பங்கு சந்தை, நேற்று இழந்திருந்த 557 புள்ளிகளை இன்று அனேகமாக மீட்டு விட்டது எனலாம். நேற்று ரிசர்வ் வங்கி ரெபோ ரேட்டை அதிரடியாக உயர்த்தி இருந்திருந்ததால் மதிப்பை இழந்திருந்த பேங்கிங் பங்குகள் இன்று மீண்டும் பெற்றன. இன்றைய வர்த்தகத்தில் பேங்கிங் பங்குகள் 5 சதவீதம் உயர்ந்திருந்தது. இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்த நிமிடத்திலேயே மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 283 புள்ளிகளும் தேசிய பங்கு சந்தையில் நிப்டி 71 புள்ளிகளும் உயர்ந்தது. பின்னர் அது மேலும் முன்னேறி, மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 495.67 புள்ளிகள் ( 3.59 சதவீதம் ) உயர்ந்து 14,287.21 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 123.70 புள்ளிகள் ( 2.95 சதவீதம் ) உயர்ந்து 4,313.55 புள்ளிகளில் முடிந்தது.நேற்று பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி இருந்ததால், குறைந்த விலையில் கிடைத்த ரியால்டி, பேங்க், மெட்டல், ஐ.டி., பவர், ஆயில் அண்ட் கேஸ்,கேப்பிடல் குட்ஸ் மற்றும் ஆட்டோ நிறுவன பங்குகளை வாங்க மக்கள் முண்டியடித்தனர். பி எஸ் சி.,யில் மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் ஒவ்வொன்றும் 1.5 சதவீதம் வளர்ந்திருந்தன. இன்றைய பங்கு சந்தையில் ஹெச்.டி.எஃப்.சி., 6.29 சதவீதம், எஸ்.பி.ஐ., 5.26 சதவீதம், டாடா கம்யூனிகேஷன்ஸ் 9.43 சதவீதம், டாடா ஸ்டீல் 7.82 சதவீதம், டாடா மோட்டார்ஸ் 4.91 சதவீதம் 4.91 சதவீதம், டாடா பவர் 7.03 சதவீதம் உயர்ந்திருந்தது. சர்வதேச சந்தையில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 121.83 டாலருக்கு வந்து விட்டதால் அமெரிக்க பங்கு சந்தைகளான டௌ ஜோன்ஸ் 2.39 சதவீதம் உயர்ந்திருந்தது. நாஸ்டாக் 2.45 சதவீதம் உயர்ந்திருந்தது. ஆசிய பங்கு சந்தையிலும் இன்று நல்ல வளர்ச்சி காணப்பட்டது.
நன்றி: தினமலர்
No comments:
Post a Comment