Thursday, July 2, 2009

கரூரில் அமைகிறது ஜவுளி பூங்கா

ஜவுளித்துறை நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், முக்கிய தொழில் நகரங்களில் மத்திய ஜவுளித்துறை நிறுவனம் ஜவுளி பூங்காக்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ஜவுளி நிறுவனங்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டில் 40 முக்கிய நகரங்களில் இத்தகைய பூங்காக்களை உருவாக்க, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் கரூரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படுகிறது. இப்பணி முடியும் நிலையில் உள்ளது. இதற்கான செலவு தொகையாக 40 கோடி ரூபாய் அளவுக்கு நிர்ணயம் செய்துள்ளது. கரூரில் அமையும் பூங்காவில் 60 உறுப்பினர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மதுரை ரோட்டில் அமையும் இப்பூங்கா கரூர் நகரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இதற்கு 110 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பூங்காவில் 350க்கும் அதிகமான தறிகள் அமைக்கப்பட உள்ளன. அனைத்து வசதிகளும் கொண்டுள்ளதால், மிக சுலபமாக தொழில்துறையினர் பணியாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 30 ஆயிரம் தொழிலாளர்களுக்கு இதன்மூலம் புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தேவையான மின்வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் கொண்டுள்ளதால், கரூர் பகுதியில் உள்ள விசைத்தறி மற்றும் கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆர்வத்துடன் ஜவுளி பூங்காவில் தொழில் துவங்க உள்ளனர். இப்பகுதிக்கு அருகிலேயே தொழிலாளர் தங்குவதற்கு வசதியாக பல தனியார் நிறுவனங்கள் குடியிருப்புகள் அமைப்பதிலும் ஈடுபட்டுள்ளன. மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளதால், ஜவுளி பூங்கா அமைவதன் மூலம் குட்டி நகரமாக விரைவில் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது. இதேபோல், பல நகரப்பகுதிகளில் இத்தகைய பூங்காக்களை அமைப்பதற்கான முயற்சியில் மத்திய அரசும், ஜவுளித்துறை நிறுவனமும் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால், குறிப்பிட்ட அளவு நிலம் கிடைக்காததால், ஜவுளி பூங்காக்கள் அமைக்க தாமதம் ஏற்படுவதாக ஜவுளித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி : தினமலர்


No comments: