அன்னை தெரசாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொல்கத்தாவில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 26) தொடங்கியுள்ளது. உலகம் முழுவதிலிருந்தும் வாழ்த்துச் செய்திகள் வந்து குவிந்துகொண்டிருக்கின்றன. 19 வயதில் கன்னியாஸ்திரியாக கொல்கத்தா வந்து சேர்ந்த தெரசாவின் சேவையும் புகழும் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இந்தவேளையில், இந்தியாவில் அனைவருக்குமான ஒரு கேள்வியை அன்னை தெரசாவின் வாழ்க்கை முன்வைக்கிறது: அன்னை தெரசா போன்று இத்தகைய சேவையைச் செய்பவர்கள் இந்தியாவில் பரவலாக உருவாகவில்லையே, ஏன்?
இந்தியாவில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எனப் பதிவுபெற்ற சேவை நிறுவனங்கள் 33 லட்சம் இருப்பதாக அண்மையில் ஒரு செய்தியை வெளியிட்ட ஓர் ஆங்கிலப் பத்திரிகை, இதன்படி 400 இந்தியருக்கு ஒரு சேவை அமைப்பு இருப்பதாகக் கணக்கிட்டுக் காட்டியுள்ளது. இந்தச் சேவை அமைப்புகள் உண்மையாகவே தொண்டு செய்திருக்குமானால், இந்தியாவில் இப்போது நிலவும் அறியாமை, வறுமை, கல்லாமை எதுவுமே இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படியேதும் நடந்துவிடவில்லை.
இதற்குக் காரணம் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நமது அரசின் நடைமுறைகளும்தான். இவை யாவுமே இந்தியாவில் மோசடி பேர்வழிகளுக்கு சாதகமாக இருக்கின்றன; மிக எளிதாக, வியர்வை சிந்தாமல் உண்டு கொழுப்பதற்கான தொழிலாகத் தன்னார்வத் தொண்டு மாறிக்கிடக்கிறது.
கல்வி விழிப்புணர்வு என்றாலும், எய்ட்ஸ் விழிப்புணர்வு என்றாலும், காசநோய் ஒழிப்பு என்றாலும், முதியோர் காப்பகம் அல்லது மூளைவளர்ச்சியில்லாத குழந்தைகள் காப்பகம், ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் எதுவென்றாலும் எல்லாவற்றையும் அரசு நிர்வகிப்பதில்லை. 99 விழுக்காடு தொண்டு நிறுவனங்களால்தான் இவை நடத்தப்படுகின்றன, நிர்வகிக்கப்படுகின்றன. அவற்றின் செயல்பாடுபற்றி எந்தவிதமான கவலையும் இல்லாமல் பணத்தை மட்டும் அரசு மக்கள் வரிப்பணத்திலிருந்து வழங்குவதும், இந்த நடவடிக்கைகளில் கையூட்டும், போலி கணக்குகளுமே நிறைந்திருப்பதும்தான் இதற்குக் காரணம்.
ஆழிப் பேரலையில் தமிழ்நாட்டில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானார்கள். வீடிழந்தார்கள். அவர்களுக்கு வீடு கட்டித் தருகிறேன் என்று பணம் வசூலித்த தன்னார்வ அமைப்புகள் பல உண்டு. அவை கட்டித் தந்த வீடுகளுக்கு பெற்ற பணம் எவ்வளவு? அந்த வீட்டின் மதிப்பு எவ்வளவு? இதில் வீடு கட்டித் தராமல் பணத்தை கோடிகோடியாக வங்கியில் போட்டுக்கொண்ட அமைப்புகள் எத்தனை? அரசு அம்பலப்படுத்தவில்லை. அவர்களுக்கு நிதி வழங்கிய வெளிநாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் நேரில் வந்து பார்த்து அதிருப்தி தெரிவித்ததால், நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டு வெளிச்சத்துக்கு வந்த மோசடிகள் மிகச் சிலவே.
இந்த வழக்குகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களும் சரி, இன்று பிணையில் வெளியே வந்து, மக்களோடு மக்களாக சகல வசதிகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆழிப்பேரலையில் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு வாழ்வளிப்பதாகக் கூறிக்கொண்டு தோன்றிய புதுப்புது தொண்டு நிறுவனங்கள் தின்று கொழுத்தன. குழந்தைகள்தான் வற்றிப்போனார்கள்.
எல்லா தொண்டு நிறுவனங்களும் மோசடியானவை அல்ல. ஆனால், மோசடி நிறுவனங்களால் மட்டுமே அரசு அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொள்ளவும், பணத்தைப் பெறவும் முடிகிறது என்பதுதான் துரதிருஷ்டம். குறைந்தபட்சம், கிடைக்கும் பணத்தில் பாதியைச் செலவிட்டாலும்கூட அவர்களை கைகூப்பித் தொழலாம் என்பதே பெருவாரியான இந்திய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் பற்றிய கருத்தாக இருக்கிறது.
தொண்டு நிறுவனங்கள் எவ்வாறெல்லாம், எதற்காகவெல்லாம் உலகம் முழுவதிலுமிருந்து நிதி பெற முடியும்; அத்தகைய நிதியை நேரடியாகப் பெறுவதற்கு இந்தியாவில் எந்த முகவர்கள் அல்லது மதஅமைப்புகள் மூலம் விண்ணப்பிக்கலாம், எந்தச் சேவையைச் சுட்டலாம்; அரசு மூலமாக நிதியைப் பெற என்ன செய்ய வேண்டும்? என்பதை விளக்கவும், இதற்கான புராஜக்ட் ரிபோர்ட் தயாரித்து, பத்திரிகைகளுக்கு தீனி போட்டு, செய்தி நறுக்குகளையும் விடியோ காட்சிகளையும் அனுப்பி வைத்து, நிதியைப் பெற்றுத்தருவதற்கென்றே தரகர்கள் இருக்கிறார்கள். அதனால்தான், இந்தியாவில் சேவை என்பதற்கும் சேமியா என்பதற்கும் வேறுபாடு இல்லாமல் போய்விட்டது.
முன்னாள் எம்.பி.க்கள், இன்னாள் எம்.பி.க்கள் தொடர்பான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எத்தனை என்பதைப் பட்டியலிட்டால் தலைசுற்றும். பல முன்னாள் பிரதமர்களும், அமைச்சர்களும் தங்களைத் தலைவர்களாகக் கொண்ட இதுபோன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பெயரில் வாங்கிக் குவித்திருக்கும் சொத்துகள் ஏராளம்.. ஏராளம். சுமார் 60 விழுக்காடு எம்.பி.க்களின் உறவினர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி சேவை புரிகிறார்கள். அவர்களுக்கு நிதியை அரசு வாரி வழங்கவும் செய்கிறது.
அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய நவீன் சாவ்லா, அவரைப் பற்றிக் குறிப்பிடுகையில், ""தவறான வழியில் வரும் நிதியை அன்னை தெரசா ஏற்றுக்கொள்கிறார் என்ற புகார் குறித்து அவரிடம் கேட்டபோது, அவர் கூறிய விளக்கம், "நான் அரசிடமிருந்து எந்த உதவியும், மானியமும் பெறவில்லை. மக்கள் கொடுக்கும் பணத்தை மக்களுக்கே கொடுக்கிறேன்' என்பதுதான்.
சேவை என்பது மதம் சார்ந்தது அல்ல. அது மனிதம் சார்ந்தது என்பதை அரசும் அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ளாதவரை சேவை என்ற பெயரில் மோசடிகள் நடக்கவே செய்யும்.
"அயலானை நேசி' என்பதற்கும், "அதிதி தேவோ பவ' என்பதற்கும் அடிப்படை அன்புதான். அன்பே சிவம் என்ற அடிப்படை தத்துவம் கிளைத்தெழுந்த மண்ணில், ஏன்,எதனால் கருணை (புதுமைப்பித்தன் சொல்வதைப்போல) கிழங்கு வகையில் சேர்க்கப்பட்டது! இதற்கு ஆளுக்கொரு விடை இருக்கலாம். ஒரு முறையாவது அதை விவாதிக்க வேண்டிய அவசியம் அன்னை தெரசாவின் நூற்றாண்டில் நமக்கு ஏற்பட்டு இருக்கிறது.
வழிகாட்டிகளாக அண்ணல் காந்தியடிகள் இருந்தும் அவரைப் பின்பற்ற மனமில்லாத அரசியல்வாதிகள். வாழ்ந்து காட்டிய அன்னை தெரசா முன்னுதாரணமாக இருந்தும் அவரைப்போல சேவையே குறிக்கோளாக இல்லாத தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள். பரமண்டலத்தில் இருக்கும் பரமபிதாவே, நீர் எங்களைக் காப்பாற்றுவீராக!
நன்றி : தினமணி
Saturday, August 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment