Saturday, August 28, 2010

போதுமே போலித்தனம்!

இந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்துவரும் வளர்ச்சி நிதி உதவியை (250 மில்லியன் அமெரிக்க டாலர்) நிறுத்திக் கொள்ளலாமா என்று ஆலோசித்து வருவதாக அந்நாட்டு அரசு சென்ற மாதம் அறிவித்தது. பிரிட்டனிடமிருந்து அதிகமாக நிதியுதவியைப் பெறும் நாடுகளில் முதலிடம் வகிப்பது இந்தியாதான். ஒருவேளை, முந்நூறு ஆண்டுகளாக இந்தியாவிடம் பெற்றதை பிரிட்டன் நினைத்துப் பார்ப்பதாலும் இந்தத் தாராள மனது இருக்கக்கூடும்.

அணுமின் திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி செலவிடுகிற இந்தியாவுக்கு, அதிலும் வளர்ந்து வரும் நாடு என்கிற நிலையில் உள்ள நாட்டுக்கு நாம் தொடர்ந்து உதவி அளிக்கத்தான் வேண்டுமா என்பது இங்கிலாந்தின் இப்போதைய நியாயமான கேள்வி. மேலும், 2009 உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, தனது பொருளாதாரமே தள்ளாட்டம் போடும் நிலையில் அடுத்தவருக்குச் செலவழிக்க வேண்டுமா என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு. இந்தியாவுக்கு உதவியை நிறுத்துவது பற்றி யோசிக்கும்போதே சீனாவுக்கும் ரஷியாவுக்கு வளர்ச்சிநிதியை நிறுத்திவிட்டார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

இத்தகைய வளர்ச்சி நிதி என்பது ஐக்கிய நாடுகள் மன்றத்தில் 1970-ல் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம். இதன்படி, வசதியான நாடுகள் தங்கள் மொத்த வருமானத்தில் 0.7 விழுக்காட்டினை இத்தகைய வளர்ச்சி நிதிக்காக (டெவலப்மென்ட் அசிஸ்டன்ஸ்) வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்குக் கட்டுப்பட்டு, 0.7 விழுக்காடு நிதி வழங்கும் நாடுகள். சுவீடன், நார்வே, லக்ஸம்பர்க், டென்மார்க், நெதர்லாந்து போன்றவைதான்.

உலகில் மிக அதிக அளவு வளர்ச்சி நிதி வழங்குவது அமெரிக்கா. 2009-ம் ஆண்டு 28 பில்லியன் டாலர் வழங்கியிருக்கிறது. என்றாலும், இது நாட்டின் மொத்த வருவாயில் 0.3 விழுக்காடு மட்டுமே! இங்கிலாந்து இரண்டாம் இடத்தில் (13 பில்லியன் அமெரிக்க டாலர்) இருப்பினும் இது நாட்டின் மொத்த வருவாயில் 0.5 விழுக்காடு ஆகும்.

இந்த நிதியுதவியை இந்தியாவுக்கு அளிப்பதில் தயக்கம் காட்டுவதற்குக் காரணம், மேலே சொன்னதைப்போல, இந்தியா வளர்ந்துவரும் நாடு என்பதுதான். இந்த வளர்ச்சி நிதியை மற்ற ஏழை நாடுகளுக்குக் கொடுப்பது குறித்து இந்த "கொடைநாடு'களுக்கு எந்த மனத்தடையும் இல்லை. மேலும், கொடைநாடுகள் தரும் வளர்ச்சி நிதியுதவியில் 5 விழுக்காடுதான் வளரும் நாடுகளுக்கு அளிக்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் முதல் முக்கியமான 10 நாடுகளில் இந்தியா ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. நாம் ஆண்டுக்கு சுமார் 2,650 மில்லியன் அமெரிக்க டாலர்களை வளர்ச்சி நிதியாகப் பெறுகிறோம்.

இவர்கள் தரும் நிதியுதவி உண்மையாகவே வளர்ச்சிக்குப் பயன்படுகிறதா என்பதே கேள்விக்கு உட்படுத்தப்படும் விஷயம். இவர்கள் நிதியைக் கொடுத்துவிட்டு, வளர்ச்சிப் பணிக்கான பொருள்களை தங்கள் நாட்டிலிருந்து வாங்க வேண்டும் என்று வலியுறுத்துவதால் அவர்களுக்கு வியாபாரம் நடக்கிறது; பணம் தருகிறோமே என்கிற உரிமையில் நம் நாட்டில் கடைவிரிக்கிறார்கள்; நிதியின் பெரும்பகுதி அரசியல்வாதிகளின் ஊழலுக்கே போகிறது என்பதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும்,

இப்போது நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி- நாம் வளர்ந்து வரும் நாடா, வல்லரசாக மாறப்போகும் நாடா, அல்லது ஏழை நாடா?

ஒரு பக்கம் பல ஆயிரம் கோடியில் திட்டங்கள். 8 விழுக்காடு வளர்ச்சி என்கிறோம். நிறைய வசதி வாய்ப்புகள் உருவாகிவிட்டன. வானத்தில் விமானங்களின் நெரிசல் அதிகமாகிவிட்டது. ஏற்றுமதி ஒருபக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வணிக வாசல்களை எல்லோருக்குமாக தாராளமாகத் திறந்துவிட்டாகிவிட்டது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் 42 விழுக்காட்டினர் வறுமையில் வாழ்க்கிறார்கள். அதாவது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமையில் வாழ்வது இந்தியாவில்தான். இதை வளர்ச்சி என்று சொல்லிவிட முடியுமா?

எதை நாம் வளர்ச்சி என்று மார்தட்டிக் கொள்வது? ஒருபுறம் உணவுப் பொருள்களின் விலைவாசியும், உறைவிடமும் பெரும்பான்மையான குடிமக்களுக்கு எட்டவே எட்டாத இடத்தில் இருக்கிறது. இன்னொருபுறம், மோட்டார் வாகனங்களின் விலை குறைந்துவிட்டது என்று மகிழ்ச்சி அடைகிறோம்.

கடந்த இருபது ஆண்டுகளில், குடிசைகளின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்றோ, நடைபாதைவாசிகளின் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் நாளும்பொழுதுமாக அதிகரித்து வருவது குறித்தோ எந்தவிதப் புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இவர்களுக்கு நாம் வேலைக்கு உத்தரவாதமும், உணவுக்கு உத்தரவாதமும், கல்விக்கு உத்தரவாதமும் ஏட்டளவில் சட்டமாக்கி வைத்திருக்கிறோமே தவிர, அவர்களை இந்தியத் திருநாட்டின் பிரஜைகளாகக்கூட நாம் கணக்கிடுகிறோமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

இந்தியாவின் தனிநபர் வருமானம் உயர்ந்திருக்கிறது என்று பெருமை பேசுகிறோம். 1,000 குடும்பங்கள் குடிசைகளில் வாழும் கிராமத்தில், ஓர் அனில் அம்பானியோ, ஒரு ரத்தன் டாடாவோ, ஓர் இன்போசிஸ் நாராயணமூர்த்தியோ அல்லது நமது கோடீஸ்வர நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒருவரோ பங்களா கட்டிக்கொண்டு வாழ்ந்தால், அந்தக் கிராமத்தில் தனிமனித வருமானம்கூட பல லட்சங்களாக இருக்கும். அதுவா கணக்கு?

தீவிரவாத இயக்கங்கள் பெருகுவதும், அரசின் நிர்வாக இயந்திரத்துக்குக் கட்டுப்படாத மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், மக்களில் பாதி பேர் வறுமையிலும், கடனிலும் வாழ்வதும் வளர்ச்சிக்கான அறிகுறியாக இருக்க முடியுமா?

ஒன்று, "நானே நடந்து வருவேன், நடைவண்டி தேவையில்லை' என்று சொல்லும் தன்னம்பிக்கை வேண்டும். அல்லது இன்னமும் நடைபழகி முடியவில்லை என்று துணிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஊர் உலகத்துக்காக கோட் சூட் போட்டுக்கொண்டு, அடுத்தவரிடம் பணம் எதிர்பார்த்து நிற்பது தேவையில்லாத போலித்தனம் அல்லவா!
நன்றி : தினமணி

தன்னார்வக் குளறுபடிகள்...

அன்னை தெரசாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொல்கத்தாவில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 26) தொடங்கியுள்ளது. உலகம் முழுவதிலிருந்தும் வாழ்த்துச் செய்திகள் வந்து குவிந்துகொண்டிருக்கின்றன. 19 வயதில் கன்னியாஸ்திரியாக கொல்கத்தா வந்து சேர்ந்த தெரசாவின் சேவையும் புகழும் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இந்தவேளையில், இந்தியாவில் அனைவருக்குமான ஒரு கேள்வியை அன்னை தெரசாவின் வாழ்க்கை முன்வைக்கிறது: அன்னை தெரசா போன்று இத்தகைய சேவையைச் செய்பவர்கள் இந்தியாவில் பரவலாக உருவாகவில்லையே, ஏன்?

இந்தியாவில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எனப் பதிவுபெற்ற சேவை நிறுவனங்கள் 33 லட்சம் இருப்பதாக அண்மையில் ஒரு செய்தியை வெளியிட்ட ஓர் ஆங்கிலப் பத்திரிகை, இதன்படி 400 இந்தியருக்கு ஒரு சேவை அமைப்பு இருப்பதாகக் கணக்கிட்டுக் காட்டியுள்ளது. இந்தச் சேவை அமைப்புகள் உண்மையாகவே தொண்டு செய்திருக்குமானால், இந்தியாவில் இப்போது நிலவும் அறியாமை, வறுமை, கல்லாமை எதுவுமே இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படியேதும் நடந்துவிடவில்லை.

இதற்குக் காரணம் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நமது அரசின் நடைமுறைகளும்தான். இவை யாவுமே இந்தியாவில் மோசடி பேர்வழிகளுக்கு சாதகமாக இருக்கின்றன; மிக எளிதாக, வியர்வை சிந்தாமல் உண்டு கொழுப்பதற்கான தொழிலாகத் தன்னார்வத் தொண்டு மாறிக்கிடக்கிறது.

கல்வி விழிப்புணர்வு என்றாலும், எய்ட்ஸ் விழிப்புணர்வு என்றாலும், காசநோய் ஒழிப்பு என்றாலும், முதியோர் காப்பகம் அல்லது மூளைவளர்ச்சியில்லாத குழந்தைகள் காப்பகம், ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் எதுவென்றாலும் எல்லாவற்றையும் அரசு நிர்வகிப்பதில்லை. 99 விழுக்காடு தொண்டு நிறுவனங்களால்தான் இவை நடத்தப்படுகின்றன, நிர்வகிக்கப்படுகின்றன. அவற்றின் செயல்பாடுபற்றி எந்தவிதமான கவலையும் இல்லாமல் பணத்தை மட்டும் அரசு மக்கள் வரிப்பணத்திலிருந்து வழங்குவதும், இந்த நடவடிக்கைகளில் கையூட்டும், போலி கணக்குகளுமே நிறைந்திருப்பதும்தான் இதற்குக் காரணம்.

ஆழிப் பேரலையில் தமிழ்நாட்டில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானார்கள். வீடிழந்தார்கள். அவர்களுக்கு வீடு கட்டித் தருகிறேன் என்று பணம் வசூலித்த தன்னார்வ அமைப்புகள் பல உண்டு. அவை கட்டித் தந்த வீடுகளுக்கு பெற்ற பணம் எவ்வளவு? அந்த வீட்டின் மதிப்பு எவ்வளவு? இதில் வீடு கட்டித் தராமல் பணத்தை கோடிகோடியாக வங்கியில் போட்டுக்கொண்ட அமைப்புகள் எத்தனை? அரசு அம்பலப்படுத்தவில்லை. அவர்களுக்கு நிதி வழங்கிய வெளிநாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் நேரில் வந்து பார்த்து அதிருப்தி தெரிவித்ததால், நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டு வெளிச்சத்துக்கு வந்த மோசடிகள் மிகச் சிலவே.

இந்த வழக்குகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களும் சரி, இன்று பிணையில் வெளியே வந்து, மக்களோடு மக்களாக சகல வசதிகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆழிப்பேரலையில் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு வாழ்வளிப்பதாகக் கூறிக்கொண்டு தோன்றிய புதுப்புது தொண்டு நிறுவனங்கள் தின்று கொழுத்தன. குழந்தைகள்தான் வற்றிப்போனார்கள்.

எல்லா தொண்டு நிறுவனங்களும் மோசடியானவை அல்ல. ஆனால், மோசடி நிறுவனங்களால் மட்டுமே அரசு அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொள்ளவும், பணத்தைப் பெறவும் முடிகிறது என்பதுதான் துரதிருஷ்டம். குறைந்தபட்சம், கிடைக்கும் பணத்தில் பாதியைச் செலவிட்டாலும்கூட அவர்களை கைகூப்பித் தொழலாம் என்பதே பெருவாரியான இந்திய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் பற்றிய கருத்தாக இருக்கிறது.

தொண்டு நிறுவனங்கள் எவ்வாறெல்லாம், எதற்காகவெல்லாம் உலகம் முழுவதிலுமிருந்து நிதி பெற முடியும்; அத்தகைய நிதியை நேரடியாகப் பெறுவதற்கு இந்தியாவில் எந்த முகவர்கள் அல்லது மதஅமைப்புகள் மூலம் விண்ணப்பிக்கலாம், எந்தச் சேவையைச் சுட்டலாம்; அரசு மூலமாக நிதியைப் பெற என்ன செய்ய வேண்டும்? என்பதை விளக்கவும், இதற்கான புராஜக்ட் ரிபோர்ட் தயாரித்து, பத்திரிகைகளுக்கு தீனி போட்டு, செய்தி நறுக்குகளையும் விடியோ காட்சிகளையும் அனுப்பி வைத்து, நிதியைப் பெற்றுத்தருவதற்கென்றே தரகர்கள் இருக்கிறார்கள். அதனால்தான், இந்தியாவில் சேவை என்பதற்கும் சேமியா என்பதற்கும் வேறுபாடு இல்லாமல் போய்விட்டது.

முன்னாள் எம்.பி.க்கள், இன்னாள் எம்.பி.க்கள் தொடர்பான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எத்தனை என்பதைப் பட்டியலிட்டால் தலைசுற்றும். பல முன்னாள் பிரதமர்களும், அமைச்சர்களும் தங்களைத் தலைவர்களாகக் கொண்ட இதுபோன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பெயரில் வாங்கிக் குவித்திருக்கும் சொத்துகள் ஏராளம்.. ஏராளம். சுமார் 60 விழுக்காடு எம்.பி.க்களின் உறவினர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி சேவை புரிகிறார்கள். அவர்களுக்கு நிதியை அரசு வாரி வழங்கவும் செய்கிறது.

அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய நவீன் சாவ்லா, அவரைப் பற்றிக் குறிப்பிடுகையில், ""தவறான வழியில் வரும் நிதியை அன்னை தெரசா ஏற்றுக்கொள்கிறார் என்ற புகார் குறித்து அவரிடம் கேட்டபோது, அவர் கூறிய விளக்கம், "நான் அரசிடமிருந்து எந்த உதவியும், மானியமும் பெறவில்லை. மக்கள் கொடுக்கும் பணத்தை மக்களுக்கே கொடுக்கிறேன்' என்பதுதான்.

சேவை என்பது மதம் சார்ந்தது அல்ல. அது மனிதம் சார்ந்தது என்பதை அரசும் அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ளாதவரை சேவை என்ற பெயரில் மோசடிகள் நடக்கவே செய்யும்.

"அயலானை நேசி' என்பதற்கும், "அதிதி தேவோ பவ' என்பதற்கும் அடிப்படை அன்புதான். அன்பே சிவம் என்ற அடிப்படை தத்துவம் கிளைத்தெழுந்த மண்ணில், ஏன்,எதனால் கருணை (புதுமைப்பித்தன் சொல்வதைப்போல) கிழங்கு வகையில் சேர்க்கப்பட்டது! இதற்கு ஆளுக்கொரு விடை இருக்கலாம். ஒரு முறையாவது அதை விவாதிக்க வேண்டிய அவசியம் அன்னை தெரசாவின் நூற்றாண்டில் நமக்கு ஏற்பட்டு இருக்கிறது.

வழிகாட்டிகளாக அண்ணல் காந்தியடிகள் இருந்தும் அவரைப் பின்பற்ற மனமில்லாத அரசியல்வாதிகள். வாழ்ந்து காட்டிய அன்னை தெரசா முன்னுதாரணமாக இருந்தும் அவரைப்போல சேவையே குறிக்கோளாக இல்லாத தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள். பரமண்டலத்தில் இருக்கும் பரமபிதாவே, நீர் எங்களைக் காப்பாற்றுவீராக!
நன்றி : தினமணி