தென்னாப்பிரிக்க இந்தியர்களின் தன்மானத்தைக் காக்கவும், பிரிட்டிஷ் பிரஜைகள் என்ற முறையில் அவர்களுடைய அடிப்படை உரிமைகளை அவர்களுக்குப் பெற்றுத்தரவும் பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1906 முதல் 1914 வரையில் தலைமை தாங்கி நடத்திச்சென்ற சாத்விக எதிர்ப்புப் போராட்டத்தின் முதற்கட்ட எழுச்சியே 1908 ஆகஸ்ட் 16 அன்று ஜோகன்னஸ்பர்க் நகரில் அரங்கேறிய பெயர்ப் பதிவுச் சான்றுப் பத்திரங்களைத் தீக்கிரையாக்கிய "பெருவிழா'.
தென்னாப்பிரிக்க இந்தியர்களின் சத்தியாக்கிரக வரலாற்றில் சிறப்பு முத்திரை பதித்த அச்சம்பவம் நிகழ்ந்து ஒரு நூற்றாண்டு முடிவுறும் இக் காலகட்டத்தில் அதைப்பற்றி அறிந்துகொள்வது வேண்டற்பாலது:
1906 மத்தியில் தென்னாப்பிரிக்காவில் டிரான்ஸ்வால் சுயாட்சிக் காலனி ஆங்கில அரசாங்கம் பிறப்பிக்கவிருந்த ஓர் அவசரச் சட்டத்தை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றுவதற்காக தலைநகர் ஜோகன்னஸ்பர்க் நகரில் 1906 செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற இந்தியர்களின் கூட்டத்திலேதான் பாரிஸ்டர் காந்தி அச் சட்டத்திற்கு அடிபணிய மறுக்கும் வகையிலான சாத்விகப் போராட்டத்தை அறிவித்தார். அந்த சாத்விக எதிர்ப்பு முறைக்கு 1907 டிசம்பரில் "சத்தியாக்கிரகம்' என்ற புதுப்பெயரிட்டார்.
"கறுப்புச்சட்டம்' என்று இகழ்ந்துரைக்கப்பட்ட அந்த "ஆசியவாசிகள் பதிவு அவசரச் சட்ட'த்தின் ஷரத்துகள் மிகக் கடுமையானவை. இந்தியர்களைக் கேவலப்படுத்துபவை. அவற்றின்படி, "எட்டு வயதுக்கு மேற்பட்ட இந்திய, ஆசிய ஆண், பெண் ஒவ்வொருவரும் ஆசியவாசிகள் பதிவாளர் அலுவலகத்தில் தனது பெயர், முகவரி, ஜாதி, வயது முதலான விவரங்களைக் கொடுத்து, அப் பத்திரத்தில் பத்துவிரல் ரேகை பதித்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அங்க அடையாளங்களையும் பதிவாளர் குறித்துக் கொள்வார். இவ்வாறு இந்தியர் ஒவ்வொருவரும் அரசாங்க அத்தாட்சிப் பத்திரம் பெறவேண்டும். குறித்த தேதிக்குள் அவ்வாறு பதிவு செய்துகொள்ள விண்ணப்பிக்காத இந்தியர்கள் டிரான்ஸ்வால் காலனியில் தொடர்ந்து குடியிருக்கும் அருகதையை இழந்துவிடுவார்கள். விண்ணப்பம் செய்யத் தவறினால் அது சட்டப்படி குற்றமாகும். அபராதம், சிறைத்தண்டனை கிடைக்கும். நாடு கடத்தப்படலாம். பதிவுச் சான்றிதழை எச்சமயம் எங்கே கேட்டாலும் போலீஸôரிடம் காட்ட வேண்டும்.'
பின்னர் நடந்த மாபெரும் மறியல் போராட்டத்தில் பாரிஸ்டர் காந்தி, தெண்டர்படைத் தலைவர் தம்பிநாயுடு, சீனர் சங்கத் தலைவர் லியுங் குவிங் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு, தலா இரண்டு மாத சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர். அடுத்தடுத்து ஏராளமான இந்திய சத்தியாக்கிரகிகள் சிறையிலடைக்கப்பட்டனர்.
1908 ஜனவரி கடைசியில் காலனி உள்நாட்டுச் செயலர் (மந்திரி) ஜெனரல் ஸ்மட்ஸýக்கும் பாரிஸ்டர் காந்திக்கும் இடையே நடைபெற்ற சமரசப் பேச்சில் ஒரு சமாதான முடிவு ஏற்பட்டது. அதன்படி ""இந்தியர்கள் கைரேகை பதித்து சான்றிதழ்பெற சட்டப்படி கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். ஆனால், அவர்கள் தாமாகவே முன்வந்து கைரேகை பதித்து பெயர், முகவரி விவரங்கள் கொடுக்கலாம். அவ்வாறு பதிவுகள் முடிவுற்றவுடன், கறுப்புச் சட்டம் ரத்து செய்யப்படும்.''
ஆனால், இவ்வாறு ஒப்புக்கொள்ளப்பட்ட சமரச உடன்பாட்டினின்றும் ஜெனரல் ஸ்மட்ஸ் பின்வாங்கினார். கறுப்புச் சட்டம் ரத்து செய்யப்படவில்லை.
பாரிஸ்டர் காந்தி ஏமாற்றத்தில் திகைத்துப்போனார். "ஜெனரல் ஸ்மட்ûஸ நம்பி மோசம் போய்விட்டாரே!' என்று பலர் காந்திஜியைக் குறைகூறினர். மற்றவர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. கறுப்புச் சட்டத்தையும், புதிய சட்டங்களையும் ஒருமித்து எதிர்த்து, காந்திஜி தலைமையில் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடருவதே அம் முடிவு.
"இந்தியருக்குப் பாதகமான பழைய, புதிய சட்டங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும். இல்லையேல் இந்திய சமூகத்தினர் தங்களிடம் ஏற்கெனவே உள்ள பதிவுப் பத்திரங்களையும், தாமாக முன்வந்து பெற்றுக் கொண்ட பதிவுப் பத்திரங்களையும் எரித்துச் சாம்பலாக்கித் தமது எதிர்ப்பைத் தொடங்குவார்கள்' என்று அரசாங்கத்திற்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார் பாரிஸ்டர் காந்தி.
டிரான்ஸ்வால் சட்டசபையில் புது ஆசியா சட்டம் நிறைவேற்றப்படவேண்டிய தினத்தன்றே "இறுதி எச்சரிக்கை'யின் காலவரம்பு முடிவுற்றது. அரசாங்கத்திடமிருந்து பதில் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. ஆகவே, பத்திர எரிப்பு நிகழ்த்துவதன் பொருட்டு 1908 ஆகஸ்ட் 16-ம் தேதி மாலை 4 மணிக்கு ஜோகன்னஸ்பர்க் நகரில், ஹமீதியா மசூதியைச் சேர்ந்த மைதானத்தில் கூட்டம் நடைபெறும் என்று பாரிஸ்டர் காந்தி அறிவித்தார்.
எல்லா வகுப்புகளையும் சேர்ந்த இந்தியர்களும் 1908 ஆகஸ்ட் 16 அன்று மசூதி மைதானம் பூராவும் நிரம்பி வழிந்தனர். அத்தாட்சிப் பத்திரங்களை எரிப்பதற்காக மேடையோரத்தில் ஒரு பெரிய இரும்பு எண்ணெய்க் கொப்பரையில் பாரஃபின்மெழுகு எண்ணெய் காய்ந்து கொண்டிருந்தது.
""பதிவுப் பத்திரங்களைக் கொளுத்துவது மட்டும் சட்டப்படி குற்றமாகிவிடாது. எனினும், அவற்றைத் தீக்கிரையாக்குவதன் மூலம் நாம் கறுப்புச் சட்டத்திற்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்கிற உறுதியையும், அப்பத்திரத்தை எந்த அதிகாரிக்கும் காண்பிக்கும் நிலையினின்றும் நாம் விடுபடுவோம் என்பதையும் இவ்வாறு கண்கூடாகக் காட்டுகிறோம்'' என்று பாரிஸ்டர் காந்தி அறைகூவல் விடுத்து, கூட்டத்தினரை உற்சாகப்படுத்தினார்.
கூட்டத்திற்கு, பிரிட்டிஷ் - இந்தியர் சங்கத் தலைவர் யூசுஃப் மியான் தலைமை வகித்து நிலைமையை விவரித்தார். கடைசியில் பாரிஸ்டர் காந்தி, ""நாம் இன்று மேற்கொள்ளவிருப்பது ஒரு நீண்ட காலப் போராட்டமாக இருக்கப் போகிறது என்பதை நாம் மீண்டும் கவனத்தில் வைத்துக் கொள்வோம். நம்மில் சிலர், முன்வைத்த காலை, சற்று பின்வாங்கிவிட்டனர் என்பதும் தெரியும். அந்த அளவுக்கு சாத்விகப் போர்முனையில் இருப்பவரின் பொறுப்பு மேலும் அதிகமாகியுள்ளது. இவை அனைத்தையும் நீங்கள் நன்றாக யோசனை செய்து பார்த்தபிறகே இன்று நாம் முனைந்துள்ள காரியத்தில் இறங்கலாம். இதுவே எனது புத்திமதி'' என்று அறிவுறுத்தினார்.
அவர் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோதே ""எங்களுக்குப் பத்திரங்கள் வேண்டாம். அவற்றைக் கொளுத்துங்கள்'' என்று மூலைக்கு மூலை பல குரல்கள் எழுந்தன.
கொளுத்துவதற்காக ஏற்கெனவே இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சான்றுப்பத்திரங்கள் வந்து சேர்ந்திருந்தன. கூட்டத் தலைவர் யூசுஃப் மியான், அவையனைத்தையும் கொப்பரைக்குள் போட்டுத் தீவைத்தார். சொக்கப்பனையாகப் பத்திரங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. இந்த எரிமூட்டும் படலம் முடியும்வரை குழுமியிருந்த மக்கள் இடையறாத மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைத்தனர். அதுவரை கொடுக்காத பத்திரங்களை பலர் கூட்டத்தினரிடையே முண்டியடித்து முன்னேறி கொப்பரையில் போட்டனர்.
இக் கூட்டத்திற்கு வந்திருந்த பத்திரிகை நிருபர்கள் இக் காட்சிகளைக் கண்டு வியந்து தம் பத்திரிகைகளில் இந் நிகழ்ச்சியை வருணித்து எழுதினர். ""டெய்லி மெயில்'' (லண்டன்) ""இந்தியர்கள் நடத்திய இந்த மாபெரும் சொக்கப்பனை நிகழ்ச்சியை "போஸ்டன் தேயிலை விருந்து' நிகழ்ச்சியோடு ஒப்பிட்டு வெளியிட்டது. (1773 டிசம்பர் 16 அன்று, அமெரிக்க மெஸசூùஸட்ஸ் மாகாண தேசாபிமானர்கள், செவ்விந்தியர் போல் வேடம் தரித்து, போஸ்டன் துறைமுகத்தில் நங்கூரமிட்ட பிரிட்டிஷ் வணிகக் கப்பலினுள் புகுந்து அங்கு பெட்டிபெட்டியாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த தேயிலைச் சரக்குகளை கடலில் வீசி எறிந்தனர். அதுவே பிரமிப்பூட்டும் "பாஸ்டன் டீ பாட்டி' எனப்படுவது. அதன் விளைவாக பிரிட்டன், போஸ்டன் துறைமுகத்தில் வியாபார நடவடிக்கைகளை நிறுத்திவைத்தது. அதுவே அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தின் (1773-1783) பூர்வாங்க எழுச்சியாகும்.''
""டிரான்ஸ்வால் லீடர்'' பத்திரிகை எரியூட்டு நிகழ்ச்சியை இவ்வாறு வர்ணித்தது:
""சுமார் 1300 பதிவு சான்றுப் பத்திரங்களும் 500க்கும் மேற்பட்ட வணிக லைசென்ஸ்களும் கொப்பரையில் தீக்கிரையாயின, நெருக்கியடித்து நின்ற கும்பல் வாய்கிழியக் கத்தி ஆரவாரித்தனர். தொப்பிகளை ஆகாயத்தில் விட்டெறிந்து குதியாய்க்குதித்தனர். சீட்டி அடித்தனர். கடைசியில் சில சீனர்களும் மேடை மீதேறி, தமது சான்றுப் பத்திரங்களை கொப்பரையில் இட்டனர்...''
இவ்வாறு 1908 ஆகஸ்ட் 16 அன்று ஒட்டுமொத்தமாகப் பத்திரங்களை எரித்துச் சாம்பலாக்கிய சம்பவம், தென்னாப்பிரிக்க இந்தியரின் சத்தியாக்கிரக இயக்கத்திற்கு புதுப்பொலிவை அளித்தது. காந்திஜி தலைமையில் சத்தியாக்கிரகம் மீண்டும் தொடங்கப் பெறுவதற்கு கம்பீர பின்னணியாக அமைந்தது.
கட்டுரையாளர் :லா. சு. ரங்கராஜன்
நன்றி : தினமணி
Monday, August 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment