இந்திய நிர்வாக அமைப்பு எஃகு அமைப்பு என ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது. அறிவுக் கூர்மையும், நிர்வாகத் திறனும் நிறைந்த இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐ.சி.எஸ். தேர்வுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டார்கள். ஐ.சி.எஸ். பயிற்சிக்கான கல்லூரி லண்டனில் மட்டுமே இருந்தது. தொடக்கக் காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே இதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.
இந்திய வைசிராயின் நிர்வாகக்குழு, மாநில ஆளுநர்களின் நிர்வாகக் குழு மற்றும் மத்திய, மாநில அரசுகளின் தலைமைச் செயலகங்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நீதிபதிகள் போன்ற உயர் பதவிகளுக்கு இவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். இவர்களின் கீழ் உள்ள வேலைகளுக்குத் தேவையானவர்களை இங்கிலாந்திலிருந்து கொண்டுவர முடியாது. எனவே அதற்கேற்றவர்களை இந்தியாவில் உருவாக்குவதற்காகத்தான் மெக்காலே கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது.
முதலாம் உலகப் போர் வரை இந்தியர்கள் யாரும் ஐ.சி.எஸ். படிக்க அனுமதிக்கப்பட்டதில்லை. அதற்குப் பிறகே இந்தியர்கள் இப்பயிற்சிபெற அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், மிக உயர்ந்த அதிகாரப் பொறுப்பில் ஆங்கிலேயர்கள் மட்டுமே நீடித்தார்கள்.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நலனைப் பாதுகாப்பதற்கும், அரசுக்கெதிரான கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்கும் இவர்கள் சிறப்பான பயிற்சி பெற்றிருந்தனர். ஆனாலும் இந்தியா முழுவதிலும் முழுமையான நிர்வாக இயந்திரம் டெல்லி முதல் குக்கிராமம் வரை பிசிரின்றி இயங்கியது. வெள்ளையர்கள் வெளியேறும் போது இந்த நிர்வாக இயந்திரம் சீராக இயங்கியதால்தான் இளம் சுதந்திர அரசு சிக்கலின்றி செயல்பட முடிந்தது.
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையையொட்டி நாட்டின் பல பகுதிகளில் மூண்டெழுந்த மதக் கலவரங்கள், 500-க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்களை இணைக்கும் முயற்சி, ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றும் திறன் போன்ற முக்கியமான பிரச்னைகளை இந்த நிர்வாக இயந்திரத்தின் துணைக்கொண்டு சுதந்திர இந்திய அரசும், மாநில அரசுகளும் வெற்றிகரமாக சமாளித்தன.
மத்திய உள்துறை அமைச்சராக வல்லபாய் படேல் இருந்த காலத்தில் ஐ.சி.எஸ்.க்குப் பதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சிக் கல்லூரிகளைத் தொடங்கி சுதந்திர இந்தியாவில் புதிய சூழ்நிலைக்கேற்ப அதிகாரிகளை உருவாக்கும் திட்டத்தை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்தே ஆங்கிலேய அதிகாரிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தியாவில் உள்ள சகல மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்றவற்றில் தேர்ச்சி பெற்று அதிகாரிகளாகப் பொறுப்பேற்றனர்.
அதே வேளையில் மத்திய அரசிலும், மாநில அரசிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். நாடாளுமன்ற ஜனநாயக முறையில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றங்களிலும் இடம் பெற்றார்கள். இந்த புதிய சூழ்நிலையில் அதிகார வர்க்கத்கும், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்குமிடையே உள்ள உறவு குறித்து சிக்கல் ஏற்படாத வகையில் செயல்படவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. பிரதமராக இருந்த நேரு அவர்களும், தமிழக முதலமைச்சர்களாக இருந்த ராஜாஜி, காமராஜர் போன்ற பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கும் அரசு நிர்வாகத்தில் கட்சியினர் தலையீடு செய்வதை ஒரு போதும் அனுமதிக்கவில்லை. சில வேளைகளில் கட்சியினர் நிர்வாகத்தில் குறுக்கீடு செய்தபோது உடனடியாகத் தலையிட்டு அவர்களைத் தண்டிக்கத் தவறியதில்லை.
மக்கள் பிரச்சனைக்களுக்காக அதிகாரிகளை அணுகுவதைத் தவறாகக் கருதவில்லை. ஆனால் சட்டத்திற்குப் புறம்பானதும், நியாயமற்றதுமான பரிந்துரைகளுக்காக அதிகாரிகளை அணுகுவதை ஒருபோதும் அனுமதிக்கவில்லை.
எடுத்துக்காட்டாக சென்னையில் பருத்திச் சூதாட்டம் என்ற பெயரில் ஏழை அப்பாவி மக்கள் மோசடி செய்யப்பட்டதையும், கோவையில் பெரும் தொழிலதிபர் ஒருவர் கள்ளநோட்டு அச்சடித்துப் புழக்கத்தில் விட்டதையும் குறித்து உயர் போலீஸ் அதிகாரியாக இருந்த எப்.வி. அருள் மிகத் திறமையாகப் புலனாய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மிகமிகச் செல்வாக்குப் படைத்தவர்களாக இருந்தும் கொஞ்சமும் தயங்காது அவர்களைக் கைது செய்தார். முதலமைச்சராக இருந்த காமராஜருக்கு பல்வேறு வகையான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டபோதிலும் அவர் அருள் எடுத்த நடவடிக்கைகளில் கொஞ்சமும் தலையிடவில்லை. முதலமைச்சரின் நேர்மை அவரின் கீழிருந்த அதிகாரிகளையும் நேர்மையாக்கி திறமையுடன் செயல்பட வழிவகுத்தது.
இன்னும் எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். ஆனால், இன்று நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப்படுகிறார்கள். அறிவாற்றலும் திறமையும் நிறைந்த இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், தேர்வுகளில் கலந்து கொண்டு மிகக் கடுமையாக வடிகட்டப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரிகளாக வருகிறார்கள். ஆனால் அவர்களை அரசியல் மலைப் பாம்புகள் சுற்றி வளைத்து மிரட்டுகின்றன.
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் நிர்வாகம் முழுமையாகக் கட்சிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அமைச்சர்களும், மாவட்டச் செயலர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் - தங்கள் விரும்பியபடியெல்லாம் அரசு அலுவலர்களை ஆட்டிப் படைக்கின்றனர்.
முதலமைச்சரின் குடும்பத்திலிருந்தும், அமைச்சர்களின் குடும்பங்களிலிருந்தும் பல அதிகார மையங்கள் அதிகாரிகளை ஆட்டிப் படைக்கின்றன. இதன் விளைவாக அரசு நிர்வாக இயந்திரம் சீரழிந்து போய்க் கிடக்கிறது. இதன் காரணமாக பல அதிகாரிகள் அமைச்சர்களின் விசுவாசிகளாக கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்களாக மாறியதன் விளைவாக நிர்வாக இயந்திரம் பிளவுபட்டுக் கிடக்கிறது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பதவி உயர்வு, வேலை மாறுதல் போன்றவை முறைப்படி நடைபெறுவதில்லை. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப நடைபெறுவதால் பெரும்பாலான அதிகாரிகள் எதிர்த்து நிற்க முடியாமல் பணிந்து விடுகிறார்கள். ஊழலுக்குத் துணைபோகிறார்கள். நாளடைவில் அவர்களும் ஊழல்வாதிகளாக ஆகிவிடுகின்றனர். நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் அதிகாரிகள், முதுகெலும்பில்லாமல் வளைந்து கொடுக்கவேண்டிய நிலைமைக்கு ஆளாக்கப்பட்டுவிட்டனர்.
ஊழலுக்குத் துணை நிற்காத அதிகாரிகள் திட்டமிட்டுப் பழிவாங்கப்படுகிறார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக உமாசங்கர், ஐ.ஏ.எஸ். திகழ்கிறார். மதுரை மாவட்டத்தில் 1991-1996 வரை அ.தி.மு.க. ஆட்சியின்போது கிராமங்களில் சுடுகாட்டுக் கூரைகள் அமைக்கப்பட்டதில் பெருமளவில் ஊழல் நடைபெற்று இருப்பதை அப்போதைய துணைக் கலெக்டரான உமாசங்கர் கண்டுபிடித்தார். இந்த ஊழலில் அப்போது அமைச்சர்களாக இருந்த செல்வகணபதி, ஈஸ்வரமூர்த்தி, ஊரகவளர்ச்சித் துறைச் செயலர் ஆச்சாரியலு மற்றும் பல அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருப்பதாக சி.பி.ஐ. கண்டுபிடித்தது. இந்த ஊழலைக் கண்டுபிடித்த உமாசங்கரைப் பாராட்டிப் பரிசு வழங்க வேண்டிய தி.மு.க. அரசு அவர் மீதே ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி தாற்காலிக வேலை நீக்கம் செய்துள்ளது.
கடந்த இரு ஆண்டுகளில் தி.மு.க. அரசின் பல துறைகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளை இவர் கண்டுபிடித்ததால் அடிக்கடி வெவ்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்து பழிவாங்க முயன்றது. எந்தத் துறைக்கு மாற்றினாலும் அத்துறையில் ஊழல்களை அம்பலப்படுத்தும் பணியினை இவர் தொடர்ந்தார். எனவே வேறு வழியில்லாமல் இவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பழிவாங்க அரசு முற்பட்டுள்ளது.
சுடுகாட்டுக்கூரை ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் செல்வகணபதி இப்போது தி.மு.க.வில் தஞ்சம் புகுந்து தி.மு.க.வின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்னமும் நடைபெற்று வருகிறது. முக்கிய சாட்சியான உமாசங்கர் மீதே ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டால் அவரது சாட்சியம் நம்பத்தகாதது ஆகிவிடும் என்பதற்காக இந்தப் பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கக்கூடும்.
மத்திய அமைச்சர் ஆ. ராசா மீது ஒரு லட்சம் கோடி ரூபாய் பெறுமான ஊழல் குற்றம் சுமத்தப்பட்டபோது அவர் ஒரு தலித் என்பதால்தான் பழிவாங்கப்படுகிறார் என வக்காலத்து வாங்கும் முதல்வர் கருணாநிதி தனது அரசின் ஊழலை மறைக்க தலித் அதிகாரியான உமாசங்கரை பழிவாங்கத் துடிப்பது என்ன நியாயம்?
சென்னை உயர் நீதிமன்றத்துக்குள் புகுந்து நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும், மிகக் கொடுமையான முறையில் தாக்கிய காவலர்களை ஏவிய சென்னை மாநகரக் கூடுதல் ஆணையர், இணை ஆணையர் ஆகியோரைப் பதவி இடைநீக்கம் செய்யவேண்டுனெ உயர் நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் அவர்களைக் காப்பாற்றும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் முறையிட அனுமதித்துள்ள முதலமைச்சர், குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் உறுதி செய்யப்படாத நிலையில் உமாசங்கரை மட்டும் இடைநீக்கம் செய்தது ஏன்?
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்திய அரசின் நேரடி நிர்வாகத்திற்கு உள்பட்டவர்கள். இவர்களின் பதவிக்காலப் பதிவேடு மத்திய உள்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
எனவே உமாசங்கர் மீது தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும், தமிழக அரசு மீது உமாசங்கர் சாற்றியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் முன்வர வேண்டும். அதற்குரிய துணிவும், நேர்மையும் அவருக்கு இருக்குமா? கூட்டணி நிர்பந்தங்கள் மத்திய அரசின் கண்ணை மறைக்காமல் இருக்குமா?
தன்னை நல்லாட்சிக்குச் சரித்திரம் படைத்த சோழப் பேரரசர்களுடன் ஒப்பிட்டு தனக்குத்தானே புகழாரம் சூட்டி மகிழ்ந்து கொள்ளும் முதலமைச்சர் கருணாநிதி, உண்மையிலேயே மனுநீதிச் சோழனாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. தனக்கும், தனது குடும்பத்தினருக்கும், தனது கட்சியினருக்கும் ஒரு நீதியும், மற்றவர்களுக்கு வேறொரு நீதியும் வழங்கிச் சரித்திரம் படைத்திருப்பார் என்று நம்பலாம். பாருங்களேன், கட்சிக்காரரான "தலித்' அமைச்சர் ஆ. ராசாவுக்கு ஒரு நீதி, தனது குடும்பத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்குத் தொந்தரவாக இருந்த "தலித்' அதிகாரி உமாசங்கருக்கு ஒரு நீதி என்பதுதானே தமிழக முதல்வரின் மனு நீதி...?
கட்டுரையாளர் : பழ.நெடுமாறன்
நன்றி : தினமணி
Wednesday, August 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment