Friday, November 28, 2008

சிறிது உயர்ந்து முடிந்த பங்கு சந்தை

தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்களால் நேற்று மூடப்பட்டிருந்த பங்கு சந்தையில் இன்று வர்த்தகம் நடந்தது. நவம்பர் மாதத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, வர்த்தகம் ஒன்றும் பிரமாதமாக நடக்கவில்லை. அதற்கு காரணம் நேற்றைக்கு முந்தின நாள் இரவில் துவங்கிய தீவிரவாதிகளின் தாக்குதல் இன்று மாலையில் கூட முடிவுக்கு வராமல் இருந்ததுதான். இன்றைய வர்த்தகத்தில் அதிகம் பங்கேற்றது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் மற்றும் ஓ.என்.ஜி.சி.,பங்குகள்தான். டெக்னாலஜி, தனியார் வங்கிகள், பெல், பார்தி ஏர்டெல், பங்குகளும் கொஞ்சம் வர்த்தகத்தில் கலந்து கொண்டன. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 66 புள்ளிகள் ( 0.73 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 9,092.72 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 2.85 புள்ளிகள் ( 0.10 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 2,755.10 புள்ளிகளில் முடிந்தது. நவம்பர் மாதத்திற்கான வர்த்தகம் நேற்றே முடிந்திருக்க வேண்டும். ஆனால் தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்களால் நேற்று பங்கு சந்தை மூடப்பட்டிருந்ததால் இன்று தான் நவம்பர் வர்த்தகம் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


பணவீக்கம் மேலும் குறைந்தது

நவம்பர் 15ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 8.84 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 8.90 சதவீதமாக இருந்தது. மெட்டல், பழங்கள், சில உற்பத்தி பொருட்கள், இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய், ரப்பர் போன்றவைகளில் விலை இந்த வாரத்தில் குறைந்திருக்கிறது. மொத்த விற்பனை விலைப்பட்டியல் அடிப்படையில் கணக்கிடப்படும் இந்தியாவின் பணவீக்க விகிதம், கடந்த வருடத்தில் இதே காலகட்டத்தில் 3.35 சதவீதமாகத்தான் இருந்தது. கடந்த அக்டோபரில் இருந்து ரிசர்வ் வங்கி, பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் ரூ.2,75,000 கோடியை புழக்கத்தில் விட்டிருக்கிறது. மேலும் வங்கிகளுக்கான சி.ஆர்.ஆர்.மற்றும் ரிபோ ரேட்டையும் குறைத்திருக்கிறது. இதன் காரணமாக பணவீக்கம் குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


ஜப்பானில் இருந்து வெளியேறுகிறது நோக்கியா

உலக அளவில் அதிகம் செல்போன் விற்பனை செய்யும் நிறுவனமான பின்லாந்தின் நோக்கியா, இனிமேல் ஜப்பானில் செல்போன் விற்கப்போவதில்லை என்று செய்திருக்கிறது. அவர்களின் அதிநவீன மாடலான வெர்சு வை மட்டும் அங்கு விற்பனை செய்யலாம் என்றும் மற்ற எந்தவொரு மாடலையும் அங்கு விற்க வேண்டாம் என்றும் முடிவு செய்திருக்கிறார்கள். காரணம் என்னவென்றால், உலக அளவில் செல்போன் விற்பனையில் 40 சதவீத மார்க்கெட் ஷேரை நோக்கியா வைத்திருந்தாலும், ஜப்பானிலோ அது ஒரு சதவீதத்திற்கும் குறைவாகத்தான் இருக்கிறது. ஜப்பானிலேயே பல நிறுவனங்கள், புதிய புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி மார்க்கெட்டை பிடித்து வைத்திருப்பதால், அவர்களுடன் போட்டி போட முடியாமல் நோக்கியா அங்கிருந்து வெளியேறுகிறது. பொருளாதார நெருக்கடி இருந்து வரும் இந்த வேளையில், நாங்கள், விற்காத ஒரு சந்தையில் மேலும் மேலும் அங்கு எங்களது தயாரிப்புகளுக்கான எக்கசக்கமான பணத்தை செலவு செய்ய விரும்பவில்லை என்று நோக்கியாவின் எக்ஸிகூடிவ் வைஸ் பிரசிடென்ட் டிமோ இகமோடிலா தெரிவித்தார். ஆனால் விர்சு மாடலை மட்டும் நாங்கள் ஜப்பான் சந்தையில் வைத்திருக்க விரும்புகிறோம் என்றார் அவர்.
நன்றி : தினமலர்


டீசல் சப்ளை செய்ய ஐ.ஓ.சி., மறுப்பு : அரசு விரைவு பஸ்கள் திடீர் நிறுத்தம்

டீசல் பணம் செலுத்தாததால் தமிழகத்தில் பல இடங்களில் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் நேற்று முதல் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இப்போக்குவரத்துக்கு 14 நகரங்களில் டெப்போக்கள் உள்ளன. அரசு விரைவு பஸ்களுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(ஐ.ஓ.சி.,) மூலம் டீசல் சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக விரைவு பஸ் டெப்போக்களால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு ஒருமுறை பணம் பட்டுவாடா செய்யப்படும்.
மதுரையில் பல நாட்களாக டீசலுக்கான தொகை சுமார் ஒரு கோடி ரூபாயை விரைவு போக்குவரத்துக் கழக பஸ் டெப்போ நிர்வாகம் செலுத்தவில்லை. தமிழகம் முழுவதும் 5 கோடிக்கு மேல் பாக்கி உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்ததால் தொடர்ந்து டீசல் தர ஐ.ஓ.சி., மறுத்து விட்டது. எனவே விரைவு போக்குவரத்துக் கழகத்தால் அனைத்து பஸ்களையும் இயக்க முடியவில்லை. பாதியளவு பஸ்களை ரத்து செய்துள்ளது. நிறுத்தப்பட்ட பஸ்கள், சாதாரண கட்டண பஸ்கள் என பல பஸ்களில் இருந்து டீசலை எடுத்து, வெளிமாநிலம் செல்லும் பஸ்களுக்கு நேற்று சப்ளை செய்துள்ளனர். மழை நேரத்தில் பயணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி போன்ற நகரங்களில் இருந்து வரும் பஸ்களில் சில சீட்களை காலியாக வைத்திருக்கும்படி தெரிவித்து மதுரை பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த 'திடீர் நெருக்கடி' நிலையால் தமிழகம் முழுவதும் 40 சதவீத பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நன்றி :தினமலர்