Friday, April 17, 2009

ஆண்டு கால பகை விலகுமா ? அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த கியூபா அதிபர் தயார்

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு மிக அருகின் இருக்கும் சின்னஞ்சிறு நாடு கியூபா. கம்யூனிஷ கொள்கையை விட்டு ரஷ்யா, சீனா போன்ற நாடுகளே விலகிக்கொண்ட போதும்கூட, கியூபா தொடர்ந்து அதிலேயே ஊறியிருந்த நாடு. இந்நிலையில், அதன் தலைவராக இருந்த ஃபிடல் காஸ்ட்ரோ உடல் நலமின்றி இருந்ததை அடுத்து கடந்த வருடத்தில், அவரிடமிருந்து ஆட்சியை கைப்பற்றிய அவரது தம்பி ராவுல் காஸ்ட்ரோ, கொஞ்சம் கொஞ்சமாக, இரும்பு கோட்டையாக இருந்த கியூபாவை மாற்றி வருகிறார். அதன் தொடர்ச்சியாக இப்போது அதன் பரம எதிரி நாடான அமெரிக்காவுடன் எந்த விஷயம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அறிவித்திருக்கிறார். அது மனித உரிமையை பற்றியதாக இருந்தாலும் சரி, அரசியல் கைதிகளின் நிலை குறித்ததாக இருந்தாலும் சரி, பத்திரிக்கைகளின் சுதந்திரம் பற்றியதாக இருந்தாலும் சரி, எந்த விஷயமானாலும் வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தை நடந்த தயாராக இருக்கிறோம் என்றார் ராவுல். சமீபத்தில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அமெரிக்காவில் இருக்கும் கியூபா நாட்டினருக்காக சில சலுகைகளை அறிவித்தார். அதன்படி, அவர்கள் எப்போது வேண்டுமானாலும் அவர்களது உறவினர்களை பார்ப்பதற்காக கியூபா சென்று வரலாம் என்றும், அவர்களுக்கு அமெரிக்காவில் சம்பாதித்த பணத்தை அனுப்பலாம் என்றும் சலுகை அறிவித்திருந்தார். மேலும் கியூபா மக்களுக்காக நான் செய்ய வேண்டியதை செய்து விட்டேன். இனிமேல் கியூபா அரசு தான், அமெரிக்கா - கியூபா நாடுகளுக்கிடையே நல்லுரவை மேம்படுத்த அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டும் என்றும் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு பிறகு தான் கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோ அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அறிவித்திருக்கிறார். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த கியூபா முன்வந்திருப்பதை அடுத்து, கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் கியூபா இடையே நிலவி வரும் பகைமை விலகி நல்லுரவு மலருமா என்று ஆவலுடன் அரசியல் வல்லுநர்கள் காத்திருக்கிறார்கள்.
நன்றி : தினமலர்


No comments: