Wednesday, November 19, 2008

டிசம்பர் கடைசியில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு ?

சர்வதேச சந்தையில் கச்தையில் கச்சா எண்ணெய் விலை குறிப்பிட்ட அளவு குறைந்திருப்பதை அடுத்து இந்தியாவிலும் பெட்ரோலிய பொருட்களுக்கான விலையை குறைக்கலாமா என்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிகிறது. ஆனால் இந்த விலை குறைப்பு, சட்டசபை தேர்தல் முடியும் டிசம்பர் 24ம் தேதிக்குப்பின்தான் இருக்கும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடியும் டிசம்பர் 24ம் தேதிக்குப்பின் பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் கேஸ் விலையை மத்திய அரசு குறைக்கும் என்கிறார்கள். இப்போது விலையை குறைத்தால் அது தேர்தல் கமிஷன் விதிமுறைகளை மீறிய செயலாகி விடும் என்பதால் தள்ளிப்போடப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இப்போது கச்சா எண்ணெய் விலை 55 டாலரை ஒட்டியே இருக்கிறது. இந்தியாவில் டீசலின் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ3 வரை குறைத்தால் கூட பணவீக்கம் 0.6 சதவீதத்தில் இருந்து 0.7 சதவீதம் குறைந்துவிடும் என்று பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். நவம்பர் ஒன்றாம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 8.98 சதவீதமாக இருக்கிறது.
நன்றி :தினமலர்


மாருதி சுசுகி அறிமுகப்படுத்திய புதிய ஏ ஸ்டார் கார்

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, அதன் புது மாடல் ஏ-ஸ்டார் காரை புதுடில்லியின் இன்று அறிமுகப்படுத்தியது. இந்த ஏ-ஸ்டார் காரின் விலை, அறிமுக விலையாக ரூ.3.47 லட்சத்தில் இருந்து ரூ.4.12 லட்சத்திற்குள் கிடைக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் டிசைன் செய்யப்பட்டு இந்தியாவிலேயே முழுவதுமாக தயாரிக்கப்பட்ட ஏ-ஸ்டார் கார் இன்னும் நான்கு வருடங்களில் விற்பனைக்கு வரும் என்று மாருதி சுசுகி இந்தியாவின் மேனேஜிங் எக்ஸிகூடிவ் அதிகாரி ( இஞ்ஜினியரிங்) ராவ் தெரிவித்தார். இருந்தாலும் அது ஒரு சிறிய காரா அல்லது பெரிய காரா என்பதுபற்றி ராவ் சொல்ல மறுத்து விட்டார். முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஏ-ஸ்டார் கார், மாருதியின் ஐந்தாவது குலோபல் மாடல் கார். இந்தியாவில் வருடத்திற்கு 50,000 கார்களை விற்கவும் வெளிநாடுகளுக்கு ஒரு லட்சம் கார்களை ஏற்றுமதி செய்யவும் அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. மனேசரில் இருக்கும் அதன் தொழிற்சாலையில் தான் இது தயாரிக்கப்படுகிறது. 998 சிசி திறனுடன், பெட்ரோல் இஞ்சின் பொருத்தப்பட்டு, மூன்று மாடல்களில் இந்த கார் வெளிவர இருக்கிறது. இந்தியா உள்பட 150 நாடுகளில் இந்த காரை விற்க மாருதி சுசுகி முடிவு செய்திருக்கிறது.
நன்றி : தினமலர்


55 டாலருக்கும் குறைவான விலையில் கச்சா எண்ணெய்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, கடந்த 22 மாதங்களில் இல்லாதவாறு பேரலுக்கு 55 டாலர்களுக்கும் குறைவான விலையிலேயே இருந்து வருகிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையை காரணமாக, எரிபொருளுக்கான டிமாண்ட் குறைந்துகொண்டே வருகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையும் குறைந்து வருகிறது. நியுயார்க் சந்தையில் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 54.42 டாலர்தான். லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 51.87 டாலராக இருக்கிறது. கடந்த ஜூலை மாதத்தில் 147 டாலர் வரை உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை, இப்போது 55 டாலருக்கும் குறைவாகவே இருந்து வருகிறது. இது மேலும் குறைந்து 43 அல்லது 44 டாலருக்கு வந்து விடும் என்று ஹாங்காங்கை சேர்ந்த செய்மூர் செக்யூரிட்டீஸ் கருத்து தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


14,000 ஊழியர்கள், 30,000 ஏஜென்டுகளை புதிதாக வேலையில் சேர்க்கிறது மேக்ஸ் நியுயார்க் லைஃப் இந்தியா

உலக பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி போய்க்கொண்டிருப்பதை அடுத்து, பல முன்னணி நிறுவனங்கள் செலவை குறைக்கும் விதமாக ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டிருக்கும்போது, இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய தனியார் இன்சூரன்ஸ் நிறுவனமான மேக்ஸ் நியுயார்க் லைஃப் இந்தியா, இந்த நிதி ஆண்டிற்குள் 14,000 புதிய ஊழியர்களையும் 30,000 புதிய ஏஜென்ட்களையும் நியமிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. இன்னொரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனமான மெட்லைஃப் இந்தியாவும், 2,000 நிர்வாகிகளையும் 30,000 ஆலோசகர்களையும் புதிதாக வேலையில் சேர்த்துக்கொள்ள இருப்பதாக நேற்று அறிவித்தது. அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளான சிட்டி குரூப், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்றவைகள் செலவை குறைக்கும் விதமாக உலக அளவிலான அதன் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டிருக்கும் போது, இவர்கள் புதிதாக ஊழியர்களை வேலையில் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். பொருளாதார மந்த நிலையை முன்னிட்டு நீங்கள் செலவை குறைக்கும் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லையா என்று மேக்ஸ் நியுயார்க் லைஃப் இன்சூரன்ஸ் சீனியர் டைரக்டர் அனில் மேத்தாவிடம் கேட்டபோது, ஏற்கனவே நாங்கள் வேறு வழியில் செலவை குறைக்கும் நடவடிக்கைகளை எடுத்துவிட்டோம். எனவே ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்துதான் செலவை குறைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றார். மேலும் அவர் இதுகுறித்து சொன்னபோது, ஐ.ஆர்.டி.ஏ.,யின் சட்டதிட்டத்தின் படி, இருக்க வேண்டிய சால்வன்ஸி மார்ஜினை விட எங்களிடம் இரட்டிப்பு அளவு மார்ஜின் இருக்கிறது. எனவே எங்களுக்கு ஜாப்கட் போன்ற பிரச்னைகள் எழுவதில்லை. நாங்கள் 2008 - 09 பிரீமியம் வசூலில் 65 சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். கடந்த நிதி ஆண்டில் நாங்கள் பிரீமியம் தொகையாக ரூ.2,714 கோடி வசூல் செய்திருந்தோம். இந்த நிதி ஆண்டில் அது ரூ.3,500 கோடியாக உயர்ந்து விடும் என்று எதிர்பார்க்கிறோம் .இந்த நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்களிலேயே நாங்கள் 65 சதவீத வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். அது, இந்த நிதி ஆண்டு முழுவதிற்கும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இப்போது எங்களிடம் 30 லட்சம் பாலிசிதாரர்கள் இருக்கிறார்கள் என்றார் அவர்.

நன்றி : தினமலர்



சிட்டி குரூப், ஹெச்.எஸ்.பி.சி., வேலை இழப்பால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை

உலகின் மிகப்பெரிய வங்கிகளான ஹெச்.எஸ்.பி.சி., மற்றும் சிட்டி குரூப் ஆகியவை நேற்று மிகப்பெரிய வேலை இழப்பு செய்தியை வெளியிட்டன.ஹாங்காங்கை சேர்ந்த ஹெச்.எஸ்.பி.சி., வங்கி 500 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக நேற்று அறிவித்தது. அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான சிட்டி குரூப்போ 52,000 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. அடுத்த வருடத்தில்தான் இந்த வேலை இழப்பு இருக்கும் என்றாலும் உலகம் முழுவதும் இதன் பாதிப்பு நேற்று தெரிந்தது. இந்நிலையில் இந்த இரு வங்கிகளின் வேலைஇழப்பு திட்டத்தால் இந்தியாவில் பெரிதாக பாதிப்பு ஏதும் நிகழப்போவதில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. ஹெச்.எஸ்.பி.சி., யின் 500 பேர் வேலை இழப்பு திட்டத்தால், ஹாங்காங்கில் இருப்பவர்கள் 450 பேர் வேலை இழப்பார்கள் என்றும் மீதி 50 பேரும் இந்தியா தவிர மற்ற ஆசிய நாடுகளில்தான் வேலை இழப்பார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் சிட்டி குரூப்பை பொருத்தவரை, 52,000 பேர் வேலை இழப்பு திட்டத்தால் இந்தியாவில் சிறிதளவே பாதிப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. சிட்டி குரூப்பை சேர்ந்த சிட்டி குரூப் குளோபல் சர்வீசஸ் லிமிடெட் ( முன்னாள் இ-சர்வீஸ் ) என்ற நிறுவனம், டி.சி.எஸ்.,க்கு விற்கப்படுகிறது. இந்த விற்பனை இந்த காலாண்டிற்குள் முடிவடைந்து விடும் என்று தெரிகிறது. அப்போது சிட்டிகுரூப்பின் இந்திய ஊழியர்கள் எண்ணிக்கை பாதியாக குறைந்து விடும். அதை தவிர இங்கு வேறு எந்த பெரிய மாற்றமும் ஏற்படாது என்று சொல்கிறார்கள். எனவே இந்தியாவில் வேலை பார்த்து வரும் இந்த இரு வங்கி ஊழியர்களும் பயப்பட தேவையில்லை என்று சொல்கிறார்கள்.
நன்றி : தினமலர்


ஆறாவது நாளாக தொடர்ந்து பங்கு சந்தையில் வீழ்ச்சி

மும்பை பங்கு சந்தையில் தொடர்ந்து ஆறாவது வர்த்தக நாளாக வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. காலை வர்தகம் ஆரம்பித்ததில் இருந்து மதியம் 2.30 வரை உயர்ந்திருந்த சந்தை, பின்னர் நடந்த ஒரு மணி நேர வர்த்தகத்தில் வீழ்ச்சியடைந்து விட்டது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தையில் ஏற்பட்ட சரிவு இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்து உயர்ந்து கொண்டிருந்த சந்தையை பார்த்ததும், சந்தை மீண்டும் எழுந்து விட்டது என்றே எல்லோரும் எண்ணினர். மதியம் வரை நீடித்திருந்த அந்த எண்ணம், வர்த்தக முடிவு வரை நீடிக்கவில்லை. சந்தை மீண்டும் பழைய நிலைக்கே சென்று விட்டது. நிப்டி 2650 புள்ளிகளுக்கு கீழும் சென்செக்ஸ் 8800 புள்ளிகளுக்கும் கீழே சென்று விட்டது. கேப்பிடல் குட்ஸ், பவர், பேங்கிங், ஆயில், மெட்டல், டெலிகாம், மற்றும் டெக்னாலஜி பங்குகள் பெருமளவில் விற்கப்பட்டன. அதிகபட்டமாக 9,236.27 புள்ளிகள் வரை உயர்ந்திருந்த சென்செக்ஸ், வர்த்தக முடிவில் 163.42 புள்ளிகள் ( 1.83 சதவீதம் ) குறைந்து 8,773.78 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி அதிகபட்டமாக 2,772.40 புள்ளிகள் வரை உயர்ந்து பின்னர் 48.15 புள்ளிகள் ( 1.79 சதவீதம் ) குறைந்து 2,635.00 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்று ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் ஆசிய சந்தைகள் எல்லாமே வீழ்ச்சியில்தான் முடிந்திருக்கிறது. ஐரோப்பாவின் எஃப்.டி.எஸ்.ஸி., 77 புள்ளிகளும் சி.ஏ.சி. மற்றும் டி.ஏ.எக்ஸ். முறையே 52 மற்றும் 62 புள்ளிகளும் குறைந்திருந்தன. அமெரிக்க சந்தையை பொருத்தவரை டவ் ஜோன்ஸ் 119 புள்ளிகள், நாஸ்டாக் 21 புள்ளிகள் குறைந்திருந்தது. ஆசிய சந்தையில் ஹேங் செங்க் 0.77 சதவீதம், நிக்கி 0.66 சதவீதம், தைவான் 0.49 சதவீதம், ஜகர்தா 0.80 சதவீதம், ஸ்டெயிட்டைம்ஸ் மற்றும் கோஸ்பி முறையே 1.59 சதவீதம், 1.87 சதவீதம் குறைந்திருந்தது.

நன்றி : தினமலர்