Tuesday, March 17, 2009

பி.சி.சி.ஐ. மீது சோனி டி.வி. வழக்கு

சோனி டி.வி.யிடம் இருந்த ஐ.பி.எல்.போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை திடீரென ரத்து செய்யப்பட்டதை அடுத்து, ஐ.பி.எல். போட்டிகளை நடத்தும் பி.சி.சி.ஐ.மீது சோனி டி.வி.,மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. ஐ.பி.எல்.போட்டிகளை இந்தியாவுக்குள் ஒளிபரப்பும் உரிமையை கடந்த வருடம் சோனி டி.வி.,பெற்றிருந்தது. அந்த உரிமை 10 வருடங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை சோனி டி.வி.மீறி விட்டதாக கூறி, பி.சி.சி.ஐ., இந்த வருடம் அந்த உரிமையை ரத்து செய்து விட்டது. உரிமை ரத்து செய்யப்பட்டதாக சோனி டி.வி.க்கு கடந்த சனிக்கிழமை அன்று பேக்ஸ் மூலமாக தெரிவிக்கப்பட்டது. சனிக்கிழமை அன்று சோனி டி.வி.க்கான உரிமையை ரத்து செய்த பி.சி.சி.ஐ., அதற்கு அடுத்த நாள் காலையிலேயே சிங்கப்பூரை சேர்ந்த வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப் ( டபிள்யூ.எஸ்.பி. )என்ற நிறுவனத்துடன் இது குறித்து ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம், இந்தியா தவிர மற்ற உலக நாடுகளில் ஐ.பி.எல். போட்டிகளை டபிள்யூ.எஸ்.பி.,ஒளிபரப்பிக்கொள்ள வேண்டியது எனவும், இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமையை யாருக்கு வேண்டுமானாலும் பி.சி.சி.ஐ. கொடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வருடத்தில் டபிள்யு.எஸ்.பி., நிறுவனமும் சோனி டி.வி.யும் சேர்ந்து தான் ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை பி.சி.சி.ஐ.யிடமிருந்து ஒரு பில்லியன் டாலருக்கு ( சுமார் 4,000 கோடி ரூபாய் ) பெற்றது. அதன் மூலம் இந்தியாவில் ஐ.பி.எல். போட்டிகளை 10 வருடங்களுக்கு ஓளிபரப்பும் உரிமை சோனி.டி.வி.க்கு வந்தது. ஆனால் ஒரு வருடத்திலேயே சோனி டி.வி.க்கு அந்த உரிமை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் சோனி டி.வி.யோ, ஏற்கனவே சுமார் ரூ.500 கோடி மதிப்புள்ள ' ஏர் ஸ்பேஸை ' விற்று விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் மார்ச் 9 ம் தேதிதான் இந்த வருட ஐ.பி.எல்.போட்டிக்கான ஒளிபரப்பு உரிமைக்கு அட்வான்ஸ் தொகையாக ரூ.90 கோடியை பி.சி.சி.ஐ.யில் சோனி டி.வி.செலுத்தியிருக்கிறது. மேலும் இந்த ரத்து குறித்து முன் கூட்டியே தகவல் எதுவும் தராமல் ஒரே நாளில் பேக்ஸ் மூலமாக உரிமை ரத்து செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்று சோனி.டி.வி.குற்றம் சாட்டுகிறது. இதன் காரணமாக பி.சி.சி.ஐ.மீது சோனி டி.வி. மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: