ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது நடந்து வரும் இனவெறித் தாக்குதல் கவலை அளிக்கிறது. கடந்த ஓராண்டுக்கு மேலாக இத்தகைய தாக்குதல்கள் நடந்து வருவது கவனத்தில் கொள்ளத்தக்கது.
கடந்த ஒருவாரத்துக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பஞ்சாபைச் சேர்ந்த நிதின் கர்க் என்ற 21 வயது இளைஞர் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாகக் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து எரிந்த நிலையில் இந்தியரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த அதிர்ச்சியிலிருந்து நாம் மீள்வதற்குள் மற்றொரு இந்தியர் மீது மர்மக் கும்பல் ஆசிட் வீச்சு நடத்திவிட்டு தப்பியோடியுள்ளது.
மெல்பர்ன் நகரின் வடமேற்குப் பகுதியில் வசித்து வருபவர் ஜஸ்ப்ரீத் சிங். இந்தியரான இவர், தனது மனைவியுடன் ஒரு விருந்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புகையில் மனைவியை வீட்டில் இறக்கிவிட்டு, காரை பக்கத்துத் தெருவில் நிறுத்திவிட்டு வெளியே வந்தபோது மர்மக் கும்பல் அவரை கீழே தள்ளி அவர் மீது ஆசிட்டை வீசி, தீவைத்துவிட்டுத் தப்பியோடிவிட்டது.
இப்படி இந்தியர்கள் மீதான தாக்குதல் அடிக்கடி நடக்கின்ற போதிலும் இதை ஆஸ்திரேலிய அரசு தீவிரப் பிரச்னையாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. இந்தத் தாக்குதலை இனவெறித் தாக்குதல் என்று சொல்லமுடியாவிட்டாலும், கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்தியர்களை மட்டும் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களைப் பார்த்தால் இது இனவெறி ஆதிக்கச் செயலே என்பது தெரியவரும்.
இந்தத் தாக்குதல் சம்பவங்கள் சாதாரண குற்றச் சம்பவங்கள்தான் என்பது போல் ஆஸ்திரேலியத் தூதர் தாமஸ் வர்கீஸ் பேசியுள்ளார். ஆஸ்திரேலியாவில் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், ஊடகங்கள் மூலம் கிடைக்கும் தகவல்களைப் பார்த்தால் பாதுகாப்பு இல்லாத காரணத்தால்தான் இந்த எண்ணிக்கை குறைந்து வருவது புரியும்.
ஆஸ்திரேலியாவில் படிக்கும் ஆசியர் அல்லாதவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் அங்கு படித்து வரும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால், ஆசியர்கள் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது. ஆஸ்திரேலியாவில் பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவர்கள், பகுதிநேர ஊழியர்களாக வேலைசெய்து தங்கள் செலவினங்களைச் சமாளித்து வருகின்றனர். குறிப்பாக மெல்பர்ன் நகரில் இந்தியர்கள் எங்கு சென்றாலும் குழுவாகவே செல்கின்றனர். தனியாகச் செல்வதில்லை. மேலும் விலைமதிப்பு மிக்க பொருள்கள் எதையும் அவர்கள் கையிலெடுத்துச் செல்வதில்லை. இந்நிலையில் இதுபோன்று நடத்தப்படும் தாக்குதலை வழிப்பறி என்ற சாதாரண குற்றமாக யாரும் சொல்லிவிட முடியாது.
இந்தியர்கள் மீது குறிப்பாக மாணவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் கொலைவெறித் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதை ஆஸ்திரேலிய அரசால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறுவதற்குப் பதிலாக உலகம் எங்கும் இதுபோன்ற குற்றங்கள் நடக்கத்தான் செய்கின்றன. ஏன் தில்லி, மும்பை போன்ற நகரங்களிலும் இவை நடக்கத்தான் செய்கின்றன. எனவே இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் பேசியுள்ளது அவரது பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.
இத்தகைய சம்பவங்கள் தற்செயலாக நடந்திருந்தாலும் சரி...இனவெறித் தாக்குதலாக இருந்தாலும் சரி... வெளிநாட்டினரை, குறிப்பாக இந்தியர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு ஆஸ்திரேலிய அரசுக்கு உள்ளது.
இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடந்து வரும் நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, "ஆஸ்திரேலியாவுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துப் படிக்கச் செல்லவேண்டும். இன்னும் சொல்லப்போனால் ஆஸ்திரேலியா சென்று படிப்பதைத் தவிர்க்க வேண்டும். வேறுநாடுகளில் உள்ள பட்ட மேற்படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்' என்றும் யோசனை கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த அந்த நாட்டு அரசுடன் பேச்சு நடத்தி சுமுகத் தீர்வுகாண முன்வராமல், மாணவர்களை அங்கு சென்று படிக்க வேண்டாம் என்று கூறுவது புத்திசாலித்தனம் அல்ல. ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் பட்டமேற்படிப்புக் கல்வி நன்றாக இருப்பதால்தான் அங்கு சேர்வதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் திறமையுள்ள மாணவர்களும், அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்புள்ள, வன்முறைச் செயல்களில் ஈடுபடாத மாணவர்கள்தான் அங்கு செல்கின்றனர். எங்கு சென்று படிக்க வேண்டும், என்ன படிப்பு படிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது மாணவரும் அவருடைய பெற்றோரும் தான். கல்வி ஆலோசகர்களாகச் செயல்படும் சிலருடைய தவறான வழிகாட்டுதல்களாலே தவறுகள் ஏற்படுகின்றன. வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களுக்குச் சில எச்சரிக்கைகளை அமைச்சர் தெரிவிக்கலாமே தவிர அவர்களை இங்கு படிக்காதே, அங்கு படிக்காதே என்று தீர்ப்புச் சொல்லக்கூடாது.
ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள், தங்களின் திறமையான படிப்பின் மூலமும், செயல்பாட்டின் மூலமும் அந்த நாட்டுக்குப் பெருமை தேடித் தருகின்றனர்.
இதை ஆஸ்திரேலிய அரசு உணர்ந்துகொண்டு நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதுடன் நில்லாமல், இந்தியர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். அதுமட்டுமல்ல, இதுபோன்ற இனவெறித் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் இதற்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்னிய நாட்டில் இந்தியர்களின் விலைமதிக்க முடியாத உயிர் பறிபோவதை பார்த்துக்கொண்டு நாம் சும்மா இருக்க முடியாது. இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆஸ்திரேலிய அரசுக்கு முழு பொறுப்பு உள்ளது. அதை வலியுறுத்தும் கடமை இந்திய அரசுக்கு உள்ளது.
கட்டுரையாளர் :ஜெ.ராகவன்
நன்றி : தினமணி
Friday, January 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment