அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு கடிவாளமிடும் வகையில், மத்திய ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கையை கடுமையாக்கி உள்ளது. வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதத்தை 0.25 சதவீதத்தை உயர்த்தி உள்ளது. இதையடுத்து, வீட்டுக் கடன், தனி நபர் மற்றும் வாகன கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும்.
மத்தியில் ஐ.மு., கூட்டணி அரசின் பதவிக் காலம் அடுத்தாண்டு முடிவடைகிறது. ஆனால், அதற்குள்ளாக பல்வேறு இக்கட்டான நிலைகளை அரசு சந்தித்துள்ளது.
முக்கியமாக பணவீக்கம், விலைவாசி உயர்வு தான் ஆட்சியையே ஆட்டம் காண செய்துவிட்டது. இதை காப்பாற்றும் விதமாக அணுசக்தி ஒப்பந்தத்தை கையில் எடுத்து கொண்டு அரசு நம்பிக்கைஓட்டெடுப்பில் தப்பித்தது. இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஒய்.வி.ரெட்டி இந்த நிதியாண்டுக்கான முதல் காலாண்டு ஆய்வு அறிக்கையை நேற்று அறிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 'உலகிலேயே அதிக வளர்ச்சி கொண்ட நாடுகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது.
அதே சமயம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது இந்த நேரத்திற்கு அவசியம். பல்வேறு நிதி தொடர்பான நெருக்கடிகள் நிர்வாக அளவில் பூர்த்தி செய்வதில் சிரமமாக இருக்கிறது' என்றும் தெரிவித்தார்.
முக்கியமாக பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும், பணப் புழக்கத்தை சீராக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முக்கிய அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: வங்கிகள், ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய சி.ஆர்.ஆர்., (ரொக்க கையிருப்பு விகிதம்) 0.25 சதவீதம் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 9 சதவீதமாக ஆக்கப்பட்டுள்ளது. இது அடுத்த மாதம் 30ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும். இதன் காரணமாக வங்கிகள் புழக்கத்தில் இருந்து ரூ.8000 கோடி உறிஞ்சப்படும். இம்மாதிரியான நடவடிக்கையால் இதுவரை ரூ.50 ஆயிரம் கோடி உறிஞ்சப்பட்டிருக்கிறது.
* வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறைந்த கால கடன்கள் மீதான வட்டி விகிதம் 'ரெப்போ ரேட்' 0.50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 9 சதவீதமாக ஆக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வங்கிகளுக்கான 'ரிசர்வ் ரெப்போ ரேட்' தொடர்ந்து 6 சதவீதமாக இருக்கும்.
* இந்த நடவடிக்கைகளால் தற்போது 11.89 சதவீதமாக உள்ள பணவீக்கம், இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 7 சதவீதமாக குறையும்.
* நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இலக்கு 8 சதவீதமாக இருக்கும். இது ஏற்கனவே மதிப்பிட்டதைவிட அரை சதவீதம் குறைவு.
* சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம், அதிக மானியம், கடன் தள்ளுபடி, அதிகரித்து வரும் அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஆறாவது சம்பளக் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்துவதன் மூலம் ஏற்படும் நிதிச்சுமை போன்றவற்றால் மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு சுமை: வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறைந்த கால கடன்கள் மீதான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதன் மூலம், பல்வேறு வங்கிகளும், வீட்டுக்கடன், தனிநபர் கடன் உள்ளிட்டவற்றுக்கு வட்டி விகிதத்தை உடனடியாக அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
வீட்டுக்கடன், கார் கடன் ஆகியவை நிச்சயம் தற்போது உள்ளதை விட 1 சதவீதம் அதிகரிக்கும்.
வங்கிகள் கருத்து: ரிசர்வ் வங்கியின் இந்த முடிவால் வங்கிகளின் லாபம் பாதிக்கப்படும் என வங்கிகளின் தலைவர்களும், பொருளாதார நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
யுனைடெட் பாங்க் தலைவர் பி.கே.குப்தா கூறுகையில், 'ரிசர்வ் வங்கியில் வங்கிகள் வைக்கும் பணத்திற்கு எவ்வித வட்டியும் இல்லை. அப்படியிருக்கும் போது, ரொக்க கையிருப்பு விகிதத்தை உயர்த்துவதன் மூலம் வங்கிகளின் லாபம் தான் குறையும்' என்றார்.
ஏ.பி.என். ஆம்ரோ வங்கி தலைவர் மீரா சன்யால் கூறுகையில், 'பணவீக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது' என்றார். 'வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.5 சதவீதமாவது அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதே சமயம் வாடிக்கையாளர்களின் டிபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்காது' என்று பெரும்பாலான வங்கிகளின் தலைவர்கள் கூறினர்.
நிதியமைச்சர் கருத்து: 'ரிசர்வ் வங்கி எடுத்துள்ள முடிவுகளின் மூலம் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்' என, மத்திய நிதியமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பங்குச் சந்தையில் பாதிப்பு: ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை அறிவிப்பை யொட்டி நேற்று பங்குச்சந்தை 200 புள்ளிகள் சரிவுடன் தான் ஆரம்பித்தது. முடிவில் 500 புள்ளிகளுக்கு மேல் இழந்தது.
நன்றி :தினமலர்