Saturday, August 16, 2008

இன்போசிஸ் ஊழியர்கள் தேர்வு கடந்தாண்டை விட குறைவு


பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், இந்த நிதி ஆண்டில் மட்டும் 25 ஆயிரம் ஊழியர்களை பணியமர்த்த உள்ளது. இது, கடந்தாண்டை விட 30 சதவீதம் குறைவு. இன்போசிஸ் குரூப் தகவல் தொழில்நுட்ப நிறு வனத்தின் மனிதவள துறைக்கான துணை தலைவர் நந்திதா குர்ஜார் கூறியதாவது: எங்கள் நிறுவனத்தில் இந்த நிதி ஆண்டில் புதிதாக 25 ஆயிரம் ஊழியர்களை தேர்வு செய்து பணியமர்த்த உள்ளோம். கடந்தாண்டில் 35 ஆயிரம் பேரை தேர்வு செய்திருந்தோம். சர்வதேச அளவிலான பொருளாதார சரிவு, உற்பத்தி திறன் அதிகரிப்பு போன்றவையே, தற்போது குறைவான ஊழியர்களை தேர்வு செய்வதற்கு முக்கிய காரணம். இந்த ஆண்டு தேர்வு செய்யப்படுவோரில், 60 சதவீதம் பேர் வளாகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால், மேலும் அதிக அளவு ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவர். நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்து ஊழியர் களை தேர்வு செய்யும் பணி முழு வீச்சில் துவங்கும்.
நன்றி : தினமலர்


கருப்பு பணம், போலி நோட்டு புழக்கம் தடுத்தால் போதும்: பணவீக்கம் குறைய நிபுணர்கள் யோசனை


'பணவீக்க சதவீதம் அதிகரிக்க காரணமானவை இரண்டு தான். ஒன்று, கருப்புப்பணம்; அடுத்தது, கள்ளநோட்டு புழக்கம். இரண்டையும் ஒழித்துக்கட்டினாலே, காய் கறி விலை முதல் கார் விலை வரை குறைய ஆரம்பித்து விடும்!' பிரபல பொருளாதார நிபுணர்கள் இப்படி கருத்து வெளியிட்டுள்ளனர். பணவீக்கம் என்றால் என்ன என்று கூட சாமான்ய மக்களுக்கு முன்பெல்லாம் தெரியாது. ஆனால், காய்கறி விலை ஏறக்கூட பணவீக்கம் காரணம் என்று புரிந்து கொண்டு விட்டனர். பணவீக்கம் எப்போது தான் குறையுமோ என்று அவர்கள் ஏங்கித் தவிக்கின்றனர். பணவீக்கத்தை கட்டுப்படுத்தினால் தான் பொருளாதார நிலை சீரடையும். பொருளாதார நிலை சீரடைந்தால் தான் உற்பத்தி பெருகி, மக்களுக்கு எல்லா பொருட்களும் தாராளமாக கிடைக்கும். விலையும் குறையும்.
இந்தியாவை பொறுத்தவரை, பணவீக்கத்துக்கு, கருப்புப்பணம், கள்ள நோட்டு புழக்கம் ஆகிய இரண்டு முக்கிய விஷயங்கள் தான் காரணமாக உள்ளன என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அவர்கள் கூறியிருப்பதாவது: மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கச் செய்வது கருப்புப்பணமும், கள்ளநோட்டு புழக்கமும் தான். வெளியில் தெரியாவிட்டாலும், இந்த இரண்டு பேய்களின் ஆட்டத்தால் தான் பணவீக்க பூதம் தலைவிரித்தாடுகிறது. இந்த பூதத்தை கட்டுப்படுத்த வேண்டுமானால், இந்த இரண்டு பேய்களின் ஆட்டத்தை கட்டுப்படுத்தினால் போதும். இதற்கு, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஒருங்கிணைந்து அதிரடியாக சில நடவடிக்கைகளை தைரியமாக எடுக்க வேண்டும். அப்படி செய்தால், அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் குறைந்து, விலைவாசி இறக்கம் ஆரம்பித்துவிடும். நம் நாட்டில் இன்னமும் கருப்புப்பணம் தலைவிரித்தாடுகிறது. அதுபோல, கள்ளப்பணமும் அதிக அளவில் புழக்கம் ஏற்பட்டு வருகிறது. கருப்புப்பணத்தை வெளியே கொண்டு வரவும், நிதி ஒழுக்கத்தை சீராக்கவும் அரசும், ரிசர்வ் வங்கியும் ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும்.
எந்த ஒரு பணப்பரிமாற்றும் 5,000 ரூபாய்க்கு மேல் இருக்குமானால், அது வங்கி மூலம் தான் நடக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அப்படி செய்தால், வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு மூலம் பணப்பரிமாற்றம் நடக்கும். இப்படி பண பரிமாற்றம் நடக்கும் போது, மத்திய அரசுக்கு வர வேண்டிய வருமான வரியை டி.டி.எஸ்.,மூலம் பிடித்துக்கொள்ளலாம். இது போல, இன்னொரு அதிரடி நடவடிக்கையை மத்திய அரசு அறிவிக்க வேண் டும். 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை தடை செய்ய வேண்டும். இந்த ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்தி எத்தனை சேமிப்பு கணக்குகளை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளவும் அனுமதி அளிக்க வேண்டும். இப்படி செய்தால் டி.டி.எஸ்.,பிடித்தம் செய்ய முடியும். இது மட்டுமின்றி, கள்ளநோட்டு புழக்கத்தை தடுக்க, மத்திய அரசு பாதுகாப்பு அமைப்புகள் முழு வீச்சில் இறங்க வேண்டும். ரிசர்வ் வங்கியும், அரசு பாதுகாப்பு அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட் டால், இதையும் தடுக்க முடியும். இந்த இரு வழிகளில் பலன் கிடைக்கும் போது, பொருளாதார நிலை சீரடையும். அப்போது பணவீக்கம் தானாகவே குறைய ஆரம்பிக்கும். இவ்வாறு நிபுணர்கள் கூறியுள்ளனர்.
நன்றி : தினமலர்