
இதுவரை ஏற்றுமதிக்காக மட்டுமே எண்ணெய் சுத்திகரிப்பு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஜாம்நகர் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், இனிமேல் ஏற்றுமதியை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குள்ளும் பெட்ரோல் மற்றும் டீசலை விற்றுக்கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டிருக்கிறது. எனவே தற்போது பெரும்பாலும் மூடிய நிலையில் இருக்கும் 1,432 ரிலையன்ஸ் பெட்ரோல் பம்ப்கள் மூலமாக ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை செய்யும். முற்றிலும் ஏற்றுமதிக்காக மட்டும், வருடத்திற்கு 33 மில்லியன் டன் எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்வதற்காக அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதி இந்த வார இறுதிக்குள் முடிகிறது. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஜூலை 1999 ல் துவக்கப்பட்ட ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் ரிஃபைனரி, ஏப்ரல் 16 2007 இலிருந்து முற்றிலும் ஏற்றுமதிக்கான ரிஃபைனரியாக மாற்றப்பட்டது. அதன் பெயர் ஜே - 1 என்று அழைக்கப்படுகிறது. அதன் பின்னர் டிசம்பர் 2008ல் அதற்கு பக்கத்திலேயே இன்னொரு ரிஃபைனரி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் துணை நிறுவனமான ரிலைன்ஸ் பெட்ரோலியத்தால் துவக்கப்பட்டது. அதுவும் முற்றிலும் ஏற்றுமதிக்காக துவங்கப்பட்டதுதான். இந்த ரிஃபைனரியின் பெயர் ஜே - 2. இப்போது இங்கு பெட்ரோல் மற்றும் டீசலை விற்க அனுமதித்திருப்பது குறித்து ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தபோது, எங்களது ஜே - 1 ரிஃபைனரியில் தயாராகும் எரிபொருள் இனிமேலும் பெரும்பாலும் ஏற்றுமதிதான் செய்யப்படும். இருந்தாலும் அங்கு தயாராகும் மீதி பெட்ரோல் மற்றும் டீசல், உள்நாட்டு சந்தையில் விற்கப்படும். ஜே - 1 ல் தயாராகும் 2.5 - 3 மில்லியன் டன் டீசலை நாங்கள் இந்திய பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிண்டுஸ்டான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு விற்போம். அது, அவர்களுக்கு 2009 - 10ல் ஏற்படப்போகும் பற்றாக்குறையை போக்க வசதியாக இருக்கும். மேலும் நாங்கள் மூடியிருந்த 1,432 பெட்ரோல் பம்ப்களை மீண்டும் திறந்து அதன் மூலமாகவும் பெட்ரோல் மற்றும் டீசலை விற்போம் என்றார்.
நன்றி : தினமலர்
1 comment:
What about the price, will they sell it for lesser price than what's sold in other petrol stations?
Post a Comment