நன்றி : தினமலர்
Tuesday, March 17, 2009
டாடாவின் ' நானோ ' காரை வாங்க விண்ணப்ப பாரம் விலை ரூ.300 ?
டாடாவின் ' நானோ ' கார் மிக குறைந்த விலையில் கிடைத்தாலும், அதை வாங்குவது ஒன்றும் அவ்வளவு எளிதான வேலை இல்லை என்று தெரிகிறது. அதற்காக நாம் அதிகம் செலவிட வேண்டும் போலிருக்கிறது. உலகம் முழுவதும் இருக்கும் கார் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உலகின் மிக மலிவு விலை காரான டாடாவின் ' நானோ ' இம்மாதம் 23ம் தேதி விற்பனைக்கு வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் மற்ற கார்களைப்போல் நாம் நேராக டீலரிடம் சென்று ' நானோ ' வை வாஙகி விட முடியாது. அதற்காக உள்ள விண்ணப்ப பாரத்தை வாங்கி அதை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதன் பின்னரே நமது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்று தெரிய வரும். அந்த விண்ணப்ப பாரமும் ரூ.300 கொடுத்து வாங்க வேண்டும் என்று தெரிகிறது. ஒரு வேளை நமது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் ரூ.300 திருப்பி கொடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. முதல் முறையாக கார் கம்பெனி ஒன்று அவர்களது காரை வாங்க விண்ணப்ப பாரம் வினியோகித்து, அதை ரூ.300 க்கு விற்க இருப்பது இது தான் முதன் முறை. நானோ காரை வாங்க அதிக அளவில் டிமாண்ட் இருக்கும் என்று எதிர்பார்ப்பதால் இந்த ஏற்பாடு தவிர்க்க முடியாததாகி விட்டது என்று டாடா மோட்டார்ஸ் சார்பில் சொல்லப்பட்டிருக்கிறது. ' நானோ ' வைற வாங்க கடன் கொடுப்பதற்காக இதுவரை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் பஞ்சாப் நேஷனல் பேங்க்கும் டாடா மோட்டார்ஸூடன் கூட்டு சேர்ந்திருக்கின்றன. விரைவில் பேங்க் ஆப் இந்தியா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகளும் இந்த வரிசையில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சரிவுடன் முடிந்தது பங்கு சந்தை
கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து ஏறி வந்த பங்கு சந்தை இன்று சரிந்தது. இன்று முழுவதும் ஏறியும் இறங்கியும் இருந்த பங்கு சந்தை குறியீட்டு எண், மதியத்திற்கு பின், நிதி, டெக்னாலஜி, ஆயில் அண்ட் கேஸ், மெட்டல் மற்றும் கேப்பிட்டல் குட்ஸ் நிறுவன பங்குகள் அதிக அளவில் விற்கப்பட்டதால் குறைய ஆரம்பித்தது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 79.72 புள்ளிகள் ( 0.89 சதவீதம் ) குறைந்து 8,863.82 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 19.80 புள்ளிகள் ( 0.71 சதவீதம் ) குறைந்து 2,757.45 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்
Labels:
பங்கு சந்தை
வேலையில்லாத வெளிநாட்டினர் வெளியே போங்கள் : ஐரோப்பியர்கள் சொல்கிறார்கள்
வேலையில்லை என்றால் ஏன் இங்கு இருக்கிறீர்கள். உங்கள் நாட்டுக்கு செல்ல வேண்டியதுதானே என்கிறார்கள் என்று வேலையில்லாதவர்களை விரட்டுகிறார்கள் ஐரோப்பியர்கள். சமீபத்தில் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கையும் ஹாரீஸ் என்ற நிறுவனமும் இணைந்து எடுத்த ஒரு கருத்து கணிப்பில், ஐரோப்பாவில் உள்ள ஐந்து நாட்டினர், வேலையில்லதா வெளிநாட்டினர் அவர்கள் நாட்டில் இருக்க வேண்டாம் என்ற கருத்தை கொண்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. ஐரோப்பாவில் 1945 ம் ஆண்டிற்குப்பின் இப்போது ஏற்பட்டிருக்கும் கடும் பொருளாதார சீர்குழைவை அடுத்து, அந்த நாட்டு மக்களிடையே வெளிநாட்டினர் மீது வெறுப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. பொருளாதார சீர்கேட்டை அடுத்து அந்நாடுகளில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் இத்தாலியில் 79 சதவீதத்தினர், இங்கிலாந்தில் 78 சதவீதத்தினர், ஸ்பெயினில் 71 சதவீதத்தினர், ஜெர்மனியில் 67 சதவீதத்தினர், பிரான்சில் 51 சதவீதத்தினர், வேலையில்லாத வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்கின்றனர்.
நன்றி : தினமலர்
Labels:
தகவல்
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது டெல்ஸ்ட்ரா
ஆஸ்திரேலிய டெலிகாம் நிறுவனமான டெல்ஸ்ட்ரா, அதன் அவுட்சோர்ஸிங் பார்ட்னரான சத்யம் கம்ப்யூட்டர்ஸூடனான தொடர்பை துண்டித்துக்கொண்டது. சத்யம் கம்ப்யூட்டர்ஸூடன் ஆஸ்திரேலிய டெலிகாம் நிறுவனமான டெல்ஸ்ட்ரா, அப்ளிகேஷன் சப்போர்ட் சம்பந்தமான ஒப்பந்தத்தை செய்திருந்தது. இது வருடத்திற்கு 32 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் ( சுமார் 110 கோடி ரூபாய் ) மதிப்புள்ள ஆர்டர். சத்யத்துடன் செய்திருந்த ஒப்பத்தம் இப்போது இடிஎஸ் நிறுவனத்திற்கு சென்று விட்டதாக ' த ஆஸ்திரேலியன் ' என்ற செய்தி பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது. டெல்ஸ்ட்ராவுடனான ஒப்பந்தம் முறிந்து விடாமல் பார்த்துக்கொள்வதற்காக, சத்யம் கம்ப்யூட்டர்ஸின் புதிய தலைவர் ஏ.எஸ்.மூர்த்தி கடந்த வாரத்தில் ஆஸ்திரேலியா சென்று வந்தார் என்றும் சொல்லப்படுகிறது. சத்யத்தில் நிதி மோசடி நடந்ததை அடுத்து டெல்ஸ்ட்ரா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்
Labels:
சத்யம்
பி.சி.சி.ஐ. மீது சோனி டி.வி. வழக்கு
சோனி டி.வி.யிடம் இருந்த ஐ.பி.எல்.போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை திடீரென ரத்து செய்யப்பட்டதை அடுத்து, ஐ.பி.எல். போட்டிகளை நடத்தும் பி.சி.சி.ஐ.மீது சோனி டி.வி.,மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. ஐ.பி.எல்.போட்டிகளை இந்தியாவுக்குள் ஒளிபரப்பும் உரிமையை கடந்த வருடம் சோனி டி.வி.,பெற்றிருந்தது. அந்த உரிமை 10 வருடங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை சோனி டி.வி.மீறி விட்டதாக கூறி, பி.சி.சி.ஐ., இந்த வருடம் அந்த உரிமையை ரத்து செய்து விட்டது. உரிமை ரத்து செய்யப்பட்டதாக சோனி டி.வி.க்கு கடந்த சனிக்கிழமை அன்று பேக்ஸ் மூலமாக தெரிவிக்கப்பட்டது. சனிக்கிழமை அன்று சோனி டி.வி.க்கான உரிமையை ரத்து செய்த பி.சி.சி.ஐ., அதற்கு அடுத்த நாள் காலையிலேயே சிங்கப்பூரை சேர்ந்த வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப் ( டபிள்யூ.எஸ்.பி. )என்ற நிறுவனத்துடன் இது குறித்து ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம், இந்தியா தவிர மற்ற உலக நாடுகளில் ஐ.பி.எல். போட்டிகளை டபிள்யூ.எஸ்.பி.,ஒளிபரப்பிக்கொள்ள வேண்டியது எனவும், இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமையை யாருக்கு வேண்டுமானாலும் பி.சி.சி.ஐ. கொடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வருடத்தில் டபிள்யு.