Saturday, August 1, 2009

விமான எரிபொருள் விலை இன்றிரவு முதல் உயர்கிறது

இன்று நள்ளிரவில் இருந்து, விமான எரிபொருளான ஏவியேஷன் டர்பைன் ஃபியூயல் ( ஏ எஃப் டி ) விலை உயர்தப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பதை அடுத்து விமானங்களுக்கான எரிபொருள் விலை 1.6 சதவீதம், அதாவது டில்லியில் கிலோ லிட்டருக்கு ரூ.585 கூட்டப்படுகிறது. இனிமேல் அதன் விலை கிலோ லிட்டருக்கு ரூ.36,923 ஆக இருக்கும் என்று இந்தியன் ஆயில் கார்பரேஷன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் இருக்கும் ஏற்ற இறக்கத்தை பொருத்து, இந்தியாவில் விமான எரிபொருள் விலையும் உயர்த்தப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்யும் அரசு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை கடந்த இரண்டு மாதங்களில் நான்கு தடவைகள் விமான எரிபொருள் விலையை கூட்டியிருக்கின்றன. இருந்தாலும் கடந்த இரு வாரங்களுக்கு முன் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்ததால் விமான எரிபொருள் விலையும் 5.7 சதவீதம் குறைக்கப்பட்டது. மே 1 ம் தேதி அன்று கிலோ லிட்டருக்கு ரூ.31,614.54 ஆக இருந்த விமான எரிபொருள் விலை, நான்கு முறை மாற்றி அமைக்கப்பட்டபின் ஜூன் 1 ம் தேதி அன்று ரூ.38,557.56 ஆக உயர்ந்து விட்டது. ஆனால் ஜூலை 16ம் தேதியன்று அது ரூ.36,338 ஆக குறைக்கப்பட்டது. இப்போது அது ரூ. 36,923 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த விமான எரிபொருள் விலை ஊருக்கு ஊர் மாறுபடும். டில்லியில் ரூ.36,923 ஆக இருக்கும் இது, மும்பையில் ரூ.38,098 ஆகவும், கோல்கட்டாவில் ரூ.45,060 ஆகவும், சென்னையில் ரூ.40,789 ஆகவும் இருக்கிறது. விமானங்களை இயக்க ஆகும் செலவில் 40 சதவீதத்தை எடுத்துக்கொள்ளும் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதால், ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் விமான கம்பெனிகள் மேலும் சிக்கலுக்குள்ளாகும் என்று சொல்லப்படுகிறது.

நன்றி : தினமலர்



No comments: