Tuesday, March 17, 2009

தென் இந்திய வங்கிகளில் அதிக அளவில் டெபாசிட் செய்யும் வெளிநாட்டு இந்தியர்கள்

பெடரல் பேங்க், சவுத் இந்தியன் பேங்க், கத்தோலிக் சிரியன் பேங்க் போன்ற தென் இந்தியாவை சேர்ந்த வங்கிகளில் தான் வெளிநாட்டு இந்தியர்கள் அதிக அளவில் பணத்தை டெபாசிட் செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. 2008 அக்டோபரில் இருந்து இந்த வங்கிகள், வெளிநாட்டு இந்தியர்களிடமிருந்து அதிக அளவில் டெபாசிட்டை பெற்றிருக்கின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பது, வெளிநாட்டு வங்கிகளின் வீழ்ச்சி, வெளிநாட்டு வங்கிகளை விட இந்திய வங்கிகள் அதிகம் வட்டி தருவது போன்ற காரணங்களால் அவர்கள் இந்திய வங்கிகளில் டெபாசிட் செய்ய ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிய வந்திருக்கிறது. ஏப்ரல் 2008 இலிருந்து மார்ச் 2009 க்குள் உள்ள 11 மாத காலத்தில், பெடரல் பேங்க்கில் வெளிநாட்டு இந்தியர்கள் டெபாசிட் செய்திருப்பது 24 சதவீதம் அதிகரித்திருக்கிறது. 2009 மார்ச் மத்தியில் மட்டும் பெடரல் பேங்க்கிற்கு வெளிநாட்டில் இருந்து ரூ.6,700 கோடி டெபாசிட் வந்திருக்கிறது. 2008 மார்ச்சில் இது ரூ.5,400 கோடியாகத்தான் இருந்தது. அதை விட ரூ.1,300 கோடி கூடுதலாக வந்திருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்திருப்பதுதான் வெளிநாட்டு இந்தியர்கள் அதிக அளவில் பணத்தை இங்கு டெபாசிட் செய்வதற்கு காரணம் என்று பெடரல் பேங்க்கின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தபோது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த வருடம் ஜனவரியில் இருந்து இதுவரை 7 சதவீதமும், கடந்த ஏப்ரல் 2008 இலிருந்து 30 சதவீதமும் குறைந்திருக்கிறது. பெடரல் பேங்கிற்கு வரும் மொத்த டெபாசிட்டில் 20 சதவீதம் வெளிநாட்டு இந்தியர்களிடமிருந்து வருவதுதான் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


No comments: