Thursday, February 12, 2009

உயிர் பெறுமா பங்குச் சந்தை? பட்ஜெட் முடிவு செய்யும்

வரப்போகும் மினி பட்ஜெட் மற்றும் கம்பெனிகளுக்கு இன்னும் பேக்கேஜ் என்று, சிறப்பான அரசு அறிவிப்புகள் வரும் வாரம் வருமென எதிர்பார்த்து பங்குச் சந்தைகள், திங்களன்று மிகவும் மேலே சென்றன. மும்பை பங்குச் சந்தை 283 புள்ளிகள் மேலே சென்று முடிவடைந்தது.
கடந்த சில மாதங்களில் இவ்வளவு புள்ளிகள் அதிகம் சென்றது ஒரு சில முறை தான். ஆகையால் முதலீட்டாளர்கள், சந்தை மேலே இவ்வளவு சென்றவுடன் இந்தியா கிரிக்கெட்டில் வென்றதை கொண்டாடுவது போல கொண்டாடினர். இது வரை இரண்டு பேக்கேஜுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒன்று வரலாம் என்ற எதிர்பார்ப்புகள் அதிகம் உள் ளன. நேற்று முன்தினமும் மேலே சென்றது. அதுவும், கடந்த ஒரு மாத உச்சத்திற்கு சென்றது. குறிப்பாக வங்கிப் பங்குகள் கூடின. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 370 கோடி ரூபாய் அளவிற்கு வாங்கியது ஒரு நல்ல அறிகுறி.
சந்தை அன்றைய தினம் 64 புள்ளிகள் மேலே சென்றது. திங்கள், நேற்று முன்தினம் இரண்டு தினங்களிலும் முதலீட்டாளர்களின் மதிப்பு 88 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்தது. 10 ஆயிரத்தை தொட்டு விடும் தூரம் தான் என்று நேற்று முன்தினம் சொன்னாலும், நேற்று கேட்கத் தயாராக இல்லை.
சந்தை துவக்கத்தில் 180க்கும் அதிகமான புள்ளிகளை இழந்திருந்தது. சந்தை மிகவும் மேலும், கீழுமாகவே இருந்தது. முடிவாக சந்தையில் வந்த ஒரு செய்தி என்னவென்றால், வரி மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளில் சில திருத்தங்கள் வரப்போகின்றன என்ற தகவல்களால் சந்தைக்கு உயிர் வந்தது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 28 புள்ளிகள் குறைந்து 9,618 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 8 புள்ளிகள் குறைந்து 2,925 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.
புதிய வெளியீடு: எடுசர்வ் என்ற சென்னையைச் சேர்ந்த எஜுகேஷனல் நிறுவனம் தனது புதிய வெளியீட்டை 5ம் தேதி துவக்கி 9ம் தேதி முடித்தது. 55 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை வைத்து வெளி
யிடப்பட்ட இந்த வெளியீடு 1.03 தடவைகள் செலுத்தப்பட்டன.
சமீப காலத்தில் புதிய வெளியீடு என்பதே அரிதாக இருக்கும் சமயத்தில் இந்த வெளியீடு துணிச்சலாக வந்தது ஆச்சரியம் தான். எப்படி பட்டியலிடப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இந்த மாதத்தில் வெளியாகும் உள்நாட்டு மொத்த வளர்ச்சி புள்ளி விவரத்தில் 7 சதவீத வளர்ச்சி இருக்கிறதா, இல்லையா என்றும் நாட்டின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்க்கவும் உதவும்.
இந்தியாவும், சீனாவும் தான் இந்த ஆண்டு ஒரு சிறப்பான வளர்ச்சி விகிதத்தை எட்டும். மற்ற நாடுகளில் அவ்வளவு வளர்ச்சி விகிதங்கள் சிறப்பாக இருக்காது என்று பலரும் கணித்துள்ளனர்.
வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து வருகின்றன. இன்னும் குறையும் என்ற எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கின்றன. குறைந்தால், கடன்கள் வாங்குவது கூடும். அது நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற உதவும். மும்பை ஐகோர்ட் இடைக்கால உத்தரவுப்படி ரிலையன்ஸ் கிருஷ்ணா கோதாவரி பேசினிலிருந்து காஸ் தனியாருக்கு விற்கலாம் என்ற உத்தரவு அந்தக் கம்பெனிக்கு வருங்காலத்தில் லாபங்களை மிகவும் கூட்ட உதவும்.
வரும் வாரங்கள் எப்படி இருக்கும்? இன்று வரவிருக்கும் உற்பத்தி புள்ளி விவரம் ஒரு முக்கிய நிகழ்வு. இது பணவீக்க சதவீதத்தை விட அதிகமான முக்கியத்துவம் பெற்றது. தற்போதைய சூழ்நிலையில், நாளை வரவிருக்கும் ரயில்வே பட்ஜெட்டும், 16ம் தேதி தாக்கல் செய்யவிருக்கும் மத்திய மினி பட்ஜெட்டும் எதிர்பார்க்க வேண்டிய ஒன்று. அதில் என்னென்ன சலுகைகள் வரப் போகிறது என்பதைப் பொறுத்தும் சந்தையின் போக்கு அமையும்.
- சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்