Monday, August 17, 2009

புது மாடல்கள்; தாராள கடன் வசதியால் விற்பனை ஜோர்*மாருதி, ஹுண்டாய்க்கு மவுசு

புது மாடல் கார்களின் வரவு அதிகமாக உள்ளது. மேலும், அவற்றை வாங்க வங்கிக் கடன் கட்டுப்பாடுகளும் நீங்கி வருகின்றன. இதனால், நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை மீண்டும் சூடு பிடித்துள்ளது.கடந்த மாதம் கார்கள் விற்பனை 31 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கார்கள் விற்கப் பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில்87,901 ஆக இருந்தது என்று, மோட்டார் வாகன உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மாருதி நிறுவனத்தில் இருந்து 'ரிட்ஸ்', பியட் மூலம்'பன்ட்டோ', ஹுண்டாயின்'ஐ-20', ஹோண்டாவின் 'ஜாஸ்' ஆகிய புதிய மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எளிதில் கிடைக்கும் வங்கிக் கடன்கள், அரசின் வரிச்சலுகை ஆகியவற்றால் தான், கார் விற்பனை அதிகரித்துள்ளது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
வாகன விற்பனை, பொதுவாக அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் உச்சத்தில் இருக்கும். பண்டிகைகள், விழாக்கள் நடைபெறும் காலம் அது. இந்த ஆண்டு விழாக்கள் பெரும்பாலும் செப்டம்பரில் துவங்குவதால், விற்பனையாளர்கள் முன்னரே, கார்களை அதிக அளவில் இருப்பு வைக்கத் துவங்கி விட்டனர்.கார் ஏற்றுமதியிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதி 22 சதவீதம் உயர்ந்துள்ளது. மாருதி, ஹுண்டாய் நிறுவனங்களில் இருந்து 33,506 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. வாகன மொத்த ஏற்றுமதி 5 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒரு லட்சத்து 39 ஆயிரம் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
நன்றி : தினமலர்


No comments: