Wednesday, January 27, 2010

அமைதிப் பேச்சில் அர்த்தம் இல்லை

இந்தியா, பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது தொடர்பாக இருநாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், அறிவுஜீவிகள் அடங்கிய குழுவினர் தில்லியில் அண்மையில் கூடி ஆலோசித்துள்ளனர்.

அமைதிப் பேச்சை மீண்டும் தொடங்க இதுதான் சரியான தருணம் என, இக் கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் முன்னாள் சட்ட அமைச்சர் இக்பால் ஹைதர், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்தியாவில் அமைதியைக் குலைக்க வேண்டும் என்று வெறியுடன் செயல்படும் பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்த எந்தத் தீவிர நடவடிக்கையும் எடுக்காத பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதால் பயன் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2008, நவம்பர் 26-ம் தேதி மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவதாக இந்தியா அறிவித்தது. எல்லை தாண்டி இந்தியாவுக்குள் புகுந்து நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒடுக்கும்வரை பேச்சுவார்த்தை கிடையாது என இந்தியா திட்டவட்டமாகக் கூறியது.

ஆனால், இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளின் ஊடுருவல் தொடர்ந்தவாறே உள்ளது. மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலைப் போன்றே அண்மையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலும் நடந்துள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள பஞ்சாப் ஹோட்டலுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து 100-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்த பயங்கரவாதிகள் இருவரைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்தப் பயங்கரவாதிகளை பாகிஸ்தானில் இருந்தபடி செல்போன் மூலம் தொடர்புகொண்டு பேசி வழிநடத்தியுள்ளனர்.

மும்பையில் நடந்த தாக்குதலின்போதும் பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தானில் இருந்துதான் கட்டளைகள் வந்தன. இப்போதும் அதே பாணியில் தாக்குதல் நடத்திப் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் பயங்கரவாதிகளின் திட்டம். நல்லவேளையாக காஷ்மீர் போலீஸôர் மற்றும் சி.ஆர்.பி.எப். போலீஸôரின் துணிச்சலான நடவடிக்கையால் பெரும் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடிந்தது.

மும்பைத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியபோது அதைப் பாகிஸ்தான் கண்டுகொள்ளவில்லை.

முதலில் ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டாலும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை எனக் கூறி, நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. பின்னர் அவரை மீண்டும் கைது செய்ய அனுமதிக்கக்கோரி "அப்பீல்' செய்துள்ளது பாகிஸ்தான் அரசு. அந்த மனு நிலுவையில் உள்ளது.

இதேபோல, மும்பைத் தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷாகிர் ரஹ்மான் லக்வி, அப்துல் வாஹித், மஷார் இக்பால், ஷாகித் ஜமீல் ரியாஸ், ஹமாத் இக்பால் ஆகிய 5 பயங்கரவாதிகள் மீதான வழக்கும் இழுத்தடிக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்துகொண்டு இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்தாதவரை, அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என இந்தியா எச்சரித்தபோது, இந்தியாதான் அமைதிப் பேச்சைத் துண்டிப்பதாக எகிறும் பாகிஸ்தான், பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. ஸ்ரீநகர் தாக்குதல் இதற்கு ஓர் உதாரணம். இதற்கான செல்பேசி ஆதாரங்களைக் கொடுத்தாலும் பாகிஸ்தான் வழக்கம்போல மறுக்கவே செய்யும்.

இதேபோல, எல்லையிலும் சண்டைநிறுத்த ஒப்பந்தத்தை மீறி பலமுறை தாக்குதல் நடத்துகிறது பாகிஸ்தான். துப்பாக்கியால் சுடுவதுடன் இல்லாமல் ஏவுகணைத் தாக்குதலையே நடத்துகிறது.

தங்கள் மண்ணில் பயங்கரவாதிகள் செயல்பட அனுமதிக்கக் கூடாது என பாகிஸ்தானை இந்தியா மட்டுமன்றி அமெரிக்காவும் பலமுறை எச்சரித்துள்ளது. ஆனால், பலனில்லை.

இந்தியாவுக்குள் ஊடுருவ பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து ஏராளமான பயங்கரவாதிகள் தயாராக உள்ளதாக இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனியும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வேளையில், காஷ்மீர் மாநிலத்தில் பிரீபெய்டு செல்போன் இணைப்புக்கு அனுமதி இல்லை, படைகள் குறைக்கப்படமாட்டாது என்பன உள்ளிட்ட சில உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருவது பாராட்டத்தக்கது.

""ஒன்றிரண்டு சம்பவங்களை வைத்து காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதம் தலையெடுத்துள்ளதாகக் கருதக்கூடாது'' என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறுவதை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

அதேபோல, ""ஸ்ரீநகர் சம்பவத்தைக் காரணம்காட்டி காஷ்மீரிலிருந்து பாதுகாப்புப் படையினரை விலக்கிக் கொள்வதை நிறுத்தக்கூடாது'' என மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி கூறுவதிலும் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

தினம் தினம் குண்டுவெடிப்புகள், மனிதகுண்டு தாக்குதல்கள் என பயங்கரவாதத்தின் வலியை தானே உணர்ந்து கொண்டபோதும், பலுசிஸ்தானில் நடைபெறும் குழப்பங்களுக்கு இந்தியா தான் காரணம் என அபாண்டமாகக் குற்றம்சாட்டி விஷமத்தனத்துடன் நடந்துகொள்கிறது பாகிஸ்தான்.

அமைதிப்பேச்சைத் தொடர வேண்டும் என்று பாகிஸ்தான் அறிவுஜீவிகளும் மக்களும் விரும்பினாலும் ஆட்சியாளர்களுக்கு அதில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவின் கோரிக்கைகள் தொடர்பாக பாகிஸ்தான் உண்மையான உறுதியான நடவடிக்கைகளை எடுக்காதவரை, அமைதிப்பேச்சு என்பதற்கே அர்த்தம் இல்லை.
கட்டுரையாளர் :எஸ். ராஜாராம்
நன்றி : தினமணி

No comments: