கள் கூட்டமைப்பு நேற்று முன் தினம், எல்.ஐ.சி., ஏஜன்ட்கள் நல்வாழ்வு தொடர் பான கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில், எல்.ஐ.சி., சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதால், ஏற்படும் விளைவுகள் குறித்து மண்டல செயலர் டி.சத்யநாராயணா, பேசினார். அப்போது அவர் கூறியதாவது: எல்.ஐ.சி., ஏஜன்ட்கள் பலர், பாலிசிகள் மூலம் கிடைக்கும் கமிஷன்களை வைத்தே வாழ்கின்றனர். இவ்வாறு வழங்கப்படும் கமிஷன்களே அவர்களை சிறப்பாக மேலும் செயலாற்றத் தூண்டுகிறது. இந்த சட்டப்பிரிவு, ஏஜன்ட்கள், உடல்ரீதியாக பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் வழி வகை செய்கிறது. இத்தகைய சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது, எல்.ஐ.சி., ஏஜன்ட்களின் பணியில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அரசுக்கும் பெரியளவில் நஷ்டம் ஏற்படும்.

பாலிசிதாரர்கள் வீட்டிற்கு அடிக்கடி சென்று தான் இன்சூரன்ஸ் ஏஜன்ட்கள் பாலிசி எடுக்கின்றனர். அதன் பின், பாலிசிதாரர் முறையாக பாலிசித் தொகையை செலுத்துகிறாரா என்பதை ஏஜன்ட் கள் உறுதிப்படுத்துகின்றனர். ஆனால், இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதால், நாட்டின் இன்சூரன்ஸ் செயல்பாடுகளில் பெரிய பின்னடைவு ஏற்படும்.

நன்றி : தினமலர்

Saturday, September 5, 2009

வாரம் தோறும் பிரிமியம்: எல்.ஐ.சி.,யின் ஜீவன் மங்கள்

வாரம் தோறும் பிரிமியம் செலுத்தும் வகையில் எல்.ஐ.சி.,யின் நுண் காப்பீட்டுத் திட்டமாக 'ஜீவன் மங்கள்' நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி., கட்டடத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 'ஜீவன் மங்கள்' பாலிசியை மண்டல மேலாளர் வி.கே.சர்மா அறிமுகப்படுத்தி பேசியதாவது: நகர்ப்புற, கிராமப் பகுதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் 'மைக்ரோ இன்சூரன்ஸ் பாலிசி' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் பாலிசியான 'ஜீவன் மாதூர்' திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 2006ல் துவக்கி வைத்தார். இரண்டாவதாக தற்போது 'ஜீவன் மங்கள்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது ஒரு காலவரையறைக்கு உட்பட்ட திட்டம். பாலிசி முடிவில் செலுத்திய தொகை திரும்ப வழங்கப்படும். இதன் பிரிமியத்தை ஒரே தவணை, ஆண்டு, காலாண்டு, அரையாண்டு, மாத தவணை, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மற்றும் வாரந்தோறுமாக செலுத்தலாம். கால முடிவிற்குள் பாலிசிதாரர் இறந்தால், வாரிசுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். விபத்துக்கான கூடுதல் காப்பீடு செலுத்தி, விபத்து பாதுகாப்பு பெறும் வாய்ப்பும் உள்ளது. 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை காப்புத் தொகை பெறலாம். எல்.ஐ.சி.,யின் 53வது ஆண்டு மற்றும் எல்.ஐ.சி., வார விழா இம்மாதம் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. எல்.ஐ.சி., தனது பாலிசிதாரர்களுக்கும், சமுதாயத்திற்கும் நிறைவான சேவையை தந்து வருகிறது. இவ்வாறு சர்மா தெரிவித்தார். 'ஜீவன் மங்கள்' பாலிசியை சமூக சேவகர் சரோஜினி வரதப்பன் வெளியிட்டார். எல்.ஐ.சி., நிறுவன அதிகாரிகள், ஏஜன்ட்கள், என்.ஜி.ஓ.,க்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நன்றி : தினமலர்


Saturday, August 15, 2009

எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் வட்டி குறைப்பு அறிவிப்பு

புதிதாக வீட்டுக் கடன் பெறுபவர்களுக்கான வட்டி வீதத்தை, எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் குறைத்துள்ளது.இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:முன்னர் 30 லட்சம் முதல் 75 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் பெறுபவர்களுக்கான வட்டி வீதம் 9.25 சதவீதமாக இருந்தது. தற்போது 75 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கான மாறுகின்ற வட்டி வீதம் 8.75 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் தேதி முதல் இந்தப் புதிய வட்டி வீதம் அமலுக்கு வந்துள்ளது.மூன்று ஆண்டுகளுக்கு நிரந்தர வட்டி வீதத்திலும், அதன்பின் மாறுகின்ற வட்டி வீதத்திலும் கடன் பெறும் புதிய வாடிக்கையாளர்களுக்கு, 75 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு 8.90 சதவீத வட்டி வசூலிக்கப்படும். முன்னர் இந்த வகைக் கடன்களுக்கான வட்டி வீதம் 9.50 சதவீதமாக இருந்தது.
நன்றி : தினமலர்


Friday, July 10, 2009

புதிய காலத்திற்கு ஏற்ப 'ஜீவன் சாத்தி பிளஸ்'

காலம் மற்றும் தேவை மாற்றங்களுக்கு ஏற்ப புதிது புதிதாக பாலிசிகளை அறிமுகப்படுத்தி வரும் எல்.ஐ.சி., நிறுவனம், தற்போது 'ஜீவன் சாத்தி பிளஸ்' என்ற புதிய பாலிசியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த 'ஜீவன் சாத்தி பிளஸ்' திட்டத்தால், ஒரே பாலிசியின் மூலம் கணவன் - மனைவி இருவரும் ஆதாயம் பெறலாம். இத்திட்டத்தில் பாலிசிதாரர், பிரின்சிபல் லைப் அஷ்யூர்டு (பி.எல்.ஏ.,) வாகவும், அவரது கணவன் அல்லது மனைவி, ஸ்பவுஸ் லைப் அஷ்யூர்டு (எஸ்.எல்.ஏ.,)வாகவும் கருதப்படுகிறார். இந்த திட்டத்தில் ரெகுலர் பிரீமியம் முறையில் சேர்ந்துள்ள பாலிசிதாரர், ஓராண்டு, அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதத் தவணைகளில் முறையாக பாலிசிக்குரிய சந்தாவை செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தின் சிங்கிள் பிரிமியம் முறையில் சேர்ந்துள்ள பாலிசிதாரர் ஒரே தவணையாக பாலிசிக்குரிய மொத்த பணத்தையும் கட்ட வேண்டும். இதற்கான குறைந்தபட்ச தொகையாக 40 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பாலிசியில் சேர குறைந்தது, 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 55 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலிசி முதிர்வு வயது அதிகபட்சமாக 70 வயது வரையும், பாலிசியின் கால அளவு 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த 'ஜீவன் சாத்தி பிளஸ்' திட்டம் கணவன் - மனைவி இருவரின் வாழ்க்கைக்கும் நிதி பாதுகாப்பு அளிக்கும் சிறந்த திட்டம்.
நன்றி : தினமலர்


Sunday, July 5, 2009

சூடு பிடிக்குது வீட்டுக்கடன் : வட்டிவீத போர் வங்கிகள் போட்டா போட்டி

ரியல் எஸ்டேட் வர்த்தகம் மந்தமாக இருந்தாலும், வீட்டுக்கடன் தருவதில், வங்கிகள் இடையே மீண்டும் போட்டா போட்டி சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. சென்னை, மும்பை உட்பட பல நகரங்களில் ரியல் எஸ்டேட் வர்த்தகம், இரண்டாண்டுக்கு முன் இருந்த நிலையில் இப்போது இல்லை; 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பலமாடிக் குடியிருப்பு வீடுகள் விற்பனை செய்யப்படாமல் உள்ளன. சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு, வேலை பறிப்பு போன்ற காரணங்களால், பலமாடிக் குடியிருப்பு வீடுகள் விற்பனை படுத்துவிட்டது. சாப்ட்வேர் ஊழியர்களை நம்பி, பல லட்சம் ரூபாய் வீட்டுக்கடன் தருவதில் வங்கிகள், நிதி நிறுவனங்கள் போட்டி போட்டு வட்டியையும் குறைத்தன. சாப்ட்வேர் ஊழியர்கள் வேலை போய் விட்டதால், வீட்டுக்கடனை அடைக்க முடியாமல் தவித்தது ஒரு பக்கம் இருக்க, அவர்களை நம்பி கட்டிய பல கோடி ரூபாய் பலமாடிக் குடியிருப்பு வீடுகளும் விற்பனை ஆகாமல் முடங்கின. இப்போது தான் ஓரளவு ரியல் எஸ்டேட் வியாபாரம் சற்று தலைதூக்கி உள்ளது. விலையைக் குறைத்து வீடுகளை விற்பனை செய்வதில் பில்டர்கள் தீவிரமாக உள்ளனர். அதனால், வீடு வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் மீண்டும் வீட்டுக்கடனைப் பெறத் துடிக்கின்றனர். வீட்டுக்கடன் பாக்கி சரிவர வராமல் இருந்தால், கிடுக்கிப்பிடி போட்டு வந்த வங்கிகள் இப்போது ஓரளவு கெடுபிடிகளையும், வட்டி வீதத்தையும் குறைத்துக் கொண்டு வருகின்றன. ரியல் எஸ்டேட் வர்த்தகத்தை மீண்டும் தலைதூக்க வைக்க மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வரு கிறது. ரிசர்வ் வங்கியும் வட்டி வீதத்தைக் குறைக்க அவ்வப்போது வங்கிகளுக்கு உதவி வருகிறது. இந்நிலையில், வட்டி வீதம் 8 சதவீதம் வரை வந்து விட்டது. ஆறரை சதவீதத்துக்கு கொண்டு வருவது தான் மத்திய அரசின் எண்ணம். வீட்டுக்கடன் தரும் வங்கிகள் இடையே இப்போது வட்டி வீதப் போர் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. வட்டி வீதத்தைக் குறைத்து, போட்டா போட்டியை உருவாக்குவதில் முன்னர் எச்.டி.எப்.சி., வங்கி இருந்தது. இப்போது, அந்த பணியை ஸ்டேட் பாங்க் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. வட்டி வீதத்தை ஏற்றுவதாக இருந்தாலும், குறைப்பதாக இருந்தாலும், முதலில் இருக்கும் எச்.டி.எப்.சி., இப்போது திடமான முடிவுகளை எடுத்து வருகிறது. மற்ற வங்கிகள் வட்டியைக் குறைத்தாலும், அதற்கு போட்டியாக இன்னும் வட்டியைக் குறைக்கும் முடிவை எடுப்பதே இல்லை. வீட்டுக்கடன் பட்டுவாடாவில் முதலில் இருப்பது ஸ்டேட் பாங்க் தான். அடுத்து, எல்.ஐ.சி., உள்ளது. சமீபத்தில் ஸ்டேட் பாங்க், வீட்டுக் கடன் வட்டி வீதத்தைக் குறைத்தது மட்டுமின்றி, வீட்டுக்கடன் வாங்குவோருக்கு புதிய சலுகைத் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு, 'ஈசி ஹோம் லோன்' மற்றும் 'அட்வான்டேஜ் ஹோம் லோன்' என்ற இரு திட்டங்களை ஸ்டேட் பாங்க் அறிமுகம் செய்துள்ளது. இந்த இரு திட்டங்களிலும் கடன் பெறுவோர், முதலாண்டு 8 சதவீதம் வட்டியில் தவணையைக் கட்டலாம்; அடுத்த இரு ஆண்டுகளில் படிப்படியாக வட்டி வீதம் 9.5 சதவீதம் வரை அதிகரிக்கும். அதன் பின், புளோட்டிங், பிக்சட் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்து தவணையை கட்டலாம். ஸ்டேட் பாங்க் அவ்வப்போது நிர்ணயிக்கும், 'ஸ்டேட் பாங்க் அட்வான்ஸ் ரேட்' படி இந்த சலுகை அளிக்கப்படுகிறது. இந்த விகிதத்தின் படி, ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கும் பலன் கிடைக்கும். ஸ்டேட் பாங்க் இப்படி சலுகை திட்டங்களை அறிவித்தாலும், எச்.டி.எப்.சி., வங்கி, தன் வாடிக்கையாளர்களுக்கு எந்த மாற்றத்தையும் செய்ய விரும்பவில்லை. 'உண்மையில் எங்களின் வட்டி வீதம் தான் குறைவானது. ஆண்டுக்கணக்கின் அடிப்படையில் வட்டி வீதத்தைக் கணக்கிட்டால் இந்த உண்மை தெரியும்' என்று விளக்கம் அளித்துள்ளது. இந்த வங்கிகள் இடையே எல்.ஐ.சி., வீட்டு வசதி கழகமும் வட்டி வீதத்தை குறைத்து வர்த்தக போட்டியை சமாளிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், வீட்டுக்கடன் வட்டி வீதம் தொடர்பாக வங்கிகள் நடத்திய போர், மீண்டும் பெரிய அளவில் தலை தூக்கும் என்று தெரிகிறது.
நன்றி ; தினமலர்


Wednesday, June 24, 2009

பங்கு சந்தையில் ரூ.50,000 கோடியை முதலீடு செய்ய எல்.ஐ.சி.,திட்டம்

பங்கு சந்தையில் ரூ.50,000 கோடியை இந்த நிதி ஆண்டில் முதலீடு செய்ய எல்.ஐ.சி.,ஆஃப் இந்தியா திட்டமிட்டிருக்கிறது. கடந்த வருடம் நாங்கள் ரூ.40,800 கோடியை பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தோம். இந்த வருடம் ரூ.50,000 கோடியை முதலீடு செய்ய இருக்கிறோம் என்றார் எல்.ஐ.சி.,யின் மேலாண் இயக்குனர் தாமஸ் மேத்யூ. இந்த நிதி ஆண்டில் இதுவரையிலும் எல்.ஐ.சி., ரூ.8,000 கோடியை பங்கு சந்தையில் முதலீடு செய்திருக்கிறது. இது தவிர அரசுத்துறை பத்திரங்களிலும், கார்பரேட் கடன் பத்திரங்களிலும் எல்.ஐ.சி., முதலீடு செய்திருக்கிறது. நேற்று எல்.ஐ.சி.,யின் சேர்மன் விஜயன் இது குறித்து பேசியபோது, இந்த நிதி ஆண்டில் நாங்கள் 20 சதவீத கூடுதல் பிரீமியம் வருவாயை எதிர்பார்க் கிறோம். புது பிரீமியம் மூலம் கிடைக்கும் வருவாயை பொறுத்தவரை, 2008 - 09 நிதி ஆண்டில் 10 சதவீதம் குறைந்திருந்தது. அது இந்த நிதி ஆண்டில் 25 சதவீதம் உயரும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். 2008 - 09 நிதி ஆண்டில் எல்.ஐ.சி.,பிரீமியம் வருவாயாக ரூ.1,55,000 கோடியை பெற்றிருந்தது. அதில் புது பிரீமியம் வருவாய் ரூ.52,000 கோடியும் அடங்கும்.
நன்றி :தினமலர்