Saturday, August 1, 2009

கல்வித் தரகர்கள்

அயல்நாடுகளில் வேலைவாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றுவது அல்லது சொன்ன வேலைக்குப் பதிலாக வேறொரு வேலையை குறைந்த சம்பளத்தில் பெற்றுத்தருவது போன்ற மோசடிகள் கேள்விப்பட்டு சலித்துப்போன நிலையில், இப்போது அயல்நாட்டுக் கல்வியில் மோசடி வெளிப்படத் தொடங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் விமானப் பயிற்சி பெறுவதற்காக ரூ.22 லட்சம் (43500 டாலர்கள்) செலுத்தியும்கூட, இந்திய மாணவர்களுக்கு அந்தக் கல்வி நிறுவனங்கள் உறுதிகூறிய 200 மணிநேரப் பயிற்சியை குறிப்பிட்ட காலத்தில் அளிக்கவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் இதுகுறித்து ஆஸ்திரேலிய தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் விமானப் பயிற்சி தரும் தரமான கல்லூரிகள் இருக்கும்போது, இத்தகைய தரமற்ற கல்லூரியை இந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கக் காரணம், கல்வித் தரகர்கள்!

"ஆஸ்திரேலியாவில் 52 வாரங்களில் விமானி ஆகலாம்' என்று விளம்பரங்கள் கொடுத்து, இந்தியாவின் முக்கிய நகரங்களில் முகாமிட்டு, பெற்றோர்களை நம்பவைத்து, மாணவர்களை இத்தகைய தரம் குறைந்த கல்லூரிகளுக்கு ஆள்பிடித்துத் தருகிறார்கள் இந்தக் கல்வித் தரகர்கள். இதற்காக அக்கல்லூரிகளிடம் ஒவ்வொரு மாணவருக்காகவும் "சேவைக் கட்டணம்' பெறுகிறார்கள்.

ஏற்கெனவே, இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் பிரச்னையால் முகம்தொய்ந்து கிடக்கும் ஆஸ்திரேலிய அரசு, இந்தப் பிரச்னை புறப்பட்டவுடன் நடவடிக்கை எடுத்து, தரமற்ற கல்வி நிறுவனங்களை மூடிவிட்டது. இதனால் வெளிநாட்டு மாணவர்கள் 5000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் இந்திய மாணவர்கள். இவர்களுக்கு வேறு கல்லூரிகளில் இடம் பெற்றுத் தரப்படும் அல்லது அவர்கள் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு உறுதி கூறினாலும், இதன் மூலம் வெளிப்படும் ஓர் உண்மை; விமானப் பயிற்சிக் கல்லூரிகள் மட்டுமல்ல, பல்வேறு துறைகளிலும் தரமற்ற கல்லூரிகள் அங்கே செயல்பட்டுள்ளன.

இதேபோன்று அயல்நாட்டில் மருத்துவப் பட்டம் பெறுவது குறித்தும் ஆலோசனை வழங்கவும் நிறைய கல்வித் தரகர்கள் இருக்கிறார்கள். அடுத்ததாக, அயல்நாடுகளில் தரமற்ற மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் பேட்டி, துயரங்கள் வெளியாகக்கூடும்.

அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் நடத்தும் கல்விக் கண்காட்சிகளில் தரமான நிறுவனங்கள் மட்டுமே முன்னிலைப் படுத்தப்படுகின்றன என்பதில் சந்தேகம் இல்லை. அந்தக் கல்லூரிகளில் சேர வேண்டுமானால் அவர்கள் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் அளிக்க வேண்டும். அதற்கு இயலாத நிலைமை ஏற்படும்போது, இப்படியான தரமற்ற, எதற்கும் வளைந்துபோகிற கல்வி நிறுவனங்களைக் கல்வித் தரகர்கள் அறிமுகம் செய்கிறார்கள். அயல்நாட்டுக் கல்வி, அயல்நாட்டில் வேலை என்ற ஆசை கண்களை மறைக்கிறது.

அயல்நாட்டு கல்வியில் மட்டுமல்லாது, உள்நாட்டிலும் இத்தகைய கல்வித் தரகர்கள் ஆண்டுதோறும் கைநிறைய கமிஷன் பெறுகிறார்கள்.

அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் முதல் கட்டம் முடிந்துள்ள நிலையில், இன்னமும் முழு எண்ணிக்கையில் மாணவர்கள் சேராத கல்லூரிகளுக்கும்கூட, நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை திருப்திகரமாக முடிந்துள்ளது என்றால், கல்வித் தரகர்கள் எந்த அளவுக்கு சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்பதைக் காண முடிகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் முதல்கட்ட கலந்தாய்வில் 53,898 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களில் 12,105 பேர் (22 சதவீதம்) கலந்தாய்வுக்கே வரவில்லை. 167 பேர் கலந்துகொண்டும் கல்லூரியைத் தேர்வு செய்யாமல் சென்றனர். இவர்களில் 3 சதவீதம்பேர் அகில இந்திய நுழைவுத் தேர்வில் பங்குகொண்டு இடம் கிடைத்து சேர்ந்திருக்கலாம். மற்றவர்கள் ஏன் இந்த முடிவை மேற்கொண்டனர்? காரணம், கல்வித் தரகர்கள்

""முன்பதிவு செய்துகொண்டால்தான் ஆயிற்று, இல்லையானால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் சீட் கிடைக்காது என்று அச்சுறுத்தி, பாதி நன்கொடையை முன்பணமாக கல்லூரிக்குப் பெற்றோர் செலுத்தும்படி செய்கிறார்கள். கொஞ்சம் தயங்கினால், "உங்கள் குழந்தைக்கு கலந்தாய்வில் இதே கல்லூரியில் சீட் கிடைக்கும் என்றால் அதில் சேர்ந்துகொள்ளுங்கள், இந்தப் பணத்தை வேறு மாணவர் கொடுத்தவுடன் திருப்பித் தந்து விடுவார்கள்' என்று உத்தரவாதம் கொடுப்பார்கள்.

முன்பணம் செலுத்தியவர்கள் கலந்தாய்வுக்கு முதல்நாள் இரவு கணினியில் பார்த்தே அல்லது கலந்தாய்வுக்கு வந்து, அக்கல்லூரியில் இடம் கிடைக்காது என்பது தெரிந்தவுடன், வேறு தரமான கல்லூரியில் இடம் கிடைக்கும் என்றாலும், முன்பணம் செலுத்தியதால் வேறுவழியின்றி அதே கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டிலேயே சேர்கிறார்கள்.

மாணவர்களை மாடு பிடிப்பதுபோல பிடிக்கிற கல்வித் தரகர்களும் கல்வியாளர்களும் தங்கள் விலை மற்றும் கமிஷனை கைகள் மீது துண்டுபோட்டுத் தீர்மானிப்பதில்லை; துண்டுச்சீட்டில் தீர்மானிக்கிறார்கள்.

நன்றி : தினமணி

15 வருடங்களுக்கு மேல் பழைமையான வாகனங்கள் கோல்கட்டாவில் ஓடக்கூடாது

15 வருடங்களுக்கு மேல் பழைமையான வாகனங்கள் இன்று முதல் கோல்கட்டா ரோடுகளில் ஓடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதையும் மீறி கோல்கட்டா ரோடுகளில் ஓடிக்கொண்டிருக்கும் பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் வேலையில் சுமார் 1,500 போலீசார் ஈடுபட்டிருக்கிறார்கள். மேற்கு வங்க அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தை செயல்படுத்தும் தேதியை தள்ளி வைக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டதால், இன்று அங்குள்ள ரோடுகளில் ஓடிக்கொண்டிருக்கும் 15 வருடங்களுக்கு மேல் பழைமையான பஸ், டாக்ஸி மற்றும் சுமார் 80,000 மூன்று சக்கர வாகனங்கள் அகற்றப்படும் என்று தெரிகிறது. பஸ் ஓட்டுபவர்கள் ஏற்கனவே பழைய பஸ்களை ஓட்டுவதில்லை என்று முடிவு செய்து விட்டார்கள். ஆனால் ஆட்டோ மற்றும் மூன்று சக்கர வாகன உரிமையாளர்கள், என்ன நடந்தாலும் பரவாயில்லை. நாங்கள் ஓட்டத்தான் செய்வோம் என்கின்றனர்.
நன்றி : தினமலர்


சீர்பெற்று இயங்குமா நீதித்துறை?

15-வது மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் அறிக்கையில் நீதித்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதி இடம்பெற்றிருந்தது. இதர கட்சிகளும்கூட இந்தப் பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தத் தவறவில்லை. மன்மோகன் சிங் தலைமையிலான தற்போதைய அரசு பதவியேற்ற பின்னர், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் கூட்டுக் கூட்டத்தைத் துவக்கி வைத்து உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், ஆறு மாதங்களில் நீதித்துறை சீர்திருத்தத்திற்கான திசை வழி தீர்மானிக்கப்பட்டு ஒரு காலக்கெடுவுக்கு உள்பட்டு அது செயல்படுத்தப்படும் என்று ஒரு திட்டவட்டமான முடிவையும் அறிவித்திருந்தார். மத்திய அரசின் சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி அண்மையில், இது தொடர்பாக அரசு விரைவில் முடிவெடுத்துச் செயல்படும் என்றும், இதற்கான சட்டமுன் வடிவுகள் அரசின் பரிசீலனையில் உள்ளன என்றும் பேசி வருகிறார்.

இது "சீர்திருத்தங்களின் காலம்'. எனவே நீதித்துறையையும் ஒரு சீர்திருத்தச் செயல்திட்டத்தின் கீழ் உட்படுத்துவது தவிர்க்க இயலாதது. ஆனால், இந்த சீர்திருத்தங்களின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? இவை எதை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும்? என்ற கேள்விகள் ஆட்சியாளர்கள் மற்றும் நீதித்துறையினர் முன் உள்ளனவா என்பது சந்தேகமாகவே உள்ளது.

நீதித்துறை தொடர்பான அண்மைத் தகவல் ஒன்று நம்மை அதிர்ச்சியில் உறைய வைப்பதாக உள்ளது. இந்திய நாட்டின் மக்கள்தொகையில் 91 சதவிகிதம் பேர் நீதிமன்றங்களை அணுகவே தயக்கம் காட்டுகிறார்கள் என்ற செய்திதான் அது. கூடவே இந்தியத் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் நமது நாட்டின் நீதிமன்றங்களில் மூன்றரை கோடி வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன என்றும், புதிதாகப் பதிவாகிற வழக்குகள் ஆண்டொன்றுக்கு 28 சதவிகிதம் என்ற அளவில் அதிகரித்து வருகின்றன என்றும் கூறியுள்ளார். 9 சதவிகித மக்கள் மட்டுமே நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்ட முற்படுகிற கட்டத்திலேயே இந்த நிலைமை என்றால், இன்னும் கூடுதலான மக்கள் பிரிவினர் நீதிமன்றங்களை அணுக முற்பட்டால், நிலைமை என்னவாகும் என்ற மருட்சியும் ஏற்படுகிறது.

ஒரு ஜனநாயக அமைப்பில் ஆட்சியாளர்கள், நிர்வாக இயந்திரம், நீதித்துறை ஆகிய அனைத்துமே மக்களின் நலன் கருதியே இயங்கக் கடமைப்பட்டவை என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். நம் நாட்டின் அரசியல் சட்டம் அதன் முகவுரையிலேயே சமூக - பொருளாதார - அரசியல் நீதி உத்தரவாதம் செய்யப்படும் என்ற வாக்குறுதியை மக்களுக்கு நல்கியிருக்கிறது. 18 வயதை எட்டிய அனைவருக்கும் வாக்குரிமை என்ற அரசியல் உரிமை மட்டுமே மக்களுக்கு அரசியல் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள நீதியை வழங்குவதாகிவிடாது. ஏற்றத்தாழ்வுகளும், சமூக அவலங்களும், ஒடுக்குமுறையும், நீடித்து நிலவுகின்ற இந்திய சமூகம் உண்மையான நீதியை மக்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

இந்தப் பின்புலத்தில் நீதித்துறை இன்று எங்கே நிற்கிறது? எப்படிச் செயல்படுகிறது? யாருக்காக இயங்குகிறது? என்ற கேள்விகளுக்கான பதிலினைத் தேடினால், அது ஏமாற்றம் அளிப்பதாகவே அமைகிறது. "தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி' என்ற சொல்லலங்காரம் நமது காதுகளில் ரீங்காரமிட்டாலும், இன்றைய நீதித்துறை அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதியைக் காலத்தே வழங்குகிற நிலையில் இல்லை. நீதிமன்றங்களை நாடி வழக்குத் தொடருவது என்பது பெருஞ்செலவுகளை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. இலவச சட்ட உதவி என்கிற ஏற்பாடு ஏட்டளவில் நிற்கிறதே தவிர, மக்கள் பயன்பாட்டுக்கு உதவுவதாக இல்லை. நீதித்துறையின் பல்வேறு அடுக்குகள், சிக்கல்கள் மிகுந்த நடைமுறைகள், வழக்குகள் கையாளப்படுகிற விதம் இவையாவுமே சாதாரண மக்களுக்கும், நீதித்துறைக்கும் இடையே ஓர் ஆழமான அகழியைத் தோற்றுவித்துள்ளன.

பொதுவாகவே சுதந்திர இந்தியாவின் அரசாங்கச் செயல்பாடுகள் பிரிட்டிஷ் காலனியாதிக்கக் காலத்து மரபுகளையும், பாணிகளையும் அடியொற்றி அமைந்துள்ளன. அரசு நிர்வாகம், நாடாளுமன்றம், நீதிமன்றங்கள் போன்ற எல்லாவற்றிலும் இதைக் காண முடியும்.

நமது நாட்டுச் சட்டங்களும், நீதிமன்ற நிர்வாகமும் இத்தகைய பாரம்பரியத்தைப் பெற்றிருப்பதானேலேயே அவற்றுக்கும், சாதாரண குடிமக்களுக்கும் இடையே இந்த இடைவெளி ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் மற்ற அங்கங்களைப் போலவே, நீதித்துறையிலும் காலாவதியாகிவிட்ட பழைய நடைமுறைகளைத் தொலைத்துக்கட்டி, இன்றைய காலச்சூழலுக்கேற்ப, சாமானியர்களும் எளிதில் அணுகக்கூடிய முறையில், வெளிப்படையான நடைமுறை மாற்றங்கள் கொண்டு வரப்படுவது இன்றைய தேவை.

நமது நாட்டின் சட்டங்கள் எளிமையாக்கப்படுவதும், அவற்றைச் செயல்படுத்தும் காவல்துறை மற்றும் அரசு நிர்வாகப் பிரிவுகளின் நடவடிக்கைகளில் உரிய மாற்றங்களைக் கொணர்வதும் இன்றியமையாத முதல்படியாகும். இன்றைய சட்டங்கள் மக்களுக்காக உருவாக்கப்பட்டனவா அல்லது வழக்கறிஞர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டனவா என்ற ஐயப்பாடே எழுகிறது. இதைக் களைவது அவசியமாகும்.

நீதித்துறையில் இன்று நிலவுகிற வழக்குகள் தேக்கம், காலதாமதம் ஆகியவற்றை எதிர்கொள்ள ஒரு தொலைநோக்குப் பார்வையுடனான திட்டமிடல், நீதிமன்றக் கிளைகள், நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது, வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தும் வகையிலான ஏற்பாடுகளை மேம்படுத்துதல், கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவது புதிய தொழில்நுணுக்க வளர்ச்சிகளை நீதிமன்ற நிர்வாகத்திற்குப் பொருத்தமான விதத்தில் பயன்படுத்துவது ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நீதித்துறை சீர்திருத்தம் பற்றிய விவாதத்தில் முக்கிய இடம் பெறுவது, நீதிபதிகள் நியமனம் மற்றும் அவர்களது பொறுப்புணர்வு, நேர்மை, கடமையாற்றிடும் பண்புகள் சம்பந்தப்பட்டவையாகும். நீதித்துறையின் ஆரம்ப அடுக்குகளுக்கு நியமன ஏற்பாடு என்பது மாநில அளவிலான பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக நடைபெறுகிறது. ஆனால் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகிய உயரடுக்கு நீதிபதிகளின் நியமனம் இன்று அந்தந்த நீதிமன்றங்களின் நீதிபதிகள் அடங்கிய குழுவின் பரிந்துரை அடிப்படையிலேயே அமைவதற்கான ஒரு நடைமுறை, உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய கிளையின் ஒரு தீர்ப்பின் மூலம் உருவாக்கிவிட்டது. இன்று பதவியில் இருப்பவர்களே, அந்தப் பதவிகளுக்கு அடுத்து வருபவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பார்கள் என்பது முறையான ஏற்பாடு ஆகுமா என்ற கேள்வி எழுவது இயல்பு. அந்தக் குறிப்பிட்ட தீர்ப்புக்கூட 5க்கு 4 என்ற முறையில், நீதிபதிகள் கருத்து முரண்பட்டு ஒரு நூலிழைப் பெரும்பான்மையில் எடுக்கப்பட்ட முடிவாகும். "உலகமயம்' பேசப்படும் இந்தக் காலக்கட்டத்தில் நீதிபதிகள் நியமனம் குறித்த இத்தகைய நடைமுறை வேறு பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள மறுப்பது ஏன் என்பது புரிந்துகொள்ள முடிவதில்லை.

நீதிபதிகள் நியமனம், அவர்களின் இடமாற்றம், பணிநீக்கம், பொறுப்புணர்வுடனான செயல்பாடு குறித்த முடிவுகளை மேற்கொள்ள தேசிய நீதித்துறை ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்; அதன் உறுப்பினர்களாக நீதித்துறை, நிர்வாகத்துறை, நாடாளுமன்றம், வழக்கறிஞர் சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை உடனடியாகப் பரிசீலிக்கப்பட்டு, உரிய அரசியல் சட்டத் திருத்தங்கள் மூலமாகச் செயல்படுத்த வேண்டியது மிக மிக இன்றியமையாததாகும்.

இன்றைய சமூகச் சூழலில் பல்வேறு நிலைகளில் நிலவுகிற ஊழல் நீதித்துறையையும் விட்டு வைக்கவில்லை என்பதற்கான உதாரணங்கள் பல உண்டு. நீதித்துறையை ஊழலுக்கு அப்பாற்பட்டதாகச் செயல்பட வைப்பது ஒரு சவாலாகவே நிற்கிறது. ஊழல், அரசியல் தலையீடுகள், செல்வாக்கு மிக்க வழக்கறிஞர்களின் குறுக்கீடுகள் போன்றவை பரவலாக இல்லாவிட்டாலும், நீதித்துறையின் மாண்பைக் குலைப்பதாகவும், அதன் மீதான மக்களின் நம்பகத் தன்மையை ஊனப்படுத்துவதாகவும் அமைவது கவலையோடு பரிசீலிக்க வேண்டிய ஒன்று.

உச்ச நீதிமன்றம் நீதிபதிகளுக்கான ஒழுக்கக் கோட்பாடு ஒன்றைத் தானாகவே வரையறுத்துக் கொண்டுள்ளது. இது ஒரு நல்ல முன்முயற்சி என்றபோதிலும், இதற்கு சட்ட அடிப்படை ஏதுமில்லை. மேலும் இதன்கீழ் நீதிபதிகள் அவர்களது சொத்து விவரங்களைத் தலைமை நீதிபதிக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும், அது ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒழுக்கக் கோட்பாடுகளை மீறுகிற நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் தலைமை நீதிபதியே ஒரு நடைமுறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் அதில் இடம்பெற்றுள்ளது. இதே உச்ச நீதிமன்றம்தான் தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டிய சொத்து விவரப் படிவத்தை வரையறுத்துத் தந்துள்ளது. அது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்ற நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. இப்போது மத்திய அரசு பரிசீலிப்பதாகச் சொல்லப்படும் சட்டமுன்வடிவிலேயும் நீதிபதிகள் சொத்துக் கணக்கைக் காட்டுவது நீதிமன்ற நிர்வாகத்தின் உள் - ஏற்பாடு என்ற அளவோடு நிறுத்திக் கொள்ளப்படுவதற்கே வகை செய்யப்படுவதாகப் பேசப்படுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டமும் நீதித்துறைக்குப் பொருந்தாது என்று வரம்பு கட்டி நிறுத்தப்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள், அரசு நிர்வாகத்தின் அனைத்து அடுக்குகள், நாடாளுமன்றம் - சட்டமன்றம் உள்ளிட்ட அனைத்தையும் தன் முடிவுக்கு உள்ளடக்குகிற எல்லையற்ற அதிகாரத்தைச் செலுத்துகிற நீதித்துறை, அதன் செயல்பாடுகள் குறித்து யாருக்கும் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பை ஏற்க வேண்டியதில்லை என்ற இன்றைய நிலைமை நீடிப்பது ஆரோக்கியமானதல்ல.

நீதிமன்ற அவமதிப்பு என்பது ஒரு பெரும் குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்றங்கள் நியாயமான விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையாக இருக்க முடியாது. "நீதித்துறையை அவதூறு செய்வது, நீதிமன்றங்களின் மதிப்பைக் குலைக்கும் வகையில் கருத்துத் தெரிவிப்பது' ஆகியவை நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகக் கருதப்படும் என்று தற்போதுள்ள சட்டம் திருத்தப்படுவதும் அவசியமாகும்.

