சந்தை, திங்கள் முதல் நேற்று வரை ஏற்ற இறக்கமாகவே இருந்தது. சாதாரணமாக பட்ஜெட் வருவதற்கு முன் (யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே என்பது போல) சந்தையில் ஒரு கலகலப்புத் தெரியும். அது தற்போது இல்லாதது ஒரு வருத்தம் தான்.
அதாவது, பட்ஜெட்டில் இந்த சலுகை வரும், அந்த சலுகை வரும் என்று எதிர்பார்த்து, எதிர்பார்த்தே சந்தை மேலே சென்று கொண்டிருக்கும். ஒரு மஜா இருக்கும்; அது தற்சமயம் இல்லை. ஒரு வேளை சந்தை நாளையையும் (ரயில்வே பட்ஜெட்), 6ம் தேதியையும் நோக்குகிறதோ என்னவோ?
இவ்வளவு கிட்டே வந்து விட்டோம்; அதற்காகவும் காத்திருப்போம்.
திங்களிலிருந்து, நேற்று வரை பார்த்தால் மொத்தமாக சந்தை 30 புள்ளிகள் இழந்தது. பெரிய இழப்பு இல்லையென்றாலும், சந்தை ஒவ்வொரு நாளும் ஏறி, இறங்கியதில் பல முதலீட்டாளர்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கும். காலையில் சந்தை மேலே செல்லும், பிறகு அதே அளவு கீழே வரும், பின்னர் மேலே செல்லும் என்றே இருந்தது.
முடிவாக நேற்று மும்பை பங்குச் சந்தை 151 புள்ளிகள் கூடி 14,645 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 49 புள்ளிகள் கூடி 4,340 புள்ளிகளுடனும் முடிந்தது.
சந்தை ஏறிக் கொண்டிருக்கிறது. இது தான் சமயம் என்று பல கம்பெனிகள் மூலதனங்களை திரட்ட ஆரம்பித்துள்ளன. ஒன்று ப்ரைமரி மார்க்கெட் வழியாக, இன்னொன்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பதன் மூலம். இதன் மூலமாக, இந்த ஆண்டு மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் கம்பெனிகள் திரட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மார்க்கெட்டில் பங்குகள் விற்கப்படும் சூழ்நிலைகள் ஏற்படலாம். அப்படி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதால் தான் சந்தைகள் கடந்த சில நாட்களாகவே மேலும், கீழுமாகவே இருக்கின்றன.
சென்ற காலாண்டில் ஏறிய சந்தை: ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் பங்குச் சந்தை 49 சதவீதம் கூடியுள்ளது. குறிப்பாக தேர்தல் முடிவுகளுக்குப் பின் அதிகம் கூடியுள்ளது. சரியான சமயத்தில் முதலீடு செய்திருந்தால் அதிக லாபம் பெற்றிருப்பீர்கள்.
பங்குச் சந்தையில் தனிப்பட்ட டிரஸ்ட்களும் முதலீடு செய்யலாம் என்ற முடிவு விரைவில் எடுக்கப்படும் எனவும், அதற்கான சட்டத் திருத்தங்களும் செய்யப்படலாம் என்றும் செய்திகள் வருகின்றன. அப்படி இருக்கும் பட்சத்தில் அது சந்தையை மேலே கொண்டு செல்லும்.
ஏனெனில், அவர்களிடத்தில் நிறைய உபரிப் பணம் இருக்கிறது.
காலாண்டு முடிவுகள்: இன்பி, ஜூலை 10ம் தேதியும், ஆக்சிஸ் வங்கி, 13ம் தேதியும் காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்தக் காலாண்டு முடிவுகள் பொதுவாக நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரணங்கள் என்ன? கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைந்துள்ளன, ஆதலால் வட்டிச் செலவுகள் குறையும், பொதுவாக உலக நிலைமைகளை, நடப்புகளைக் கருதி செலவுகளை கம்பெனிகள் குறைத்து வருகின்றன. உலகளவில் விலைகள் குறைந்துள்ளன. ஆதலால், செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது வரும் காலாண்டு முடிவுகள் நன்றாக இருக்க வேண்டும். மேலும் குறைந்து வரும் வட்டி விகிதங்கள்: ஸ்டேட் பாங்க் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை மறுபடி குறைத்துள்ளது.
இது நிச்சயம் சந்தையில் ஒரு போட்டியை உருவாக்கும். இதனால், இன்னும் பல வங்கிகள் வட்டி விகிதங்களை குறைக்கலாம். கடன் வாங்குபவர்களுக்கு லாபம் தான்.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்? : ரயில்வே பட்ஜெட், எகனாமிக் சர்வே, பட்ஜெட் ஆகியவை தான் வரும் நாட்களை தீர்மானிக்கும். தேர்தல் வெற்றிக்கு கடன் தள்ளுபடிகள் ஒரு பெரிய காரணமாக இருந்ததால், இந்த பட்ஜெட்டும் சாதாரண மனிதனை வைத்து அவர்களுக்கு சலுகைகள் வழங்கும் பட்ஜெட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சேதுராமன் சாத்தப்பன் -
நன்றி : தினமலர்