Friday, April 17, 2009

ஆண்டு கால பகை விலகுமா ? அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த கியூபா அதிபர் தயார்

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு மிக அருகின் இருக்கும் சின்னஞ்சிறு நாடு கியூபா. கம்யூனிஷ கொள்கையை விட்டு ரஷ்யா, சீனா போன்ற நாடுகளே விலகிக்கொண்ட போதும்கூட, கியூபா தொடர்ந்து அதிலேயே ஊறியிருந்த நாடு. இந்நிலையில், அதன் தலைவராக இருந்த ஃபிடல் காஸ்ட்ரோ உடல் நலமின்றி இருந்ததை அடுத்து கடந்த வருடத்தில், அவரிடமிருந்து ஆட்சியை கைப்பற்றிய அவரது தம்பி ராவுல் காஸ்ட்ரோ, கொஞ்சம் கொஞ்சமாக, இரும்பு கோட்டையாக இருந்த கியூபாவை மாற்றி வருகிறார். அதன் தொடர்ச்சியாக இப்போது அதன் பரம எதிரி நாடான அமெரிக்காவுடன் எந்த விஷயம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அறிவித்திருக்கிறார். அது மனித உரிமையை பற்றியதாக இருந்தாலும் சரி, அரசியல் கைதிகளின் நிலை குறித்ததாக இருந்தாலும் சரி, பத்திரிக்கைகளின் சுதந்திரம் பற்றியதாக இருந்தாலும் சரி, எந்த விஷயமானாலும் வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தை நடந்த தயாராக இருக்கிறோம் என்றார் ராவுல். சமீபத்தில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அமெரிக்காவில் இருக்கும் கியூபா நாட்டினருக்காக சில சலுகைகளை அறிவித்தார். அதன்படி, அவர்கள் எப்போது வேண்டுமானாலும் அவர்களது உறவினர்களை பார்ப்பதற்காக கியூபா சென்று வரலாம் என்றும், அவர்களுக்கு அமெரிக்காவில் சம்பாதித்த பணத்தை அனுப்பலாம் என்றும் சலுகை அறிவித்திருந்தார். மேலும் கியூபா மக்களுக்காக நான் செய்ய வேண்டியதை செய்து விட்டேன். இனிமேல் கியூபா அரசு தான், அமெரிக்கா - கியூபா நாடுகளுக்கிடையே நல்லுரவை மேம்படுத்த அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டும் என்றும் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு பிறகு தான் கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோ அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அறிவித்திருக்கிறார். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த கியூபா முன்வந்திருப்பதை அடுத்து, கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் கியூபா இடையே நிலவி வரும் பகைமை விலகி நல்லுரவு மலருமா என்று ஆவலுடன் அரசியல் வல்லுநர்கள் காத்திருக்கிறார்கள்.
நன்றி : தினமலர்


எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் ஈட்டிய கூகிள்

இன்டர்நெட் சர்ச் இஞ்சினான கூகிள், எதிர்பார்த்ததை விட கூடுதலாக லாபம் சம்பாதித்திருக்கிறது. இந்த வருட முதல் மூன்று மாத காலத்தில் அது 1.42 பில்லியன் டாலர் லாபம் ஈட்டியிருக்கிறது. இது, கடந்த வருடம் இதே காலகட்டத்தில் அது ஈட்டிய லாபமான 1.31 பில்லியன் டாலரை விட 9 சதவீதம் அதிகம். அதன் மொத்த வருவாயும் கடந்த வருடத்தை விட 6 சதவீதம் அதிகரித்து 5.51 பில்லியன் டாலர் கிடைத்திருக்கிறது. அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், அங்கு விளம்பரங்களுக்காக செலவு செய்வது குறைந்து வந்தாலும், கூகிள் நிறுவனம் இந்தளவுக்கு லாபம் ஈட்டும் என்று யாரும் எதிர்பார்க்க வில்லை. இது குறித்து கூகிளின் தலைமை செயல் அதிகாரி எரிக் ஸ்மித் கருத்து தெரிவிக்கையில், அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து கொண்டிருந்தாலும் கூகிள், நல்ல ரிசல்ட்டை கொண்டு வந்திருக்கிறது என்றார்.
நன்றி : தினமலர்


இந்தியாவில் பெட்ரோலிய உபயோகம் 6.9 சதவீதம் அதிகரித்திருக்கிறது

நலிவடைந்திருந்த இந்திய பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து வருவது தெரிகிறது. முதலில் ஸ்டீல், அடுத்ததாக சிமென்ட்டின் உபயோகம் அதிகரித்தது. இப்போது பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடும் அதிகரித்திருக்கிறது. இது, இந்திய பொருளாதாரம் வலுவடைந்து வருவதை காட்டுவதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். கடந்த ஜனவரியில் 3.4 சதவீதமும், பிப்ரவரி மாதத்தில் 2.5 சதவீதமும் அதிகரித்திருந்த பெட்ரோலிய உபயோகம், மார்ச் மாதத்தில் 6.9 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இந்திய தொழில் துறையும் பொருளாதாரமும் நலிவடைந்து வரும் நிலையில் பெட்ரோலிய உபயோகம் அதிகரித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ( 2008 ஏப்ரல் - பிப்ரவரியில் 8.8 சதவீதமாக இருந்த இந்திய தொழில் வளர்ச்சி, 2009 ஏப்ரல் - பிப்ரவரியில் 2.8 சதவீதமாக குறைந்திருந்தது.) மார்ச் மாதத்திற்கான வளர்ச்சி விகிதம் இன்னும் தயாராகவில்லை என்றாலும், தொழில் வாரியாக கணக்கிட்டால், ஸ்டீல் மற்றும் சிமென்ட் துறை மார்ச் மாதத்தில் வளர்ச்சி அடைந்திருப்பதாக தெரிகிறது. மார்ச் மாதத்தில் விவசாய உற்பத்தி அதிகரித்திருப்பதை அடுத்து, சரக்கு போக்குவரத்தும் அதிகரித்திருக்கிறது. மேலும் ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடக்க இருப்பதால் இந்த இரு மாதங்களிலும் பெட்ரோல், டீசல் விற்பனை அதிகமாக இருக்கும் என்கிறார் இந்தியன் ஆயில் கார்பரேஷனின் இயக்குநர் ( மார்க்கெட்டிங் ) தாகா.
நன்றி : தினமலர்


லேசான முன்னேற்றத்துடன் முடிந்தது பங்கு சந்தை

இன்றைய வர்த்தகத்தின் போது 3 சதவீதம் வரை உயர்ந்திருந்த பங்கு சந்தை, பின்னர் வர்த்தக முடிவில் லேசான ஏற்றத்துடன் முடிந்து விட்டது. பகல் நேர வர்த்தகத்தின் போது, பேங்கிங், கேப்பிட்டல் குட்ஸ், பிரைவேட் பவர் கம்பெனிகள், ஓ.என்.ஜி.சி., இன்போசிஸ், பார்தி ஏர்டெல், யூனிடெக் ஆகிய நிறுவன பங்குகள் உயர்ந்திருந்த தால் சந்தை மேலே சென்றது. இருந்தாலும் மெட்டல், ஆட்டோ, பார்மா, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், என்.டி.பி.சி., ஐ.டி.சி, டி.எல்.எப்., விப்ரோ, ஏ.சி.சி.,ஆகிய நிறுவன பங்குகள் அதிக அளவில் விற்கப்பட்டதால் உயர்ந்திருந்த புள்ளிகள் இறங்கி விட்டன. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 11,339.47 புள்ளிகள் வரை ( 2.8 சதவீதம் ) சென்று, பின்னர் வர்த்தக முடிவில் 75.69 புள்ளிகள் ( 0.69 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 11,023.09 புள்ளிகளில் முடிந்து விட்டது. அதே போல் தேசிய பங்கு சந்தையிலும் பகல் நேர வர்த்தகத்தின் போது நிப்டி 3,489.85 புள்ளிகள் வரை ( 3.02 சதவீதம் ) சென்று, பின்னர் வர்த்தக முடிவில் 14.90 புள்ளிகள் ( 0.44 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 3,384.40 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


ஐசிஐசிஐ பேங்கில் இருந்து வெளியேறும் உயர்மட்ட அதிகாரிகள்

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ பேங்க், கூடிய விரைவில், அதன் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மட்டத்தில் கடும் ஆட்டத்தை காண இருக்கிறது என்கிறார்கள். அதன் முக்கிய இரு துறைகளின் தலைவர்கள் அங்கிருந்து வெளியேற இருக்கிறார்கள் என்கிறார்கள். ஐசிஐசிஐ பேங்க்கின் பிரைவேட் ஈக்வட்டி துறை தலைவராக இருக்கும் ரேணுகா ராம்நாத் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் துறையின் தலைவராக இருக்கும் ஷிகா ஷர்மா ஆகியோர் விரைவில் தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுக்க இருப்பதாக சொல்கிறார்கள். ஏப்ரல் 20 ம் தேதி நடக்க இருக்கும் ஐசிஐசிஐ வங்கியின் போர்டு மீட்டிங்கில் ரேணுகா ராம்நாத், ராஜினாமா கடிதத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிஐசிஐ பேங்கின் சி.இ.ஓ. மற்றும் மேலாண் இயக்குனராக, மே ஒன்றாம் தேதி சந்தா கோச்சர் பதவியேற்றதையடுத்து, இவர்கள் இருவரும் பதவி விலக முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. கே.வி.காமத்திற்கு பதிலாக சந்தா கோச்சர் தான் அடுத்த சி.இ.ஓ.மற்றும் மேலாண் இயக்குனரா நியமிக்கப்படுவார் என்று கடந்த டிசம்பர் 2008ல் அறிவிக்கப்பட்டபோதே பல உயர் அதிகாரிகள் பதவி விலகுவார்கள் என்று சொல்லப்பட்டது.
நன்றி ; தினமலர்


செலவோ அதிகம் ; வரவோ குறைவு : இந்தியாவை விட்டு வெளியேறும் வெளிநாட்டு விமான கம்பெனிகள்

சமீப காலமாக இந்தியாவில் விமானங்களை இயக்க ஆகும் செலவு அதிகமாகிறது. ஆனால் வருமானமோ மிக குறைவாகத்தான் வருகிறது என்று பல முன்னணி சர்வதேச விமான கம்பெனிகள் அவர்களது இந்திய சேவையை நிறுத்திக்கொண்டன. அல்லது குறைத்துக்கொண்டன. இந்தியாவில் விமானங்களை இயக்கும் போது குறைந்த அளவே மார்ஜின் ( லாபம் ) கிடைக்கிறது என்று பிரபல சர்வதேச விமான கம்பெனிகளான விர்ஜின் அட்லாண்டிக், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஆஸ்டிரியன் ஏர்லைன்ஸ், டெல்டா, கே எல் எம், சிரியன் ஏர்லைன்ஸ், ஏரோஃபிளோட், ஆல் நிப்பான் ஏர்வேஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், லூப்தான்ஸா, மற்றும் ஃபின்ஏர் ஆகியவை கடந்த ஆறு மாதங்களில் 100 க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ்களை கேன்சல் செய்திருக்கிறது. சர்வதேச அளவில் ஏர்போர்ட் கட்டணம் குறைவாக இருக்கும்போது இந்தியாவில் மட்டும் அதிகமாக இருப்பது, சர்வதேச அளவிலும் இந்தியாவிலும், விமானங்களுக்கான எரிபொருள் விலையில் அதிக வித்தியாசம் இருப்பது, டிக்கெட்களை விற்க மாட்டோம் என்று அடிக்கடி டிராவல் ஏஜென்ட்கள் மிரட்டுவது, பயணிகளின் எண்ணிக்கையில் 20 சதவீதம் வரை குறைந்திருப்பது போன்ற காரணங்களால் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்து விடுகிறார்கள். மற்ற நாடுகளில் விமான கம்பெனிகளுக்கு 10 முதல் 20 சதவீதம் வரை மார்ஜின் ( லாபம் ) கிடைத்துக் கொண்டிருக்கும் போது இந்தியாவில் மட்டும் அவர்களுக்கு சிங்கிள் டிஜிட்டில் மட்டுமே மார்ஜின் கிடைக்கிறது. இதனால் இந்திய பயணிகளை அதிக அளவில் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு ஏற்றிச் செல்லும் ஐரோப்பிய விமான கம்பெனிகள் அதிகமாக நஷ்டமடைகின்றன என்கிறது சென்டர் ஃபார் ஏசியா பசிபிக் ஏவியேஷன் என்ற அமைப்பு. இந்தியாவில் எங்களுக்கு குறைந்த அளவே மார்ஜின் கிடைப்பதால் எங்களால் இங்கு விமான சேவையை தொடர முடியவில்லை என்கிறார் கே எல் எம் நிறுவனத்தின் ஏசியா பசிபிக் துறையின் சீனியர் வைஸ் பிரசிடென்ட் மார்னிக் புருட்டமா. எல்லா நாடுகளிலும் விமான நிலைய கட்டணத்தை குறைத்துக்கொண்டிருக் கிறார்கள். சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் கொரியா வில் சமீபத்தில் விமான நிலைய கட்டணத்தை 10 முதல் 50 சதவீதம் வரை குறைந்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில், கடந்த சில மாதங்களில் கட்டணத்தை 9 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தியிருக்கிறார்கள் என்கிறார் அவர். விமான நிலைய கட்டணம் அதிகம் என்பதால், கே எல் எம் நிறுவனம், ஐதராபாத்தில் இருந்து இயக்கிக்கொண்டிருந்த விமான சேவையை நிறுத்திக்கொண்டது. அதன் பார்ட்னர் நிறுவனமான ஏர் பிரான்ஸ் சென்னையில் இருந்து விலகிக்கொண்டது. இந்தியாவுக்கு 55 விமானங்களை இயக்கிக்கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதை 45 ஆக குறைத்துக்கொண்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


மாதம் குறைந்தது ரூ.100 முதலீடு செய்யும் எஸ்.ஐ.பி.திட்டம் : ஸ்டேட் பேங்க் அறிமுகப்படுத்துகிறது

சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்று சொல்லப்படும் எஸ்.ஐ.பி., திட்டத்தில், மாதம் குறைந்தது ரூ.100 செலுத்தக்கூடிய புதிய எஸ்.ஐ.பி., திட்டம் ஒன்றை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்துகிறது. இப்போது ஒரு எஸ்.ஐ.பி.திட்டத்தில் சேர வேண்டும் என்றால், குறைந்தது ரூ.500 செலுத்த வேண்டும் என்று இருக்கும் விதிமுறையை தளர்த்தி, மாற்றி குறைந்தது ரூ.100 கூட கட்டினால் போதும் என்று அது, புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. குறைந்த வருவாய் உள்ள ரூரல் மற்றும் செமி அர்பன் ஏரியா மக்களுக்காக அறிமுகப்படுத்தும் இந்த திட்டத்திற்கு ' எஸ்.பி.ஐ.சோட்டா எஸ்.ஐ.பி. ' என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஏற்கனவே இருக்கும் எஸ்.ஐ.பி.திட்டங்களில் சேருபவர்கள் பான்கார்டு வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. புதிதாக அறிமுகம் செய்யும் சோட்டா எஸ்.ஐ.பி. பிளானில் சேருபவர் களுக்கு பான் கார்டு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று அறிவிக்க கோரி, மத்திய அரசிடம் ஸ்டேட் பேங்க் அனுமதி கேட்டிருக்கிறது. அவ்வாறு பான்கார்டு தேவையில்லை என்ற அனுமதியை மத்திய அரசு அளித்து விட்டால், இந்த திட்டத்தில் ஒரு வருடத்தில் 10 லட்சம் வரை முதலீட்டாளர்கள் சேருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் பாத் தெரிவித்தார். இந்த திட்டத்தில் சேருபவர்கள் குறைந்தது ஐந்து வருடங்களுக்கு தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும் என்ற ' லாக் இன் பீரியட் ' இருக்கிறது.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று உயர்ந்திருக்கிறது. நியுயார்க் சந்தையில் அமெரிக்காவின் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை ( மே டெலிவரிக்கானது ) பேரலுக்கு 97 சென்ட் உயர்ந்து 50.22 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை ( ஜூன் டெலிவரிக்கானது ) 89 சென்ட் உயர்ந்து 53.33 டாலராக இருக்கிறது. எதிர்கால உபயோகத்திற்காக அமெரிக்கா சேர்த்து வைக்கும் கச்சா எண்ணெய்யின் அளவு, எதிர்பார்த்ததையும் விட அதிகமாக இருக்கிறது. அதையும் மீறி, கச்சா எண்ணெய் விலை இன்று உயர்ந்திருக்கிறது. கடந்த செப்டம்பர் 1990 க்குப்பின் இப்போதுதான் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் சேமிப்பு 366.7 மில்லியன் பேரல்களாகி இருக்கிறது. இது கடந்த வருடம் இருந்த சேமிப்பு அளவைக்காட்டிலும் 16.5 சதவீதம் அதிகம்.
நன்றி : தினமலர்


இனிமேல் ரிலையன்ஸ், நேரடியாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை செய்யும்

இதுவரை ஏற்றுமதிக்காக மட்டுமே எண்ணெய் சுத்திகரிப்பு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஜாம்நகர் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், இனிமேல் ஏற்றுமதியை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குள்ளும் பெட்ரோல் மற்றும் டீசலை விற்றுக்கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டிருக்கிறது. எனவே தற்போது பெரும்பாலும் மூடிய நிலையில் இருக்கும் 1,432 ரிலையன்ஸ் பெட்ரோல் பம்ப்கள் மூலமாக ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை செய்யும். முற்றிலும் ஏற்றுமதிக்காக மட்டும், வருடத்திற்கு 33 மில்லியன் டன் எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்வதற்காக அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதி இந்த வார இறுதிக்குள் முடிகிறது. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஜூலை 1999 ல் துவக்கப்பட்ட ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் ரிஃபைனரி, ஏப்ரல் 16 2007 இலிருந்து முற்றிலும் ஏற்றுமதிக்கான ரிஃபைனரியாக மாற்றப்பட்டது. அதன் பெயர் ஜே - 1 என்று அழைக்கப்படுகிறது. அதன் பின்னர் டிசம்பர் 2008ல் அதற்கு பக்கத்திலேயே இன்னொரு ரிஃபைனரி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் துணை நிறுவனமான ரிலைன்ஸ் பெட்ரோலியத்தால் துவக்கப்பட்டது. அதுவும் முற்றிலும் ஏற்றுமதிக்காக துவங்கப்பட்டதுதான். இந்த ரிஃபைனரியின் பெயர் ஜே - 2. இப்போது இங்கு பெட்ரோல் மற்றும் டீசலை விற்க அனுமதித்திருப்பது குறித்து ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தபோது, எங்களது ஜே - 1 ரிஃபைனரியில் தயாராகும் எரிபொருள் இனிமேலும் பெரும்பாலும் ஏற்றுமதிதான் செய்யப்படும். இருந்தாலும் அங்கு தயாராகும் மீதி பெட்ரோல் மற்றும் டீசல், உள்நாட்டு சந்தையில் விற்கப்படும். ஜே - 1 ல் தயாராகும் 2.5 - 3 மில்லியன் டன் டீசலை நாங்கள் இந்திய பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிண்டுஸ்டான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு விற்போம். அது, அவர்களுக்கு 2009 - 10ல் ஏற்படப்போகும் பற்றாக்குறையை போக்க வசதியாக இருக்கும். மேலும் நாங்கள் மூடியிருந்த 1,432 பெட்ரோல் பம்ப்களை மீண்டும் திறந்து அதன் மூலமாகவும் பெட்ரோல் மற்றும் டீசலை விற்போம் என்றார்.
நன்றி : தினமலர்