எஸ்.பி., நிறுவனமும் சோனி டி.வி.யும் சேர்ந்து தான் ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை பி.சி.சி.ஐ.யிடமிருந்து ஒரு பில்லியன் டாலருக்கு ( சுமார் 4,000 கோடி ரூபாய் ) பெற்றது. அதன் மூலம் இந்தியாவில் ஐ.பி.எல். போட்டிகளை 10 வருடங்களுக்கு ஓளிபரப்பும் உரிமை சோனி.டி.வி.க்கு வந்தது. ஆனால் ஒரு வருடத்திலேயே சோனி டி.வி.க்கு அந்த உரிமை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் சோனி டி.வி.யோ, ஏற்கனவே சுமார் ரூ.500 கோடி மதிப்புள்ள ' ஏர் ஸ்பேஸை ' விற்று விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் மார்ச் 9 ம் தேதிதான் இந்த வருட ஐ.பி.எல்.போட்டிக்கான ஒளிபரப்பு உரிமைக்கு அட்வான்ஸ் தொகையாக ரூ.90 கோடியை பி.சி.சி.ஐ.யில் சோனி டி.வி.செலுத்தியிருக்கிறது. மேலும் இந்த ரத்து குறித்து முன் கூட்டியே தகவல் எதுவும் தராமல் ஒரே நாளில் பேக்ஸ் மூலமாக உரிமை ரத்து செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்று சோனி.டி.வி.குற்றம் சாட்டுகிறது. இதன் காரணமாக பி.சி.சி.ஐ.மீது சோனி டி.வி. மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்
Labels:
தகவல்
கிரிடிட் கார்டு உபயோகம் 8 சதவீதம் குறைந்திருக்கிறது
இந்தியாவில் கிரிடிட் கார்டை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்திருப்பதோடு, அதன் மூலம் செலவு செய்வதும் குறைந்திருக்கிறது. ஏப்ரல் 2008 ல் கிரிடிட் கார்டு மூலமாக ரூ.5,611.38 கோடி செலவு செய்யப்பட்டிருந்தது. அதுவே ஜனவரி 2009ல் 7.85 சதவீதம் குறைந்து ரூ.5,171.06 கோடியாகி விட்டது. மேலும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த வருடத்தில் கிரிடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கட்டாத தொகையும் 70 சதவீதம் அதிகரித்திருக்கிறது. டிசம்பர் 2007ல் ரூ.17,306 கோடியாக இருந்த கிரிடிட் கார்டு கடன் தொகை, டிசம்பர் 2008 ல் ரூ.29,359 கோடியாக அதிகரித்திருக்கிறது. கிரிடிட் கார்டு மூலமாக செலவு செய்வது குறைந்திருப்பதற்கு முக்கிய காரணம் பொருளாதார சரிவுதான் என்றும், இப்போதிருக்கும் நிலையில் தேவையில்லாத செலவுகளை மக்கள் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் ஒரு வங்கி அதிகாரி. பொதுவாகவே மக்களின் செலவு செய்யும் போக்கு குறைந்திருக்கிறது என்கிறார் ஆக்ஸிஸ் பேங்க் சீனியர் வைஸ் பிரசிடென்ட் ( ரீடெய்ல் பேங்கிங் ) சுஜன் சின்ஹா. வங்கிகளும் கிரிடிட் கார்டு வினியோகம் செய்வதை குறைத்துக்கொண்டிருக்கின்றன என்கிறார் அவர்.
நன்றி : தினமலர்
Labels:
ரிசர்வ் வங்கி
தென் இந்திய வங்கிகளில் அதிக அளவில் டெபாசிட் செய்யும் வெளிநாட்டு இந்தியர்கள்
பெடரல் பேங்க், சவுத் இந்தியன் பேங்க், கத்தோலிக் சிரியன் பேங்க் போன்ற தென் இந்தியாவை சேர்ந்த வங்கிகளில் தான் வெளிநாட்டு இந்தியர்கள் அதிக அளவில் பணத்தை டெபாசிட் செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. 2008 அக்டோபரில் இருந்து இந்த வங்கிகள், வெளிநாட்டு இந்தியர்களிடமிருந்து அதிக அளவில் டெபாசிட்டை பெற்றிருக்கின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பது, வெளிநாட்டு வங்கிகளின் வீழ்ச்சி, வெளிநாட்டு வங்கிகளை விட இந்திய வங்கிகள் அதிகம் வட்டி தருவது போன்ற காரணங்களால் அவர்கள் இந்திய வங்கிகளில் டெபாசிட் செய்ய ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிய வந்திருக்கிறது. ஏப்ரல் 2008 இலிருந்து மார்ச் 2009 க்குள் உள்ள 11 மாத காலத்தில், பெடரல் பேங்க்கில் வெளிநாட்டு இந்தியர்கள் டெபாசிட் செய்திருப்பது 24 சதவீதம் அதிகரித்திருக்கிறது. 2009 மார்ச் மத்தியில் மட்டும் பெடரல் பேங்க்கிற்கு வெளிநாட்டில் இருந்து ரூ.6,700 கோடி டெபாசிட் வந்திருக்கிறது. 2008 மார்ச்சில் இது ரூ.5,400 கோடியாகத்தான் இருந்தது. அதை விட ரூ.1,300 கோடி கூடுதலாக வந்திருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்திருப்பதுதான் வெளிநாட்டு இந்தியர்கள் அதிக அளவில் பணத்தை இங்கு டெபாசிட் செய்வதற்கு காரணம் என்று பெடரல் பேங்க்கின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தபோது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த வருடம் ஜனவரியில் இருந்து இதுவரை 7 சதவீதமும், கடந்த ஏப்ரல் 2008 இலிருந்து 30 சதவீதமும் குறைந்திருக்கிறது. பெடரல் பேங்கிற்கு வரும் மொத்த டெபாசிட்டில் 20 சதவீதம் வெளிநாட்டு இந்தியர்களிடமிருந்து வருவதுதான் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
நன்றி : தினமலர்
Labels:
வங்கி
கார்ப்பொரேஷன் வங்கி ரூ.ஒருலட்சம் கோடி வர்த்தகம்: தலைவர் தகவல்
கார்ப்பரேஷன் வங்கி ரூ.ஒரு லட்சம் கோடி வரை வர்த்தகம் செய்துவருவதாக தலைவர் ஜெ.எம்.,கர்க் தெரிவித்துள்ளார். காரைக்குடி அருகே சங்கராபுரத்தில் கார்ப்பரேஷன் வங்கி கிளை திறப்பு விழா நடந்தது. கிளை மற்றும் ஏ.டி.எம்., மையத்தை அழகப்பா பல்கலை., துணைவேந்தர் பி.ராமசாமி திறந்து வைத்தார். வங்கி பொது மேலாளர் லட்சுமிகாந்தன் முன்னிலை வகித்தார். மண்டல துணைபொது மேலாளர் எஸ்.பட்டாபிராமன் வரவேற்றார். குத்துவிளக்கேற்றி வைத்து ஜெ.எம்.,கர்க் பேசுகையில், 'நாட்டில் வங்கிக்கு 1,044 கிளைகளும், 1027 ஏ.டி.எம்.,களும், தமிழகத்தில் 113 கிளைகள், 114 ஏ.டி.எம்.,களும் செயல்படுகின்றன. வங்கி ரூ.ஒரு லட்சம் கோடிக்கு வர்த்தகம் செய்கிறது. கிராமபுற மக்களின் வளர்ச்சிக்கு உதவுவது இந்த வங்கியின் நோக்கம்' என்றார். கிளை மேலாளர் எஸ்.நாச்சியப்பன், வயிரவன்கோயில் டிரஸ்ட் தலைவர் திருநாவுக்கரசு, தொழில் வணிக கழக தலைவர் முத்து.பழனியப்பன், சங்கராபுரம் ஊராட்சி தலைவர் மாங்குடி உட்பட பலர் பங்கேற்றனர். கிளை மேலாளர் எஸ்.நாச்சியப்பன் நன்றி கூறினார்.
நன்றி : தினமலர்
Labels:
வங்கி
Subscribe to:
Posts (Atom)