மும்பை : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து, பேரலுக்கு 145 டாலருக்கு வந்து விட்டதால் அது இந்திய பங்கு சந்தையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் துவங்கிய உடனேயே குறைய துவங்கிய சென்செக்ஸ், காலை 10.05 க்கு 324 புள்ளிகள் அல்லது 2.37 சதவீதம் குறைந்து 13,340.45 புள்ளிகளாக இருந்தது.தேசிய பங்கு சந்தையில் நிப்டி 108 புள்ளிகள் அல்லது 2.64 சதவீதம் குறைந்து 3,985.20 புள்ளிகளாக இருந்தது. பின்னர் அந்த நிலை மேலும் மோசமாகி பகல் 12.18 க்கு சென்செக்ஸ் 639.45 புள்ளிகள் குறைந்து 13,025.17 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 183.20 புள்ளிகள் குறைந்து 3,910.10 புள்ளிகளாக இருந்தது. பின்னர் மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 570.51 புள்ளிகள் ( 4.18 சதவீதம் ) குறைந்து 13,094.11 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 167.60 புள்ளிகள் ( 4.09 சதவீதம் ) குறைந்து 3,925.75 புள்ளிகளில் முடிந்துள்ளது. டாடா ஸ்டீல், ஹெச்.டி.எஃப்.சி., ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், டி. எல். எஃப்., செய்ல், பார்தி ஏர்டெல், இன்போசிஸ், ஐ.டி.சி., ஐ.சி.ஐ.சி.ஐ.வங்கி, ஆகிய நிறுவனங்கள் பெரும் நஷ்டமடைந்தன.
நன்றி : தினமலர்