அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, மனை ஒதுக்கீடு, வீடு ஒதுக்கீடு, மாணவர் சேர்க்கை என பலவற்றிலும் அமைச்சர் ஒதுக்கீடு அல்லது சிறப்பு ஒதுக்கீடு (Discretionary Quota) என ஒன்று இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், சில சிறப்பு நேர்வுகளில் பயன்படுத்துவதற்காக அளிக்கப்பட்டுள்ள "வரம்' என்றும் இந்தச் சிறப்பு ஒதுக்கீடுகளைக் குறிப்பிடலாம்.
இந்தச் சிறப்பு ஒதுக்கீடுகள் வெளிப்படையாக இல்லாமல், மிகவும் ரகசியமாக மாறும்போது நிச்சயமாகத் தவறுகள் நடக்கும் என்பதற்கு உதாரணம்தான் அண்ணா பல்கலைக்கழகம் மீது தற்போது எழுந்துள்ள புகார்கள்.
சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கப்பட்டதில் முறைகேடு இருப்பதாக, திண்டிவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரபா கல்விமணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவரது முக்கியக் குற்றச்சாட்டு என்னவென்றால், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கட்-ஆப் மதிப்பெண்களைவிட குறைந்த மதிப்பெண் பெற்ற காவல்துறை ஏடிஜிபி இருவரின் பிள்ளைகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், இதுபோல் சிறப்பு ஒதுக்கீட்டில் யாருக்கெல்லாம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதும்தான். இதுதொடர்பான விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது, இந்தச் சட்டம் உள்துறையைக் கட்டுப்படுத்தாது என தனக்குப் பதில் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் தற்போது அவர், அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை மையத்தின் இயக்குநர் தனக்கு அளித்துள்ள, சிறப்பு ஒதுக்கீடு எண்ணிக்கை விவரக் கடிதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதன்படி, 2000-ம் ஆண்டில் 21 பேர், 2001-ல் 39, 2002-ல் 53, 2003-ல் 49, 2004-ல் 40, 2005-ல் 61, 2006-ல் 105 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கவலைதரும் விஷயம் என்னவெனில், அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் அனுமதியளித்துள்ள சிறப்பு ஒதுக்கீடு அளவு மொத்த மாணவர்களில் 2 சதவீதம் பேர் மட்டுமே! 2007-08-ம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழக மாணவர் எண்ணிக்கை 800. இதன்படி 16 மாணவர்களை மட்டுமே சிறப்பு ஒதுக்கீட்டில் சேர்த்துக்கொள்ள முடியும். ஆனால் 105 மாணவர்கள் வரை படிப்படியாக உயர்ந்திருக்கிறது.
அதிக மாணவர்களைச் சிறப்பு ஒதுக்கீட்டில் சேர்த்ததற்கு அமைச்சர்கள் மட்டுமே காரணமா, அல்லது பல்கலைக்கழகத் துணைவேந்தர் காரணமா, அல்லது வேறு யாராகிலும் உள்ளே புகுந்து ஊழல் செய்திருக்கிறார்களா என்பது விசாரணை நடத்தினால் மட்டுமே தெரியும்.
வெறும் எண்ணிக்கை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதற்குப் பதிலாக, சிறப்பு ஒதுக்கீட்டில் அனுமதி பெற்ற மாணவர்களின் பெயர், அவர்களது பெற்றோர் விவரம், மதிப்பெண் விவரம், யாரால் பரிந்துரைக்கப்பட்டார்கள் என்ற அனைத்துத் தகவல்களையும் வெளிப்படையாகப்
பட்டியலிடுவார்களேயானால், இந்தச் சிறப்பு ஒதுக்கீட்டில் பயனடைந்தவர்கள் யார் என்பதைக் கொண்டு முறைகேடுகளை முடிவு செய்யலாம்.
தமிழக அரசு 69 சதவீத இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிப்பதால், பொதுஒதுக்கீட்டில் பாதிக்கப்படும் 19 சதவீதம் பேருக்குத் தனியாக இடம் உருவாக்கித் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது. அந்த 19 சதவீதத்தை ஒவ்வொரு பாடப்பிரிவிலும் எவ்வாறு பூர்த்தி செய்கிறார்கள் என்று தனியாகக் காட்ட வேண்டும். ஆனால் செய்வதே இல்லை.
பல்கலைக்கழகத்திலேயே இத்தகைய முறைகேடுகள் நடக்குமானால், தனியார் தொழிற்கல்லூரிகளைக் கட்டுப்படுத்தும் தார்மிக பலம் இவர்களிடம் எப்படி இருக்கும்?
கட்-ஆப் மதிப்பெண்கள் 200-க்கு 198 எடுத்த மாணவர்கள்கூட அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம்பெறுவது சிரமம் என்கிற நிலையில், ஆட்சியாளர்களுக்கு சிண்டிகேட் வழங்கிய 2 சதவீத அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்?
இந்தச் சிறப்பு ஒதுக்கீட்டில் பயனடைந்திருக்கும் உயர்அதிகாரிகளின்
பிள்ளைகளும், அரசியல்வாதிகளின் பிள்ளைகளும் நிச்சயமாக ஏழைகளாக இருக்கப்போவதில்லை. அவர்களுக்குத் தனியார் கல்லூரிகளில் நன்கொடை இல்லாமலேயே ரத்தினக் கம்பளம் விரித்து இடம் கொடுக்க அந்தக் கல்லூரி நிறுவனர்கள் தயாராக இருப்பார்கள். அதைவிடுத்து, வெறும் கெüரவத்துக்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் பெறுவதால், வாய்ப்பை இழப்பது நன்கு படித்த மாணவர்கள்தானே!
நன்றி : தினமணி
Thursday, November 5, 2009
800 பேரின் வேலையை பறித்தது மைக்ரோசாப்ட் நிறுவனம்
800 பேரின் வேலையை மைக்ரோசாப்ட் நிறுவனம் பறித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், உலக அளவில் உள்ள இந்நிறுவனத்தின் ஊழியர்களின் 800 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளது. செலவுகளை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாகவும், ஏற்கனவே இதற்காக 5 ஆயிரம் பேர் நீக்கப் பட்டு இருப்பதாகவும் அந்நிறுவனம தெரிவித்துள்ளது. ஏற்கனவே, செலவுகளை குறைக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டது. இதற்காக 96 ஆயிரம் பணியாளர்களின் 5 ஆயிரம் பேரை அல்லது 5 சதவீதம் பணியாளர்களை வரும் ஜூன் 2010ம் ஆண்டிற்குள் நீக்க அந்நிறுவனம் திட்டமிட்டு, அதன்படி 5 ஆயிரம் பேரை நீக்கியது. இந்நிலையில், தற்போது கூடுதலாக இத்திட்டத்தின்படி, மேலும் 800 பேரை நீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 23ம் தேதி கணக்கின்படி, உலக அளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 91,005 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர்
Labels:
ஐடி துறை,
வேலை இழப்பு
ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றும் 93% பேருக்கு மகிழ்ச்சியில்லை: ஆய்வில் தகவல்
ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றும் 93 சதவீதம் பேருக்கு மகிழ்ச்சி இல்லை என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஹெல்த்டிராக் என்ற நிறுவனத்திற்காக பீப்பிள்ஹெல்த் என்ற ஆரோக்கிய நிறுவனம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. இந்த கருத்து கணிப்பு, ஐ.டி. நிறுவன ஊழியர்கள் குறித்து எடுக்கப் பட்டது. பெங்களூரை சேர்ந்த ஏழு முன்னணி ஐ.டி., நிறுவனங்களை சேர்ந்த 2106 ஊழியர்களிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப் பட்டது. இதன்படி, 93 சதவீத ஊழியர்கள் பொதுவாக சந்தோஷமாக இல்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. பதவி உயர்வு கிடைக்காமல் இருப்பது, ஊதிய உயர்வு, தூங்கும் நேரம், பயண தூரம், தாறுமாறான வேலை நேரம் உள்ளிட்ட பல காரணங்களால் அவர்கள் மனஅழுத்தத்தில் பாதிக்கப் பட்டு இருப்பதாகவும், இதனால் அவர்கள் சோகமாகவே உள்ளனர் என்றும் அந்த கருத்து கணிப்பில் கூறப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர்
Subscribe to:
Posts (Atom)