மாநில ஆட்சி மொழிகள் உயர் நீதிமன்ற நிர்வாக மொழியாக அமைய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் கிளை தென்மாநிலம் ஒன்றில் அமைய வேண்டும் என்ற கோரிக்கைகள் இன்றளவும் ஏற்கப்படாத நிலை தொடருவது, பாமர மக்களுக்குப் பயன்படும்விதமாக நீதித்துறையின் செயல்பாடு அமைவதற்கு இடந்தராது. நீதித்துறை சீர்பெற்று விளங்க இந்த அம்சங்களும் கவனத்தோடு பரிசீலிக்கப்பட வேண்டும்.

கட்டுரையாளர் : உ . ரா. வரதராசன்
நன்றி : தினமணி

விமான எரிபொருள் விலை இன்றிரவு முதல் உயர்கிறது

இன்று நள்ளிரவில் இருந்து, விமான எரிபொருளான ஏவியேஷன் டர்பைன் ஃபியூயல் ( ஏ எஃப் டி ) விலை உயர்தப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பதை அடுத்து விமானங்களுக்கான எரிபொருள் விலை 1.6 சதவீதம், அதாவது டில்லியில் கிலோ லிட்டருக்கு ரூ.585 கூட்டப்படுகிறது. இனிமேல் அதன் விலை கிலோ லிட்டருக்கு ரூ.36,923 ஆக இருக்கும் என்று இந்தியன் ஆயில் கார்பரேஷன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் இருக்கும் ஏற்ற இறக்கத்தை பொருத்து, இந்தியாவில் விமான எரிபொருள் விலையும் உயர்த்தப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்யும் அரசு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை கடந்த இரண்டு மாதங்களில் நான்கு தடவைகள் விமான எரிபொருள் விலையை கூட்டியிருக்கின்றன. இருந்தாலும் கடந்த இரு வாரங்களுக்கு முன் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்ததால் விமான எரிபொருள் விலையும் 5.7 சதவீதம் குறைக்கப்பட்டது. மே 1 ம் தேதி அன்று கிலோ லிட்டருக்கு ரூ.31,614.54 ஆக இருந்த விமான எரிபொருள் விலை, நான்கு முறை மாற்றி அமைக்கப்பட்டபின் ஜூன் 1 ம் தேதி அன்று ரூ.38,557.56 ஆக உயர்ந்து விட்டது. ஆனால் ஜூலை 16ம் தேதியன்று அது ரூ.36,338 ஆக குறைக்கப்பட்டது. இப்போது அது ரூ. 36,923 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த விமான எரிபொருள் விலை ஊருக்கு ஊர் மாறுபடும். டில்லியில் ரூ.36,923 ஆக இருக்கும் இது, மும்பையில் ரூ.38,098 ஆகவும், கோல்கட்டாவில் ரூ.45,060 ஆகவும், சென்னையில் ரூ.40,789 ஆகவும் இருக்கிறது. விமானங்களை இயக்க ஆகும் செலவில் 40 சதவீதத்தை எடுத்துக்கொள்ளும் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதால், ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் விமான கம்பெனிகள் மேலும் சிக்கலுக்குள்ளாகும் என்று சொல்லப்படுகிறது.

நன்றி : தினமலர்



தங்கம் விலை தொடர் சரிவு

நேற்று சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து, 10 ஆயிரத்து 944 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 11 ஆயிரத்திற்கு மேல் விற்பனையானது. விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தங்கம் விலை திடீர் சரிவு ஏற்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் 1,369 ரூபாய்க் கும், சவரன் 10 ஆயிரத்து 952 ரூபாய்க்கும் விற்றது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் சவரனுக்கு 250 ரூபாய் வரை குறைந்தது. தொடர்ந்து குறைந்து வந்த ஆபரணத் தங்கம் விலை நேற்று அதிகரித்தது. நேற்று காலை சவரனுக்கு எட்டு ரூபாய் அதிகரித்து, சவரன் 10 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், கிராம் 1,370 ரூபாய்க்கும் விற்றது. மாலை நிலவரப்படி சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து, 10 ஆயிரத்து 944 ரூபாய்க்கும், கிராம் 1,368 ரூபாய்க்கும் விற்பனையானது. ஆபரணத் தங்கம் விலை காலையில் உயர்ந்தும், மாலையில் குறைந்தும் ஆட்டம் காட்டியது.
நன்றி : தினமலர்